எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, December 06, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! -குற்றாலம் தந்த ஏமாற்றம்!


வடநாட்டு முனியான அகத்தியர் இறைவன் கட்டளைப்படி தென்னாடு வருகிறார். வடமொழியில் எல்லை தேர்ந்தவர் ஆன அவர் தமிழ் மொழியின் பால் பற்று உள்ளவர். அம்மொழியைச் சிறப்பித்தவர். இவர் வரும் காலை இக்குற்றால மலையில் மஹாவிஷ்ணுவே கோயில் கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். இறைவனின் கட்டளைப்படி வடக்கே இருந்து தெற்கே வந்த அகத்தியர் கோயிலில் தரிசனம் செய்யப் போகச் சிவனடியாரான அவரை கோயிலின் உள்ளே விட அர்ச்சகர் மறுக்கிறார். மனவருத்தத்தோடு நடந்த அகத்தியர் அங்கிருந்து பக்கத்தில் உள்ள இலஞ்சியை அடைகிறார். அங்கே தமிழ்க்கடவுளாம் முருகனின் தாள் பணிகிறார். முருகனோ எனில் விளையாட்டுப் பிள்ளை!அர்ச்சகர்களை ஏமாற்றி விட்டு உள்ளே போகுமாறு அகத்தியருக்கு அறிவுரை கூறி மறைய, அகத்தியரும் துவாதச நாமம் தரித்து பரம வைஷ்ணவராய் மாறிவருகிறார். அவருக்கு அனுமதி கிடைக்கிறது. உள்ளே சென்ற அகத்தியர் தாமே தனியாகப் பூஜை செய்ய வேண்டும்என்று வேண்டிக் கொண்டு கருவறைக்கதவைச் சார்த்திக் கொண்டு, "நின்ற சீர் நெடுமாலாய்க்" காட்சி அளித்த திருமாலைக் கையால் தலையில் அழுத்திக் "குறுகிக் குறுகுக" என்று கைலாச நாதனை வேண்டி நினைக்க குறுகிப் போன திருமால் சிவலிங்க வடிவில் குற்றால நாதன் ஆகிறார்.


இப்படி மாறிய இறைவனைக் குறித்துஅகத்தியரே பாடியது:
"முத்தனே முளரிக் கண்ணா!
மூலம் என்று அழைத்த வேழப்பத்தியின் எல்லை காக்கும்பகவனே!
திகிரியாளா!சுத்தனே! அருள் சூல் கொண்டசுந்தரக் கதுப்பினானே!
நத்தணி செவிய கோலநாடுதற்கரிய நம்பி!" என்று இருவருக்கும் பொருத்தமாகப் பாடித் துதிக்கிறார்.
குற்றால நாதரின் வலப்பக்கத்தில் தனிக்கோயிலில் "குழல்வாய் மொழி அம்மை"கோயில் கொண்டிருக்கிறாள். தலவிருட்சமான குறும்பலா நான்கு வேதங்களும் தவம் செய்து பலா மரரூபமாய் அங்கே இருப்பாதாய் ஐதீகம்.அங்கே ஒரு லிங்கம். இம்மரத்துப் பழத்தை வானரங்கள் தவிர வேறு யாரும் பறித்து உண்ணுவது இல்லை. இறைவன் "குற்றாலம், சமருகம்" என்ற பெயருடைய ஆத்தி மர நிழலிலே குடிகொண்டதால் குற்றாலம் என்ற பெயர்
உண்டாயிற்று என்று சொல்கிறார்கள். மலை அதிக உயரம் இல்லை. 3,000 அடியில்இருந்து 5,000 அடிக்குள் தான் இருக்கும்.மூன்று சிகரங்கள் உள்ளதால் "திரிகூடம்"என்ற பெயரும் உண்டு.

மலைக்காடுகளுக்குச் செண்பகக்காடு எனப்பெயர் உண்டு. நிறைய மூலிகைகள் அடங்கிய மலை என்றும் சொல்கிறார்கள். இம்மலையின் உச்சியில் இருந்து குதித்துவருவது தான் சிற்றாறு. மிக்க உயரத்தில் தேனருவி இருக்கிறதாய்ச் சொல்கிறார்கள்.அதற்கு அடுத்து செண்பக தேவி அருவி.

இங்கே செல்லவும் காடுகளின் வழியாய்த்தான் போக வேண்டி இருக்கிறது.குற்றாலத்தில் சாரல் காலம் மக்கள் கூட்டம் கூடுவதால் அப்போது போய் வருவதுசற்றுப் பாதுகாப்பு என்று கூறுகிறார்கள்.

அதற்குப் பின் தான் தற்சமயம் நாம் பார்க்கும் முக்கிய அருவி என்று சொல்லப்படும் அருவி. சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விழும் நீர் இடையில் உள்ள பாறைகளிலும் விழுந்து கீழே விழுவதால் வேகம் குறைவாக இருப்பதால் குளிக்க ஏற்றவாறு உள்ளது. அதுவும் முதலில்
பொங்குமாங்கடலில் விழுந்து பின்னே கீழே விழுகிறது.

"வானரங்கள் கனி கொடுத்து
மந்தியோடு கொஞ்சும்மந்திசிந்து
கனிகளுக்குவான்கவிகள் கெஞ்சும்தேனருவித்
திரை எழும்பிவானின் வழி ஒழுகும்செங்கதிரோன்
பரிக்காலும்தேர்க்காலும் வழுகும்"

குற்றாலக் குறவஞ்சியின் இந்தப் பாட்டைப் படித்த பள்ளி நாட்களில் இருந்தே குற்றாலத்தைப் பற்றிய கனவுகளில் இருந்த எனக்கு இப்போதைய குற்றாலம் ஏமாற்றத்தையேஅளித்தது. சுட்டுப் பொசுக்குகிற வெயிலில் முக்கிய அருவியில் குளித்துக்கொண்டிருந்த மக்களின் கூச்சல் அருவியின் ஓசையை அமுக்குகிறது. இருக்கிறது, இப்போதும் இருக்கிறது பலாவும், மாமரங்களும், நெல்லிக்கனிகளும்,அதை உண்ணும் வானரங்களும். என்றாலும் அதை எல்லாம் அழுத்திக் கொண்டு இப்போது வந்திருக்கும் கட்டிடங்கள் அந்த அழகை மங்கச்செய்கின்றது.
குற்றால நாதரோ என்றால் கேட்கவே வேண்டாம். ஆன்மீக ஐதீகப்படிக் "கு" என்பதை ஒரு பக்கம் இந்தப் பூமியாகவும், இன்னொரு பக்கம் பிறவிப்பிணியாகவும் கொண்டால் "தாலம்"என்ற சொல்லானது அதைத் தீர்க்கும் என்று குறிக்கிறதாய்ச் சொல்கிறார்கள்.இங்கே உள்ள பராசக்தி யோகத்தில் இருக்கிறாள். இவளே மூவரையும் பயந்தாள்எனவும் சொல்கிறார்கள். அதனாலும்இதற்குத் திரிகூடம் என்னும் பெயர்வந்ததாயும் கூறுகிறார்கள். இவ்வுலகம் தோன்ற மூல காரணமாயிருந்த காரணத்தால் "தரணி பீடம்" எனவும் சொல்கிறார்கள். அதைக் குறிக்க ஒரு தொட்டில் இந்தப் பராசக்தி பீடத்தின் சன்னதியில் ஆடுகிறது.
இப்படிப்பட்டகோயில் இன்று இருக்கும் நிலையை எண்ணிப் பார்த்தால் மன வருத்தம் மேலிடுகிறது. என்ன தான் முன் மண்டபம் யாத்திரீகர் தங்க ஏற்பாடு செய்து கட்டி இருந்தாலும் சாப்பாட்டு இலைகளில் இருந்து எல்லா அசுத்தங்களையும் அங்கே பொதுமக்கள் செய்கிறார்கள். கண்டும் காணாத கோயில் சிப்பந்திகள்.

