எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, May 30, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! நடராஜா, நடராஜா

ஆனந்த தாண்டவம் என்பது சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்றும், தன்னுடைய பக்தர்களான பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் மற்ற பக்தர்களுக்காகவும் வேண்டி இறைவனால் ஆடப்பட்டது. இதைத் தேவாதி தேவர்களும் கண்டார்கள். இந்த நாட்டியத்தைக் காணத் தேவர்கள் மட்டுமில்லாமல் அந்த ஸ்ரீமந்நாராயணனே தன்னுடைய பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக் கொண்டு, கோவிந்த ராஜனாக இங்கே வந்து அமர்ந்து கொண்டு தினந்தோறும் கண்டு களிக்கிறான் என்றால் அந்த ஆட்டத்தை என்னவென்று சொல்லுவது?

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

பொன்னிலே சிறந்தது அம்பொன் எனக் கூறுகின்றனர். அத்தகைய அம்பொன்னினால் ஆன தில்லைப் பதியின் ஐந்து ஆவரணங்கள் எனப்படும் ஐந்து சபைகளிலும் முதல் ஆவரணமான பொன்னம்பலத்திலே ஐந்தொழிலையும் செய்யும் வண்ணம் சக்தியாகவும் நின்று, பேரானந்தப் பெருவெளியில் நடனம் ஆடுகின்றான் எனத் திருமூலர் குறிப்பிடுகிறார்.


ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.

அந்த ஈசன் ஆடும்போது அவன் மட்டுமா ஆடுகிறான்? அவனோடு சேர்ந்து நாம் அனைவரும் அல்லவோ அவன் ஆட்டி வைக்கிறபடி ஆடுகின்றோம்? ஆதி, அந்தங்களைக் கடந்து செய்யும் இந்த ஆட்டம் ஓங்காரமான பிரணவ நாதமோடு ஆடப் படுகிறதன்றோ? என்பது திருமூலர் வாக்கு.


அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
உம்பர மாம் நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே

தில்லைச் சிற்றம்பலத்திலே ஓயாது ஆடும் கூத்தன் ஆடும் ஆட்டத்தின் போது அவனுடைய இரு திருவடிகளில் இருந்து எழும் சிலம்பின் ஓசையானது நாதமாகவும், விந்தாகவும் மாறி நிற்க, அவற்றினின்று தோன்றும் ஐந்து தத்துவங்களையும் உயிர்களுக்குப் பொருத்தி அவற்றிற்கு அறிவைத் தருகிறான் ஈசன். ஐந்து தத்துவங்களாகத் திருமூலர் குறிப்பிடுவது:

அபர நாதம், அபர விந்து, சாதாக்கீயம், ஈசுரம், சுத்தை வித்தை ஆகியன வாகும்.

3 comments:

sury said...

நன்னாளான சங்கட சதுர்த்தி இன்று.
பொன்னாளாக நினைத்து நீவிர்
எழுதிய பதிவு சிறப்புடைத்து.

என்னில் உன்னில் என்று இல்லாது,
அவனி எங்கும் பரவி நில்லும்
சிவனின் அற்புதத் தாண்டவம் அது
அதிசயத் தாண்டவமென்பர்
ஆனந்த தாண்டவம் என்பார் விப்றர். .

பதஞ்சலி, வியாக்ரபாதரோடு
கோவிந்தராஜனும் கண்டு களித்த‌
தாண்டவத்தை இத்
தாத்தாவும் நினைந்து
கண்கள் நனைந்து மகிழ என்
இதயம் வெதும்பொழுது
திருமூலர் பாடலுடன் இட்ட நீவிரது
நற்சிந்தைதனைப் பாராட்ட என்
நாவிலோர் சொல்லிலையே !!!

சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com

கீதா சாம்பசிவம் said...

ரொம்பப்பெருமைப் படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி. இதுக்கு மேல் சொல்லத்தெரியலை.

Anonymous said...

மிக அர்புதமான நுணுக்கமான கருத்துக்கள்.தொடருங்கள் உங்கள் சேவையை...