எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, June 24, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நடராஜர்! ஆட்டத்தின் வகைகள்!

மற்ற விடங்கர்களைப் பற்றி அறியும் முன்னர் தஞ்சைக் கோயிலின் விடங்கர் பற்றி ஒரு சிறு அறிமுகம். எனக்கும் இது இப்போத் தான் தெரிய வந்தது. ராஜராஜ சோழனின் சிவபக்தி ஈடு இணையற்றது. தன் தலையில் சூடிக்கொண்டிருந்த சோழநாட்டு மணிமகுடத்தை விடவும் அவன் பெரியதாய் மதித்தது ஈசன் திருவடி நீழலையே. எவருக்கும் வணங்கா அவன் சிரம் ஈசன் திருவடியில் தோய்ந்து பதிந்து காணப்படுவதில் பெரு மகிழ்ச்சியும், உவகையும் கொண்டான் அவன். குறிப்பாய்ச் சிதம்பரம் நடராஜாவிடம் பெரும் பக்தி பூண்டவன். தில்லை அந்தணர்களே பரம்பரை, பரம்பரையாகச் சோழ அரசர்களின் தலையில் மகுடம் சூட்டும் உரிமையைப் பெற்றிருந்தது மட்டும் இதன் காரணம் அல்ல. ஆடவல்லான் என அப்பர் ஸ்வாமிகள் அன்புடன் அழைத்த தில்லை நடராஜனின் ஆநந்தக் கூத்தில் மெய்மறந்தான் ராஜராஜன். வடநாட்டிலிருந்து வெற்றி கண்டு வந்த ராஜராஜன் தன் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்க விருப்பமின்றி, அனைத்துப் பெருமையையும், வெற்றியையும் ஈசனுக்கே அர்ப்பணித்துத் தஞ்சைப் பெருங்கோயிலை உருவாக்கினான்.

அங்கே எல்லாமே பெரிது பெரிதாக சிற்பங்கள். பெரிய நந்திகேஸ்வரர், பெரிய ஆவுடையார், பெரிய லிங்க பாணம், பெரிய கருவறைக் கோபுரம் சுற்றுப் பிராஹாரங்களிலும் ஈசனின் பல்வேறு வடிவங்களில் பெரிய சிற்பங்கள் அமைத்தான். அதோடு விமானத்தை இருநூறு அடிக்கு மேல் உயரமாய்க்கட்டி தக்ஷிணமேரு என்றும் பெயர் வைத்திருக்கிறான். உள்ளேயும் தக்ஷிண விடங்கர் என்ற பெயரில் ஒரு மூர்த்தம் உண்டு. சோமாஸ்கந்தர் தான் அவர். மூலஸ்தான மூர்த்தியான அருவுருவான லிங்கத்தின் பிரதிநிதியாக அனைத்துச் சிவன் கோயில்களிலும் காணப்படும் சோமாஸ்கந்த மூர்த்திக்கு இந்தத் தஞ்சைப் பெருங்கோயிலில் தக்ஷிண விடங்கர் என்ற பெயர். என்ன?? குழப்பமா இருக்கா? விடங்கர் என்றால் உளியால் செதுக்காத மூர்த்தத்தைத் தானே சொல்வார்கள்? தஞ்சைக் கோயிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உளியால் தானே செதுக்கி இருக்க முடியும்னு தோணுதா? ஆம், உண்மைதான், இங்கே விடங்கர் உளியால் தான் செதுக்கப்பட்டிருக்கிறார். எனினும் விடங்கர் என்ற பெயரையே ராஜராஜன் இந்த மூர்த்தத்துக்கும் வைத்துள்ளான். பொதுவாய் விடங்கர் என்றாலே வீதி விடங்கரும், திருவாரூரும் தான் நினைவில் வரும். சப்த விடங்க ஸ்தலம் இருந்தாலும் பெருமையும், பெயரும் பெற்ற தலம் திருவாரூரே ஆகும். ஒரு காலத்தில் சோழநாட்டுத் தலைநகராமாகவும் இருந்து வந்தது. ஆகவே பழைய தலைநகரான திருவாரூரை நினைவு கூர மட்டுமின்றி, தன் குலத்து முன்னோர்களான மனுநீதிச் சோழனிலிருந்து திருவாரூரைத் தலைநகராய்க் கொண்டு ஆட்சி புரிந்த அனைத்துச் சோழ மன்னர்களின் நினைவாகவும் இங்கே உள்ள மூர்த்தத்துக்கும் விடங்கர் என்ற பெயரை ராஜ ராஜ சோழன் சூட்டியதாயத் தெரியவருகிறது. தியாகராஜாவை இப்படிப் பெருமைப் படுத்திய ராஜராஜன், நடராஜாவையும் பெருமைப் படுத்தி உள்ளான். இங்கே உள்ள நடராஜ மூர்த்தத்துக்கு “ஆடல்வல்லான்” என்றே பெயராகும். இந்தக் கோயிலின் ஆடவல்லானுக்காக வழிபாட்டில் ஏற்படுத்தப் பட்ட பல வகை உபசாரங்களில் ஆட்டமும், பாட்டமும் முக்கியமாக இருந்து வந்திருக்கிறது. அதிலே சாந்திக் கூத்து என்ற ஒன்றும் இருந்திருக்கிறது. அது என்ன என்று ஆராயப் போனால், உக்ரகாளியை அடக்கிய ஆடவல்லான், அவளைத் தோற்கடித்து, அவளுடைய உக்ரத்தை சாந்தப் படுத்தியதே சாந்திக்கூத்து என்ற பெயரில் வழங்கி வந்ததாய்த் தெரியவருகிறது. அது பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?

