எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, August 15, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் தூது!

இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் தில்லி அரசில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்துக்குப் படை எடுத்து வந்திருந்த உல்லுக்கான் திரும்பிச் சென்றதும் செய்த ஒரு வேலையால் நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தது. ஆம், தன் தந்தையான சுல்தான் கியாசுதீனைத் தான் கட்டிய ஓர் மாளிகைக்கு வரவேற்றான் உல்லுக்கான். மகனை நம்பி அங்கே வந்த கியாசுதீன் உல்லுக்கானின் ரகசியப் படைகளால் சுற்றி வளைத்துக் கொல்லப்பட்டான். தன் தந்தையையே இப்படிக் கொன்றுவிட்டு தில்லி சிம்மாதனத்தில் உல்லுக்கான் முகமது-பின் -துக்ளக் என்னும் பெயரோடு பட்டம் ஏற்றான். என்னதான் தைரியமாகத் தந்தையையே கொன்றிருந்தாலும் உல்லுக்கானுக்கு மனதுக்குள்ளாகக் கவலையும் பயமும் இருக்கத் தான் செய்தது. தில்லிப் படை வீரர்கள் அனைவரும் மற்றும் அரசவைப் பிரபுக்களும் அமீர்களும் தனக்கு விசுவாசமாக இருக்கவேண்டுமே என்னும் கவலை அவனை வாட்டி வதைத்தது. ஆகவே தென்னாட்டில் இருந்து கொண்டு வந்திருந்த அனைத்துப் பொருட்களையும் தாராளமாக அனைவருக்கும் வாரி வழங்கிக் கொண்டிருந்தான். அவன் கவனம் முழுவதும் இப்போது தன் அரியணையைக் காப்பாற்றிக் கொள்வதிலே இருந்தது. ஆகவே தென்னாட்டின் பக்கம் அவன் பார்வை திரும்பவில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் சிங்கப் பிரான்.

அதற்குக் குலசேகரன் உதவியை நாடினார். சடையவர்ம பாண்டியனுக்கு இப்போதைய ஶ்ரீரங்கத்து நிலவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் மதுரையைத் தாக்குவதற்கு இதுவே சரியான சமயம் எனவும் அவரிடம் எடுத்துச் சொல்ல வேண் டும் என்றும் சொன்னார் சிங்கப் பிரான். கண்ணனூரில் இருக்கும் படைகள் காவிரி வெள்ளம் பெருக்கெடுத்தால் அதைத் தாண்டிச் செல்ல முடியாது என்பதால் அந்தச் சமயம் பார்த்து மதுரையின் மேல் தாக்குதல் நடத்தலாம் எனவும் யோசனை சொன்னார். ஆனால் குலசேகரன் மதுரையைத் தாக்கினால் தில்லியில் இருக்கும் சுல்தானுக்குத் தகவல் போனால் அவன் கோபத்தை நம்மால் தாங்க முடியுமா எனக் கவலைப்பட்டான். அதற்கு சிங்கப்பிரான் ஹொய்சளர்கள் அரங்கனைத் தென்னாட்டின் பக்கம் எடுத்துச் செல்லும் சமயம் மதுரைப் படைகளை எதிர்த்ததற்கு அவ்வீரர்கள் இன்று வரை எதிர்த்தாக்குதல் ஏதும் நடத்தாததால் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றார். மேலும் தில்லியில் இருந்து உதவி வந்தாலும் வந்து சேர ஆறு மாதங்களாவது பிடிக்கும். ஆகவே தனக்கு உடனடி உதவி ஏதும் கிட்டாது என்பதைப் புரிந்து கொண்டே மதுரைக்காரர்கள் சும்மா இருக்கிறார்கள் என்றார் சிங்கப்பிரான்.

குலசேகரன் ஓரளவுக்கு மனச் சாந்தி அடைந்தான். எல்லாவற்றையும் விபரமாகச் சடையவர்மரிடம் தான் சொல்லுவதாக உறுதியும் அளித்தான். அன்றிரவு அங்கே கழித்த குலசேகரன் மறுநாள் காலையிலேயே சடையவர்ம பாண்டியரைக் காணத் தென்காசிக்குக் கிளம்பினான். புறப்படும் சமயம் அவனுக்குப் பஞ்சுகொண்டான் அவர்கள் செய்த உயிர்த்தியாகம் நினைவில் வந்தது. கண்ணீர் பெருக்கெடுத்தது. சிங்கப்பிரானை வணங்கிச் செல்ல நினைத்த அவன் தான் அதற்குத் தகுதியானவன் அல்ல என்னும் நினைப்போடு கண்ணீருடன் அவரிடம் விடை பெற்றுச் சென்றான். சுமார் ஒரு மாதம் பயணம் செய்து குலசேகரன் தென்காசியை அடைந்தான்.

அங்கே அப்போது பாண்டிய நாட்டு வாரிசுகள் பலரும் சரண் அடைந்திருந்தனர். பாண்டிய குலத்தின் அப்போதைய நேரடி வாரிசான சடைய வர்ம பாண்டியர் அனைவரையும் வழி நடத்தி வந்தார். குலசேகரன் சிங்கப் பிரான் கூறியவற்றைக் கூறியதும் உடனே அவர் தன்னுடன் இருந்த மற்ற இளவரசர்களையும் மற்றவர்களையும் அழைத்து இந்த விஷயத்தைக் குறித்து ஆலோசனை செய்தார். பின்னர் அனைவரும் சேர்ந்து ஓரு கூட்டுப் படை தயார் செய்து மதுரையைத் தாக்குவது என முடிவாயிற்று. குலசேகரன் படை திரட்டுவதில் மிகப் பெருமளவில் உதவினான். இந்த முயற்சி வெற்றி பெற்று விடும் என்றே அவன் நம்பினான். கோழிக்கூட்டில் உள்ள அரங்கன் ஊர்வலத்தாருக்குப் படை திரட்டும் செய்தியைத் தெரிவித்து இந்தப் போரின் முடிவு தெரியும் வரை எங்கும் செல்ல வேண்டாம் என்றும் கூறினான். கட்டாயம் இந்தத் தாக்குதலில் வெற்றி கிடைக்கும். பின்னர் அரங்கனை ஶ்ரீரங்கத்துக்கே கொண்டு வந்து விடலாம் என அவன் எண்ணம். படை திரட்டுவதற்கே ஆறு மாதங்களுக்கும் மேல் பிடித்தது.

3 comments:

நெல்லைத்தமிழன் said...

வரலாறு என்றாலும், நடந்துவிட்டது என்றாலும் படிக்கும்போது ஆத்திரமும், கோபமும், வருத்தமும், ஐயோ இப்படி ஆகிவிட்டதே என்ற நினைவும், நெகிழ்ச்சியும் வருவதைத் தடுக்க முடியவில்லை. மொத்தமாகப் படிக்கும்போது இன்னும் நன்றாக இருக்கும். தொடருங்கள். நல்லதை... முதலில் முடிக்கப் பாருங்கள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அரங்கனைக் கொண்டுவரப் படும் பாடு.. அப்பப்பா. நினைக்கும்போதே மெய்சிலிர்க்கிறது.

Geetha Sambasivam said...

நெ.த.
முனைவர் ஐயா,

ஆம், அரங்கனும் மனிதர்களைப் போல் ஒளிந்து வாழ்ந்திருக்கிறான். இதை முதல் முதல் அறிந்தபோது எனக்கும் ரொம்பவே வருத்தமாக இருந்தது. அழுகை கூட வந்தது.