எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, December 16, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அழகிய மணவாளத்தின் கதி என்ன?

சுல்தானின் வீரர்கள் தலைவன் தன்னைப் பார்த்து விட்டதை அறிந்த குலசேகரன் முதலில் கலங்கினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு விட்டான்.  நல்லவேளையாக அந்த வீரர் தலைவனுக்குக் குலசேகரனை அவ்வளவு விரைவில் அடையாளம் புரியாததால் யோசித்துக் கொண்டு நின்றான். அதைப் புரிந்து கொண்ட குலசேகரன் ஓர் பைத்தியக்காரனைப் போல, ஓஓஓ, ஹோஹோ என்றெல்லாம் கத்தியவண்ணம் ஓட்டமாக ஓடினான். ஆனால் அவன் சிறிது தூரம் ஓடுவதற்குள்ளாக அவன் யார் எனப் புரிந்து கொண்ட வீரர் தலைவன், "ஏய், நில்!" என அதிகாரமாகக் கூறியவண்ணம் அவன் அருகே குதிரையை விரட்டினான்.  குதிரைக்குளம்பொலிகள் தன்னை நோக்கி வருவதை அறிந்த குலசேகரன் அப்போது அந்தி மயங்கத் தொடங்கி இருந்தால் கிடைத்த இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு அருகிலிருந்த தோப்புக்குள் புகுந்து ஒளிந்து கொண்டான்.

ஆனாலும் அந்த வீரர் தலைவன் விடாமல் அவனைத் துரத்தினான். தன்னை யாரெனக் கண்டு பிடித்திருப்பான் என்பதைப் புரிந்து கொண்ட குலசேகரன் தான் இப்போது செய்யவேண்டியது விரைவில் சிங்கப்பிரானைப் பார்த்து இவர்கள் வருகையைத் தெரிவிக்க வேண்டும் என்பதே என நினைத்தவண்ணம் சிங்கப்பிரானின் மாளிகை இருக்கும் திசை நோக்கி ஓட ஆரம்பித்தான்.  அந்த வீரன் சுல்தானிய ராணியின் கோஷ்டிக்குத் தலைவனாக வந்திருந்தான் என்பதோடு மதுரையில் இருந்து மேலும் ஒரு சுல்தானியப் படை வரும் தகவலைத் தெரிந்து கொண்டதால் அவர்களை வரவேற்று வழிகாட்டவென அங்கே வந்து காத்திருந்தான். வந்த இடத்தில் தான் குலசேகரனைப் பார்த்து விட்டான். சாட்டை அடிகளால் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்தவன் இவன் தான் என்றும் அறிந்து கொண்டு விட்டான்.  குலசேகரனை எப்படியேனும் பிடித்துவிட வேண்டும் என ஓடோடி வந்தவனுக்கு அவன் ஓடி மறைந்தது தெரியவரவே கோபத்துடனும் யோசனையுடனும் என்ன செய்வது எனத் தெரியாமல் மீண்டும் காவிரிக்கரைக்கே வந்தான்.

இங்கே குலசேகரன் சிங்கப்பிரானின் மாளிகைக்குள் சென்றபோது அவர் எங்கேயோ அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தார். குலசேகரனைப் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டவராக அவனைக் காணத்தான் புறப்பட்டதாகவும் சொன்னார். படை வீரர்கள் வந்திருப்பது தெரிந்து தான் கிளம்பினாரோ என நினைத்தான் குலசேகரன். ஆனால் அவருக்கோ அவன் சொல்லும் செய்தி புதிதாகத் தெரிந்தது. ஆகவே உடனே காவிரிக்கரைக்குச் சென்று பார்க்க விரும்பினார். அவன் தான் அமர்ந்திருந்த கரைப்பக்கத்திலிருந்து இன்னும் சற்று மேற்கே சில தோப்புகளைக் கடந்து காணப்பட்ட காவிரிக்கரைக்கு அவரை அழைத்துச் சென்றான். காவிரியில் நதியின் நடுவிலும் எதிர்க்கரையிலும் பல தீவர்த்திகள் அசைந்து கொண்டிருந்தன.அதைப் பார்த்ததுமே கவலை கொண்ட சிங்கப்பிரான் குலசேகரனிடம் சுல்தானியப் படைகள் நதியைத் தாண்டிக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார். அதற்குக் குலசேகரன் இங்கே வருகிறதோ அல்லது கண்ணனூர் சென்று கொண்டிருக்கிறதோ என்பதை அறியாமல் அவசரப்பட வேண்டாம் எனக் கூறினான்.

அதற்கு சிங்கப்பிரான் மதுரையிலிருந்து ஒரு பெரிய படை கண்ணனூருக்கு வருவதாய்த் தான் கேள்விப் பட்டதாயும் இது அந்தப் படையாக இருக்கலாம் என நினைப்பதையும் கூறினார். படை எதற்காக வருகிறது எனக் கேட்ட குலசேகரனிடம் அவர்," ஹொய்சளத்தைத் தாக்க நினைக்கிறார்கள் சுல்தானிய வீரர்கள். ஹொய்சளர்களின் உதவியோடு நீ சுல்தானிய வீரர்களிடையே செய்தியைச் சுமப்போர்களைக் கொன்றது அவர்களுக்குத் தெரிந்து விட்டது. உன்னோடு கைதான வீரர்கள் சொல்லி விட்டனர். ஆகவே அவர்கள் திட்டம் இப்போது திருவண்ணாமலையைத் தாக்குவது என்பதே! மேலும் மதுரை சுல்தான் வீர வல்லாள அரசருக்கு அவர் வீரர்களும் குலசேகரனும் இப்படிச் செய்ததன் காரணத்தைக் கேட்டு தூது அனுப்பியதற்கு இன்று வரை வல்லாளர் பதில் கொடுக்கவில்லை! அதனாலும் மதுரை சுல்தான் ஆத்திரத்தில் இருக்கிறான். என்றாலும் இப்போது படையெடுப்பு தேவை இல்லை என அவன் நினைத்திருக்கிறான். என்றாலும் அவன் தளபதியின் கையே இப்போது மதுரையில் ஓங்கி இருக்கிறது. அவன் தன் சொந்தப்படையையும் சுல்தானின் படையையும் திருவண்ணாமலையைத் தாக்குவதற்காகத் தயார் செய்து அனுப்பி இருக்கிறான் என நினைக்கிறேன்!" என்றார்.

மேலும் இந்த விஷயத்தை உடனே வீர வல்லாளருக்குத் தெரியப்படுத்தி அவரைக் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கவேண்டும் எனவும் அதற்குக் குலசேகரன் தான் தகுதி வாய்ந்தவன் என்பதாலேயே அவனைத் தேடியதாகவும் கூறினார் சிங்கப்பிரான். மேலும் தொடர்ந்து," சுல்தானிய வீரர் தலைவன் குலசேகரனைப் பார்த்து அடையாளம் புரிந்து கொண்டதால் இந்த ஊரில் தான் அவன் ஒளிந்திருக்கலாம் என வீரர்களை இங்கே அனுப்பி அவனைத் தேடச் சொல்லுவான். வீரர்கள் சாதாரணமாகத் தேட மாட்டார்கள். ஊரையே நாசம் செய்து விடுவார்கள். ஏதுமறியா அப்பாவி ஜனங்களைக் கொன்று குவிப்பார்கள். ஆகவே இரவோடு இரவாக அனைவரும் ஊரை விட்டுக் காலி செய்து கொண்டு கிளம்பியாக வேண்டும்!" என்றும் கவலையுடன் கூறினார். குலசேகரன் திகைத்தான். யோசனையில் ஆழ்ந்தான். ஆனால் சிங்கப்பிரானோ அவசரப்படுத்தினார். ஊரிலுள்ள அப்பாவி மக்களுக்கு வீடு வீடாகச் செய்தியைச் சொல்லி அனைவரையும் வெளியேறச் சொல்ல வேண்டும் எனப் பரபரத்தார்! 

1 comment:

நெல்லைத்தமிழன் said...

அப்போதைய கொடூர காலத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரப் ப்ரயத்தனப்படுகிறீர்கள். அப்போது மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ....