எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, December 02, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வாசந்திகாவின் கலக்கம்!

குலசேகரனைத்தாழிக்குள் வைத்து ஓடையில் மிதக்க விட்ட வாசந்திகா மறுபடியும் தாங்கள் தங்கிய இடத்துக்கு வந்தாள். அவள் நிலையை எண்ணி எண்ணி மனம் வருந்தினாள். சுல்தானிய ராணிகளுள் ஒருத்திக்கு அவள் சேடிப்பெண்ணாகப் பணி புரிந்து வந்தாள். அவள் வலுக்கட்டாயமாக மதுரை கொண்டு செல்லப்பட்டதும் அங்கே அவள் போற்றிப்பாதுகாத்த பெண்மையைப் பறி கொடுத்துப் பின்னர் மதுரை அரண்மனையிலேயே நடைப்பிணமாக உயிர் வாழ ஆரம்பித்தது எல்லாவற்றையும் நினைவு கூர்ந்து கண் கலங்கினாள்.  இப்போது அவள் வந்திருப்பதும் சுல்தானிய ராணி ஒருத்தியுடன் தான். அந்த ராணியின் தந்தை கண்ணனூரில் நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவரைப் பார்க்க மதுரையில் இருந்து கிளம்பிக் கண்ணனூர் சென்று கொண்டிருந்தாள் அவள். அவளுக்குத் துணையாகவே மற்ற வீரர்களும் சேடிப் பெண்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். சேடிப் பெண்களில் ஒருத்தியாகக் கிட்டத்தட்டப் பதினைந்து வருஷங்களுக்குப் பின்னர் வாசந்திகா தான் வாழ்ந்த ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறாள்.

இந்தப் பதினைந்து வருஷங்களில் தமிழகம் அதுவரை முற்றிலும் காணாத அளவுக்கு அந்நியர் ஆட்சியில் மாட்டிக் கொண்டிருந்தது. தில்லியிலிருந்து கோயில் சொத்துக்களையும் நகைகளையும் கொள்ளை அடிக்க வந்த சுல்தானிய வீரர்களில் சிலர் அங்கேயே தங்க வைக்கப்பட்டு இருந்ததில் அவர்களில் பலருக்கும் கண்ணனூரிலும் மதுரையிலும் குடும்பங்கள் கிளைவிட்டுப் பரவி விட்டன. அவர்கள் தமிழகத்தை மதுரையிலிருந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தும் 15 வருடங்கள் ஆகி இருந்தன. ஆட்சிப் பொறுப்பை அவர்களே ஏற்று நடத்தி வந்தார்கள்.வீரர்கள் படையில் சேர்ந்தாலும் அவர்கள் மதம்மாற்றப்பட்டே சேர்க்கப்பட்டனர்.  இந்த ஆட்சியில் அவர்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிவ, வைணவக் கோயில்களில் வழிபாடுகள் முற்றிலும் நின்று விட்டன. கோயில் உற்சவங்களை நடத்தியே பத்து வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டன. கோயிலில் உள்ள உற்சவ விக்ரஹங்கள் பலவும் அந்த அந்தக் கோயிலில் இருந்து எடுக்கப்பட்டு அருகேஇருந்த மலையாள நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டன. அல்லது பூமிக்குக் கீழ் வெகு ஆழத்தில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டன.

தங்கள் சமய வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படுமோ என அஞ்சிய பலரும் அங்கிருந்து மலையாள நாட்டிற்கும் ஹொய்சள நாட்டிற்கும் சென்று வாழ ஆரம்பித்து விட்டனர்.  வழிபாடுகள் மட்டுமின்றித் தமிழரால் கொண்டாடப்பட்டு வந்த திருவிழாக்கள், பண்டிகைகள், சமூக விழாக்கள் போன்றவையும் நிறுத்தப்பட்டு மீறிக்கொண்டாடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். மக்கள் யாரால் தங்களுக்கு விடிவு காலம் வருமோ என ஆவலுடன் காத்திருந்தார்கள். வாசந்திகாவும் அப்படி விடிவு காலத்தை எதிர்நோக்கி இருந்தவர்களில் ஒருத்தி. ஆனாலும் அவள் வாழ்வில் மீண்டும் குலசேகரன் குறுக்கிடுவான் என எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் இந்தச் சிறையிலிருந்து தான் விடுவிக்கப்படுவோம் எனக்காத்திருந்தாள். அவள் அழகர்மலையில் அரங்கனைக்காப்பாற்றியது நினைவில் வந்தது.  அரங்கனைக் காப்பாற்றி ஒளித்து வைக்க உதவிபுரிந்த தன்னால்யாருக்கேனும் ஏதேனும் நன்மை விளையும், அதனால் தான் தான் இன்னமும் உயிர் தரித்திருக்கிறோம் எனத் தீவிரமாக நம்பினாள்.

இப்போது அந்த நம்பிக்கை வீண் போகாமல் குலசேகரனைக் காப்பாற்ற நேர்ந்தது குறித்து அவள் மகிழ்ச்சியே அடைந்தாள்.  அவன் உயிரைக் காப்பாற்றியதன் மூலம் வாழ்க்கையையும் காப்பாற்றி இருக்கிறாள் வாசந்திகா. அவன் வாழ்க்கை எவ்வளவு முக்கியமானது. நாட்டு விடுதலைக்காகப்பாடு படும் ஓர் வீரன் அவன். அதுவும் இப்போது ஹொய்சள வீரர்களுடன் வந்து சிறைப்பட்டிருப்பதா ஹொய்சள அரசருடன் சேர்ந்து ஏதோதிட்டம் போட்டு அதை நிறைவேற்றக் காத்திருக்கிறான் என்றே அவள் நினைத்தாள். ஆகவே அவன் விடுதலை மிக முக்கியம். இப்படி எல்லாம் நினைத்தவளுக்கு அவன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் தோன்றின. அவருக்குத் திருமணம் ஆகி இருக்குமோ என எண்ணினாள். ஆம் ஆகி இருக்கும்! அது தான் மனைவி பெயரைச் சொல்லிப் புலம்பினாரோ!  ஹேமலேகா அவர் மனைவி போல் தெரிகிறது. அல்லது அல்லது அவரால் விரும்பப்பட்ட பெண்ணாக இருக்கலாம். எதுவானால் என்ன! வாசந்திகாவின் கண்கள் கலங்கிக் கண்ணீர் பெருகியது. 

1 comment:

நெல்லைத்தமிழன் said...

தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன். விரைந்து எழுதுங்கள்.