எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, July 06, 2010

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சந்திரசேகரர்!

ஆடும் கூத்தனின் ஆட்டமும், அவனோடு போட்டியிட்ட உக்ரகாளியின் ஆட்டமும் பிரபலமானவை. காளிக்கும், ஈசனுக்கும் யார் பெரியவர்கள் என்பதில் போட்டி! அந்தப் போட்டியை நாட்டியம் ஆடி அதில் தோற்றவர் தாம் சிறியவர் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். காளியோ அம்பிகையின் அம்சமே ஆவாள். அவள் ஆடுவதற்குக் கேட்கவா வேண்டும்? அதிலும் கோபம் வேறே அவளுக்கு! இன்னும் ஆவேசமாக ஆட ஆரம்பித்தாள்! ஆனால் ஈசனோ இவளை வெல்லவேண்டும் என்ற குறிக்கோளுடனே இருந்ததால் ஆட்டம் சாந்தமாகவே இருந்தது. பார்க்க ஆநந்தமாயும் இருந்தது. ஆநந்த நடனம் ஆடி அதிலே லலாட திலகா என்னும் அம்சத்தைக் கொண்டு வந்தார். தன் காதுக்குழையைக் கீழே தவறவிட்டுத் தன் கால்களாலேயே அதை எடுத்துத் தன் காலை மேலே உயர்த்திக் காதில் மாட்டிக்கொள்கிறார். காளியால் அவ்வாறு காலை மேலே தூக்கமுடியுமா? நாணிப் போய்விடுகிறாள். தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறாள்.
காளியை சாந்தப் படுத்த ஈசன் ஆடிய ஆட்டமே சாந்திக்கூத்து எனப்படுவதாய்த் தெரிய வருகிறது. மனதைச் சாந்தப் படுத்தும் கூத்துக்கு சாந்திக்கூத்து என்று பெயர். இப்படி நம் கலைகளை நம் கடவுளர் மூலமே நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. சிதம்பரம் கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் 108 கரணங்களையும் ஆடும் கோலத்தைக் காணமுடியும். இது வரையில் நடராஜரின் தாண்டவங்களையும் அவற்றின் விதங்களையும் பார்த்தோம். அடுத்து நாம் காண இருப்பவர் சந்திரசேகரர்.

சந்திரன் தக்ஷ குமாரிகள் இருபத்து ஏழு பேரை மணந்ததும், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்ததும், அதனால் தக்ஷன் அவனை அழகு குறைந்து மங்கிப் போகச் சாபம் கொடுத்த கதையும் தெரிந்திருக்கும். அப்போது தன் சாபம் நீங்க ஈசனை வழிபட்டான் சந்திரன். அவனின் கலை முழுதும் தேய ஆரம்பித்து இன்னும் இரண்டு நாட்களில் முற்றிலும் காணாமல் போய்விடும் என்ற நிலைமை. அப்போது ஈசன் வந்து அவனைக் காப்பாற்றுகிறார். மூன்றாம் பிறையன்று தேய்ந்திருந்த சந்திரனைச் சேகரம் செய்து தன் முடியில் சூடியதால், சந்திரசேகரர் என்ற பெயர் பெற்றார் ஈசன். சேகரன் என்பதற்குக் காப்பவன் என்ற பொருளும் வருகின்றது. முழுதுமாய்த் தேய்ந்துவிடாமல் சந்திரனைக் காத்து அருளியதாலும் இந்தப் பெயர் எனக்கொள்ளலாம். சந்திரசேகரத் திருமேனி மூன்று வகை என்று கேள்விப் படுகின்றோம். கேவல சந்திரசேகரர், உமா சந்திரசேகரர், ஆலிங்கன சந்திரசேகரர் ஆகியவை அவை ஆகும். கேவல என்ற சொல்லுக்கு இங்கே அது மட்டும், அல்லது தனித்த என்ற பொருள் தான் வரும். நாம் பொருள் கொள்ளும் கேவலம்=மட்டம் என்ற பொருளில் வரும். அது இல்லை. கேவல என்பது வடமொழிச் சொல். வடமொழியை எடுத்துக் கொண்டே இந்த இடத்தில் அர்த்தத்தைப் பார்க்க வேண்டும். அடுத்து சந்திரசேகரரின் திருமேனி வகைகளைக் காண்போம்.

தன்னந்தனியாக அம்பிகை இல்லாமல் ஈசன் மட்டும் பிறை சூடியவனாய்க் காட்சி அளிக்கும் கோலத்திற்கே “கேவல சந்திரசேகரர்” என்ற பொருள் வரும். “பித்தா, பிறைசூடி, பெருமானே! அருளாளா!” என்று பக்தர்கள் அனைவரும் போற்றித் துதித்து மெய்ம்மறந்து போகும் இந்தச் சந்திரசேகர மூர்த்தம், கையில் மான், மழுவுடனும், அபய ஹஸ்தங்களுடனும், ஊரு ஹஸ்த முத்திரைகளுடனும் காணப் படுவார். ஊரு என்ற வடமொழிச் சொல்லுக்குத் தொடை என்ற பொருள் வரும். கையைத் தொடையில் பதிந்த வண்ணம் காட்சி தருவார் இந்தச் சந்திரசேகரர். மிகச் சிலக் கோயில்களிலேயே இந்த மூர்த்தம் காணப் படுவதாயும், மாமல்லபுரம் திருமூர்த்தி குகையிலும், பட்டீஸ்வரம் கோயிலிலும் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. இரண்டு இடங்களுமே பார்த்திருந்தாலும் பல வருடங்கள் ஆனபடியால் நினைவில் இல்லை.

அடுத்து உமா சந்திரசேகரர். அன்னை உமையுடன் காட்சி தருவார் இவர். அநேகமாய் எல்லாச் சிவாலயங்களிலும் உற்சவ மூர்த்தியாய்ப் பஞ்சலோகத்தில் வடிவமைக்கப் பட்ட இந்தத் திருமேனி பக்கத்தில் அன்னை உமை, கையில் மலர் ஏந்தும் பாவனையுடனும், இடக்கரத்தைத் தொங்கப் போட்ட வண்ணமும் காண முடியும். சந்திரசேகரர் பின்னிரு கைகளில் மான், மழுவும் முன்னிரு கரங்களில் அபய முத்திரையோடும் காணப் படுவார். முக்கியமாய்ப் பிரதோஷத்தன்று உலா வரும் மூர்த்தம் இது தான் என்றும் சொல்லப் படுகின்றது. சில கோயில்களில் கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின்னால் இவ்வடிவம் அமைந்திருப்பதாயும் அவற்றில் திருவீழிமிழலை கோயிலும் ஒன்று எனவும் தெரியவருகின்றது. வட நாட்டுச் சிவத் திருத்தலங்கள் பலவற்றிலும் கருவறையில் உள்ள மூலவரான லிங்க ரூபத் திருமேனிக்குப் பின்னால் உள்ள சுவரில் இந்தச் சந்திரசேகர மூர்த்தம் உமை அம்மையோடு காணப்படும். தென்னாட்டிலும் சில கோயில்களில் மிக மிக அரிதாய்க் காண முடிகிறது. முக்கியமாய்க் கர்நாடகாவின் சில கோயில்களில் காணமுடியும்.

அடுத்து ஆலிங்கன சந்திரசேகரர்: பக்கத்தில் உள்ள உமை அம்மையை அணைத்த வண்ணம் காணப் படுவார் இவர். அதிலும் சென்னைக்கு அருகே மண்ணிவாக்கம் என்னும் ஊரில் உள்ள ஸ்ரீமிருத்யுஞ்சேஸ்வரர் ஆலயத்தில் அன்னை, ஈசனையும், ஈசன் அன்னையையும் அணைத்த கோலத்தில் பரஸ்பர ஆலிங்கன மூர்த்தமாய்க் காண முடியும் எனத் தெரிய வருகின்றது. (இன்னும் போகலை, எங்கே இருக்குனு கேட்டுட்டுப் போய்ப் பார்த்துட்டு வரணும்.) இந்த எல்லா வடிவங்களிலும் ஈசன் பிறை சூடிய எம்பெருமானாய்க் காட்சி அளிப்பார். கொடியேற்றத்தோடு நடக்கும் விழாக்கள் தவிர, மற்ற நாட்கள் ஆன பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி, போன்ற தினங்களில் வரும் வீதி உலாவுக்குப் பெரும்பாலும் சந்திரசேகர மூர்த்தமே வீதி உலாவில் வருவார். திருமங்கலக்குடி என்னும் ஊரில் அம்மை ஈசனை அணைத்தவண்ணம் காணப்படுகிறாள். ஆனால் ஈசன் லிங்க ரூபத்தில் இருப்பதாய் நினைவு. பல வருஷங்கள் ஆகிவிட்டதால் சரியாய் நினைவில் இல்லை.