கோயிலில் இருந்து சற்றுத் தூரத்தில் மேலே கொஞ்சம் ஏறிப் போனால் வருகிறது பிரசித்தி பெற்ற "சித்திர சபை". கோயிலின் வடக்கே உள்ள இந்தச் சித்திர சபை அழியும் நிலையில் உள்ளது. அரசின் பாதுகாப்பில் உள்ள இதற்கு உள்ளே செல்லக் கட்டணம் வாங்குகிறார்கள். ஆனால் இந்தக் கோயிலின் எதிரே உள்ள குளமும் சரி, அதன் நடுவில் உள்ள வசந்த மண்டபமும் சரி பாழடைந்த நிலையில்உள்ளது. முழுதும் சித்திரங்களால் நிறைந்த இந்தக் கோயிலில் "நடராஜர்" சித்திர உருவில் காட்சி அளிக்கிறார்.மூலிகைகளைக் குழைத்துத் தீட்டிய வண்ணங்கள் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. இவற்றில் நம் மக்கள் கைவண்ணம் வேறே! அவர்களின் அன்பைக் காட்டிக் கொள்ள இந்தச் சித்திரங்கள் தான் கிடைத்ததா புரியவில்லை. இப்போது சற்றுத் தடுப்புப்போட்டிருந்தாலும் பெரும்பாலான சித்திரங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன. 64 திருவிளையாடல்களைக் காட்டும் சித்திரங்கள் பாதி அழிந்து உள்ளது. நடராஜர் மட்டும் பிழைத்தார். எதோ விட்டு வைத்திருக்கிறார்கள். அரசுமனது வைத்தால் தான் நடராஜரோடுசேர்ந்து எல்லாருக்கும் வழி பிறக்கும். மிகுந்த மனவேதனையோடு திரும்ப
வேண்டியதாயிற்று.

4 comments:

Unknown said...

amma thaankal aanmeega katuraiyai sirappaaga ezhuthukreerkal kutraalam nan palamurai sendr irukiren aanal thankalin moolagathan agathiyar than thirumaalai kuru muni aagiyavar endru therinthu konden pala per niraya munivarkalin peyarkalai sonnaarkal



miga azhakaka koorvaiyaka katturaiyayi thodukreerkal thankal pani sirakka vaazthukkal

Geetha Sambasivam said...

நன்றி பிரபாகர் அவர்களே, திருக்குற்றாலத்தை நினைத்து மிகவும் எதிர்பார்ப்புடன் போனதாலோ என்னமோ எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இலஞ்சி பரவாயில்லை, முருகனும் அழகு, ஊரும் அழகு.செல்லும் பாதை அதைவிடவே அழகு. இன்னொரு முருகன் கோயிலும் மலை மீது உள்ளது மாலை வெகு நேரமாகிவிட்டதால் செல்ல முடியாது என்று சொல்லிவிட்டனர். பார்க்கலாம், அந்த முருகன் கூப்பிட்டால் போகலாம்.

குப்பன்.யாஹூ said...

yes you are right, Precius temples all are.

We do not take care. but few temples are now very well taken care (nellai appar temple, papanasma templ) are by vaazga valamudan groups

Geetha Sambasivam said...

வாங்க திரு குப்பன் யாஹூ, நம் கோயில்கள் வெறும் ஆன்மீக அடையாளம் மட்டுமின்றிச் சரித்திர அடையாளமும் கூட. எந்தவிதமான விஞ்ஞானமுன்னேற்றமும் இல்லாத காலத்திலேயே எப்படி யோசித்துக் கட்டுமானப் பணிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பதையும், இது எந்தவிதமான வற்புறுத்தலும் இன்றியே நடந்திருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. மன்னர்கள் தங்கள் பெயர் காலத்திற்கும் நிற்கச் செய்த இந்த அடையாளங்கள் இல்லை எனில் இன்று நாம் தமிழர் எனப் பெருமை கொள்வதில் அர்த்தமே இல்லை.