எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, June 18, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நடராஜர்!

முசுகுந்தன் கதை அனைவருக்கும் தெரியும். ஏற்கெனவே என்னோட திருவாரூர்ப் பதிவிலே எழுதி இருக்கேன். சிறந்த சிவபக்தன் ஆன "முசுகுந்தச் சக்கரவர்த்தி" தேவேந்திரனுக்குத் தேவாசுர யுத்தத்தில் உதவி செய்தான். அதன் பலனாக அவனுக்குக் கிடைத்தவையே ஏழு விதமான நடராஜத் திருக்கோலங்கள். இவையே வேறுவிதமாயும் சொல்லப் படுகிறது. முசுகுந்தன் பூஜித்து வந்த நடராஜ மூர்த்தத்தைத் தேவேந்திரன் கவர்ந்து கொண்டு செல்ல, முசுகுந்தன் தேவேந்திரனுடன் போரிட்டு வென்றான். அவனின் நடராஜ மூர்த்தம் போலவே மற்றும் ஆறு மூர்த்தங்களைச் செய்வித்து, முசுகுந்தனிடம் காட்டுகிறான் தேவேந்திரன். உன்னுடையது இவற்றில் எதுவோ நீயே பார்த்து எடுத்துச் செல் எனக் கூறுகிறான். இறை அருளால் சரியான மூர்த்தத்தைக் கண்டறிகிறான் முசுகுந்தன். அதுவே திருவாரூர் தியாகராஜா எனவும், மற்ற மூர்த்தங்களையும் முசுகுந்தனுக்கே தேவேந்திரன் அளித்தான் எனவும் அவை முறையே திருவாரூரைச் சுற்றி ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டதாயும் சொல்லப் படுகிறது.

முதலில் இந்தத் தியாகராஜா பற்றிய ஒரு விளக்கம். மஹாவிஷ்ணு பிள்ளை வரம் வேண்டி ஈசனைப் பிரார்த்திக்கிறார். அப்போது அவர் அம்மையையும் சேர்த்து நினையாமல் ஈசனை மட்டுமே வேண்டியதாகச் சொல்வார்கள். அம்மை அதற்காக மஹாவிஷ்ணுவைக் கோபித்ததாகவும், பின்னர் அம்மையோடு சேர்த்துத் தம் மருமகன் ஆன கார்த்திகேயனையும் சேர்த்து சோ+உமா+ஸ்கந்தனாக மனதுக்குள்ளாகவே ஆவிர்ப்பவித்து ஜபித்ததாகவும் ஐதீகம். அப்போது அவர் மூச்சுக்காற்று வெளியே போகும்போதும், உள்ளே வரும்போதும் ஈசன் ஆடிய அந்தத் தாண்டவமே அஜபா நடனம் எனப்படுகிறது. அந்தச் சமயம் அவர் தம் மனதிற்குள்ளாக ஈசனை இதயத்தில் நிறுத்தி மனதிற்குள்ளாகவே ஜப மந்திரங்களைச் சொல்லி வழிபட்டார். இப்படி வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளாகச் சொன்னதே அஜபா எனப்படும்.

திருவாரூர் - வீதி விடங்கர் - அஜபா நடனம்

வேதாரண்யம் - புவனி விடங்கர் -ஹம்சபாதா நடனம்

நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர் - விசி நடனம்

திருநள்ளாறு - நகர விடங்கர் - உன்மத்த நடனம்

திருக்காரயல் - ஆதி விடங்கர் - குக்குட நடனம்

திருக்குவளை - அவனி விடங்கர் - ப்ருங்க நடனம்

திருவாய்மூர் - நிலா விடங்கர் - கமலா நடனம்

என்று சொல்லப் படுகிறது. பொதுவாக ஈசனின் திருநடனம் 9 வகை எனவும் சொல்லப் படுகிறது. அவை ஆனந்தத் தாண்டவம், காளி தாண்டவம் அல்லது காளி நிருத்தம், கெளரி தாண்டவம், முனி நிருத்தம், சந்த்யா தாண்டவம்,. சம்ஹார தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதம் மற்றும் பிட்சாடனம். இதைத் தவிரத் தஞ்சை மாவட்டத்தின்
திருவெண்காட்டிலும், திருச்செங்காட்டாங்குடியிலும் ஈசனின் நாட்டியக் கோலங்களைப் பார்க்கலாம். திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் ஈசனின் இந்தக் கூத்தை ஐந்து
வகைகளாய்ப் பிரித்துள்ளார். அவை சிவானந்தக் கூத்து, அறிவையும், சுந்தரக் கூத்து, ஆற்றலையும், பொற்பதிக் கூத்து, அன்பையும், பொற்றில்லைக் கூத்து, ஆற்றல் கூடுதலையும், அற்புதக் கூத்து, அறிவு கூடுதலையும் குறிப்பதாய்ச் சொல்லுகிறார்.

சிவானந்தக் கூத்து: திருமந்திரப் பாடல்

"தானந்தமில்லாச் சதானந்த சத்தி மேல்
தேனுந்தும் ஆனந்தமாநடங்கண்டீர்:
ஞானங்கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கானது."

சுந்தரக் கூத்து:

"அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பாலும்
உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்
கண்டங்கரியான் கருணை திருவுருக்
கொண்டங்கு உமை காணக் கூத்து தந்தானன்றே!"

பொற்பதிக் கூத்து:

தெற்கு வடக்கு கிழக்கு மேற்குச்சியில்
அற்புதமானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில் பேரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனி நடஞ்செய்யுமே!"

பொற்றில்லைக் கூத்து:

"அண்டங்கள் ஓரேழும் அப்பொற்பதியாகப்
பண்டையாகாசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டனிற் சத்தி திரு அம்பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்து கந்தானன்றே!"

அற்புதக் கூத்து:

"இருவருங்காண எழில் அம்பலத்தே
உருவோடருவோடு அருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தனாந்தன்
அருளுருவாக நின்றாடலுற்றானே!"


அஜபா நடனம் ஒரு விளக்கம்: மஹாவிஷ்ணு ஈசனோடு, அம்மையையும், கந்தனையும் சேர்த்து நினைத்து வழிபட்டது பற்றி அந்த மூர்த்தம் சோமாஸ்கந்தராக இருப்பின், ஈசனோடு கூடே, அன்னையும், குமரனும் கூட பெருமாளின் மனத்தரங்கில் அஜபா நடனம் ஆடியதாக அல்லவா வரும்? என்று கேட்கின்றனர். பல தாண்டவ வடிவச் சிற்பங்களிலும், ஈசன் ஆடும்போது அன்னை அருகிருந்து ரசிக்கும்படியான சிற்பங்களைப் பார்த்திருக்கிறோம். அப்படியே இப்போதும் தெரிந்து கொள்ளவேண்டும். மஹாவிஷ்ணுவின் மூச்சுக்காற்றிலே மேலேயும், கீழேயும் ஈசன் எழுந்தாடியதை அருகே இருந்தவண்ணம் உமையும், கந்தனும் பார்த்துக்கொண்டிருந்தனர். இது நம் மனக்கண்ணால் மட்டுமே பார்த்துக் கேட்டு ரசிக்கவேண்டியது. அப்படியே உருவங்களோடு வந்துட்டாங்கனு நினைச்சால் அவ்வளவு தான்!

2 comments:

Jayashree said...

உள், வெளி செல்லும் மூச்சை விடும் ஜீவன், சித்தம் சொல் வினை இணைந்து எதிர்பார்ப்புகள் இல்லாமல் சிவமாகிய அன்புடன் செயல்படும் செயல்களின் போது ஜீவனில் சீராக எழும் சக்தி அந்த சிவனுடன் சேர்ந்து எழும் ஆனந்தமே ஜபம் இல்லாத நடனம் .கழுத்துக்கும் நெஞ்சுக்கும் நடுவில் ஆனந்த கூத்தாடும் அந்த சந்தோஷம் சுயநலம் அற்றது. கண்ணை மூடி மனதை அடக்குவது அவ்வளவு சுலபம் இல்லை . pure thought word and deed united action without any expectation but with lots and lots of love!! இதை நமக்குள் நாம ஒவொருவரும் ஏதாவது ஒரு சமயத்தில் நல்ல கார்யம் செய்திருக்கும் போது அனுபவிச்சிருப்போம் ஆனா அறிவதில்லை.நாம் வாழற ஒவ்வொரு நொடியையுமே இப்படி த்யானம் ஆக்கலாம்.

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, அஜபா நடனத்துக்கு உங்கள் விளக்கம் அருமையா இருக்கு. உண்மைதான் கண்ணை மூடிக் கொண்டால் போதுமா? அப்போத் தான் மனம் கொட்டக் கொட்ட விழித்துப் பார்க்கிறது. பார்வையும் வேகமும், ஓட்டமும் வேகம். அதை அடக்கி வழிக்குக் கொண்டு வரதுக்குள்ளே! தினம் தினம் த்யானத்தின் போது தோன்றும் நினைவுகள் தான். ரொம்ப நன்றி உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்.