எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, April 22, 2009

ஜெய் சோம்நாத்- நிறைவுப் பகுதி!

எனினும் திறப்பு விழா கோலாகலமாய் நடந்தது. சுதந்திரம் கிடைத்து மூன்று மாதங்களிலேயே சர்தார் படேல் இந்தக் கோயிலை மீண்டும் கட்டித் தருவதாய் அறிவித்தார். நாலே வருஷங்களில் சோமநாதர் அப்போதைய குடியரசுத் தலைவரால் பிரதிஷ்டை செய்யப் பட்டார். அதன் பின்னர் கிட்டத் தட்ட 14 ஆண்டுகள் முயன்று இந்தக் கோயில் கட்டப் பட்டது. மஹாத்மா காந்தி அரசு செலவு செய்யக் கூடாது என்று சொன்னதை மதித்து இந்தக் கோயில் முழுக்க முழுக்க நன்கொடைகளாலேயே கட்டப் பட்டது. அரசிடமிருந்து எந்தவிதமான நிதி உதவியும் பெற வில்லை. 1965-ம் வருஷம் மே மாதம் 13-ம் நாள் 21 துப்பாக்கிகள் வணக்கம் செய்ய சோமநாதர் கோயிலின் 155 அடி உயரக் கோபுரத்தில் துவஜஸ்தம்பமும், அதன் மேல் காவிக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இந்தியாவிலேயே கடந்த 800 ஆண்டுகளில் இத்தகையதொரு கோயில் இன்று வரையிலும் கட்டவில்லை என்று சொல்லப் படும் வண்ணம் சிற்பக் கலையில் சிறந்து விளங்கியது கோயில். அப்போதைய கணக்குப் படி இந்தக் கோயிலுக்கு ஆன மொத்தச் செலவு, 24, 92,000 ரூபாய்கள். கோயிலினுள்ளே சோதனைகளுக்குப் பின்னர் நுழைந்தால் முதலில் வருவது பெரிய சபா மண்டபம். ஏராளமான சிற்பங்களைக் கொண்ட அந்த சபா மண்டபத்தில் ஆங்காங்கே பக்தர்கள் அமர்ந்து யாகங்கள், ஹோமங்கள், யக்ஞங்கள் என்று நடத்திக் கொள்ளுகின்றார்கள். அந்தச் சபா மண்டபத்தைத் தாண்டினால், திறந்த கருவறையில் பெரிய அளவிலால் ஆன சோமநாத லிங்கம் காணப் படுகின்றது. பக்தனுக்காகப் புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட எம்மான், இங்கே கல்லாலும், வில்லாலும், சொல்லாலும், கத்தியாலும், எத்தனை முறைகள் அடித்து நொறுக்கப் பட்டிருக்கும் என்பதை நினைத்தால் கண்ணீர் ஆறாய்ப் பெருகுகின்றது. எல்லா வடநாட்டுச் சிவன் கோயில்களையும் போலப் பார்வதி தேவி, சிவலிங்கத்திற்குப் பின்னால் நின்ற வண்ணம் அருளாட்சி செய்கின்றாள். கூடவே விநாயகர், பிரம்மா, விஷ்ணு, துர்கை ஆகியோருக்கும் சந்நதிகள் இருக்கின்றன. அதிகம் கார்த்திகேயன் என அழைக்கப் படும் சுப்ரமணியர் சந்நதி காணப் படுவதில்லை. பிரஹாரத்தைச் சுற்றி வலம் வரும்போது பழைய இடிந்த கோயிலின் இடிபாடுகளின் மிச்சம் காண முடிகின்றது. படங்கள் எடுக்க முடியாது. இது ஒருவேளை அப்போதைய பார்வதி கோயிலாக இருக்கலாம் என அனுமானம் செய்கின்றனர். கோயிலின் வெளியே நிலாமாடங்கள் போன்ற முற்றங்கள் ஆங்காங்கே பயணிகளின் வசதிக்காகக் கட்டப் பட்டிருக்கின்றது. அதில் ஒரு மாடத்தின் அருகே, வேலைப்பாடுள்ள ஒரு தூண் காணப்படும். அந்தத் தூண் சோமநாத லிங்கத்தின் வலப்பக்கமாய் அமைந்திருக்கிறது. சோமநாதர் சந்நதியின் அந்த வலப்பக்க ஜன்னலில் இருந்து சோமநாதரின் அருட்பார்வை தடைகள் ஏதுமின்றி தென் துருவம் வரையிலும் ஒரே நேர்கோடாய்ப் பயணிக்கின்றது என்று சொல்கின்றார்கள். இதை ஒளிப்பாதை என்றும் சொல்லுகின்றனர்.

சர்தார் படேலுக்கு ஒரு அழகான சிலை நிறுவப் பட்டிருக்கின்றது. தொல்பொருள் இலாகாவின் புகைப்படங்கள், பழைய சோம்நாத் கோயிலின் மாதிரிப் படங்கள் கொண்ட ஒரு கண்காட்சியும் காண முடிகின்றது. புதிய கோயில் கட்டும்போது உலகின் பல நாடுகளில் இருந்தும் நீர் கொண்டு வரப் பட்டு, கோயில் வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதாய் கண்காட்சியில் ஒரு தகவல் சொல்லுகின்றது. பல கண்ணாடிப் புட்டிகளும் நீர் நிறைந்து காணப் படுகின்றன. அகல்யா தேவி கட்டிய சோமநாதர் கோயிலும் அருகே உள்ளது. அதற்குத் தனியாய் வழிபாடுகள் நடக்கின்றது.

எல்லாவற்றுக்கும் மேலே ஸ்ரீகிருஷ்ணர் தன் உயிரைப் போக்கிக் கொண்ட இடம் சோம்நாத்தில் தான். சோம்நாத்திற்கு அருகே உள்ள வெராவல்லில் தான் பாலிகா தீர்த்தம் என்னும் தீர்த்தக் கரையில் அரச மரத்தடியில் யோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீகிருஷ்ணரின் பாதத்தில் ஜரா என்னும் வேடன் அம்பு எய்து விடுகின்றான். இந்த அரசமரத்தைச் சுற்றியும் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வெராவலில் இருந்து ஒன்றரை மைல் நடந்தே, ஸ்ரீகிருஷ்ணரை பலராமர் மெல்ல மெல்ல இங்கே கொண்டு வந்து சேர்க்கின்றார். இங்கே வந்ததும் ஓர் ஆலமரத்தடியில் படுக்க, பலராமரோ தங்கள் இருவருக்கும் முடிவு வந்துவிட்டதை உணர்ந்து, அங்கே உள்ள ஒரு குகைக்குள் சென்று பாதாளத்தில் மறைகின்றார். அந்தக் குகை தாவுஜியின் குகை என்ற பெயரில் ஒரு கோயிலாக அமைந்துள்ளது. ஸ்ரீகிருஷ்ணரும் அங்கேயே தன் உயிரைப் போக்கிக் கொண்டு வைகுந்தம் சென்று விடுகின்றார். பாம்பாக உருமாறிச் சென்ற தன் அண்ணனையும், தன்னைத் தானே தன் சுய உருவிலும், பிரம்மா, சிவன் போன்ற மற்றத் தெய்வங்களையும் கண்ட ஸ்ரீகிருஷ்ணன் தாமரை போன்ற தன் நயனங்களை அழுந்த மூடிக் கொண்டார். ஸ்ரீகிருஷ்ணரின் பாதங்கள் ஒரு சிற்ப உருவில் பதிந்துள்ளது. பின்னர் மெல்ல மெல்ல தன் மானுட உடலை விடுத்துத் தன் சுய உருவோடு யோக முறைப்படி கலந்தார் என பாகவதம் சொல்லுகின்றது. பதினைந்து வருடங்கள் முன்பு இங்கே எல்லாம் நடந்து செல்ல முடியாமல் கொஞ்சம் கல்லும், காடுமாய் இருந்தது. இப்போது செப்பனிட்டு, கட்டிடங்கள் எழுப்பி, மண்டபம் போல் அமைப்புகளுடன், ஒரு கீதா மந்திரும் அமைத்திருக்கின்றனர். பலராமர் குகை முன்னே கொஞ்சம் பயமாகவே இருக்கும் உள்ளே செல்ல. இம்முறை அப்படி இல்லை. அருகேயே ஹிரன்யா நதிக்கரையில் இன்னொரு சிவன் கோயிலும் உள்ளது.

No comments: