எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, November 25, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - நவ கைலாயம் நிறைவு!


அடுத்ததாய் ராகுவுக்கான கோயில். இந்த நவகைலாயக் கோயில்களும் முக்கியமான ஊர்களில் இருக்கும் ஒரு சில கோயில்களைத் தவிர மற்றவை பராமரிப்பின்றி காணப்படுகின்றன. அதற்கு முந்தைய பதிவில் திரு குப்பன் யாஹூ கூறியதும் ஒரு காரணமாக இருக்கலாம். கோயில்களையும், கோயில் சார்ந்த நிலங்களையும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு இம்மாதிரி நலிந்த கோயில்களை மீண்டும் புனருத்தாரணம் செய்து வழிபடப் பயனுள்ளதாக மாற்றவேண்டும். இந்த நிலைமை மாறவேண்டும். திருநெல்வேலியிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலே குன்றுகள் சூழ்ந்த பகுதியான குன்றத்தூர் என்னும் ஊரிலே தான் ராகுவுக்கான கோயில் உள்ளது. ரோமசமுனிவர் தாமிரபரணியில் விட்ட தாமரை மலர்களில் ஒன்று ஒதுங்கிய இடமும் இதுவாகும். இந்த ஊர்க்கோயிலைப் பார்க்கும் முன்பு இந்தக் கோயில் பற்றிய வரலாற்றைப் பார்ப்போமா???

அநேகமாய்ப் பள்ளிப் பாடங்களில் இந்தக் கதையை நாம் படித்திருப்போம். அதே கதைதான். என்றாலும் திரும்ப ஒரு முறை சொல்லுகிறேன். திருநெல்வேலிக்கு அருகே உள்ள இந்தப் பகுதியில் ஒரு அதிசய மாமரம் இருந்தது. அந்த மாமரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரே ஒரு பழம் தான் பழுக்கும். அந்தப் பழத்தை வேறு யாரும் உண்ணமுடியாது. மன்னன் மட்டுமே உண்ணுவான். ஒரு வருஷம் இப்படிப் பழுத்திருந்த பழம் மன்னன் பறிப்பதற்காகக் காத்திருந்தது. அப்போது தாமிரபரணியில் நீர் எடுத்துச் செல்ல ஓர் இளம்பெண் வந்தாள். அவள் நீர் எடுக்கும்போது பழுத்துக் கனிந்திருந்த அந்தப் பழம் நீரில் விழுந்து,நீரோடு குடத்தினுள் சென்றுவிட்டது. அதை அந்தப் பெண் அறியமாட்டாள். அவள் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். மன்னன் பழத்தைப் பறிக்க வந்தான். பழம் மரத்தில் இல்லை. யார் எடுத்துச் சென்றிருப்பார்கள் என யோசித்த மன்னன் அன்று நதிக்கரைக்கு வந்தவர்கள் வீட்டையும், நதியில் நீராடி, நீர் எடுத்துச் சென்றவர்கள் வீட்டையும் கேட்டறிந்து பரிசோதனை செய்யச் சொன்னான்.

அப்போது நீர் எடுத்துச் சென்ற பெண்ணின் வீட்டில் சோதிக்கும்போது நீர்ப்பானைக்குள் பழம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. மன்னன் பெண்ணென்றும் பாராமல் அவளை விசாரித்தும் அறிந்துகொள்ள முயலாமல் அவளுக்கு மரணதண்டனை கொடுத்தான். அப்பாவியும், ஏழையும் ஆன அந்தப் பெண் இறக்கும் தருவாயில் மன்னனுக்கு சாபம் கொடுத்தாள். மன்னனின் ஆணையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த அந்தப் பகுதி மக்களுக்கும் சாபம் கொடுத்தாள். அவள் சாபத்தின்படி அந்தப் பகுதியில் பசுக்கள் தவிர அனைத்தும் பாம்புகளால் அழியத் தொடங்கியது. நாளாக, நாளாகப் பாம்புகள் பெருகின. அந்த ஊரில் எஞ்சி இருந்த பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. திருமணத்திற்குக் காத்திருந்த பெண்களை மணக்கவும் யாரும் முன்வரவில்லை. அனைவரும் யோசித்து ஈசனை நினைத்துப் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்ய, ஈசனும் அவர்களுக்காக அந்தப் பாம்புகளைப் பிடித்துத் தன் கழுத்தில் ஆபரணங்களாகப் போட்டுக் கொண்டார். மன்னன் தவறு செய்தால் அதற்கு மக்கள் தான் பொறுப்பாளிகள் எனவும், மன்னனைத் திருத்தி நல்லாட்சி செய்யச் செய்திருக்கவேண்டிய மக்கள் அவ்விதம் நடந்து கொள்ளாததையும் சுட்டிக் காட்டி திருத்திக் கொண்டு நல்ல அரசனைத் தேர்ந்தெடுத்து வாழ அருள் புரிந்தார்.

பாம்புகளைச் சூடிக் கொண்டதால் இவ்வூரின் மூலவரான லிங்கத்தின் மேலேயே நாகங்கள் சூழ்ந்து கொண்டு காணப்படுவதைத் தரிசிக்கமுடியும். ராகு ஸ்தலமான இந்த ஊர் மூலவரின் பெயர் கோதபரமேஸ்வரர் ஆகும். அம்பாள் சிவகாமி அம்மை. லிங்கத்திற்கு நீல வஸ்திரம் சார்த்தி வழிபாடுகள் நடத்தினால் ராகுதோஷம் நீங்கும் என்கிறார்கள். ராகுகாலத்திலும் ஈசனுக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. இங்கு லிங்கத்தில் மட்டுமில்லாமல் பைரவரின் இடுப்பு, மார்பு, மற்றும் தக்ஷிணாமூர்த்தியின் மீதும் பாம்பு காணப்படுகிறது. ஆறுமுக நயினார் என்னும் நாகசுப்ரமணியர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் என்பதோடு அவரின் சிலையில் இருந்து சப்த ஸ்வரங்களும் எழும் விதமாய் வடிக்கப் பட்டுள்ளது. அருகிலேயே தென் திருப்பதி என அழைக்கப் படும் திருவேங்கடநாத ஸ்வாமி கோயிலும் உள்ளது. பேருந்துகள் திருவேங்கடநாதபுரம் செல்கின்றன. அந்தப் பேருந்துகளில் சென்றாலே இந்த்க் கோயிலுக்கும் சென்று வரமுடியும்.

அடுத்தது மிகவும் மனதை வருத்தும் ஒரு செய்தியாகும். இந்தக் கோயிலுக்கு நாங்கள் செல்லவில்லை. கேதுவுக்கான இந்தத் தலம் இப்போது அழியும் நிலைமையில் உள்ளதாம். தூத்துக்குடிக்கு அருகே ராஜபதி கைலாசநாதர் கோயில் என அழைக்கப் படும் இந்தத் தலத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு லிங்கம் இருப்பதாய்ச் சொல்கின்றனர். லிங்கத்தின் நாலு பக்கங்களிலும் நான்கு சக்கரங்கள் உள்ளதாகவும், லிங்கத்திற்குக் கீழே தோண்டினால் பழைய கோயில் கிடைக்கலாம் என்றும் சொல்கின்ற்னர். இந்தத் தலம் பற்றி மிகவும் நன்கு தெரிந்த பக்தர்களே இங்கு செல்கின்றனர். பக்தர்கள் இந்த லிங்கத்திற்குப் பலவர்ண வஸ்திரம் சார்த்தி, அங்கே இருக்கும் மண்ணையே பிரசாதமாய் எடுத்து வருகின்றனர். திருச்செந்தூர் செல்லும் வழியில் தென் திருப்பேரையில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் ரோட்டோரத்திலேயே கேட்பாரற்று இந்த லிங்கம் உள்ளது. பேருந்து வசதி இல்லை. தீரவிசாரித்துத் தெரிந்துகொண்டு தென் திருப்பேரையில் இருந்து ஆட்டோ அல்லது கார் ஏற்பாட்டில் சென்றால் காரிலோ இந்த இடத்தைக் கேட்டுக் கொண்டு அடையவேண்டும். அறநிலையத் துறைஎப்போது மனசு வைக்குமோ அப்போது இந்தக் கோயில் எழும்பும் என்று எதிர்பார்ப்போம்.


இத்துடன் நவகைலாய யாத்திரை முடிவடைந்தது. அடுத்தது தென்காசிக் கோயில், திருக்குற்றாலம், திருநெல்வேலி நெல்லையப்பர் தரிசனம், சங்கரன்கோயில் கோமதி அம்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் போன்றவர்கள் தரிசனத்துடன் திருநெல்வேலி யாத்திரை நிறையும்.

3 comments:

குப்பன்.யாஹூ said...

உங்கள் பதிவின் மூலமாக நானும் நவ கைலாயம் சென்று வந்தேன்.
மிகுந்த நன்றிகள்.

உங்கள் பதிவை சேமித்து வையுங்கள், புத்தகமாக வெளியிடலாம்.

அடுத்து நீங்கள் எழுத உள்ள பதிவு எல்லாம் எனக்கு பிடித்த ஊர்கள், தென்காசி, நெல்லை, (பாபநாசம் உண்டா?)

Geetha Sambasivam said...

திரு குப்பன் யாஹூ, பாபநாசம் நவ கைலாயத்தில் முதலில் வந்தது. தாங்கள் படிக்கவில்லை என நினைக்கிறேன். லிங்க் கொடுக்கிறேன். நன்றி.

Geetha Sambasivam said...

நவ கைலாயம் 1