எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, August 09, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வார் வைபவம்!

அரங்கனும் கோழிக்கூட்டில் தஞ்சம் புகுந்திருப்பதை அறிந்த நம்மாழ்வாருடன் வந்தவர்கள் அனைவரும் ஆழ்வாரைப் பல்லக்கில் அமர்த்தி அவரைத் தூக்கிக் கொண்டு சந்தோஷம் பொங்க அரங்கன் இருக்கும் இடம் நோக்கி விரைந்தார்கள். ஏற்கெனவே அரங்கன் கூட்டத்தாருக்குத் தகவல் அனுப்பி விட்டபடியால் அவர்களும் அரங்கனை மிக நன்றாக அலங்கரித்துப் புதுசாய் அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முத்துச் சட்டையையும் பொன் அங்கியையும் அணிவித்து எல்லாவித சம்பிரதாயங்களுடனும் நம்மாழ்வாரின் வரவுக்குக் காத்திருந்தார்கள். வேகமாய் வந்த ஆழ்வார் திருநகரி ஊர்வலத்தார் அரங்கன் இருக்கும் இடம் அருகே நெருங்கியதும் பல்லக்கின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு ஊஞ்சலில் ஆடுவது போல் நம்மாழ்வார் பல்லக்கை ஆட விட்டுக் கொண்டு கூடவே அவரின் பாசுரங்களைப் பாடிக் கொண்டும் வந்தார்கள். முக்கியமாக, "முனியே !நான்முகனே! முக்கண்ணப்பா!" என்னும் பாடலை அவர்கள் பாடுகையில் அனைவர் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகியது. நெடுநாட்கள் பிரிந்திருந்த தலைவனை மீண்டும் காணும் குலமகள் போல நம்மாழ்வாருடன் வந்தவர்கள் தங்கள் முகத்தில் ஏக்கத்தையும் விரகத்தையும் ஒருங்கே பிரதிபலித்த வண்ணம் பல்லக்கோடு அலை ஆடுவது போல் ஆடி ஆடி வந்தார்கள்.

அரங்கன் கூட்டத்தாரும் அதைக் கண்டு பக்திப் பரவசத்தில் மெய் சிலிர்க்க அரங்கனைத் தூக்கிக் கொண்டு முன்னேறி நம்மாழ்வாரை வரவேற்கும் முகமாகச் சென்றார்கள். ஒரு கட்டத்தில் இரு பல்லக்குகளும் எதிர் எதிரே வர அரங்கனும் நம்மாழ்வாரும் சந்தித்துக் கொண்ட அந்த அற்புதக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. வைணவ சரித்திரத்தில் அந்நாள் இன்றும் ஓர் பொன்னாளாகச் சொல்லப்படுகிறது. ஏனெனில் பல  நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நம்மாழ்வாரும் அரங்கனும் மறுபடி சந்திக்கின்றனர். இந்தக் கதை நடந்த காலகட்டத்துக்குச் சில நூற்றாண்டுகள் முன்னர் வரை நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் இருந்து பல்லக்கில் ஏகி அரங்கனைக் காண வருவார். அந்தப் பல்லக்கு இப்போதும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பல்லக்கில் அத்தனை தூரம் கடந்து தன்னைப் பார்க்க வரும் ஆழ்வாரோடு அரங்கன் சில நாட்களைக் கழிப்பான். அதன் பின்னர் ஆழ்வார் பிரியாவிடை பெற்று ஆழ்வார் திருநகரி திரும்புவார். இது ஒரு பெரிய விழாவாக நடந்து கொண்டிருந்தது ஶ்ரீரங்கத்தில். ஆனால் ஒரு வருடம் ஏதோ ஒரு காரணத்தால் நம்மாழ்வாரால் வர முடியாமல் போக அரங்கன் கோயிலின் ஊழியர்கள் அனைவரும் நம்மாழ்வாருக்காகக் காத்திருப்பதை விட இங்கேயே புதிதாக ஒரு நம்மாழ்வாரைப் பிரதிஷ்டை செய்து விடலாம் என எண்ணிக் கொண்டு அவ்வாறே செய்தும் விட்டார்கள். ஆழ்வார் திருநகரிக்காரர்களுக்கு ஏமாற்றமும் கோபமும் வர அதன் பின்னர் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் இருந்து அரங்கத்துக்கு எழுந்தருளவே இல்லை. காலப்போக்கில் இந்த வழக்கம் முற்றிலும் நின்றும் போய் விட்டது.


பல்லாண்டுகளுக்குப் பின்னர் நடந்த இந்தச் சந்திப்பு இரு தரப்பாருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அரங்கனோடு நம்மாழ்வாரையும் சம ஆசனத்தில் அமர்த்தினார்கள். அரங்கனின் பரிசாக அவனது முத்துச் சட்டை நம்மாழ்வாருக்கு அளிக்கப்பட்டது. இப்படிப் பலவிதமான உபசரிப்புகளுடன் அந்நியோன்னியமாக அரங்கனும் நம்மாழ்வாரும் பல நாட்களைக் கோழிக்கூட்டில் கழித்தனர். 

No comments: