எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, December 09, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் காப்பாற்றப்பட்டான்!

இப்படி யோசனையில் சுமார் ஒரு நாழிகை நேரம் சென்றுவிட்டது. குலசேகரன் சுற்றும் முற்றும் பார்த்தவண்ணம் இருந்தான். அப்போது தூரத்துக்கரையில் யாரோ இருப்பது போல் தெரியவே மெல்ல எழுந்து அமர்ந்த நிலையில் உற்றுக் கவனித்தான். யாரோ ஓர் பெண் குளிக்கக் காவிரிக்கு வந்திருக்கிறாள்.  உடனே குலசேகரன் மெதுவாக எழுந்து நின்றான். கால்கள் தள்ளாடின! எனினும் விடாமல் எழுந்து நின்று கைகளை ஆட்டினான். வேகமாகத் தான் ஆட்ட நினைத்தான். ஆனால் அவனால் முடியவில்லை. அவன் முயற்சிகள் பலமுறை தோல்வி கண்ட பின்னர் ஒருவழியாக அந்தப் பெண்மணி அவன் நடு நதிப் பிரவாகத்தில் தத்தளிப்பதைக் கண்டாள். உடனே தன் குடத்தையும் நீரில் அமிழ்த்தித் தானும் குதித்தாள். குடத்தின் வாயைக் கீழே திருப்பி அதை ஓர் தெப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு குலசேகரனை நோக்கி நீந்தி வர ஆரம்பித்தாள். அவள் நீச்சலில் தேர்ந்தவள் என்பதைக் குலசேகரன் சில விநாடிகளிலேயே புரிந்து கொண்டான். மூச்சு இரைய இரையக் களைத்துப் போனவள் ஒரு வழியாக அவன் அருகே வந்தாள்.

அங்கே ஓர் தாழி இருப்பதையும் அதில் சோர்ந்து வாடிய நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் ஓர் வாலிபன் நிற்க முடியாமல் நிற்பதைக் கண்டாள். சற்றுத் தயங்கினாள். அவள் தயக்கத்தைக் கண்டதும் குலசேகரன், "அம்மா! ஆபத்து எனக்குத் தலைக்கு மேல் காத்திருக்கிறது! என்னைச் சாட்டையால் அடித்துக் குற்றுயிராக்கி விட்டார்கள். என்னைக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். இந்தத் தாழிக்குள் எப்படி வந்தேன் எனத் தெரியவில்லை. நிற்கக் கூட முடியாதவனாக இருக்கிறேன். என்னை எப்படியேனும் காப்பாற்றுங்கள்!" என்றான்.  இதைக் கேட்ட அந்தப் பெண் மெல்லத் தாழியின் அருகே வந்து அதை அசைத்துப் பார்த்தாள். தாழி மெல்ல நகர்ந்து கொடுத்தது.  மகிழ்ச்சியுற்ற அவள் ஒரு கையால் குடத்தைப் பிடித்துக் கொண்டு நீந்திக்கொண்டே மறுகையால் தாழியைக் கரையை நோக்கித் தள்ளி விட ஆரம்பித்தாள்.  சிறிதும் சலிக்காமல் எப்படியேனும் தாழியைக் கரைக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் முயற்சியில்கடைசியில் அவள் வெற்றி பெற்றாள்.

கரைக்கு அருகே வந்துவிட்டோம் என்பதை உணர்ந்தவளாக வேகமாகத் தாழியைத் தள்ளிவிட்டதும் அது சற்று தூரம் மிதந்து போய் தரை தட்டி நின்றது. அப்படியே குலசேகரனைக் கரைக்கு அருகே விட்டுவிட்டு அவள் நீந்திக்கொண்டே இன்னும் சற்று தூரம் கிழக்கே சென்று ஓர் புதர் மறைவில் கரை ஏறினாள். அவள் அரை உடையில் குளிக்க வந்தவள் தன் துணிகளைப் பிழிந்து மாற்றிக்கொள்ளவே சென்றிருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட குலசேகரன் அந்தப் பக்கம் திரும்பாமல் அவனும் கண்ணியம் காத்தவனாக மெதுவாகத் தாழியில் இருந்து இறங்க முயன்றான். ஒருவழியாக அதில் வெற்றியும் கண்டான். ஆனால் அவன் காயங்களின் ஆழமும் கடுமையும் அவனை நிற்கவிடவில்லை. நிற்க முடியாமலும் மேல்கொண்டு நடக்க முடியாமலும் நடுங்கியவன் கீழே அப்படியே சாய்ந்து விட்டான். அதற்குள்ளாக அந்தப் பெண் தன் உடையை நன்கு பிழிந்து கட்டிக் கொண்டு ஓடி வந்து விட்டாள்.

குலசேகரன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, "ஐயா, ஐயா!" என அழைத்த வண்ணம் அவனை எழுப்ப முயன்றாள். அவனால் கண்களையும் திறக்க முடியவில்லை. எழுந்தும் நிற்க முடியவில்லை என்பதைக் கண்டு அவனை மெல்ல எடுத்துத் தன் தோளில் நிறுத்திய நிலையில் சாய்த்துக் கொண்டு நடந்தாள். ஓர் அடர்த்தியான தோப்பைக் கடந்து பின்னர் அவள் குடிசை வந்தது. அவனை ஓர் நல்ல படுக்கை தயாரித்துப் படுக்க வைத்துவிட்டு அவன் காயங்களைக் கவனிக்க ஆரம்பித்தாள். அந்தக் குடிசைக்காரியின் உதவியினாலும் பணிவிடைகளிலும் குலசேகரன் நன்றியும் மகிழ்ச்சியும் கொண்டான். அவனுக்கு ஓரளவு நினைவும் திரும்பவே அவளை யாரென்று கேட்டான். பொன்னாச்சி என்னும் பெயர் கொண்ட அந்தப் பெண்மணியின் கணவன் கப்பலில் ஏறி வெளிநாடுகளுக்கு வணிகம் செய்யச் சென்றதாகவும்  இன்னமும் திரும்பவில்லை என்றும் கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்டுக் கொண்டே குலசேகரன் தன் உடலைத்தடவிப் பார்த்தபோது கழுத்தில் பொன்னாலான ஓர் ஆபரணம் இருந்ததைக் கண்டான்.இது ஏது எனப் பொன்னாச்சியைக் கேட்க அந்த ஆபரணம் தான் அவனை மீட்கும்போதே அவன் கழுத்தில் இருந்ததாகப் பொன்னாச்சி கூறினாள். குலசேகரன் குழப்பம் அடைந்தான். தாழியில் தள்ளித் தன்னைக் கொல்லப்பார்த்திருக்கிறார்கள் எனத் தான் நினைத்தது தவறு எனப் புரிந்து கொண்டான். யாரோ அவனைக் காப்பாற்றப் பெரும் முயற்சி எடுத்திருக்கின்றனர்! யாராக இருக்கும்!

No comments: