எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, November 15, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! நவகைலாயம் 5

அடுத்ததாக நாம் காணப் போவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு கைலாசநாதர் கோயிலாகும். நவ கைலாயங்களில் இது ஐந்தாவது கோயில். குருபகவானுக்கான க்ஷேத்திரம் எனச் சொல்லப் படுகிறது. மற்ற நவகைலாயக் கோயில்களுக்கு நடுவே இது அமைந்திருப்பதால் இதை நடுக்கைலாயம் என்றும் அழைக்கின்றனர். மேலும் தாமிரபரணி நதி இங்கே வடக்கே இருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. அதனாலும் இது சிறப்பாகக் கூடப் படுகிறது. இந்த இடத்தில் தாமிரபரணி நதியை தக்ஷிண கங்கை என்ற பெயரில் அழைக்கின்றனர். நதிகளிலேயே மூத்த நதியான தாமிரபரணி நதியின் இந்தக் கரையில் தீர்த்த யாத்திரை செய்வது மிகவும் புனிதமாய்க் கருதப் படுகிறது. இந்த ஊரின் இந்தக் கோயிலைக் கட்டியது வல்லாள மஹாராஜா எனச் சொல்லப் படுகிறது. ஆனால் சோழ மன்னன் ஒருவனே கட்டியதாகவும் தலவரலாறு கூறுகிறது. எது எப்படி எனச் சரியாக யாருக்கும் தெரியவில்லை என்றாலும் பின்வரும் தலவரலாறே கூறப்படுகிறது.

சோழமன்னன் ஒருவனுக்குப் பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தையின் முகம் குதிரை முகமாக இருந்தது. பெண்குழந்தைக்குக் குதிரை முகமா என வருந்திய மன்னன், முகம் மாறவேண்டி சிவனை எண்ணிப் பிரார்த்தித்தான். சிவபெருமான் மன்னன் கனவில் தோன்றி தாமிரபரணியின் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் நீராடி வழிபாடுகள் செய்யச் சொல்ல, மன்னனும் அவ்வாறே செய்து வந்தான். நாளா வட்டத்தில் குழந்தையின் முகமும் மனித முகமாக மாறியது. தான் வழிபட்ட உரோமச லிங்கரால் ஸ்தாபிக்கப் பட்ட லிங்கம் இருந்த இடத்தில் மன்னன் ஒரு கோயிலைக்கட்டியதாகவும், அதுவே இந்தக் கோயில் எனவும் கூறுகின்றனர். ஆச்சரியமான செய்தி என்னவெனில் இங்கே உள்ள நந்தியெம்பருமானுக்கும் குதிரை முகமாய் இருக்கிறது.

அதற்குக் காரணம் முன் பிறவியில் செய்த பாவத்தால் குதிரை முகத்தோடு பிறந்த மன்னன் மகளின் பாவத்தை ஈசன் நந்தியை ஏற்க வைத்ததாகவும், அதன் காரணமாகவே நந்திக்குக் குதிரை முகம் என்றும் சொல்லுகின்றனர். இந்தக் கோயிலின் காவலுக்கு இரு பைரவர்கள் இருக்கின்றனர். கால பைரவர் வழக்கமான நாய் வாகனத்தோடும், வீர பைரவர் வாகனம் இல்லாமலும் காட்சி அளிக்கின்றனர். கைலாய நாதர் இங்கே குரு அம்சமாக வழிபடப் படுகின்றார். அதனால் அவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை நிவேதனம் செய்யப் படும் வழக்கம் இருக்கிறது. அம்பாள் பெயர் சிவகாமி அம்மை. அம்பாளுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மற்றப் பரிவார தேவதைகளில், இரட்டை விநாயகர்கள், சூரியன், அதிகார நந்தி, சப்தகன்னிமார், பஞ்ச லிங்கம், நாயன்மார்கள் வள்ளி, தெய்வானையோடு சுப்ரமணியர் போன்றவர்களும் உள்ளனர். சனீஸ்வரரும் தனியாக இருக்கிறார். இந்த ஊரில் தான் சூரனின் கொடுமை தாங்கமுடியாமல் ரிஷி முனிவர்கள் ஈசனிடம் முறையிட்டதாகவும் அதனாலேயே இந்த ஊருக்கு முறப்பநாடு எனப் பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லப் படுகிறது.

இந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து 20 கிமீட்டருக்குள் இருக்கும். பேருந்துகளில் சென்றால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிமீட்டருக்கு மேல் நடந்து தான் செல்லவேண்டும். காலை ஏழு மணிக்கு மேல் தான் கோயில் திறக்கப் படுகிறது. பனிரண்டு மணிக்கு நடை சாத்தினால் மாலை ஐந்து மணி அளவில் கோயில் திறந்து ஏழு மணிக்கெல்லாம் நடை சாத்துகிறார்கள். ஆகவே நேரத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு சென்றால் தான் தரிசனம் செய்ய முடியும்.

4 comments:

Jayashree said...

மொறப்பனாடு, புதுக்ராமம், கீழபுத்தனேரி யில உருவம் பண்ணறவங்க இருப்பாங்க அப்போலாம். எவ்வளவு நன்னா ஸ்வாமி முகம் எல்லாம் பண்ணுவாங்க தெரியுமா!!.ரொம்ப பய பக்தியோட செய்வாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். எந்த கோவில் கொடையா இருந்தாலும் பண்ணித் தர அவாளை ஆள் போய் எங்க ஊர்லேந்து அழைச்சுண்டு வருவாங்க.அந்த உருவங்கள் எல்லாம் மூக்கும் முழியுமா ரொம்ப அழகா இருக்கும் . எங்க ஊர்ல சுடலை மாட ஸ்வாமி, பத்திரகாளி உருவம் எல்லாம் கொடையின் போது ஊர்வலமா எடுத்துண்டு வருவாங்க.முதலில் நான் அது கோவில் ல இருக்கற சாமினு நினைப்பேன். அப்புறம் பண்டாரம்னு ( இந்த முகம் பண்ணறவங்களோட குழு பெயர் ) ஒருத்தர் தான் சொன்னார். மஞ்சள், மூங்கில் வாழை, குங்குமம் இதுனால தான் பண்ணுவாங்களாம். இப்போ இருக்கா நு தெரியலை

ambi said...

ம்ம், இந்த பதிவு கொஞ்சம் பரவாயில்லை. :))

@ஜெயஷ்ரி, உங்க ஊர் எதுவோ? இப்பவும் அந்த மாதிரி முகம் செய்யறவங்க இருக்காங்க. வாழை தார் வெச்சே ஐய்யபன் புலி வாகனம் மேல வருவது போல எல்லாம் செய்ய வல்லவர்கள்.

இப்பல்லாம் கொடை கொண்டாடும் வழக்கம் தான் சினிமாத்தனமா மாறி விட்டது. :(

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, அம்பி இன்னமும் இருக்குனு சொல்றார் பாருங்க. எங்க ஊரிலே இந்த மாதிரித் திருவிழாவுக்கு நீங்க சொல்றாப்போல் தான் செய்வாங்க, இப்போப் பல வருஷங்கள் ஆனதால் எனக்கும் தெரியலை இன்னும் இருக்கானு.

Geetha Sambasivam said...

@ஜெயஷ்ரி, உங்க ஊர் எதுவோ? //

அம்பி, அம்மாஞ்சி, அவங்க எங்க ஊராக்கும். அது சரி, கணேசன் இல்லைனா தமிழ் எழுதறதிலே இவ்வளவு தப்பா? ஜெயஸ்ரீ னு கூட ஒழுங்கா எழுதத் தெரியலையே! ஆயிரம் தரம் இம்பொசிஷன் எழுதுங்க. ஜெயஸ்ரீ, ஜெயஸ்ரீனு. அப்போவாவது ஒழுங்கா வருதா பார்க்கலாம். :P