எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, March 31, 2019

அரங்கனைக்காணச் செல்வோம், வாரீர்!


அரங்கன் மேல்கோட்டையில்

மேலுள்ள சுட்டியில் தான் நாம் கடைசியாக நம்மாழ்வார் அரங்கனைப் பிரிந்த நிகழ்வு குறித்தும், அரங்கன் மேல்கோட்டை சென்று அங்கே செலுவநாராயணர் கோயிலில் சகல சௌகரியங்களோடும் தங்கி இருந்ததையும் குறித்துக் கண்டோம். நாம் அரங்கனைப் பிரிந்து வந்து பல நாட்கள் ஆகிவிட்டன. அவன் நிலை இப்போது என்ன என்பதைக் காண்போமா?

மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்தில் செலுவப்பிள்ளையின் திருக்கோயிலில் குடி போன அரங்கன் அயல் ஊருக்கு ஓர் அநாதை போல் வந்ததை நினைவூட்டுவது போல மிக எளிமையாக அன்பர்களால் செய்விக்கப்பட்ட தினப்படி வழிபாடுகள், வாராந்தர, மாதாந்திர, வருடாந்தர உற்சவங்களை எளிமையான முறையில் கொண்டாடவைத்து அனைவரையும் கண்டருளிக் கொண்டிருந்தார்.  திருவரங்கத்திலிருந்து புறப்பட்ட அறுபதுக்கும் மேற்பட்டவர்களில் இப்போது ஐந்து பேர் தான் மிஞ்சி இருந்தனர். அவர்களில் மூன்று பேர் ஒருவருக்கொருவர் உறவினர்களான கொடவர்கள். அநேகமாகக் குடகுப் பகுதி மக்கள் கொடவர்கள் என அழைக்கப்பட்டிருக்கலாம். மற்ற இருவர் அரங்கனுக்கு நித்ய சேவை செய்யும் கைங்கரியக்காரர்கள்.

இவர்கள் அரங்கன் மேல் தாளாத பாசம் கொண்டு மிகுந்த விசுவாசத்துடனும் பக்தியுடனும் சேவை செய்து வந்தனர். அப்போது அவர்களுக்கு ஹொய்சள மன்னர் சுல்தானியப் படைகளை வென்ற விஷயம் சிறுகச் சிறுகப் பரவி அவர்கள் காது வரையில் வந்து விட்டது! இதைக் கேட்ட ஐவரும் மிகவும் மனம் மகிழ்ந்து ஆடிப்பாடிக் கொண்டு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வழிபட்டனர். மறுநாள் காலையில் மேல்கோட்டை வீதியில் ஓர் சூரியன் உதித்தது. பேரொளி தோன்றியது. கூர்ந்து நோக்கிய ஊர்க்காரர்கள் அந்த ஒளி பொருந்திய முகத்தைக் கொண்டவர் வேறு யாருமில்லை, வேதாந்த தேசிகர் என்பதைக் கண்டு கொண்டார்கள்.  வேதாந்த தேசிகருக்கு அப்போது எழுபது பிராயம் தாண்டி விட்டிருந்தது. தும்பைப் பூவைப் போல் நரைத்த சிகையுடனும், ஒளி பொருந்திய கூர்மையான பார்வையைக் கொண்ட கண்களுடனும் இரு இளைஞர்கள் உடன் வர அவர்களுடனே தன் மகனான வரதாசியா என்பவனும் கூட வர வந்து கொண்டிருந்தார்.

அந்த இரு இளைஞர்களும் வேறு யாரும் இல்லை. திருவரங்கத்தில் நடைபெற்ற கலவரத்தில் வெட்டுக்காயம் பட்டு இறந்து போன சுதர்சன பட்டரின் மைந்தர்களே ஆவார்கள்.  இங்கே பார்க்கலாம் அந்தச் சிறுவர்கள் குறித்து எழுதி இருப்பதை! தேசிகர் அந்தக் குழந்தைகள் இருவரையும் தம் மகன்களைப் போலவே பாவித்து வளர்த்து அவர்களுக்கு எல்லாவிதமான சாஸ்திர சம்பிரதாயங்களையும் வித்தைகளையும் கற்றுக் கொடுத்து அவர்களோடு சேர்த்துத் தன் மகனையும் ஓர் ஞானக் களஞ்சியமாகவே மாற்றி இருந்தார். திருவரங்கம் பாழ்பட்ட பின்னர் அரங்கன் கூட்டத்தார் போட்ட துளசிச் செடிகளைப் பின் தொடர்ந்து வந்த வேதாந்த தேசிகருக்குச் சில நாட்களில் காற்றினால் துளசிச் செடிகள் இடம் மாறிப் பறக்கவே அரங்கனைத் தொடர இயலவில்லை. ஆகவே வழி பிசகிப் போனார். காடுகளில் திரிந்து அங்கும் இங்குமாக அலைந்து கடைசியில் தம்முடைய சீடர்களில் ஒருவரான பிரம்மதந்திர சுதந்திர ஜீயரைச் சந்தித்துக் காவிரிக்கு ஓரமாக மேற்குத் திசையில் ஹொய்சள ராஜ்ஜியத்தை அடைந்து அடைக்கலம் பெற்ற கதையை ஏற்கெனவே பார்த்தோம்.
இங்கே

இங்கே

அவர் தங்கி இருந்தது உண்மையில் கொங்கு நாடு எனப்படும் பிரதேசம். தற்போதைய கோவை மாவட்டமும் அதைச் சேர்ந்த பகுதிகளும் அந்தக் காலங்களில் கொங்கு நாடு என அழைக்கப்பட்டது. அங்கே தான் சத்தியமங்கலம் என்னும் ஊரில் தேசிகர் தன் மனைவி, பிள்ளை, சுதர்சன பட்டரின் இரு பிள்ளைகள் ஆகியோருடன் அடைக்கலம் பெற்றுத் தங்கி இருந்தார். கொங்கு நாடு அந்தக் காலத்தில் ஹொய்சளர்களின் ஆட்சிக்குக் கீழே இருந்து வந்தது. ஆகவே எவ்விதமான தொந்திரவும் இல்லாமல் தமது வாழ்க்கையை வேதாந்த தேசிகர் கழித்து வந்தார். தோத்திரங்கள், தத்துவ விளக்கங்கள் என எழுதிக் குவித்த அவர் இப்போது காவியங்களை இயற்ற ஆரம்பித்திருந்தார். அப்போது "யாதவாப் யுதயம்" என்னும் காவியத்தை இயற்றிக் கொண்டிருந்தார். அப்போது தான் அவருக்கு அரங்கன் மேல்கோட்டையில் அடைக்கலம் பெற்றுத் தங்கி இருக்கும் விஷயம் கேள்விப்பட்டார். உடனே அரங்கனைத் தரிசிக்கத் தன் பிள்ளையையும், சுதர்சன பட்டரின் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வந்தவர் தான் அன்று காலை மேல்கோட்டையின் வீதிகளில் சூரிய ஒளி புறப்பட்டு வந்தாற்போல் அனைவருக்கும் காட்சி கொடுத்தார்.

Saturday, March 30, 2019

மீண்டும் குலசேகரன் தூது!

மறுநாள் காலை குலசேகரன் குளித்து முடித்து மன்னரைக் காணச் சித்தமாக இருக்கும் வேளையில் கிருஷ்ணாயி மீண்டும் அங்கே வந்தாள். அவளுடைய இயல்பான கம்பீரமும், அவள் எழிலும் கண்ட குலசேகரன் இப்போது முகம் சுளிக்கவில்லை. அவள் பக்கமும் ஓர் நியாயம் இருப்பதைப் புரிந்து கொண்டவனாக, அவளை, "வாருங்கள் மஹாராணி!" என வரவேற்றான். ஆனால் கிருஷ்ணாயி இந்த மரியாதையை எதிர்பார்க்கவில்லை. முகம் சிணுங்கினாள். "ஸ்வாமி! எனக்கு எதற்கு இந்த மரியாதை எல்லாம்?" எனத் தன் ஆக்ஷேபத்தையும் தெரிவித்தாள். பின்னர் கை தட்டிச் சேடியரை அழைத்துக் குலசேகரனுக்கு உணவு கொண்டு வரும்படி ஆணை இட்டாள். சேடியர் கொண்டு வந்த உணவைத் தன் கைகளாலேயே குலசேகரனுக்குப் பரிமாறி அவன் உண்ணுவதைக் கண்டு மனதிற்குள் மகிழ்ந்திருந்தாள். பின்னர் அவனுக்கு வெற்றிலையும் தன் கைகளால் மடித்துக் கொடுக்க, குலசேகரன் தான் வெற்றிலைத் தாம்பூலம் தரிப்பதில்லை என மறுத்தான்.

கிருஷ்ணாயியும் அவன் விருப்பத்திற்கு மறுப்பேதும் சொல்லாமல், தாம்பூலத்தை அப்படியே தட்டில் வைத்துவிட்டு அவனைப் பார்த்து, "ஸ்வாமி! தங்களால் என் வாழ்வில் ஓர் அர்த்தம் தோன்றியது. கிடைத்தற்கு அரிய பேறுகளைப் பெற்றேன். அதன் பின்னரும் தங்கள் உதவியால் நானும் என் மகனும் உயிரும் தப்பினோம். இப்போது இந்த நேரத்தில் உங்கள் அருகில் மாளிகையில் இருக்கும் பேறும் பெற்றிருக்கிறேன். இதுவே இந்த ஜன்மத்தில் எனக்குக் கிட்ட வேண்டிய/ கிடைத்த பெரிய மகிழ்ச்சி. பேரின்பம்." என்று கண்கள் கலங்கக் கூறினாள். அந்தச் சில நொடிகளில் குலசேகரனுக்குள்ளும் ஏதோ ஓர் உணர்வு புகுந்து அவன் நெஞ்சைப் பிசைந்தது. அவளையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். பழைய நினைவுகளெல்லாம் அவன் கண்களில் நிழலாடின. தலையை உலுக்கிக் கொண்டு நினைவுலகுக்கு வந்தவன் இந்தச் சில நொடிகளில் அவன் அவளோடு பல ஆண்டுகள் தம்பதியராய் வாழ்ந்தது போன்ற உணர்வைப் பெற்றிருப்பதை உணர்ந்து கொண்டான். அவளுக்கும் அப்படியே தோன்றி இருக்கும் என்பதை அவள் கண்களால் அவனைப் பார்த்த பார்வையில் இருந்து ஊகித்து உணர்ந்தான். இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் போன பிறவியிலும், பல யுகங்களிலும் கூடக் கிருஷ்ணாயிக்கும் அவனுக்கும் பிரிக்க முடியாததொரு பந்தம் இருந்திருக்க வேண்டும் என்றும் நினைத்தான்.

இவள் உண்மையிலேயே நல்ல பெண்! நன் மகனைப் பெற வேண்டியே என்னை நாடி இருக்கிறாள். உண்மையில் மன்னருக்கு துரோகம் செய்யவும் இல்லை. என்னை ஏமாற்றவும் இல்லை. அப்படி எல்லாம் தறி கெட்டவளாக இருந்திருந்தால் இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ ஆண்மகன்களோடு பழகி இருக்க வேண்டுமே! இல்லை, இல்லை. இவள் உண்மையில் குணவதி! என்றெல்லாம் நினைத்தவன், அவளைப் பார்த்து, "மஹாராணி, உங்கள் மீது எனக்கிருந்த வெறுப்பெல்லாம் போய்விட்டது. நான் உங்களைப் பரிபூரணமாகப் புரிந்து கொண்டு விட்டேன். இப்போது நம்மிருவர் இடையே இருக்கும் இந்த உறவை நான் புனிதமான ஒன்றாகக் கருதுகிறேன்." என்று கூறினான். இதைக் கேட்ட கிருஷ்ணாயி மனம் மகிழ்ந்தது அவள் முகத்தில் தெரிந்தது. கண்களில் கண்ணீர் கசிய அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

சற்று நேரத்தில் அரண்மனைச் சேவகர்கள் வந்து அவனை மன்னரிடம் அழைத்துச் சென்றார்கள். அங்கே மன்னர் அவனை வரவேற்று சம்பிரதாய விசாரணைகள் செய்த பின்னர் குலசேகரனிடம் மீண்டும் மதுரையோடு போர் தொடுக்க ஆயத்தமாக வேண்டும் எனக் கூறினார். குலசேகரன் திடுக்கிட்டான். இப்போது தான் ஓர் பெரிய போரிலிருந்து மக்கள் சற்றே ஓய்வு கிடைத்து நிம்மதியாக இருக்கிறார்கள். அதற்குள் இன்னொரு பெரிய போரா? அதுவும் வேற்றூரில்? அங்கிருக்கும் படைத்தலைவனுடன்? சுல்தானியப் படை எவ்வளவு பெரியது! குலசேகரன் மன்னனிடம் மெதுவாகத் தற்சமயம் மதுரை மீது படை எடுப்பது அவ்வளவு உகந்தது அல்ல என எடுத்துக் கூறினான். இப்போது நடந்த சண்டையில் சுல்தானியர்கள் எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் போர் செய்யும் முறையிலும் உக்கிரமாகச் சண்டை போடுவதைச் சுட்டிக் காட்டினான். நம் வீரர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். சுல்தானியர்கள் போல் உக்கிரமாகச் சண்டை போட மாட்டார்கள். மேலும் சுல்தானியர்கள் போரின் தந்திரங்களும் மாறுபட்டு இருக்கிறது. அதை நாம் முதலில் கற்க வேண்டும். முதலில் நம் படை பலத்தைப் பெருக்க வேண்டும்.

அதற்கு சுல்தானிய வீரர்களை ஆசை காட்டி நம் பக்கம் இழுக்க வேண்டும். அல்லது மதம் மாறி சுல்தானியர்களோடு சேர்ந்து விட்ட நம் வீரர்களை மீண்டும் நம் பக்கம் இழுக்க வேண்டும். அவர்களிடமிருந்து சுல்தானியர்களின் மாறுபட்ட போர்ப்பயிற்சியை நம்மவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். பின்னர் படை பலத்தையும் பெருக்கிக் கொண்டு அதன் பின்னரே நாம் மதுரைக்குப் போருக்குக் கிளம்ப வேண்டும் என்றான் குலசேகரன். அவன் கூறியதைப் பற்றி நன்கு சிந்தித்துப் பார்த்த வீர வல்லாளர் அவன் பேச்சில் உண்மை இருப்பதைப் புரிந்து கொண்டார். ஆனாலும் படை பலத்தைப் பெருக்குவதை நிறுத்தாமல் தொடர எண்ணிக் குலசேகரனிடம், அவன் தென் தமிழ்நாட்டுச் சிற்றரசர்களிடம் சென்று அவர்கள் படையை ஹொய்சள நாட்டுப்படையுடன் இணைத்து மதுரைப்போருக்குத் தயாராக வேண்டும் எனவும், வீர வல்லாளருக்கு வேண்டிய உதவிகளை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளும்படி சொன்னார். அதன்படி குலசேகரனும் தென் தமிழ்நாட்டை நோக்கிப் பயணம் ஆனான்.

Friday, March 29, 2019

கிருஷ்ணாயியை மன்னித்தான்!

குலசேகரன் மன்னரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு தனக்கென ஒதுக்கப்பட்ட மாளிகையின் ஓர் அறையில் வந்து படுத்து ஓய்வு எடுக்கச் சென்றான். அப்போது திடீரென ஏதோ சப்தம் கேட்டது. அறையெங்கும் ஓர் நறுமணம் வீசியது. தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு நிமிர்ந்த குலசேகரன் சுற்றும் முற்றும் பார்த்தான். அறைச் சாளரத்தின் அருகே ஓர் அழகிய பெண்ணின் முகம் அவனையே கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அந்தப் பெண்ணின் முகம் கரை காணா மகிழ்ச்சியில் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது.  அதைக் கவனித்த குலசேகரன் அது கிருஷ்ணாயி தான் எனப் புரிந்து கொண்டு முகம் சுளித்தான். அதைக் கண்ட கிருஷ்ணாயியின் முகம் சுருங்கினாலும் சமாளித்துக் கொண்டாள். அவனைப் பார்த்துச் சிரித்தாள்.  மெல்ல மெல்ல ஓர் தேவதை போல் நடந்து உள்ளே வந்தாள்.

வந்தவள் கைகளில் ஓர் மயில் இறகினால் ஆன விசிறி  இருந்தது. அந்த விசிறியால் அவனுக்கு இதமாக வீச ஆரம்பித்தாள் கிருஷ்ணாயி! திகைத்துப் போனான் குலசேகரன். "மஹாராணி, இதென்ன! இதெல்லாம் மிகவும் அதிகமாகத் தெரிகிறது! தயவு செய்து சும்மா இருங்கள்!" என்று கூறிய வண்ணம் அந்த மஞ்சத்தில் இருந்து எழுந்து சற்றே விலகி நின்றான். கிருஷ்ணாயிக்கு மனம் புண்பட்டது அவள் முகத்தில் தெரிந்தது. அவனைப் பார்த்து சோகமான குரலில், "ஸ்வாமி, இன்னமும் என்னை ஓர் அந்நியப் பெண்ணாகவே அதுவும் மஹாராணியாகவே நினைக்கிறீர்களா? மிகவும் மரியாதையுடன் வேறு அழைக்கின்றீர்கள்! இதனால் என் மனம் புண்படுவதைத் தாங்கள் அறியவில்லையா? நான் தங்கள் அடிமை ஸ்வாமி!" என்ற வண்ணம் கீழே குனிந்து அவனை நமஸ்கரிக்க முற்பட்டாள். அதைத் தடுத்த குலசேகரன், "ராணி, நான் உங்கள் சேவகன். அடியாருக்கும் அடியான் நான். என்னிலும் கேவலமானவன் இவ்வுலகில் வாழவும் முடியுமோ? அப்படி இருக்கையில் உங்கள் மரியாதைக்கு நான் எவ்விதம் பாத்திரமாவேன்? இத்தகைய உபசரணைகளுக்கு நான் அருகதை அற்றவன்! " என்று பணிவுடன் சொன்னான்.

"ஐயா, தங்கள் மனம் புண்பட்டிருப்பதை நான் அறிவேன்.  வேறு எந்தக்காரணத்திற்காக இல்லை என்றாலும் என்னையும் என் மகனையும், இந்நாட்டையும் தாங்கள் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறீர்கள். அதற்காகவே இந்நாட்டினரான நாங்கள் அனைவரும் தங்களுக்கு ஊழியம் செய்யக் கடமைப் பட்டுள்ளோம்!" என்றவண்ணம் விசிறியை மீண்டும் வீச ஆரம்பிக்க, குலசேகரன் அவளை, "வேண்டாம்!" எனத் தன் கைகளால் தடுத்து நிறுத்தினான். அவன்முகம் அப்போது போன போக்கைப் பார்த்தும் அவன் மனதில் எழுந்த அருவருப்பையும் புரிந்து கொண்டாள் கிருஷ்ணாயி! "ஸ்வாமி,தங்கள் மனம் எனக்குப் புரிகிறது. நான் உங்களை இழிவு வழியில் தள்ளி விட்டேன் என்பதைத் தாங்கள் மறக்கவில்லை. அதோடு இப்போதும் அதற்குத் தான் வந்திருக்கிறேன் என நினைக்கிறீர்கள். இல்லை, ஸ்வாமி! இல்லை. நான் அப்படிப் பட்டவளே இல்லை. எனக்கு முக்கியமாக இந்த ஹொய்சளத்திற்கு ஓர் சந்ததி ஏற்பட வேண்டும் என்பதால் எங்கள் துளு வம்சத்தினர் கையாளும் வழியையே நானும் கையாண்டேன். அதன் மூலம் இந்த ராஜ வம்சத்துக்கு ஓர் சந்ததி கிடைத்து விட்டது! அதற்கு மேல் எனக்கு இதில் விருப்பம் ஏதும் இல்லை, ஸ்வாமி! முதலில் தாங்கள் அதைப் புரிந்து கொள்ளுங்கள்! எப்போதோ உங்களை வற்புறுத்தித் துன்புறுத்தி நான் இணங்க வைத்ததால் இப்போதும் நான் உங்களைத் தொந்திரவு செய்வேன் என நினைக்காதீர்கள்!" எனக் கண்களில் கண்ணீர் மல்க வேண்டினாள்.

அவள் கண்களில் இருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வழிவதைக் கண்டான் குலசேகரன். தான் அவளைத் தவறாக நினைத்தது குறித்து வருந்தினான். மெல்ல ஆதுரமாக அவளைப் பார்த்து, "கிருஷ்ணாயி!" என அவள் பெயரைச் சொல்லி அழைத்தான். உடனே அவள் கண்ணீருடன் முறுவலும் நிறைந்த முகத்துடன் அவனைப் பார்த்தாள்.  அவன் பார்வையில் அவள் துயரம் மெல்ல மெல்லக் கரைந்தது. குலசேகரனுக்கும் மனம் கொஞ்சம் சமாதானம் ஆகியது. அவளையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். அவளும் வாயால் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள். அவ்வளவு நேரம் பேசியதில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் தவறாகவே நினைத்த இருவரும் இப்போது ஒருவரை மற்றொருவர் புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். விவரிக்க இயலாத ஏதோ ஓர் பந்தம் தங்கள் இருவரையும் பிணைத்திருப்பதையும் இன்னதென்று சொல்லமுடியாத ஓர் புதிய உறவு முறையில் இருவரும் கட்டப்பட்டிருப்பதையும் ஒருசேர இருவரும் உணர்ந்து கொண்டார்கள். உணர்ந்து கொண்டதை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதன் மூலம் மேலும் உணர்ந்தார்கள்.

யுத்தத்தில் நடந்த கடுமையான கலவரங்களால் களைப்புற்றிருந்த குலசேகரன் இப்போது உண்மையாகவே அலுப்புடனும், சோர்வுடனும், தன்னால் விழித்திருக்க முடியவில்லை எனச் சொல்லிக் கொண்டு மஞ்சத்தில் விழுந்து படுத்துக் கொண்டு கண்களை மூடி உறங்க ஆரம்பித்தான். "தூங்குங்கள்! ஸ்வாமி!" என்று ஓர் குழந்தையைச் சொல்லுவது போல் அவனிடம் கனிவாகச் சொன்ன கிருஷ்ணாயி மெதுவாக இனம் புரியாததொரு ராகத்தில் தன் தாய் மொழியான துளுவில் தாலாட்டுப் போல் தொனித்த ஓர் பாடலைப் பாட அந்த அறை முழுவதும் அந்தப் பாடலின் ராகத்தாலும் லயத்தாலும் நிரம்பி வழிந்தது. குலசேகரன் நல்ல ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தான்.

Wednesday, March 27, 2019

ஹொய்சளம் வென்றது!

