எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, November 08, 2010

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி!


வீணாதர தக்ஷிணாமூர்த்தி: கைகளில் வீணை ஏந்தியவண்ணம் காட்சி அளிப்பார். ஈசன் சங்கீத ஸ்வரூபம். அவன் மீட்டுவது சாதாரண வீணை அல்ல. ஞாநவீணை. அதிலிருந்து எழும் கீதமும் ஞாநத்தை அளிக்கவல்லது. நமக்கு ஆத்ம ஞாநத்தை அளிக்கும் வல்லமை பெற்ற இனிய கீதத்தை ஈசன் இசைக்கிறான். முன் கரங்களிரண்டாலும் வீணையை மீட்டிக்கொண்டிருக்கும், ஈசனின் பின்னிரு கரங்அள் அக்ஷமாலையையும் நெருப்பையும் ஏந்திக் காட்சி அளிக்கின்றன. அமர்ந்த கோலத்திலேயும் காட்சி அளிப்பார், நின்ற வண்ணமும் காட்சி கொடுப்பார். முனிவர்கள் புடைசூழக் காட்சி தரும் இவரை வேதாரண்யம், திருப்புந்துருத்தி ஆகிய ஊர்களிலே காணலாம் என்று தெரியவருகிறது. இரண்டு ஊரும் பார்க்கலை இன்னமும். அதனால் நிச்சயமாய்த் தெரியவில்லை.

அடுத்தவர் சக்தி தக்ஷிணாமூர்த்தி: இவரை நாம் ஏற்கெனவே சுருட்டப்பள்ளியில் பார்த்திருக்கோம். அம்பிகையை அணைத்தவண்ணம் வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி அளிப்பார் இவர். திருமணப் பேறு வேண்டி இவருக்குச் சிறப்பு வழிபாடுகள் அங்கே செய்யப் படுகின்றன. மான், மழுவோடு, சின் முத்திரை திகழ, அன்னை ஈசனைத் தழுவிய வண்ணம் காட்சி கொடுக்கிறார்கள்.

மேதா தக்ஷிணாமூர்த்தி: ரிஷப வாஹனராய்க் காணப்படும் தக்ஷிணாமூர்த்தியை மேதா தக்ஷிணாமூர்த்தி எனத் தெரிந்து கொள்கிறோம். ரிஷபத்தின் மீது அமர்ந்த வண்ணம் ஞாந உபதேசம் செய்கிறார். ரிஷபம் தர்மத்தின் வடிவம். ஆகவே நமக்கு தர்மத்தையும், ஞாநத்தையும் உபதேசிக்கும் தக்ஷிணாமூர்த்தியோடு ரிஷபத்தையும் சேர்த்து வழிபடுவது நலம் பயக்கும்.

இவற்றைத் தவிர பசுபத சைவர்கள் வழிபடும் லகுளீசர் கூட தக்ஷிணாமூர்த்தி வடிவமே எனத் தெரிய வருகிறது. மதுரைக்கு அருகே அரிக்கம்பட்டு என்னும் ஊரில் லகுளீசர் சந்நிதி உள்ளது. திருவொற்றியூரிலும், திருவையாறிலும் சடையை எடுத்துக்கட்டியவண்ணக் காட்சி அளிப்பார். கரங்களில் சூலம், கபாலம், வலக்கரம் சின் முத்திரையோடும், இடக்கரம், தியான முத்திரையோடும் காட்சி அளிக்கும். திருவையாறுக் கோயிலில் பிராஹாரம் சுற்றும்போது ஈசன் சடை பரந்து விரிந்து இருப்பதால் அதைத் தாண்டிச் செல்லக் கூடாது என்பதால் பிராஹாரவலம் முதல் சுற்று ஆரம்பித்துப் பின்னர் திரும்பி வந்த வழியே வந்து அப்பிரதக்ஷிணமாய்ச் சென்று தக்ஷிணாமூர்த்தியைத் தரிசிக்கவேண்டும்.

3 comments:

priya.r said...

நல்ல பதிவு கீதாம்மா

ஏன் தட்சிணா மூர்த்தி மட்டும் தெற்கு நோக்கி காட்சி தருகிறார்

குலதெய்வம் பெருமாள் என்பதாலே சிவ ஸ்தலங்கள் பற்றி

தங்கள் மூலமா தான் தெரிந்து கொண்டு வருகிறேன் கீதாம்மா

Geetha Sambasivam said...

ப்ரியா, தெற்குத் திசையில் தான் யமன் இருப்பதாய்ச் சொல்லுவார்கள். ஆகவே மரணபயம் இல்லாமல் இருக்க தக்ஷிணாமூர்த்தி தென் திசையைப் பார்த்துக்கொண்டிருப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். என்றாலும் இன்னும் வேறு காரணம் இருந்தாலும் கேட்டுச் சொல்றேன்.

priya.r said...

விளக்கத்துக்கு நன்றி கீதாம்மா

வேறு காரணங்களும் இருக்கும் என்று தான் எனக்கும் படுகிறது

கூகுள் போய் தட்சிணா மூர்த்தி என்று டைப் செய்து தேடும் போது
உங்கள் பதிவுக்கு கொண்டு வந்து விட்டது :)
வந்ததுக்கு பின்னோட்டம் போட்டு செல்கிறேன் :)