13 comments:

ராம்ஜி_யாஹூ said...

Manneeswarar Temple at Mannivakkam (Vandalur) near Tambaram

Looks like its near Vandalur (tambaram). I too will try to visit this temple, Many Thanks for your post.

ராம்ஜி_யாஹூ said...

http://www.templenet.com/enctamm1.html

மதுரையம்பதி said...

இம்மையில் நன்மை தருவார் கோவில் கருவறையிலும் லிங்க ரூபத்திற்குப் பின்னர் அம்பிகையுடன் ஈசன் இருப்பார்.

Jayashree said...

"அவனின் கலை முழுதும் தேய ஆரம்பித்து இன்னும் இரண்டு நாட்களில் முற்றிலும் காணாமல் போய்விடும் என்ற நிலைமை. அப்போது ஈசன் வந்து அவனைக் காப்பாற்றுகிறார். மூன்றாம் பிறையன்று தேய்ந்திருந்த சந்திரனைச் சேகரம் செய்து"
அது த்ரயோதசி கணக்கு ஆறதே மிஸஸ் சிவம்! மூணாம்பிறை பின்ன அமாவாசை கழிந்து 3ம் நாள் இல்லையா? ஆயிரம் பிறை காண எந்த பிறை?

Jayashree said...

சுருட்டபள்ளினு சித்தூர் டிஸ்ட்ரிக்ட்ல பள்ளி கொண்டேஸ்வரர் கோவில்னு இருக்கு . அங்க ஸ்வாமி விஷம் கண்டத்தில் இறங்கி, அம்பாள் மடில தலை வைத்து படுத்துண்டு இருக்கிற மாதிரியும்,ஹ்யூமன் ஃபார்ம் ல சிலை, முப்பத்து முக்கோடி தேவர்கள் ப்ரஹ்மா, விஷ்ணூ க்ரஹ, கணங்கள், ரிஷிகள் எல்லாரும் அவரை பார்த்து வணங்கற மாதிரியும் வித்யாரண்யரால் கட்டப்பட்ட கோவில் இருக்கு. அங்கேயும் முக்கோண வடிவுல லிங்கம்தான் . அதன் பின்னால தான் ஸ்வாமியான்னு சரியா ஞ்யாபகம் இல்லை. இங்க பெரியவா காம்ப் இருந்தபோது லவ குசா ளோட பாதசுவடுகளை தோண்டியெடுத்தானு நினைக்கைறேன். மறுபடி போணும். இங்க தக்ஷிணாமூர்த்தி தாராவுடன் நீங்க சொன்ன மாதிரி தொடையில் கையை வெச்சுண்டு காக்ஷி கொடுப்பார். குபேரன் ப்ரதான கோவிலை தன் 2 மனைவியருடன் பாதுகாப்பதாக ஐதீகம். அம்பாள், வால்மீகினாதர் பாத்துட்டுதான் ஸ்வாமி தரிசனம்.

Jayashree said...

சுருட்டபள்ளினு சித்தூர் டிஸ்ட்ரிக்ட்ல பள்ளி கொண்டேஸ்வரர் கோவில்னு இருக்கு . அங்க ஸ்வாமி விஷம் கண்டத்தில் இறங்கி, அம்பாள் மடில தலை வைத்து படுத்துண்டு இருக்கிற மாதிரியும்,ஹ்யூமன் ஃபார்ம் ல சிலை, முப்பத்து முக்கோடி தேவர்கள் ப்ரஹ்மா, விஷ்ணூ க்ரஹ, கணங்கள், ரிஷிகள் எல்லாரும் அவரை பார்த்து வணங்கற மாதிரியும் வித்யாரண்யரால் கட்டப்பட்ட கோவில் இருக்கு. அங்கேயும் முக்கோண வடிவுல லிங்கம்தான் . அதன் பின்னால தான் ஸ்வாமியான்னு சரியா ஞ்யாபகம் இல்லை. இங்க பெரியவா காம்ப் இருந்தபோது லவ குசா ளோட பாதசுவடுகளை தோண்டியெடுத்தானு நினைக்கைறேன். மறுபடி போணும். இங்க தக்ஷிணாமூர்த்தி தாராவுடன் நீங்க சொன்ன மாதிரி தொடையில் கையை வெச்சுண்டு காக்ஷி கொடுப்பார். குபேரன் ப்ரதான கோவிலை தன் 2 மனைவியருடன் பாதுகாப்பதாக ஐதீகம். அம்பாள், வால்மீகினாதர் பாத்துட்டுதான் ஸ்வாமி தரிசனம்.

Geetha Sambasivam said...

வாங்க ராம்ஜி யாஹூ, காணாமல் போன உங்க கமெண்ட்ஸைத் தேடிக் கண்டு பிடிச்சுப் போட்டாச்ச்!! :))))))))

சுட்டிக்கும், தகவலுக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

அட?? மெளலி?? வராதவங்கல்லாம் வந்திருக்கீங்களே?? ஆச்சரியம் தான்! இம்மையில் நன்மைதருவார் கோயிலில் பார்த்த நினைவு, ஆனால் பல வருடங்கள் ஆகிவிட்டதாய் கொஞ்சம் சந்தேகம், சந்தேகம் இருக்கிறச்சே சொல்லலாமா வேண்டாமானு விட்டுட்டேன்! இப்போ நீங்க சொல்லிட்டதாலே சரியாத் தான் இருக்கும், நன்றிப்பா.

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, தேய ஆரம்பிச்ச சந்திரனைத் தான் சேகரம் பண்ணித் தன் தலையில் சூடிக்கொண்டு அவனுக்கு அனுகிரஹம் பண்ணினதாப் படிச்சிருக்கேன், கேள்வியும் பட்டிருக்கேன். ம்ம்ம்ம்????? நீங்க சொல்லும் வளர்பிறைச் சந்திரன் கதை பிள்ளையாரோடு சம்பந்தப்பட்டதில்லையோ??? ஆயிரம் பிறை காண எந்தப் பிறையா இருக்கும்? தெரியலை! ஆயிரம் பிறை கண்டவங்க கிட்டே கேட்டுச் சொல்றேனே? :)))) வளர்பிறையாத் தான் இருக்கும், இருக்கணும்

Geetha Sambasivam said...

சுருட்டப் பள்ளி போயிட்டு வந்து எழுதி இருக்கேன், நாலு வருஷங்கள் முன்னாலேயே, ம்ம்ம்ம்?? தேடறேன், இந்தப் பக்கத்திலே இருக்கானு!

S.Muruganandam said...

ஐயனின் தி்ருமூர்த்தங்களை பற்றி எழுத ஆரம்பித்திருக்கின்றீர்கள். அருமையான தொடக்கம்.

சந்திரசேகரின் பல் வேறு வடிவங்களையும் அவை அமைந்துள்ள ஆலயங்களையும் அருமையாக பட்டியலிட்டிருக்கின்றீர்கள்.

ஓம் நமசிவாய.

S.Muruganandam said...

//ஆயிரம் பிறை காண எந்தப் பிறையா இருக்கும்? தெரியலை! ஆயிரம் பிறை கண்டவங்க கிட்டே கேட்டுச் சொல்றேனே? :)))) வளர்பிறையாத் தான் இருக்கும், இருக்கணும்//

வளர்பிறைதான்.

Geetha Sambasivam said...

வாங்க கைலாஷி ஐயா, பல மாதங்களுக்குப் பின்னர் உங்கள் வருகைக்குக் காரணமாய் அமைந்த ஈசனின் பெருமை அளவிட முடியாதது. நன்றி வரவுக்கும், கருத்துக்கும், ஆயிரம் பிறை சந்தேகத்தைத் தீர்த்து வைத்தமைக்கும்.