எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, May 06, 2009

தாமிரபரணிக்கரையிலே சில நாட்கள்!

தாமிரபரணி மகாத்மியம் நூல் கிடைச்சதும் தான் எழுதணும்னு நினைச்சேன் நவ திருப்பதி பத்தி. ஆனால் புத்தகம் எங்கேயுமே கிடைக்கலை. போயிட்டு வந்து இரண்டு வருஷம் ஆயிடுச்சு. அப்போ எழுதி வச்ச குறிப்புகளும் கிடையாது. கொஞ்சம் நினைவில் இருந்தும், மற்றவை தலங்களின் வரலாற்றில் இருந்துமே எழுதணும். தாமிரபரணி மகாத்மியம் பற்றி ஒரு தளமே இருக்குங்கற தகவலும் பலமாதங்கள் முன்னால் கிடைச்சது. ஆனால் அதிலே விபரங்கள் அதிகமாய் அப்போ இல்லை. இப்போச் சேர்த்திருக்காங்க. முக்கியமாய் வைகாசி விசாகம் அன்னிக்குத் தாமிரபரணி நதியின் பிறந்தநாள்னு சொல்றாங்க. அது பற்றிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கலை. தேடறேன். தாமிரபரணி மகாத்மியம் புத்தகம் வெளியீட்டு விழா நடந்ததாய் தினமலர் செய்தி மட்டும் கிடைச்சது. இந்த வருஷம் தாம் மார்ச் பத்தாம் தேதி நெல்லையப்பர் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் நிகழ்ச்சி நடந்து புத்தக வெளியீடும் நடந்திருக்கின்றது. கூடிய சீக்கிரம் புத்தகம் வாங்கிடலாம்னு நம்பிக்கை வந்திருக்கு. அதுக்கு முன்னாலே தாமிரபரணி நதி பற்றிச் சில முக்கியமான தகவல்களைப் பார்க்கலாமா?

தாமிரபரணி நதி நதிகளுக்கெல்லாம் மூத்தது எனச் சொல்லப் படுகின்றது. எகிப்து நாட்டில் நைல் நதி கலாசாரம் எப்படிச் சிறந்து விளங்கிற்றோ அதே போல் தென்னாட்டில் தாமிரபரணி கலாசாரம் சிறந்து விளங்கி வந்தது. கி.பி 80-ல் பெரிபுளூசு நூலாசிரியரும், கிபி 150-. தாலமியும், கி.மு. 302-ல் மெகஸ்தனீஸும், கி.மு. 273-ல் அசோகச் சக்கரவர்த்தியும் தாமிரபரணி நதியைக் குறிப்பிட்டு எழுதி உள்ளனர். அசோகர் தன் கல்வெட்டில் தாம்பபன்னி என்று இந்த நதியைக் குறிப்பிட்டுள்ளதாய்த் தெரிய வருகின்றது.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில், "பொருநை" என்ற பெயரிலும், சேக்கிழாரின் பெரியபுராணத்தில் "தன்பொருத்தப் புணல்நாடு" என்றும் அழைக்கப் படுகின்றது. முக்கூடல் பள்ளு, கலிங்கத்துப் பரணி, பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல்புராணம், குமரகுருபரரின் மீனாக்ஷி அம்மை பிள்ளைத் தமிழ் போன்றவற்றில் தாமிரபரணி நதியின் வர்ணனைகளைக் காணலாம். தாமிரபரணி பகுதிகளைப் பற்றி வியாசரின் மஹாபாரதமும், காளிதாசனின் ரகுவம்சத்திலும் கூறப்பட்டுள்ளது. தாமிரபரணிக் கரையின் தென் தமிழ்நாட்டில் முன்னாள் கிரேக்கர்கள், ரோமானியர்கள், போர்ச்சுகீசியர்கள், அரேபியர்கள், சீனர்கள் வந்து வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

தாமிரபரணி நதிக்கரையில் இருந்த காயல், கொற்கை, கபாடபுரம், மணலூர் , மணிபுரம் போன்ற நகரங்களின் சிறப்பைப் பற்றி, ரோமாபுரிச் சரித்திரங்களும், யவனர் சரித்திரங்களும் கூறுகின்றன. கம்பராமாயணத்தில் சீதையைத் தேட தெற்கு நோக்கிச் செல்லும் படையில் இருந்த அனுமனிடம், ராமன், தாமிரபரணி நதியைப் பற்றியும் பொதிகை மலை பற்றியும், அகத்தியர் நடத்தும் தமிழ்ச்சங்கம் பற்றியும் கூறுவதாய் வருகின்றது.

15 comments:

Unknown said...

பரணியின் பெருமையை தரணியெல்லாம் சேர்த்தமைக்கு நன்றி.

உங்கள் நாட்காட்டியில் இன்று நேரு பிறந்தநாளாகக் காட்டுகிறதே ! ஜவஹர்லாலின் பிறந்த நாள் நவ.14 அல்லவா ? ஒருவேளை மோதிலாலுடையதா ?

துளசி கோபால் said...

அட! இத்தனை பெருமை வாய்ந்ததா?
அப்பாடி.... நான் பார்த்துட்டேன்:-)

Geetha Sambasivam said...

வாங்க மணியன், ரொம்ப வருஷம் கழிச்சு வந்ததுக்கு நன்றி. நாட்காட்டி தப்பாய்க் காட்டுவதை இப்போத் தான் நானும் பார்க்கிறேன். ஹிஹிஹி, தமிழ்ப்பய்ணியைத் தான் கேட்கணும், அவர் கண்ணிலேயே படறதில்லை இப்போ. மெயில் கொடுக்கிறேன். நன்றி. :)))))))))))

Geetha Sambasivam said...

வாங்க துளசி, பெருமை இன்னும் இருக்கே! :))))))

மெளலி (மதுரையம்பதி) said...

வணக்கம் கீதாம்மா...

புத்தகம் கிடைத்தா எனக்கும் ஒரு காப்பி வாங்கி அனுப்புங்க. :-)

உங்க போஸ்டல் அட்ரஸ் தனி மெயில்ல அனுப்பினா அம்பி என்னிடம் குடுத்ததை உங்களுக்கு காப்பி எடுத்து கொரியர்ல அனுப்புகிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தாமிரபரணிக்கு போகும் முன்னர் மண்ணின் மைந்தன் கிட்ட விசா வாங்கினீங்களா? :)

ற-கரமா இருந்து பொறுநை, பொறுமையா ஓடும் (கீதாம்மாவைப் போலவே)-ன்னு சொல்லீறலாம்!
ஆனா ர-கரமாப் போச்சுது! பொருநை = பெயர்க்காரணம் என்ன-ன்னு சொல்லுங்க கீதாம்மா?

ambi said...

//ஆனால் புத்தகம் எங்கேயுமே கிடைக்கலை.//

அடடா! அப்படியா? :))

//புத்தகம் கிடைத்தா எனக்கும் ஒரு காப்பி வாங்கி அனுப்புங்க//

இது தான் மதுரைக் குசும்பா? சூப்பர். :))

//உங்களுக்கு காப்பி எடுத்து கொரியர்ல அனுப்புகிறேன்.//

மதுரையண்ணா, நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க. இப்படி அவசப்பட வேணாமே! :))

ambi said...

ஒழுங்கா, நிதானமா, உள்ளது உள்ளபடி எழுதுங்க.

இல்லாட்டி, கொதனார் தலைமையில், வல்லிமா வழி நடத்த ஒரு கலவரமே நடக்கும்னு அன்போடு எச்சரிக்கறோம். :))

Geetha Sambasivam said...

மணியன், அது மோதிலால் நேரு பிறந்த நாள் தான், இன்னிக்கு தினசரியிலே வந்திருந்தது. என்றாலும் தமிழ்ப்பயணிக்குத் தவறைச் சுட்டிக் காட்டியாச்சு. நன்றி.

Geetha Sambasivam said...

வாங்க மெளலி, புத்தகம் எதுவும் கிடைக்கலை. கூகிளார் தயவுதான்.

Geetha Sambasivam said...

கேஆரெஸ், உங்களுக்குத் தெரியாததையா நான் எழுதப் போறேன்? நன்றிப்பா, வந்ததுக்கும், கருத்துக்கும்.

Geetha Sambasivam said...

இப்படி அவசப்பட =அவசரப் பட
கொதனார் =கொத்தனார்

தமிழா இது?
@அம்பி, என்னை மிரட்டற அவசரத்திலே இப்படியா எழுதறது? பொதிகை மலை வளர்த்த தமிழ் இதுனு சொல்லிக்கவே வெட்கமா இருக்கே? :P:P:P:P:P:P:P:P:P:P



//ஒரு கலவரமே நடக்கும்னு அன்போடு எச்சரிக்கறோம். :))//

எச்சரிங்க, எச்சரிங்க, என்னோட பதில்:
யாமார்க்கும் குடியல்லோம்,
நமனை அஞ்சோம்! :))))))))))))))

குமரன் (Kumaran) said...

கலியுகத்தில் கிருதமாலை கரையிலும் தாமிரபரணிக் கரையிலும் நிறைய பாகவதர்கள் தோன்றுவார்கள் என்று பாகவத புராணம் சொல்வதாகவும் அப்படி சொல்லப்பட்டவர்கள் நம்மாழ்வாரும் அவருக்குப் பின் வந்த ஆழ்வார்களும் என்றும் படித்த நினைவு.

ஆதிச்சநல்லூர் தாமிரவருணிக் கரையில் தானே இருக்கிறது. அங்கே தானே பழைய நாகரிக எச்சங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

geeyes said...

மேலே, கட்டுரையின் ஆரம்பத்தில் நதி ஓடும் படம் இருக்கிறதே, அது எந்த ஊரில் இருக்கும் காட்சி இன்று கூற வேண்டுகிறேன்.

Geetha Sambasivam said...

வாங்க ஜீயெஸ், இந்தப்படம் இணையத்திலே தாமிரபரணி என்று படங்களின் தேடலிலே கிடைச்சது. அநேகமாப் பாபநாசம் பக்கம் இருக்கும்னு நம்பறேன். பாபநாசம் கோயிலுக்கு எதிரே தாமிரபரணி சில மைல் தூரம் இப்படிக் காட்சி கொடுக்கிறாள். ஆனால் அதுதானானு நிச்சயமாத் தெரியாது. நாங்க போனப்போ படம் எடுக்கும்படியான ஏற்பாடுகளோடு போகலை. :(