எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, November 15, 2020

கோபண்ணாவின் கர்வம்! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

கோபண்ணா அதற்கு அஞ்சினான் புகலிடத்தில் உள்ள மக்களுக்குத் தாம் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ததாகச் சொன்னார். முடிந்த அளவுக்கு மானியங்களையும் வழங்கியதாய்ச் சொன்னார். பின்னர் அங்கிருந்து திருநாராயணபுரம் சென்றதாகவும் அங்கே உள்ள பல வைணவர்கள் புதிதாகக் காணப்பட்டமையால் விசாரித்ததற்கு அவர்களில் பலரும் தமிழ்நாட்டிலிருந்து சுல்தானியர்கள் கைகளில் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பி ஓடி வந்தவர்கள் எனவும் கேள்விப் பட்டதாய்ச் சொன்னார். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி கோபண்ணாவைக் கண்டதும் ஓடோடி வந்து தங்கள் குறைகளைத் தெரிவித்ததாய்ச் சொன்னார். மேலும் தொடர்ந்த கோபண்ணா அவர்கள் அனைவரையும் தாம் சமாதான வார்த்தைகள் கூறி வேண்டியதைச் செய்து தருவதாக உறுதியும் கூறி அனுப்பி வைத்ததாகச் சொன்னார். ஆனால் அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்ற பிறகும் எண்பது வயது மதிக்கத் தக்க முதிர்ந்த ஓர் வைணவர் மட்டும் அங்கேயே இருந்து தயங்கித் தயங்கித் தன்னிடம் ஏதோ சொல்ல வந்ததாகச் சொன்னார். அவரை அழைத்துத் தாம் விசாரித்ததாகவும் அதற்கு அவர் கூறியவை என அவர் சொன்ன விபரங்களை  கிரியாசக்திப் பண்டிதரிடம் விவரித்தார் கோபண்ணா.

கோபண்ணா பண்டிதரைப் பார்த்து, "ஆசானே! அத்தகைய வயது முதிர்ந்தவருக்கு என்ன குறை இருக்க முடியும் என யோசித்தேன். ஆனால் அவர் சொன்ன செய்தி! பல வருடங்கள் முன்னர் சுல்தானியர் தாக்கியதில் ஶ்ரீரங்கத்து மக்கள் மட்டுமின்றி அங்கிருந்த அரங்கனின் அர்ச்சாவதாரத்தையும் பரிசனங்கள் அனைவரும் பிள்ளை லோகாசாரியார் தலைமையில் மறைவிடத்துக்குக்கொண்டு சென்றதாகச் சொன்னார். அந்த ஊர்வலத்துடன் இந்த வயதான பெரியவரும் அப்போது கலந்து கொண்டாராம்.  அவர்கள் அனைவரும் பாண்டிய நாடு, கேரள நாடு முழுதும் சுற்றிவிட்டுக் கடைசியில் கன்னட தேசத்துக்கு வந்தனராம். இங்கே திருநாராயணபுரம் என்னும்  மேல்கோட்டை வந்ததும் அரங்கன் சில நாட்களோ மாதங்களோ இங்கிருந்தானாம். பின்னர் திரும்பிப் போனதாகச் சொல்கிறார். இவர் மட்டும் இங்கேயே தங்கி விட்டாராம்.                                                                                                                 

அவர் சொன்ன இன்னொரு விஷயம் என்னவெனில் அரங்க விக்ரஹத்தை நாலைந்து பேர்கள் எடுத்துக்கொண்டு திருப்பதியை நோக்கிப் பயணப்பட்டார்களாம். இவருடைய நினைவில் இருந்து திருப்பதியை நோக்கி அரங்கனின் பயணம் ஆரம்பித்துப் பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டனவாம். ஆனால் அரங்கன் திருப்பதியைப் போய்ச் சேர்ந்தானா, அவனுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விபரங்கள் ஏதும் தெரியவில்லையாம். அந்தப் பெரியவர் இதைச் சொல்லும்போது அழுது விட்டார். அரங்கனுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்துத் தெரியாமல் தான் தவிப்பதாகச் சொன்னார். என்னைப் பார்த்து, "ஐயா! நீங்கள் ராஜாங்கக் காரியத்தில் பெரிய பதவியில் இருக்கிறீர்கள். உங்களால் அரங்கனைத் தேடிக் கண்டு பிடிக்க முடியும். அவன் இப்போது எங்கிருக்கிறான், என்ன நிலைமையில் இருக்கிறான் என்பதையும் உங்களால் கண்டறிய முடியும். உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு அரங்கன் இருக்கும் இடத்தையும் என்ன நிலைமையில் இருக்கிறான் என்பதையும் கண்டு பிடித்து அவனுக்கும் நித்தியப்படி பூஜைகள் செய்ய வழி செய்தால்! இந்த நாட்டைப் பிடித்திருக்கும் பீடை ஒழிந்து போகும். சுபிக்ஷம் பெருகும். ஒரு வேளை பிற்காலத்திலோ அல்லது அதிர்ஷ்டவசத்தால் அரங்கன் கிடைத்த பின்னரோ தமிழகத்தில் நல்ல காலம் ஏற்பட்டால் அரங்கனைத் திருவரங்கத்திலேயே சேர்ப்பித்து விடலாமே!" என்றார். இது தான் அந்தப் பெரியவர் சொன்னது. ஆனால், இது எவ்வளவு பெரிய காரியம்! நம்மால் ஆகுமா என நினைத்து நான் எனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டேன்." என்றார் கோபண்ணா.

அதற்குக் கிரியாசக்திப் பண்டிதர், "இது எத்தனை முக்கிய விஷயம்! சிரிப்பு வரக்கூடியதா?" என வருத்தத்துடன் கேட்டார். கோபண்ணாவின் முகத்திலும் வருத்தம் தெரிந்தது. பின்னர் அவர் பண்டிதரிடம், "சுவாமி! சிரிக்கக் கூடாது தான். ஆனால் நான் சிரித்ததற்குக் காரணம் உண்டு! அரங்கனைத் தூக்கிக் கொண்டு அந்தப் பெரியவர் சுமார் 40 வயதில் திருவரங்கத்திலிருந்து கிளம்பிய கோஷ்டியுடன் புறப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் மேலும் 40 வருடங்கள் கடந்து விட்டன. அந்தப் பெரியவருக்கு இப்போது எண்பது வயது. அவர் சொல்லும் செய்தியும் உறுதியானது அல்ல. திருப்பதி நோக்கிப் பயணப்பட்டிருக்கிறார்கள். அவ்வளவே அவர் அறிந்தது. இதை வைத்து நாம் என்ன செய்ய முடியும்? இந்த நாற்பது வருடங்களில் என்னென்ன நடந்தனவோ! ஒரு சாதாரண உலோக விக்ரஹம் தானே! இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடித்திருக்குமா? இதற்காக நான் நம்முடைய சாம்ராஜ்யம் முழுதும் தேடியா பார்க்க முடியும்? "

"மேலும் ஐயா! நான் ராஜரீக காரியங்களிலே சம்பந்தப் பட்டிருப்பதையும் அவரே சொன்னார். என்னுடைய இத்தகைய மும்முரமான முக்கியக் காரியங்களிடையே ஓர் உலோக விக்ரஹம், அதுவும் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் எவராலோ தூக்கிச் செல்லப்பட்டது! எப்படிக் கண்டு பிடிப்பேன்! என்னால் அதற்கென நேரமா ஒதுக்க முடியும்? விக்ரஹத்தைத் தேடி நான் அலைய முடியுமா? அல்லது சேவகர்களை இந்தக் காரியத்துக்கென ஒதுக்க முடியுமா? அதனால் தான் சிரித்தேன் ஐயா! ஆனால் உண்மையில் நான் அகம்பாவத்துடன் சிரித்ததன் பலன் அன்றிரவே எனக்குத் தெரிந்து போய்விட்டது." என்றார் கோபண்ணா!

"ஆஹா! அது என்ன?" என்றார் பண்டிதர்.

1 comment:

நெல்லைத் தமிழன் said...

கோபண்ணா மூலமாக நம்பெருமாள் விக்கிரகத்தை (அதன் இடத்தை) அறியும் நிலை வரப்போகிறதா? தொடர்கிறேன்