இந்த சாந்திக் கூத்தே தற்கால மலையாள நாட்டிய நாடக வகையான கதகளி ஆட்டத்தின் மூலம் என பரமாசாரியாள் அவர்கள் தெரிவிக்கிறார். இவை நாட்டியம் கலந்த நாடக வகையைச் சார்ந்தது என்றும் சொல்கிறார். நாட்டிய, நாடக வகைகள் சாந்திக் கூத்து, விநோதக் கூத்து என இருவகைப் பட்ட்து என்றும், விநோதக் கூத்தில் கொஞ்சம் ஹாஸ்யம், விநோதம், கலந்து பொம்மலாட்டம், கழைக்கூத்து, குடக்கூத்து(கரகாட்டம் போன்ற ஒரு வகை) இவை எல்லாமும் கொஞ்சம் வேடிக்கை, விளையாட்டு கலந்து ஆடப் பட்டதாயும், சாந்திக் கூத்து இவற்றிலிருந்து வித்தியாசப் பட்டதாயும் கூறுகின்றார். சாந்தி கூத்து நாலு வகைகள் என்று தெரிய வருகிறது. ஒவ்வொன்றாய்ப் பார்ப்போமா?

சொக்கம்: சுத்த நிருத்தம் என்று சொல்லப் படும் இதில் பாட்டுக்கு அபிநயமாக இல்லாமல் தில்லானா, ஜதிஸ்வரம் போன்ற அடவுகளைப் பிடித்து மனசை உயர்த்தும் வண்ணம் நளினமாய் உடலை வளைத்துக் கொண்டே அதற்கேற்றவாறு கை, கால்களையும் வளைத்துக் காட்டவேண்டும். இவற்றில் 108 கரணங்கள் உண்டெனத் தெரிய வருகிறது. அந்தக் கரணங்களை ஈசன் ஆடும் கோலத்தில் தஞ்சைப் பெருங்கோயிலின் கர்ப்பகிருஹத்தைப் பிரதக்ஷிணம் செய்யும் போது விமானத்தில் இரண்டாம் தளத்தில் அமைக்கப் பட்டிருக்கின்றன. கூர்ந்து கவனிக்கவேண்டும், நாட்டிய சாஸ்திரத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் 108 கரணங்களும் சொல்லப் பட்டிருக்கிறதாயும் தெரிய வருகிறது.

அடுத்து மெய்க்கூத்து: இதில் நாயகன், நாயகி பாவத்தில் இறைவனை வழிபடுவது பற்றியே சொல்லப் படும். ஜீவாத்மாவும், பரமாத்வாவும் ஐக்கியமாகும் பாவத்தில் பாடல்கள் அமைந்துள்ள தேவார, திருவாசகப் பாடல்களைக் கொண்டு அமைக்கப் படும்.

மூன்றாவது அவிநயம்: கவனிக்கவும் அவிநயம். விநயம் என்றால் என்ன அர்த்தமோ அதற்கு மாற்று என இங்கே அர்த்தம் கொள்ளக் கூடாது. அபிநயமே, அவிநயமாக இங்கே ஓரெழுத்து மாற்றிச் சொல்லப் படுகிறது. நவரசங்களையும் அபிநயம் மூலம் வெளிப்படுத்திக் காட்டுவதும் இதன் கீழே வரும். பல்வேறு விதமான அபிநயங்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.

கடைசியாகச் சொல்லப் படுவது நாடகம்: ஒரு பெரிய கதையை எடுத்துக்கொண்டு அதை ஆடல், பாடல்கள், அபிநயங்கள் மூலம் நடித்துக் காட்டுவது. இவற்றில் சில உட்பிரிவுகள் உண்டு. சம்ஸ்கிருதத்தில் உள்ள பாடல்களுக்கு அபிநயித்துக்கொண்டு ஆடிப் பாடுவது ஆரியக் கூத்து எனவும், தமிழில் உள்ள பாடல்களுக்கு ஏற்ற கதையைத் தேர்ந்தெடுத்து ஆடுவது தமிழ்க்கூத்து எனவும் சொல்லப் பட்டது. இதிலே சாந்திக் கூத்து எங்கே இருந்து வந்தது? ஈசனும், காளியும் எங்கே வந்தார்கள்? கொஞ்சம் பொறுக்கவும்.

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

very well written,

many thanks for sharing this rare useful information.

Jayashree said...

இப்ப பாரம்பரீயமான இந்த கூத்துக்கள், நடனம் இருக்கோ? இல்லை நடன Phdக்கள் நாட்டியத்தை commercial ஆக்கி இப்ப நடத்துகின்ற நாட்டிய நாடகங்கள் தானா? ரொம்ப இன்டெரெஸ்டிங்க் மிஸஸ் சிவம்.
சிதம்பரம் கோவில் பாத்ததே இல்லை. தஞ்சை எப்பவோ என் மாமா கடலூரில் இருந்தபோது போனது . மறுபடி போகணும்.

Geetha Sambasivam said...

வாங்க ராம்ஜி யாஹூ, பாராட்டுக்கு நன்றி

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, இந்தப் பாரம்பரிய நடனங்கள் இப்போ இல்லைனே சொல்லலாம். இந்த சாந்திக்கூத்து இப்போ வேறே பெயரிலே வழங்குகிறது. அடுத்த பதிவு அதைப் பத்தித் தான். சிதம்பரம் பத்தித் தெரிஞ்சுக்க என்னோட சிதம்பர ரகசியம் பதிவுகளைப் பார்க்கவும். 2007-ம் வருஷம் ஆரம்பம், 2009-ம் வருஷம் முடிச்சேன்.

மாதேவி said...

நல்ல பதிவு.
நானும் தஞ்சை வந்திருக்கிறேன். சிதம்பரம் பார்க்கக் கிடைக்கவில்லை.

aandon ganesh said...

hai self.
thanks for sharing a very rare phenomenon about tanjore periya koil.iys very interesting.i am new to this site.its amazing .i got so many grace things.
thanks