எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, November 24, 2020

மீண்டும் வல்லபனும், தத்தனும்! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

இந்தச் சம்பவங்கள் நடந்த காலத்தில் விஜயநகர அரசர்கள் தங்களை மன்னர்களாகக் கருதிக் கொள்ளவும் இல்லை; அப்படி அழைத்துக் கொள்ளவும் இல்லை. மண்டலேஸ்வரர்கள் எனத் தனித்தனியான மண்டலங்களை ஆளும் பிரதிநிதிகளாகவே நினைத்துக் கொண்டார்கள். அப்படியே அழைத்தும் கொண்டனர். கிரியாசக்திப் பண்டிதர் சொன்னதைக் கேட்ட கோபண்ணா, தங்களால் பாமனி சுல்தான்களையோ, மதுரை சுல்தான்களையே வெற்றி கொள்ள முடியவில்லையே என்னும் வருத்தம் தமக்கும் இருப்பதாகச் சொன்னார். இவர்கள் இருவரின் யாரிடம் போர் தொடுத்தாலும் இருவரும் அவரவர் சமயங்களின் அடிப்படையில் இணைந்து கொண்டு போர் செய்தால் வெல்வது கடினம் என்பதைத் தாம் உணர்ந்திருப்பதாக கோபண்ணா சொன்னார். இருவருக்கும் இடையில் தங்கள் ராஜ்யம் அகப்பட்டுக் கொண்டு பாக்குவெட்டியில் மாட்டிய பாக்குப் போல் வெட்டுப் பட்டுவிடுமோ என்று அஞ்சுவதாகவும் சொன்னார். 

மேலும் பண்டிதர் சொன்னதாவது. இரு துருக்கிய சுல்தான்களுக்கும் இடையே இருக்கும் பொறாமைத் தீயை உசுப்பி விட்டே தாங்கள் தம் நாட்டைக் காப்பாற்றிக் கொள்ள இயலும் எனவும் இதை விட்டு வேறே ஏதேனும் செய்யப் போய் இரு சுல்தான்களும் இணைந்து விட்டால் பின்னர் எதிர்ப்பது கடினம் எனவும் ஆகவே மிகவும் கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டி இருப்பதாகவும் சொன்னார்.  கோபண்ணாவும் அதை ஒத்துக் கொண்டார். பண்டிதர் அப்போது தமிழ் பேசும் மக்களும் நாடுகளும் இருக்கும் சிரமமான நிலையிலிருந்து அவற்றைக் காப்பாற்ற வேண்டுமானால் அதற்குக் காலம் கனிய வேண்டும் எனவும், உடனே எதுவும் செய்ய இயலாது என்றும்,அந்த மக்களும் சரி, அரங்கனும் சரி காலம் கனியும் வரை பொறுத்திருக்க வேண்டியது தான், வேறு வழியில்லை எனவும் பண்டிதர் கூறினார். கோபண்ணா யோசனையில் ஆழ்ந்து போக அவ்வளவில் பண்டிதர் அவ்விடம் விட்டு கோபண்ணாவிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார். 
**********************************************************************************

இங்கே அரங்கனையும் அவரைத் தொடர்ந்து கொண்டிருந்த முதியவரையும் வழியில் கண்டு விபரங்கள் தெரிந்து கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் ஆங்காங்கே விசாரித்துக் கொண்டு அரங்கன் சென்றிருக்கும் வழி என யூகிக்கும் வழியிலே சென்று கொண்டிருந்தனர். அரங்கன் எங்கே தான் போனானோ, என்ன ஆனானோ என நினைக்கும்போதே வல்லபனுக்கு அந்தப் பெண்ணின் முகமும் அவள் எழுதியதாகச் சொல்லப்பட்ட முறியும், அந்த மகர கண்டிகையுமே நினைவில் வந்து மோதிக் கொண்டிருந்தன.  அவளை நினைக்கையில் எல்லாம் அவனது கை அந்த மகர கண்டிகையைத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தது. அவள் அந்தக் கிராதகர்களிடமிருந்து தப்பித்தாளோ இல்லையோ என்றெல்லாம் நினைத்துக் கொண்டான் வல்லபன். அந்தப் பெண் கஷ்டப்படுகிறாளோ என்னமோ என்றெல்லாம் நினைத்துக் கொண்டு உருகி உருகிக் கண்ணீரும் விட்டான். அவள் சாதாரணப் பெண்ணல்ல எனவும் ஓர் அரசகுல மங்கையாகத் தான் இருக்க வேண்டும் என்றும் வல்லபனுக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது. அந்தப் பெண் நம்மை மணந்து கொள்வாளா என்றெல்லாம் எண்ணிக் கற்பனைகள் பல செய்து அந்தச் சுகத்தில் ஆழ்ந்து போனான் வல்லபன்.

கூடவே வரும் தத்தனுக்குக் கூடத் தெரியாமல் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு வந்தான். அவள் இருக்கும் இடத்தையாவது அடைய முடியுமா? கடவுள் அதற்கு உதவி செய்வாரா? என்றெல்லாம் எண்ணிக் கொண்டு மனம் வருந்திக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவர்கள் சென்றடைந்த ஊரின் பெயர் பூங்குளத்து நல்லூர் என்னும் ஊர். அங்கே சென்று சத்திரத்தில் இடம் பிடித்துக் கொண்டு தங்கிக் கொண்டு சத்திரத்து மணியக்காரரை அந்த ஊரில் என்ன விசேஷம் எனக் கேட்க அவரோ மனம் நொந்து போய் இந்த ஊருக்கெல்லாம் விசேஷங்கள் நடந்தே நாற்பது வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டன என்றார். சமீபத்தில் யாரேனும் முக்கியஸ்தர்கள் வந்தனரா என்னும் கேள்விக்கு யாரும் வரவில்லை என்றார்.

இந்தச் சத்திரம் நித்தினவல்லி என்பவனால் ஆதரிக்கப்படுவதாகவும் தினம் காலை, இரவு இருபது பேருக்கு உணவு படைக்க மான்யம் கொடுத்திருப்பதாகவும் சொன்னார். உணவு தயார் செய்தாலும் யாத்திரிகர்கள் அவ்வளவாய் வருவதில்லை எனவும், சமீபத்தில் ஓர் வீரர் படை வந்து ஏழெட்டுப் பேர்கள் உணவு அருந்திச் சென்றது தான் எனவும் அதன் பின்னரும், முன்னரும் யாரும் வரவில்லை என்றும் சொன்னார். அந்த ஆட்கள் யாராக இருக்கலாம் என்ற கேள்விக்குச் சம்புவராயர் ஆட்களாக இருக்கலாம் எனவும் இரண்டு பெண்கள் அந்தக் கூட்டத்தில் இருந்ததாகவும் மணியக்காரர் தெரிவித்தார்.  அதில் ஓர் இளம்பெண் உடல்நலமில்லாமல் இருந்ததால் சிகிச்சைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு மறுநாள் காலையிலேயே கிளம்பிவிட்டார்கள் என்றும் சொன்னார். 

வல்லபனுக்கு அது அந்த மகரவிழியாளாகத் தான் இருக்க வேண்டும் என்று உறுதியாகத் தெரிந்தது. அவளுக்கு உடல் நலமில்லையா? கடவுளே! என்ன கஷ்டப்படுகிறாளோ? என்றெல்லாம் எண்ணிக் கலங்கினார். பின்னர் வயோதிக வைணவர்கள் யாரேனும் இருக்கிறார்களா எனக் கேட்டு ஒருவர் இருப்பதாகத் தகவல் அறிந்து கொண்டு அவரைத் தேடிக் கொண்டு கிளம்பினார்கள். மழை நீரில் பள்ளமாக இருந்த தெருவில் தேங்கிக் கிடந்த நீரை எல்லாம் தாண்டிக் கொண்டு வல்லபனும் தத்தனும் அந்த வீட்டை அடைந்தனர். வல்லபன் சமாளித்துக் கொண்டு முன்னே செல்ல தத்தனுக்கு வழுக்கி விட்டது. அவன் கீழே விழுந்தான். அப்போது ஓர் பெண் குரல் சிரிக்கும் சப்தம் கேட்டது. இருவரும் நிமிர்ந்து பார்த்தபோது அந்த வீட்டு வாயிலில் நின்ற ஓர் சின்னஞ்சிறு இளம்பெண் தன் பற்களை எல்லாம் காட்டி அவர்களைக் கண்டு சிரித்துக் கொண்டு நின்றாள். பின்னர் தன் தளிர்க்கரங்களால் வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பை அடக்கிய வண்ணம் தத்தன் எழுந்திருக்கத் தன் கையையும் கொடுத்தாள்.

2 comments:

நெல்லைத் தமிழன் said...

அந்தக் காலத்தில் கம்யூனிகேஷன் கிடையாது. எப்படி நம்பெருமாள் போன இடங்களை அறிந்திருப்பார்கள், தேடிச் சென்றிருப்பார்கள்? திருப்பதி கோவிலில் அந்த உற்சவரை வைக்கணும்னா அதற்கு அரசன் மற்றவங்க அனுமதிலாம் கிடைத்திருக்கணும்... நினைத்தாலே ஆச்சர்யமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது.

பாமினி சுல்தான்கள் இல்லையா? பாமனியா?

Geetha Sambasivam said...

பாமனி தான் சரியான உச்சரிப்பு எனச் சொல்லுவார்கள். பொதுவாகத் தமிழில் வரும் சில வார்த்தைகள் அதன் மூலத்தில் வருகையில் உச்சரிப்பு மட்டுமில்லாமல் பொருளும் மாறுபடும். பல வார்த்தைகள் இப்படி உள்ளன. சேகரித்து வைத்திருந்தேன். :( முதலில் இருந்த கணினியில் சேகரித்தவை. அவற்றை எல்லாம் ஓர் பென் டிரைவில் மாற்றிக் கொடுக்கச் சொன்னேன். அதை எப்படித் தேடி எடுப்பதுனு புரியலை. டாகுமென்டாக இருந்தால் குறிப்பாக எடுக்கலாம். :( இப்படி நிறைய விஷயங்கள், செய்திகள் அந்தக் கணினியில் இருந்தன. முக்கியமாக வேல் அஷ்டோத்திரம், "க"கார கணபதி சஹஸ்ரநாமம் எனப் பல.