எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, August 03, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! கிருஷ்ணாயியின் சாகசம்!

கிருஷ்ணாயி தன் மேல் சாய்ந்ததைக் கண்ட குலசேகரன் திடுக்கிட்டான். ஆனால் கிருஷ்ணாயிக்கு எவ்விதமான குற்ற உணர்ச்சியும் இல்லை. அவள் வளர்ந்த சூழ்நிலை அப்படி. அவள் வளர்ந்த துளு வம்சத்தில் பெண்களுக்கே முன்னுரிமை. கணவன் மூலம் பிள்ளைகள் இல்லை எனில் வேறு திருமணமே செய்து கொள்ளலாம். மலைநாட்டைச் சேர்ந்த அவர்கள் நம்மைப் போன்ற திருமண பந்தங்களை ஏற்றதில்லை. அளிய சந்தானக் கட்டு என்னும் முறையே அவர்கள் பின்பற்றும் முறை. அம்முறைப்படி பெண்ணுக்குத் திருமணம் ஆனாலும் பிறந்த வீட்டிலேயே இருந்து வருவாள். கணவன் தான் அவளைக் காணச் சென்று வர வேண்டும், அதே சமயம் அவள் இரண்டு கணவர்களையும் வைத்துக் கொண்டு வாழலாம். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. இப்படிப் பட்ட துளுவ வம்சத்தில் பிறந்த கிருஷ்ணாயி வீர வல்லாளரைத் திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலை வந்ததே ஓர் ஆச்சரியம். அவர் மூலம் அவளுக்குக் குழந்தை இல்லை என்பது அவள் மனதில் ஓர் உறுத்தலாகவே இருந்து வந்தது.

துளுவ நாட்டைத் தன் ஹொய்சள நாட்டுடன் இணைக்க விரும்பியே வல்லாளர் அவளை மணந்து கொண்டார். அவளும் ராஜ பரம்பரையில் தனக்கு ஓர் மகன் பிறந்தால் தான் பிறந்த துளுவ நாட்டுக்கு நன்மை எனக் கருதியே வயதானவர் என்றாலும் துணிந்து அவரை மணந்தாள், ஆனால் அவர் மூலம் குழந்தை பிறக்கவில்லை என்றதுமே தன் நாட்டுப் பழக்கப்படி வேறொரு ஆடவன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தாள் கிருஷ்ணாயி. அதற்குக் குலசேகரன் தகுந்த ஆள் என நினைத்தாள். அதனாலேயே அவன் மேல் கண்ணை வைத்தாள். ஆனால் குலசேகரனோ அவள் நோக்கம் புரிந்தும் இந்தக் கேடு கெட்ட செயலுக்குத் தான் துணை போகக் கூடாது என உறுதியுடனே இருந்தான். ஆகவே அவள் குலசேகரனை நாடினாள். ஆனால் குலசேகரன் அவள் விருப்பத்துக்கு இணங்கவே இல்லை.  மறுத்தான். தன் அழகை முழுவதும் காட்டி அவனைத் தன் பால் ஈர்க்க முனைந்த கிருஷ்ணாயியைக் குலசேகரன் முழு மனதோடு வெறுத்தான்.

ஆனால் அவளோ அவனை மிகவும் நெருங்கினாள். ஓர் அங்குலம் கூட இடைவெளியில்லாமல் அவள் தன்னருகே அமர்ந்திருந்தது குலசேகரனுக்குப் பொறுக்கவில்லை. அவளை விலகிப் போகச் சொன்னான். அவள் தன்னருகே அமர்ந்திருக்கும் முறை அவள் பேசும் முறை அவள் போக்கு எதுவும் அவனுக்குப் புரியவில்லை என்றான். கிருஷ்ணாயியோ மேலும் மேலும் அவனிடம் இன்பமான பேச்சுக்களைப் பேசிக் கொண்டு இப்படி ஓர் அழகிய இளம்பெண் தன்னருகே அமர்ந்திருந்தால் அந்த இளைஞன் என்ன செய்யவேண்டும் என்பது தெரியாதா எனக் குலசேகரனிடம் கேட்டாள்.  ஆனால் குலசேகரனோ அங்கிருந்து எழுந்திருந்து வெளியேற நினைத்தான். உடனே அவனைத் தன் கைகளால் தடுத்தாள் ராணி.

தன்னை அவனுக்குப் பிடிக்கவில்லையா எனக் கேட்டு மேலும் கெஞ்சினாள் ராணி. அவன் கைகளைப் பற்றித் தன்னருகே அமர்த்திக் கொண்டு மீண்டும் கேட்டாள். "வீரரே, என்னைப் பாருங்கள்! என் அழகைப் பாருங்கள்! இதை அனுபவிக்க வெண்டும் என உங்களுக்குத் தோன்றவில்லையா? என்னைப் பிடிக்கவில்லையா உங்களுக்கு?" என்று வினவினாள். குலசேகரன் வெறுப்புடன் அவளைப் பார்த்து, "ஆம், உங்களை எனக்குப் பிடிக்கவில்லை." என்று வெறுப்புடனும், கசப்புடனும் வார்த்தைகளை உமிழ்ந்தான். ராணியின் அழகிய முகம் கோபத்தில் விகாரமாக மாறியது. அவள் கண்கள் தீக்கங்குகளைப் போல் காட்சி அளித்தன. அவனைப் பார்த்துக் கோபமாகச் சிரித்த வண்ணம் தன் கைகளைத் தட்டினாள் ராணி. இரு சேடிகள் அங்கே தோன்றினார்கள். அவர்களிடம், "அவளை இழுத்து வாருங்கள்!" என்று கட்டளை இட்டாள் ராணி. 

No comments: