எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, December 07, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் நிலைமை!

ராணி தன்னை அழைப்பதைக் கண்ட வாசந்திகா பதைப்புடன், ஹேமலேகாவின் கைகளைப் பிடித்து அழுத்தினாள். பின்னர் மெல்லிய குரலில் குலசேகரன் ஓர் தாழியில் மிதந்தவண்ணம் காவிரிப் பிரவாகத்தில் போய்க் கொண்டிருப்பதைத் தெரியப்படுத்தினாள். எப்படியேனும் அவனைக்காப்பாற்றும்படியும் மிகவும் ஆபத்தான நிலையில் அவன் இருப்பதையும் தெரியப்படுத்தினாள். ஹேமலேகா ஏதும் புரியாமல் நிற்கையிலேயே அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டாள். எல்லாம் இரு நாழிகைகளில் முடிய அனைவரும் படுக்கச் சென்றனர். வாசந்திகாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை. தன் மனம் கவர்ந்த குலசேகரன் நிலைமையும், தன்னைப் பெற்ற தாய்க்கு தன்னையே அடையாளம் தெரியாமல் இருப்பதையும் நினைத்து நினைத்து அவள் வருந்தினாள். இங்கே குலசேகரன் சென்ற தாழியின் நிலைமை என்ன ஆனது எனப் பார்ப்போம்.

தாழி ஓடையோடு மிதந்து கொண்டு காவிரியில் கலக்கும் இடத்துக்கு அருகே வந்திருந்தது.  நதி பூரணப்பிரவாகத்தில் போய்க் கொண்டிருந்தபடியால் அந்த இடத்தில் ஓடை நீர் தேங்கி இருந்ததால் தாழியின் பயணம் தடைப்பட்டது. தாழி அங்கேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. மறுநாள் காலைவரை அப்படிச் சுற்றிய தாழிக்கு ஓடைநீரோடு காவிரியில் பயணிக்கும் நேரமும் வந்தது. நதி கொஞ்சம் இடம்கொடுக்க ஓடை நீர் காவிரியில் வேகமாகப் பாய்ந்தது. ஓடை நீர் தன்னோடு கொண்டு வந்திருந்த சருகுகள், இலைகள், தழைகள் ஆகியவற்றோடு தாழியும் அடித்துக் கொண்டு போய்க் காவிரியில் இறங்கி வேகமாய் ஒரு சுற்றுச் சுற்றிப் பின்னர் நதியின் வெள்ளத்தோடு பயணப்படலாயிற்று.  அது காலை வேளை. இளம் சூரியன் வானில் பிரகாசித்துக் கொண்டிருந்தான். அந்தச் சூரிய ஒளி தாழியிலும் பட்டது.  நதிக்கரை ஓரம் இருந்த கிராமத்துவாசிகள் எல்லோரும் ஆங்காங்கே நதியில் குளித்துத் தங்கள் நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்தனர். தாழி ஒன்று நீரில் மிதந்து செல்வதைக் கண்டாலும் அதற்குள் ஓர் மனிதன் இருப்பான் என்பதை அவர்களால் யூகிக்க முடியவில்லை. நதிப் பிரவாகத்தில் வெள்ளத்தோடு எத்தனையோ அடித்துக் கொண்டு வருவதைப் போல இதுவும் ஒன்று என நினைத்தார்கள்.

அன்று பகல் முழுவதும் தாழி பயணித்துக் கொண்டிருந்தது. மாலையில் அதன் திசை மாற ஆரம்பித்தது. கிழக்கே போகப் போகத் தெரிந்த உயரமான நாணல் புதர்களில் நதியே ஓர் ஏரி போல் சில இடங்களில் காட்சி அளித்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அத்தகைய நாணல் புதர்களில் ஒன்றில் குலசேகரன் இருந்த தாழியும் அகப்பட்டுக் கொண்டு நின்றது. அப்போது இருட்டும் சமயமாக இருந்தது. குலசேகரனுக்கு நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. அப்போது சற்றே நினைவு வந்தது. உடம்பில் பட்டிருந்த சாட்டை அடிகளால் ஏற்பட்ட காயங்கள் அந்த நீர் பட்டதும் நெருப்பாய்க் காந்தத் தொடங்கியது. எங்கே இருக்கிறோம் என்பதே அவனுக்குப் புலப்படவில்லை. ஏதோ ஓர் இடுக்கான அறைக்குள் தன்னைத் தள்ளி இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டான். ஆனால் நதியின் மீன்கள் எல்லாம் அவன் மேல் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. அவனுக்கு ஏதும் புரியவில்லை.

மெல்ல மெல்ல தன்னை ஓர் நிலைக்குக் கொண்டு வந்து நடந்தவைகளை நினைவு கூர முயற்சித்தான். இது இரவா, பகலா என்றே தெரியவில்லை. ஒருவேளை என் கண் பார்வை பறி போய் விட்டதோ?  இப்படி எல்லாம் நினைத்தவண்ணம் கண்களைத் திறந்து மெல்ல மேலே பார்த்தவனுக்கு மேலே ஆயிரம் ஆயிரம் விளக்குகள் கண் சிமிட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. அம்மாடி! இத்தனை விளக்குகளா? ஒரே நேரத்தில் இத்தனை விளக்குகளை யார் ஏற்றி இருப்பார்கள்? இல்லை, இல்லை, இவை விளக்குகள் இல்லை. நக்ஷத்திரங்களைப் போல் அல்லவா இருக்கிறது. சுற்றும் முற்றும் மீண்டும் பார்த்த குலசேகரன் மேலே தெரிவது ஆகாயம் என்றும் விண்ணில் ஒளிரும் நக்ஷத்திரக் கூட்டங்களைத் தான் தான் பார்ப்பதையும் அறிந்து கொண்டான். மெல்ல எழுந்து உட்கார முயன்றான். அவனால் முடியவில்லை.

ஏதோ ஓர் அறையில் கூரை இல்லா இடத்தில் தன்னைப் போட்டிருப்பதாக நினைத்தான். ஆனால் இதென்ன? அவன் படுத்திருக்கும் அந்த அறை நகர்கிறதே! இது என்ன மாயா ஜாலம்! ஏதோ ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து தப்புவது எப்படி? கவலையும், பீதியும் அவனைச் சூழ்ந்து கொள்ள மறுபடியும் நினைவிழந்தான். அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை.  இரவு முழுவதும் அப்படியே கிடந்த குலசேகரன் மறுநாள் காலை கொஞ்சம் சுய உணர்வைப் பெற்றான். அவனால் உடம்பைத் தான் நகர்த்த முடியவில்லை. ஆனால் நினைவு பூரணமாக வந்து விட்டது. தன்னைத் துருக்கிய வீரர்கள் அடித்தது எல்லாம் நினைவில் வந்தது. ஆனால் தான் இருப்பது எதில்? கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நினைவுக்கு வந்து அவன் சுற்றிலும் ஆராய்ந்து தான் ஓர் தாழிக்குள் இருப்பதை உணர்ந்து கொண்டான். தன்னை இந்தத் தாழிக்குள் போட்டவர்கள் யார்? எப்படி இங்கே வந்தோம்? இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

மெள்ள மெள்ள மறுபடியும் பார்த்தபோது ஓர் நதியின் பிரவாகத்தில் தான் இருந்த தாழி இருப்பதையும் நதிப் பிரவாகத்தோடு அது நகர்வதையும் உணர்ந்து கொண்டான். தான் நதியின் நடுவில் இருப்பதையும் வெகு தூரத்தில் நதிக்கரை தென்படுவதையும் கண்டு கொண்டான். இந்தத் தாழியைக் கரை நோக்கி இயக்கத் தன்னால் இயலாதே! என்ன செய்ய முடியும்? கலங்கினான் குலசேகரன். 

No comments: