எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 11, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருவரங்கத்தில் நடந்தது!

மேற்சொன்ன சம்பவங்கள் அனைத்தும் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஶ்ரீரங்கம் தில்லிப் படைகளால் திணறிக் கொண்டிருந்தது. அங்கிருந்து சென்றுவிட்டால் அரங்கனைக் கொண்டு வந்துவிடுவார்கள் என்று படைகள் அங்கிருந்து அகலவே இல்லை. அரங்கன் திரும்ப ஶ்ரீரங்கம் வருவதற்கு முன்னரே அவனைக் கைப்பற்றி தில்லிக்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். ஆனால் ஶ்ரீரங்கத்தில் இருந்த சிங்கப்பிரான் என்பவர் எப்படியேனும் அரங்கனையும் கோயிலையும் காப்பாற்ற வேண்டும் என்பதோடு படைகளையும் அங்கிருந்து அகற்றிவிட வேண்டும் என உறுதி பூண்டிருந்தார். கோயிலோடு சம்பந்தப்பட்ட தேவதாசிகளில் ஒரு சிலர் இன்னமும் ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் மிகவும் அழகும், அரங்கனிடம் மாறா பக்தியும் கொண்ட தாசி ஒருத்தியைத் தேர்ந்தெடுத்தார். ஶ்ரீரங்கம் பக்கத்தில் உள்ள அழகிய மணவாளபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை அழகிய மணவாளபுரத்தின் ராணி என தில்லிப்படைகளின் உப தளபதிக்கு அறிமுகம் செய்து வைத்தார் சிங்கப்பிரான்.

அந்த தாசிப்பெண்ணின் அழகிலும் அவள் நாட்டியம் ஆடும் அழகிலும் மயங்கினான் தில்லித் தளபதி. அவளை நெருங்கி உறவாட ஆசைப்பட்டான். ஆனாலும் அந்தப் பெண் பலவிதமான சாகசங்களைச் செய்து அவனிடம் இருந்து தப்பித்து வந்தாள். ஆனால் தளபதிக்குக் கோபமும் அவள் மேல் மையலும் மேன்மேலும் அதிகம் ஆனது. அப்போது சிங்கப்பிரானின் யோசனைப்படி அவள் அவனுக்கு இணங்குவது போல் நடித்தவண்ணம் அவன் அந்தப்புரம் வரை வந்துவிட்டாள். ஆனாலும் அவள் முற்றிலும் இணங்கவில்லை. எனினும் தன் அந்தப்புரத்தை விட்டு அவளை வெளியேற்றினால் மனம் மாறிவிடப் போகிறாள் என அந்த உபதளபதி அவளை அங்கேயே சந்தோஷமாக வைத்திருக்க முடிவு செய்தான். ஆகவே அவள் சொல்படி எல்லாம் கேட்டு நடக்க ஆரம்பித்தான். சில நாட்களிலேயே அவன் நம்பிக்கையைப் பெற்ற அந்த தாசி அவனுக்கு உணவு பரிமாறும் உரிமையைத் தான் எடுத்துக் கொண்டு அவன் உணவுகளில் சிங்கப்பிரான் கொடுத்து அனுப்பிய சில மருந்துவகைகளை அவனுக்குத் தொடர்ந்து கொடுத்து வர ஆரம்பித்தாள். உணவோடு திறமையாகக் கலக்கப்பட்ட மருந்தை எடுத்துக் கொண்ட உபதளபதிக்குப் பலவிதமான ரோகங்கள் வர ஆரம்பித்தன. அவன் உடல் தோலும் நிறம் மாறிப் பொலிவிழந்தது.

யதேச்சையாக வந்தது போல் வந்து அவனைப் பார்த்த சிங்கப்பிரான் அவனைக் கண்டு மிகவும் வருந்தியவர் போல் நடித்தார். அப்போது அந்தத் தளபதி, சிங்கப்பிரானிடமே இந்த வியாதி தனக்கு எப்படி வந்தது என்பது குறித்தும் அதைக் குணமாக்கும் விதம் குறித்தும் அறிந்த மருத்துவர்கள் இருந்தால் தனக்குச் சொல்லும்படியும் கேட்டுக் கொண்டான்.  உடனே சிங்கப்பிரான் அவன் நலனே தன் நலன் எனச் சொல்லி உபதளபதியை சமாதானம் செய்து தான் உடனே சென்று கேட்டு வருவதாய்ச் சொல்லிவிட்டுத் தன் ஊரிலேயே சில நாட்கள் தங்கிக் காலத்தைக் கழித்தார். பின்னர் ஓர் நாள் அந்தத் தளபதிக்கு முன் போய் நின்றார்.

தளபதியிடம் தான் மருத்துவர்கள் பலரைக் கண்டு விசாரித்ததாகவும் இரு புறமும் நதிகளுக்கிடையே இருக்கும் இந்த ஊரில் இருப்பது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது என்றும் அதனால் தளபதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவதாகவும் சொன்னார். அப்போது தான் எங்கே போவது, அதற்கு அனுமதியும் வாங்க வேண்டுமே எனக் கவலைப்பட்ட தளபதியிடம் பக்கத்தில் உள்ள கண்ணனூருக்குச் செல்லலாமே என்ற யோசனையைத் தெரிவித்தார். மேலும் அங்கே ஹொய்சள நாட்டுக் கோட்டை ஒன்று பாழடைந்து கொண்டிருப்பதாகவும் அதைச் சரி செய்து விட்டு அங்கே போய் இருக்கலாம் எனவும், உள்ளே அழகான அரண்மனையும், அந்தப்புரமும் தோட்டங்களோடு மனதை மகிழ்விக்கும் வண்ணக் கட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

உபதளபதியும் அதற்குச் சம்மதித்து எதற்கும் தான் அதை முதலில் பார்த்தாகவேண்டும் என்று சொன்னான். பின்னர் ஒரு நாள் காலை தன் மனைவியுடனும் மெய்க்காப்பாளர்களுடனும் அங்கே போய்ச் சேர்ந்தான்.  அங்குள்ள அரண்மனையும் தோட்டமும் கண்கவரும் விதத்தில் இருப்பதைக் கண்டு அதிசயித்த உப தளபதி இத்தனை அழகிய அரண்மனையிலும் தோட்டத்திலும் நாம் வசிக்க வேண்டி இருக்கப் பாழடைந்து கொண்டிருக்கும் ஶ்ரீரங்கத்தில் ஏன் இருக்க வேண்டும் என்று நினைத்தான். உடனே தனது இருப்பிடத்தை ஶ்ரீரங்கத்தில் இருந்து கண்ணனூருக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தான்.  கோட்டையின் இடிந்த மதில்களைச் செப்பனிடத் திருவரங்கத்து மதில்களை உடைத்து  அதன் கற்களைக் கொண்டு கண்ணனூர்க் கோட்டை மதிலைச் செப்பனிட்டான் உபதளபதி.


பி.கு. பிற்காலங்களில் கர்நாடகம் வசம் ஶ்ரீரங்கம் இருந்தபோது கர்நாடக நவாப் காலத்தில் இந்தக் கற்களைக் கொண்டு காவிரி, கொள்ளிடம் பாலங்கள் கட்டப்பட்டதாகக் குறிப்பு ஒன்று கூறுகிறது. 

No comments: