எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, August 19, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பாண்டியரின் தோல்வி!

மிக அதிகமான எதிர்பார்ப்புகளோடு ஆறு மாசங்கள் படை திரட்டி அவற்றுக்கான குதிரைகளுக்காகக் காயல் துறைமுகத்தில் வந்து இறங்கும் குதிரைகளுக்காகக்காத்திருந்த பாண்டிய இளவரசர்கள் குதிரைகளைக் கொள்ளை அடித்துப் பறித்துக் கொண்டனர். அவர்கள் ஆட்சியில் இருந்தவரை வருடா வருடம் பத்தாயிரம் குதிரைகள் பண்டமாற்று முறையில் இறக்குமதி ஆகும். ஆனால் இப்போதோ மறைந்து ஒளிந்து வாழும் சூழ்நிலையில் என்ன செய்வது! கிடைத்தவரை லாபம் என ஐயாயிரம் குதிரைகளைப் பறித்துக் கொண்டனர். அப்படியும் படை கிளம்ப மேலும் நான்கு மாதம் ஆகி ஒரு நல்ல நாள் பார்த்துக் கிளம்பிய படை ரகசியமாக மதுரை நோக்கிச் சென்றாலும் வழியில் இரு உதவிப்படைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. அவற்றை எளிதாக முறியடித்து விட்டு அந்த உற்சாகத்தோடு மதுரை நோக்கிச் சென்றார்கள். மதுரைக்கு எப்படியோ தகவல் முன்கூட்டிச் சென்றுவிட்டது. ஆகையால் தில்லித் தளபதி நகருக்கு வெளியே ஓர் பெரிய படையுடன் வந்து காத்திருந்தான். முதல்நாள் போர் வெற்றி, தோல்வியின்றி முடிந்தாலும் மறுநாள் பாண்டியப் படை வீரர்களுக்கு தில்லிப்படைகள் தங்களைச் சுற்றி வளைத்துக் கொண்டிருப்பதாய்ச் செய்தி கிட்டவே வீரர்கள் பீதி அடைந்து ஓர் ஒழுங்கில்லாமல் தாறுமாறாக ஓட ஆரம்பித்தனர்.

அவர்களை அடக்க வேண்டிய தலைவர்களோ அவர்களே பயந்து ஓட ஆரம்பித்திருந்தார்கள். இப்படி அவர்கள் கோழை போல் உயிருக்குப் பயந்து ஓட ஆரம்பித்ததைக் கண்ட குலசேகரன் மனம் புழுங்கியது. தைரியத்தோடு பாண்டிய இளவரசர்களோ, வீரர்களோ போரிடவில்லை என்பதைக் கண்டான். முதல் தாக்குதல் இப்படிப் பயனின்றிப் போய்விட்டதைக் கண்டு மனம் நொந்தும் போனான். ஆனால் அவன் ஒருவனால் ஆகக்கூடியது என்ன?  தென்காசிக்குச் சென்று இளவரசர்களைச் சந்தித்தான். அங்கே அவர்கள் அவனை அங்கேயே தங்கும்படியும் மீண்டும் ஓர் தாக்குதல் நடத்தலாம் எனவும் சொன்னார்கள். ஆனால் குலசேகரனுக்கு அங்கே தங்க இஷ்டம் இல்லை. அரங்கனைப் பார்க்கும் ஆவல் மீதூறியது. ஆகவே அங்கிருந்து விடைபெற்று மலையாள தேசம் நோக்கிப் பயணித்துக் கோழிக்கூட்டையும் அடைந்தான். அங்கே அரங்கன் திருக்கூட்டத்தாரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவர்களும் உற்சாகத்துடன் குலசேகரனை வரவேற்றார்கள்.

குலசேகரன் மூலம் பாண்டியப்படைகள் எதிர்கொண்டு நிற்கத் தெம்பில்லாமல் பின் வாங்கி ஓடி வந்தது குறித்து விளக்கமாய்க் கூறினான். அவர்கள் மனமும் துக்கத்தில் ஆழ்ந்தது. எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. வெற்றி கிட்டி இருந்தால் இங்கிருந்து பாண்டிய நாடு வழியாக மீண்டும் அரங்கமாநகர் போயிருக்கலாம். ஆனால் இப்போது அதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது! இனி என்ன செய்வது? யோசனையில் ஆழ்ந்தனர். இனியும் பாண்டியர்களை நம்பி இங்கே காத்திருப்பதில் பிரயோசனம் இல்லை என ஓர் முடிவுக்கு வந்தார்கள். ஒருவருக்கொருவர் கலந்து பேசிக் கொண்டார்கள். அரங்கனை எங்கே கொண்டு போனால் பாதுகாப்பாக இருக்கும் என யோசித்தார்கள். பல இடங்களையும் குறித்து ஆலோசித்த பின்னர் கன்னட தேசத்தில் உள்ள திருநாராயணபுரம் என்னும் ஊருக்குப் போய்விடலாம் என முடிவு செய்தார்கள். அங்கே போய்த் தங்குவது என்றும் பின்னர் தமிழ்நாடு சீரான பின்னர் திரும்பி வரலாம் எனவும் முடிவு செய்து கொண்டார்கள். அதன்படி அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு நம்மாழ்வாருடன் வந்திருந்த அடியார்களிடமும் பிரியாவிடை பெற்றுக் கோழிக்கூட்டை விட்டுக் கிளம்பினார்கள்.

நம்மாழ்வார் ஊர்வலத்தாருக்கு அரங்கன் ஊர்வலத்தாரைப் பிரிய மனமில்லாமல் அவர்களுடனேயே சென்றார்கள். அரங்கனும், ஆழ்வாரும் ஒன்றாகவே கோழிக்குட்டை விட்டுச் சென்றார்கள். 

2 comments:

நெல்லைத்தமிழன் said...

காஞ்சி வரதன், அல்லிக்கேணி பார்த்தசாரதி மற்றும் பல உற்சவமூர்த்திகளின் முகங்களில் நிறைய வடுக்கள் உண்டு. படையெடுத்துவருபவர்களுக்குப் பயந்து, கிணற்றில், குளத்தில் அமிழ்த்தி காப்பாற்றியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

உற்சவ மூர்த்திகளை உயிரினும் மேலாகக் காத்த பக்தர்களை நினைத்தால் மனம் சிலிர்க்கிறது. அதுதான் உண்மையான பக்தி.

Geetha Sambasivam said...

ஆமாம், இந்த வடுக்கள் அப்போதைய காலத்தவை என்றே என் பெரியப்பாவும் சொல்வார். என்ன இருந்தாலும் இந்த மதுரைப் பாண்டியர்கள் நம் தமிழகத்தை அந்நியர்களிடம் இப்படிக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டாம். எனக்கு என்னமோ நானே அந்தத் தப்பைச் செய்தாப்போல் மனம் உறுத்தும். இப்போவும்! இப்போதைய தமிழக நிலைமையும் மோசமாகத் தான் இருக்கு! :(