எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, May 14, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! முகலிங்கங்கள் வகை!

இது இருமுக லிங்கம் அல்ல. சதுர்முக லிங்கத்தில் இரு முகங்கள் மட்டுமே காண முடிகிற அமைப்பில் உள்ள படம். இரு முகலிங்கங்கள் படம் கிடைக்கலை. :(

இப்போது இரு முக லிங்கம் பத்திப் பார்ப்போம்.

இரு முக லிங்கங்களில் ஒரு முகம் கிழக்கு நோக்கியும் (தத்புருஷம்) மற்றொரு முகம் மேற்கு நோக்கியும் காணப்படும். இவை "ம்ந்திரலிங்கங்கள்" எனச் சொல்லப் படுகின்றன. இவற்றை அதிகம் வழிபடுவது கர்நாடகாவில் உள்ள லிங்காயத்தார் என அழைக்கப் படும் வீர சைவர்கள் ஆவார்கள். சிவத் தொண்டு செய்பவர்களும் இந்த லிங்கங்களை வழிபடலாம் எனச் சொல்லப் படுகிறது. இந்த லிங்கங்களைப் பூஜிக்க தற்காலத்தில் "விருட்சி" என அழைக்கப் படும் இருவாட்சி மலர்கள் நல்லது. இரு முகம் கொண்ட ருத்திராட்சத்தால் அலங்கரிக்கலாம்.

அடுத்து மூன்று முக லிங்கங்கள். இவை கிழக்கு, தெற்கு, வடக்கு மூன்று திசைகளை நோக்கிக் காணப் படும். தத் புருஷம், அகோரம், வாமதேவம் என மூவகைப் பட்ட முகங்கள் கொண்ட இந்த லிங்கங்கள் முத்தொழிலையும் குறிப்பவை எனச் சொல்லப் படுகிறது. கிழக்கு முகம் ஆண்மையின் கம்பீரத்துடன் காணப்படுவதால் படைத்தலையும், தெற்கு முகம் கோபத்துடன் காணப் படுவதால், அழித்தலையும், வடக்கு முகம் பெண்மையின் ஜாடையுடனே சிரிப்புடனேயும் காணப் படுவதால் காத்தலையும் குறிக்கும். திரிமூர்த்தி லிங்கம் என அழைக்கப் படும் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரை கோயிலிலும், நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வரரும் திரி மூர்த்தி லிங்கங்கள் என அழைக்கப் படுகின்றன. இது தவிர, எலிபெண்டா குகையிலும் மும்முக லிங்கம் காணப் படுவதாய்ச் சொல்கிறார்கள். இந்த மும்முக லிங்கங்களுக்கு மும்முக ருத்ராட்ச மாலை அணிவித்து, மூன்று தளங்கள் உள்ள வில்வத்தால் வழிபடலாம்.

இனி சதுர்முக லிங்கங்கள் பத்திப் பார்க்கலாம். சதுர்முக லிங்கம் என்னும் நான்கு முக லிங்கம் "வேத லிங்கம்" என அழைக்கப் படுகிறது. இவற்றின் முகங்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளை நோக்கி இருக்கும். இவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிப்பவை என்று சொல்வார்கள். நேபாளத்தின் பசுபதி நாதர் கோயிலில் நம் கண்ணுக்குத் தெரிவது சதுர்முக லிங்கம் தான் என்றாலும், அவற்றுக்கும் மேல் நோக்கிய ஒரு முகமும், கீழ் நோக்கிய ஒரு முகமும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளதாய்ச் சொல்லப் படுகிறது. ஆனால் நேபாள சதுர்முக லிங்கம் மார்பு வரையிலும், இரு கரங்களுடனும் காட்சி தருகிறது. நான்கு முகம் இருப்பதால் அங்கே நான்கு வாசல்களும் உண்டு. ஒவ்வொரு வாசலிலும் போய்த் தனித் தனியாகத் தரிசனம் செய்யும் வசதியும் உண்டு.

இது தவிர, காஞ்சியில் கச்சபேஸ்வரர் கோயிலிலும், திருவதிகை, திருவண்ணாமலை, திருவானைக்கா ஆகிய தலங்களிலும் காளஹஸ்திக்கு அருகே உள்ள மலை மண்டபத்திலும் சதுர்முக லிங்கங்கள் உள்ளதாய்த் தெரிய வருகிறது. இந்த லிங்கங்களுக்கு நான்கு முக ருத்திராட்சம் அணிவித்து நான்கு வில்வதளங்களால் வழிபடுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வழிபடுவோருக்குப் பிரம்ம ஞானம் கைவரப் பெற்று எட்டுத் திக்கிலும் புகழ் வாய்ந்தவராய்ச் சொல்லப் படுவார்கள்.

ஐந்து முக லிங்கங்களில் திசைக்கு ஒன்றாக ஐந்து முகங்கள் தவிர, உச்சியில் வடகிழக்கு திசை நோக்கி ஒரு முகமும் காணப்படும். திருச்சியில் திருவானைக்காவல் கோவில் அருகே "பஞ்சமுகேஸ்வரர் கோயில்" என்று தனியாக உள்ளது. சஷ்டி அப்த பூர்த்தியை அந்தக் கோயிலில் வைத்துச் செய்யப் படுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வட இந்தியாவில் சில தலங்களிலும் பஞ்சமுக லிங்கங்கள் காணப் படுகின்றன. திருக்கைலையில் இறைவனின் தரிசனம் பஞ்சமுக லிங்க தரிசனம் என்றே சொல்லப் படுகிறது. இந்தப் பஞ்ச முகங்களில் இருந்தே கங்கை ஐந்து உருவங்களில் பொங்கி வருவதாயும் சொல்லப் படுகிறது. திருக்கோயில்களில் கடைப் பிடிக்கப் படும் "ஆகமம்" இந்த ஐந்து முகங்களில் இருந்தே வந்ததாயும் சொல்லப் படுகிறது. அதனால் பஞ்சமுக லிங்கத்தைச் சிலர் "சிவாகம லிங்கம்' எனவும் சொல்வார்கள்.

ஐந்து முக ருத்திராட்சத்தினால் மண்டபம் கட்டி, ஐந்து பொருட்களால், குறிப்பாய் பஞ்சகவ்யம் எனப்படும் பசும்பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவற்றால் அபிஷேஹம் செய்து, ஐந்து மலர்களால் மாலை அணிவித்து, ஐந்து வில்வங்களால் அர்ச்சித்து, ஐவகை நைவேத்தியம் செய்வித்து, வழிபடுதல் விசேஷம் எனச் சொல்கின்றனர்.

2 comments:

Jayashree said...

திருவண்ணாமலையிலும் பஞ்சமுக தரிசனம் பண்ணலாம் . . அது கார்திகை தீப கிரிவலத்துல கிரிவலம் பாதை டௌன் ஜாயின் பண்ணற இடத்துலேந்து நல்ல நிலா வெளிச்சம் இருந்தா தெரியும். 4 ஹில் டாப் 4 வேதம்/ முகம் (நீங்க சொல்லறாப்பல ), ஈசான முகம் -தீபம்னு பெரியவா , தெரிஞ்சவா சொல்லிக்கேள்வி. தீபம் இல்லாத நாள்ல 4 மலை உச்சிதான் பார்திருக்கேன்.. 14 வருஷம் முன்பு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமத்தில A/C ரூம்ஸ்லேந்து மேல அண்ணாந்து பாத்தா தீபம் அத்தனை அழகா தெரியும்.அதுவும் கார்தால 4 மணிக்கு ... நிம்மதின்னா அதுதான் ... இப்ப அந்த ரூம் எல்லாம் இடம் மாறி போய் இருக்கு.

மாதேவி said...

முகலிங்கங்கள் விளக்கத்துடன் கூறியுள்ளீர்கள் நன்றி.