எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, December 09, 2020

வல்லபனின் வருத்தம்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 வல்லபனுக்கு ஒரு பக்கம் திகைப்பாகவும் இன்னொரு பக்கம் வெட்கமாகவும் இருக்க அந்தப் பெண் தானே போய் தத்தனைக் கை தூக்கிவிட்டாள்  அந்தப் பெண் மேலும் இது தான் மழைக்காலம் என்று தெரியுமே, அதோடு பத்து நாட்களாகத் தொடர் மழை. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வழுக்கி விடும் என்பது தெரியாமல் வந்துவிட்டீர்களே என்றும் கேட்டாள்.  தத்தன் அசடு வழிய மெல்ல மெல்ல எழுந்து கொண்டான். மேலெல்லாம் சேறாகி இருந்தது. திகைத்துக் கொண்டிருந்தவன் மெல்ல சுதாரித்துக் கொண்டு அந்த வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்தப் பெண்ணோ கூடவே வந்து எச்சரிக்கைக் குரல் கொடுக்க தத்தனுக்கு வெறுப்பும்  அவமானமும் பிடுங்கித் தின்றது.  திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனவனைப் "பார்த்து! பார்த்து! படி வழுக்கல்!" என்று அந்தப் பெண் கூவப் படியில் காலை வைத்த தத்தன் பின்னால் வழுக்கிக் கொண்டு கீழே தேங்கி இருந்த தண்ணீரில் உட்கார்ந்தாற்போல் விழுந்தான். அதைப் பார்த்த அந்தப் பெண்ணிற்கு மீண்டும் சிரிப்பு வர, இம்முறை வல்லபனே தத்தனுக்குக் கை கொடுத்துத் தூக்கி விட்டான். தத்தன் வெறுப்புடன் அந்தப் பெண்ணைப் பார்க்க அவளோ பொங்கி வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு உள்ளே ஓடி விட்டாள்.

நல்ல நீர் எடுத்து தத்தன் தன்னையும் தன் துணிகளையும் சுத்தம் செய்து கொண்டான். பின்னர் இருவரும் அந்த மாளிகையின் உள்ளே அதன் எஜமானரைத் தேடி அழைத்த வண்ணம் நுழைந்தார்கள். அப்போது வந்த ஒரு பெரியவர் இவர்களைப் பார்த்து யாரென விசாரித்தார்.  அவர் கேள்வி கேட்ட விதம் தத்தனுக்கும், வல்லபனுக்கும் பிடிக்கவில்லை என்றாலும் தங்கள் விபரங்களைத் தெரிவித்தனர். பின்னர் அரங்கன் சென்ற வழியைத் தாங்கள் விசாரித்துக் கொண்டு தொடர்ந்து செல்வதாயும் கூறினர். அதைக் கேட்ட அந்த முதியவருக்கு வந்ததே கோபம்! அரங்கனைப் பற்றி யோசிக்கவும், நினைக்கவும், தேடவும் நீங்களெல்லாம் யார்? அவனுக்கு வேண்டியவர்களே நினைக்கவில்லை. என்ன அக்கறை உங்களுக்கு? ஏன் தேடுகிறீர்கள் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டார்.  உள்ளே இருந்த அந்தப் பெண் மீண்டும் சிரிக்கும் தொனி கேட்க வல்லபன் தன்னைச் சமாளித்துக் கொண்டான்.

அரங்கனைப் பற்றித் தாங்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் தங்கள் இருவரையும் போல் பலரும் அரங்கன் கதியை நினைத்துக் கவலைப்படுவதாகவும் அரங்கனைத் தேடும்படி சொல்லித் தங்கள் குடும்பத்தினரே தங்கள் இருவரையும் சத்தியமங்கலத்திலிருந்து அனுப்பியதாகவும் கூறினான்.அரங்கனிடம் தங்களுக்கு உள்ள பக்தி அபாரமானது என்றும் அவனைத் திரும்பவும் திருவரங்கத்தில் சேர்ப்பிக்கவே தாங்கள் பாடுபடுவதாகவும் சொன்னான். அதைக் கேட்ட அந்தப் பெரியவர், தானும் திருவரங்கத்தைச் சேர்ந்த ஓர் வைத்தியர் எனவும், திருவரங்கம் தாக்கப்பட்ட சமயம் அங்கிருந்து கிளம்பியதாகவும் ஆனால் கிளம்ப ஒரு நாழிகை தாமதம் ஆனதில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் வருத்தத்துடன் கூறினார். 

தொடர்ந்து அவர் அனைவரும் திருவரங்கத்தை விட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தனர். நானும் கிளம்பிக் கொண்டிருந்த வேளையில் ஓர் இளைஞன் கத்தியோடு அங்கே வந்து தன் தாய் உடல் நலமில்லாமல் மோசமான நிலையில் இருப்பதால் நான் உடனே அங்கே வந்து அவளைக் கவனித்து மருந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அவன் கைகளில் கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டும் தொனியில் கேட்டதால் நிர்ப்பந்தம் காரணமாகத் தாம் அங்கு செல்ல வேண்டி இருந்ததாகச் சொன்னார். அவர் பார்த்து வைத்தியம் செய்துவிட்டுத் திரும்புவதற்குள் மற்றவர்கள் எல்லோரும் கிளம்பிப் போய்விட்டார்கள் எனவும் ஆகவே தங்கள் குடும்பம் மட்டும் தனியே கிளம்ப வேண்டி வந்ததாகவும் வழியில் கள்வர்கள் பிடியில் மாட்டிக் கொண்டு அனைத்தையும் இழந்துவிட்டதாகவும் கூறினார். சகஜமாகப் பேசியவர் திடீரென வல்லபனைப் பார்த்துப் பழைய கதை எல்லாம் இப்போது எதற்கு? எனக்கு அரங்கனைக் குறித்து எதுவும் தெரியாது. நீ போகலாம் எனக் கூற வல்லபனுக்கு அவர் திடீரென இவ்வாறு பேச்சை மாற்றியதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என யோசித்துக்கொண்டே, "ஐயா!" என்றான்.

அவரோ மீண்டும் மீண்டும் தான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்.இனி மேலே கேட்டால் அவரிடமிருந்து எதுவும் தகவல் கிடைக்காது என்று இருவரும் சத்திரத்துக்குத் திரும்பினார்கள். வல்லபன் வழியெல்லாம் கண்ணீர் விட்டுக் கொண்டு வர தத்தனுக்கு ஏதும் புரியவில்லை. அப்போது வல்லபன் அந்தப் பெரியவரை மிரட்டிய இளைஞர் தன் தந்தை தான் எனவும் இதைப் பற்றித் தன் தாய் பல முறை தன்னிடம் சொல்லி இருப்பதாகவும் கூறினான். தனக்குத் தந்தையின் நினைவு வந்து விட்டதாகவும், தன் தந்தை எப்படி இருப்பார் என அந்தப் பெரியவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ள எண்ணினதாகவும் அதற்கு அவர் இடம் கொடுக்கவில்லை எனவும் கூறி வருந்தினான்.

No comments: