வேதாந்த தேசிகரைப் போய்ப் பார்க்கச் சென்றபோது சின்னஞ்சிறு குடிலில் அவர் இருந்ததாகவும் பிராயம் தொண்ணூறு இருக்கும் எனவும் கூறினார் கோபண்ணா. மெலிந்த திருமேனியுடன் சுடர் விட்டுப் பிரகாசித்த விழிகளுடனும் அந்த விழிகளில் அருட்பார்வையுடனும் காணப்பட்டதாகவும் தாம் அவரைப் பார்த்ததுமே நமஸ்கரித்ததாகவும் கூறினார். கோபண்ணாவை அப்போது உணர்ச்சி வெள்ளம் ஆட்கொண்டதாகவும் இதுவரை இல்லாததொரு உணர்வு அவருக்குள் ஏற்பட்டுக் கண்களில் கண்ணீரைப் பிரவாகமாக வரச் செய்ததாகவும் கூறினார். கை கட்டி வாய் பொத்தித் தலை குனிந்து நின்ற கோபண்ணாவைப் பார்த்து தேசிகர் அவருக்குக் கனிந்து விட்டதாய்க் கூறினதாய்ச் சொன்னார். ஏதும் புரியாமல் விழித்த கோபண்ணாவுக்கு தேசிகர் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்ததாகவும் தானும் அந்த மந்திரத்தைத் திரும்பச் சொன்னதாகவும் தெரிவித்தார். மந்திர ஜெபம் உபதேசித்தல் பூர்த்தி ஆனதும் தேசிகர் பாதங்களில் மீண்டும் விழுந்து வணங்கிய கோபண்ணாவை எழுப்பி இனி அனைத்தும் நலமே என தேசிகர் சொன்னதாய்ச் சொன்னார்.
அவ்வளவில் கோபண்ணாவின் மனதில் பெரிய மாறுதல் ஏற்பட்டதாகவும் இவ்வுலக வாழ்க்கையின் பற்றெல்லாம் மனதை விட்டு அகன்றுவிட்டதாகவும் தெரிவித்தார். இனி தமக்குப் பதவியோ அதிகாரமோ தேவை இல்லை எனவும் ஓர் வைணவனுக்கு உரிய கடமைகளை மேற்கொண்டு தாம் அவற்றை நிறைவேற்றப் போவதாகவும் கூறினார் கோபண்ணா. கிரியாசக்திப் பண்டிதர் கோபண்ணாவையே பார்த்த வண்ணம் அமைதியாக உட்கார்ந்திருந்தார். ஆனாலும் அவர் மனதில் எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டே இருந்தன. அந்தணரான கோபண்ணா தத்துவம், வேதாந்தம், மீமாம்சம், புராணம் எனப் பலவும் கற்றவர். வேதங்களில் நிபுணத்துவம் பெற்றவர். வடமொழியில் நன்கு தேறியவர். இப்படிப் பட்டவர் போர் முறைகளையும் கற்றறிந்து முள்வாய் ராஜ்யத்தின் தளபதியாகவும் ஆனார் எனில் அதற்குக் காரணம் அப்போதைய ராஜ்யங்களின் சூழ்நிலையே காரணம்.
வடக்கே இருந்து வந்த துருக்கர்களால் தங்கள் வாழ்க்கை முறை, மொழி, கலாசாரம் அனைத்தையும் துறக்க நேரிடுமோ என்னும் கவலையாலும் அச்சத்தாலும் தென்னாட்டு மக்கள் ஓரு பொது எதிரியைத் தாங்கள் எதிர்கொள்ள வேண்டி இருப்பதை உணர்ந்து கொண்டனர். இதில் அனைவருமே கலந்து கொண்டு தங்கள் பங்கை அளித்து வந்தனர். இதை ஒட்டியே அந்நாட்களில் பல அந்தணர்களும் போர்ப்பயிற்சியை மேற்கொண்டு தங்கள் நாட்டுக்குத் தங்களால் இயன்ற உடல் உதவியைக் கொடுத்து வந்தனர். இப்படிப் போர்களில் ஈடுபட்ட பல அந்தணர்கள் சிறப்பான முறையில் போரிட்டுப் பெரும் சைனியாதிபதிகளாகவும், தளபதிகளாகவும் பெரும் பெருமையுடனும் சிறப்புடனும் திகழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் தான் கோபண்ணா. புக்கராயருக்காகப் பல போர்களில் பங்கெடுத்து அவருக்கு வெற்றியை வாங்கிக் கொடுத்தவர் இப்போது புக்கராயரின் ஆணையின் பேரில் அவர் குமாரர் கம்பணருக்கு உதவ வேண்டி முள்வாய் ராஜ்யத்துக்கு சைனியாதிபதியாக வந்திருந்தார். இப்படிப் பட்டவர் இப்போது தாம் ராஜரிக காரியங்களிலிருந்து விலகுவதாய்ச் சொன்னது கிரியா சக்திப் பண்டிதருக்குச் சரியாகப் படவில்லை.
கோபண்ணாவைப் பார்த்து அவர் சொற்கள் தமக்கு அதிர்ச்சியைத் தருவதாகச் சொன்னார். மேலும் தொடர்ந்து, இந்த விஜயநகர சாம்ராஜ்யத்தின் சிறப்புக்குக் காரணமே அவரைப் போன்ற பெரும் வீரர்கள் தாம் எனவும் இதனால் தான் மக்கள் கொஞ்சமேனும் தங்கள் சமய நெறிகளைப் பின்பற்றி வாழ முடிந்திருக்கிறது என்றும் கூறினார். இந்த நாட்டை ஒரு மாபெரும் சாம்ராஜ்யமாக மாற்றி தில்லி அரசுக்கு நிகராகவும் அவர்களுக்கு ஓர் பெரிய எதிரியாகவும் ஓர் ஆட்சியைத் தோற்றுவிக்கத் தென்னாடு முழுமையும் தங்கள் குடைக்குள் கொண்டு வர விஜயநகர அரசர்கள் லட்சியம் கொண்டுள்ளதாயும் புக்கராயர் அதில் முழு ஈடுபாட்டுடன் இருப்பதாகவும் கூறினார் கிரியாசக்திப் பண்டிதர். இந்நிலையில் வடக்கே தில்லி சுல்தானியர்களின் பலமோ குறைந்ததாய்த் தெரியவில்லை. குறைந்து விட்டதோ என்னும் எண்ணும் வேளையில் நம் சாம்ராஜ்யத்திற்கு வடக்கே இருந்து குல்பர்க்காவில் இருந்து கொண்டு பாமணி வம்சத்தினர் தொந்திரவு கொடுத்து வருகின்றனர். அவர்களால் நமக்கு எப்போதுமே ஆபத்து என்பதை நீங்கள் உணரவில்லையா என்றும் கேட்டார்!
No comments:
Post a Comment