எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, March 06, 2019

கிருஷ்ணாயியைக் காப்பாற்றும் முயற்சியில் வல்லாளர்!

அரசர் மனம் குழம்பி உட்கார்ந்து யோசித்தவர் திடீரென நினைவு வந்தவராகத் தம் மெய்க்காப்பாளர்களை அழைத்து வரச் சொன்னார். அரசர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரும் என்பதால் அரசர்களைச் சுற்றி எதற்கும் அஞ்சாத மனோதைரியம், உடல் வலுக் கொண்ட வீரர்கள் காவல் இருப்பார்கள். இவர்கள் அரசருக்கு எவ்விதமான ஆபத்தும் நேராமல் சுற்றி நின்று பாதுகாப்பார்கள். இம்முயற்சியில் தங்கள் உயிரைக் கூட விட்டு விடுவார்கள். எதற்கும் துணிந்தே காரியத்தில் இறங்குவார்கள். அவர்கள் பெரும்பாலும் மலை ஜாதியினராகவும் பார்க்கப் பயங்கரத் தோற்றம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.  இவர்கள் அந்த அந்த அரசரின் தகுதிக்கும் வசதிக்கும் ஏற்ப ஐம்பது பேரில் இருந்து ஐந்நூறு பேர் வரை இருப்பார்கள். இவர்கள் அரசரைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல. அரசரே நேரிடையாக இவர்களுக்கு ஆணை இடுவார். அத்தகைய வீரர்களைத் தான் இப்போது வல்லாளர் அழைத்துவரச் சொன்னார்.

சிறிது நேரத்தில் சுமார் நூறு வீரர்கள் கைகளில் வாள், வேல், வில்லுடன் அங்கே வந்து மந்திராலோசனை மண்டபத்தில் வந்து நின்றார்கள்.  அரசர் அவர்களில் முதல் இருபது பேர்களை உள்ளே அழைத்தார். அவர்களும் உள்ளே வந்து வரிசையாக நின்றனர். அரசர் ஒரு பெரிய தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்குக் கொண்டு வரச் சொல்லி ஆணை இட அதுவும் வந்து சேர்ந்தது. வீரன் ஒருவன் தட்டை ஏந்தி வர அரசர் அதிலிருந்து தாமே வெற்றிலை, பாக்குகளை எடுத்து ஒவ்வொரு வீரன் கையிலும் கொடுத்தார். இது மிகப் பெரிய விஷயம் என்பதோடு மகத்தான கௌரவமாகவும் கருதப்பட்டது. ஆனால் இப்படி அரசர் கைகளால் வெற்றிலை, பாக்கு வாங்குபவர்கள் ஆபத்தான காரியங்களை வெற்றிகரமாக முடித்து வைக்கவே அனுப்பி வைக்கப்படுவார்கள். அந்தக் காரியத்தை அவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் அல்லது அந்த முயற்சியில் தங்கள் உயிரே போனாலும் அதற்கும் சித்தமாக இருக்க வேண்டும். இது தான் அரசர் கையால் வெற்றிலை, பாக்கு வாங்குவதின் உட்பொருள். இப்போது அரசர் கைகளால் வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொண்ட வீரர்களுக்குத் தாங்கள் ஏதோ முக்கியமான காரியத்துக்கு அனுப்பி வைக்கப்படப் போகிறோம் என்பது புரிந்தது.

அரசர் அந்த வீரர்களிடம் ராணி கிருஷ்ணாயி கோட்டைக்கு வெளியே இளவரசனுடன் திருக்கோயிலூருக்குச் சென்றிருப்பதையும் அங்கிருந்து திரும்புகையில் வெளியே காத்திருக்கும் எதிரிகளிடம் அகப்பட்டுக் கொண்டு விடுவாளோ எனத் தான் அஞ்சுவதையும் தெரிவித்தார். மேலும் அவர் எதிரிகள் திருவண்ணாமலைக் கோட்டையைச் சூழ்ந்து கொண்டிருப்பதைக் கிருஷ்ணாயி அறியவில்லை எனவும் அவள் எதிரிகளிடம் அகப்படாமல் அவளைப் பாதுகாக்கவேண்டும் என்றும் எப்படியேனும் அவளையும், இளவரசனையும் கோட்டைக்கு உள்ளே அனுப்பி விட வேண்டும் என்றும் கூறினார். அதற்கு கோட்டையைச் சூழ்ந்து இருக்கும் எதிரி அணியை உடைத்துத் தான் தீரவேண்டும் என்பதால் எவ்வகையிலாவது அதை உடைத்துக் கொண்டு வெளியேறிச் சென்று ராணியைக் காப்பாற்றும்படியும் கேட்டுக் கொண்டார்.  உடனே அந்த வீரர்கள், "ஜய ஹனுமான்!" என்று கோஷம் செய்து கொண்டே அரசரை மும்முறை வணங்கினார்கள். உடனே அனைவரும் அங்கிருந்து வெளியேறி ராணியைத் தேடிக் கொண்டு சென்றார்கள்.

அந்தக் காலங்களில் கோட்டைகள் அநேகமாக வலுவாகவே கட்டப்பட்டன. ஏனெனில் அது தான் அரசர்கள், அவர்கள் குடும்பங்கள் மற்றும் பெரும்பாலான தலைநகரில் குடியிருக்கும் மக்களுக்குப் பெரிய பாதுகாப்பைக் கொடுத்தது.  இன்னமும் பீரங்கிகளும், துப்பாக்கிகளும் பயன்பாட்டுக்கு வர ஆரம்பிக்கவில்லை. வில், வாள், அம்புகள் முதலிய ஆயுதங்களைத் தவிர்த்துக் கற்களைத் தூக்கி எறியும் இயந்திரம், தீப்பந்தங்களைத் தூக்கி எறியும் இயந்திரம் ஆகியவையே பிரபலமாக இருந்து வந்தன. ஆகவே நேருக்கு நேர் எதிரியோடு சண்டை போடுவதை விடக் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருக்கவே பெரும்பாலான அரசர்கள் விரும்பினார்கள்.  கோட்டை என்றால் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்குமே. ஒரு நகரைச் சுற்றிக் கற்களால் சுற்றுச்சுவர் மிக உயரமாக எழுப்பி அந்தச் சுற்றுச் சுவருக்கு வெளியே நகரின் வெளியே பெரியதொரு அகழியைத் தோண்டி அதில் நீர்வரும்படி செய்து இருப்பார்கள். பெரும்பாலும் அகழி நீர் நிரம்பி இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். அதில் முதலைகளை விட்டு இருப்பார்கள். அகழிகளில் இறங்கிப் படகு மூலமோ அல்லது நீந்தியோ கோட்டைக்கு உள்ளேயோ, வெளியேயோ யாரும் போக முடியாமல் இந்த அகழி உதவி செய்யும்.

அதைத்தவிர்த்தும் கோட்டையின் வெளிப்புறச் சுற்றுச்சுவரைத் தாண்டிப் பத்தடிக்கு அப்பால் இன்னொரு பெரிய சுற்றுச் சுவர் காணப்படும். அதையும் தாண்டி ஒரு சுவர் இருக்கும். அதன் பின்னேயே முக்கியத் தலை நகரம் இயங்கும். இப்படிப்பட்ட அரண்கள் இருப்பதால் கோட்டைகளை வெகு விரைவில் தகர்த்துக்கொண்டு எதிரிகளால் உள்ளே நுழைய முடியாது.  கோட்டையை முறியடிக்க வேண்டுமெனில் அதை முற்றுகை இடுவதே எதிரிகளுக்கு ஒரே வழி. கோட்டைக்குள் இருப்பவர்கள் உணவைச் சேமிக்கக் கூட அவகாசம் கொடுக்காமல் கோட்டை முற்றுகை இடப்படும். அதே போல் குடிநீரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இரண்டும் கோட்டைக்கு உள்ளே இருப்பவர்களுக்குப் போய்ச் சேராமல் வெளியே முற்றுகை இட்டிருக்கும் எதிரிகள் பார்த்துக்கொள்வார்கள். நீண்ட நாட்கள் முற்றுகையை நீடிப்பார்கள். இதன் மூலம் கோட்டைக்கு உள்ளே இருப்பவர்களின் தானிய இருப்பு, குடி நீர் இருப்புக் குறைந்து வரும். பற்றாக்குறை ஏற்படும்.  பட்டினி கிடக்க வேண்டிய நிலை வந்ததும் மனம் தளர்ந்து உடல் தளர்ந்து அனைவரும் சரண் அடைவது உண்டு. இது இல்லாமல் கோட்டையின் சுற்றுச் சுவர் மேல் ஏறி அதைத் தகர்த்துக்கொண்டு உள்ளே நுழைந்து சண்டை போடுபவர்களும் உண்டு.

இப்போது திருவண்ணாமலையை முற்றுகை இட்டிருக்கும் எதிரிகள் என்ன செய்யப் போகின்றனர் என்பதே அனைவர் மனதிலும் பெரிய கேள்வியாக இருந்தது.

4 comments:

Anuprem said...

ஓ பாக்கு வைத்து தன் மெய்க்காப்பாளர்களை அரசர் அனுப்புகிறார் ...

தன் ராணியை காக்க..


சுவாரஸ்யம்

நெல்லைத்தமிழன் said...

//இவர்கள் அரசரைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.// - இவர்கள் வேளக்காரப் படைகளோ? இத்தகைய படைகள், அரசனுக்கும், இளவரசனுக்கும் இருக்கும். இவர்கள் இருவரில் யாருக்கு எதிரிகளால் மரணம் ஏற்பட்டாலும், அந்தப் படைகளில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் கழுத்தை அறுத்து மரணத்தைச் சந்திப்போம் என்ற பிரக்ஞை எடுத்துக்கொண்டவர்கள் என்று படித்திருக்கிறேன்.

இதைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?

Geetha Sambasivam said...

வாங்க அனுராதா, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் இந்தப் பக்கத்தைப் படிப்பது குறித்து சந்தோஷம்.

Geetha Sambasivam said...

வாங்க நெல்லைத் தமிழரே, வேளைக்காரப்படை பற்றி எனக்குத் தெரியும் என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரியணுமா? அநேகமாத் தமிழக வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரிந்ததே! பாண்டிய நாட்டில் ஆபத்துதவிகள் என அழைப்பார்கள் இவர்களை. பள்ளி நாட்களிலேயே இது குறித்து அறிந்திருக்கிறேன். கல்கியின் பொன்னியின் செல்வனில் கூட நீங்கள் படித்திருக்கலாம். ஆனால் அது நாளாவட்டத்தில் பெயர் மாறி விட்டது.