சுல்தானைக் கீழே வீழ்த்திய பின்னர் குலசேகரன் வெறி கொண்டவனைப் போல் வாளைச் சுழற்றிக்கொண்டு அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தான். எங்கும் சுல்தான் கீழே விழுந்த செய்தி பரவ சுல்தானியப் படை வீரர்கள் மன வலிமை குறைந்து மெல்லப் பின் வாங்க ஆரம்பித்தனர். படையின் ஒழுங்கு குலைந்து சின்னாபின்னமாகி ஓட ஆரம்பித்தனர்.  ஹொய்சளர்கள் ஜயகோஷம் எழுப்பினர்.  இந்தப் போர் நடந்தது கி.பி. 1314 ஆம் ஆண்டில். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போர் ஆகும்.  இதற்குச் சரியாகப் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் தான் அரங்கம் முற்றுகைக்கு உள்ளாகி அரங்கன் ஊர் ஊராய்த் திரிய ஆரம்பித்திருந்தான்.  அதன் பின்னர் எதிரிகள் மீது நடத்திய முதல் தாக்குதல் இது! உள்ளே உண்ண உணவு இல்லாநிலையில் ஹொய்சளர்கள் நடத்திய இந்தப் போரில் அவர்கள் வெளியே வரவில்லை எனில் உள்ளேயே பட்டினியில் இறந்திருக்க நேரிட்டிருக்கும். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் உடல் சோர்வாலும், மனச்சோர்வாலும் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சமயம் பார்த்துக் குலசேகரன் வெறியோடு சுல்தான் மேல் பாய்ந்து அவனைத் தாக்கவில்லை எனில் ஹொய்சளர்களுக்கே தோல்வி நிச்சயம் கிட்டி இருக்கும்.  அந்த நாட்களில் தலைவனின் தலைமை நேரடியாகக் கிடைத்தால் தான் வீரர்கள் உற்சாகத்துடன் போரிடுவார்கள். தலைவன் முறியடிக்கப் பட்டாலோ, அல்லது கொல்லப் பட்டாலோ வீரர்கள் கலக்கமடைந்து சிதறி ஓடி விடவே முயற்சி செய்வார்கள்.  ஆகவே இப்போது சுல்தான் இறந்ததும் ஓடிய சுல்தானிய வீரர்களை ஹொய்சள வீரர்கள் துரத்திச் சென்று பல்வேறு திசைகளிலும் வெகு தூரத்துக்கு விரட்டிய பின்னரே தங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.  அந்தத் துரத்தல் கோஷ்டியில் குலசேகரனும் இருந்தான். அவனும் வெகு தூரத்துக்கு சுல்தானிய வீரர்களை விரட்டித் தள்ளி விட்டுப் பின்னர் கோட்டைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.  அது ஓர் அந்திமாலைப் பொழுது. மாலை மெல்ல மெல்ல மயங்கிக் கொண்டிருந்தது. கோட்டை வாயிலில் நெருக்கமாக வாழைக்குலைகளும் தோரணங்களும், கொடிகளும் கட்டப்பட்டுக் கோட்டைச் சுவர் எங்கும் ஜகஜ்ஜோதியாக தீபங்கள் ஏற்றப்பட்டுப் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்தன.

குலசேகரனும் அவனுடன் சென்றவர்களும் கோட்டை வாசலில் நுழைந்ததுமே, "ஜய விஜயீ பவ!" என்னும் கோஷம் அனைவர் தொண்டையிலிருந்தும் எழுந்து பெரிய அளவில் அந்த கோஷம் எங்கும் எதிரொலித்தது.  ராஜவீதியெங்கும் விளக்குகள் ஒளிமயமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. உடனே எங்கிருந்தோ வாத்திய முழக்கம் கேட்க மேள தாளங்கள் முழங்க ஆரம்பித்தன.  குலசேகரனை நடுவில் விட்டுக்கொண்டு சுற்றிலும் வீரர்கள் சூழ்ந்து வர மெல்ல மெல்ல ஓர் பவனி துவங்கியது. வீதியின் இருமருங்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் எனக் கூட்டமாய்க் கூடி நின்று ஆரவாரம் செய்து  குலசேகரனை வரவேற்றார்கள். வாழ்த்தொலி எழுப்பினார்கள்.  எங்கும் மகிழ்ச்சி விரவிக் கிடந்தது. குலசேகரன் ஓர் சிங்கம் போல் கம்பீரமாக வீதி வலம் வந்தான்.  அவன் மனதுக்குள் பற்பல எண்ணங்கள்.

சற்று நேரம் முன்னர் இந்த நகரம் காட்சி கொடுத்த விதம் என்ன?  ஒரே சோக மயமாய்க் காட்சி கொடுத்ததே! மக்கள் முகத்தில் பயக்களை தாண்டவமாடியதே! அனைவருமே ஓர் சொல்லொணா பீதியில் உறைந்திருந்தனரே! பெண்கள் சுல்தானியரிடம் அகப்பட்டுக்கொண்டு சீரழியாமல் இருக்க வேண்டி தங்களைத் தீயில் இட்டுக்கொள்ளவும் சித்தமாக இருந்தனரே! அந்தக் காட்சிகள் எல்லாம் இப்போது கலைத்துப் போட்ட சித்திரமாக அனைத்தும் காணாமல் போய் இப்போது புதுச்சித்திரம் எழுதப்பட்டாற்போல் மாற்றம் கண்டு விட்டது. எல்லாவற்றிற்கும் அரங்கன் அருளே காரணம்! இவ்விதமெல்லாம் நினைத்த வண்ணம் குலசேகரன் அந்த நகரின் எல்லாத் தெருக்களிலும் பவனி வந்தான். பிரதான வீதி வந்ததும் அரண்மனை வாயில் வரை அவனைக் கொண்டு போய் விட்டனர் மக்கள். அரண்மனை வாயிலில் வயதானாலும் மிடுக்குக் குறையாமல் இருந்த வீர வல்லாள தேவர் மிகுந்த பெருமிதத்துடனும், மனம் கொள்ளாப் பூரிப்புடனும் குலசேகரனை வரவேற்கத் தயாராய் நேரில் அவரே வந்திருந்தார்.  குதிரையை விட்டுக் குலசேகரன் இறங்கியது தான் தாமதம் மன்னர் தாமாகவே முன் வந்து கையில் கொண்டு வந்திருந்த மாலையைக் குலசேகரனுக்கு அணிவித்தார்.

எங்கும் வாழ்த்தொலிகள் முழங்க, அந்தக் கோஷத்துக்கிடையே மன்னர், "குலசேகரன்  இனிமேல் நம் தண்டநாயகர்களில் ஒருவர்!" என மகிழ்வோடு அறிவித்தார்.  குலசேகரன் தலையை அசைத்துத் தன் மறுப்பைத் தெரிவித்தான். தான் அதற்கெல்லாம் தகுதி வாய்ந்தவன் அல்ல என்று பணிவோடு எடுத்துச் சொன்னான். அதற்கு மன்னர், "வீரனே! உன் திறமையைக் குறைத்து மதிப்பிடாதே! முதலில் என் பட்டத்து மஹாலக்ஷ்மியைக் காப்பாற்றிக் கொடுத்தாய்! எவ்விதமான சேதமும் இல்லாமல் அவள் திரும்பி வந்தாள். இப்போதோ என் ராஜ்ய லக்ஷ்மியையே நீ காப்பாற்றிக் கொடுத்து விட்டாய்! உனக்கு இந்தப் பதவியை எல்லாம் விட மிக உயர்ந்த பதவியையே கொடுக்க வேண்டும். நீ இந்தப் பதவிக்கு மிகவும் ஏற்றவன். ஆகவே இதை ஏற்றுக் கொள்!" என்றார்.

குலசேகரன் மன்னனிடம், "தங்கள் அளவு கடந்த அன்புக்கு நன்றி மன்னா!  இந்தப் பதவியை நான் ஏற்றாலும் இங்கே என்னால் ராஜ சேவகத்திலேயே நிலைத்து நிற்க முடியாது! ஏனெனில் நான் கொண்ட லக்ஷியம் அப்படி! என் லக்ஷியம் என் அரங்கனுக்குச் சேவகம் செய்வதே! அவனைக் காப்பாற்றி மீண்டும் திருவரங்கத்தில் கொண்டு சேர்ப்பதே! இப்போது அரங்கன் மேல்கோட்டையில் இருப்பதாகத் தெரிகிறது! அங்கிருந்து அவனை எப்படியேனும் திருவரங்கம் கொண்டு சேர்க்க வேண்டும். ஆகவே உங்கள் படைத்தலைவனாக உங்களுக்கு ஊழியம் செய்து கொண்டு  இங்கே என்னால் நிலைத்திருக்க முடியாது!" என மிகப் பணிவாக எடுத்துக் கூறினான். அதைக் கேட்ட ஹொய்சள மன்னன் மெல்லச் சிரித்தார்.

"வீரனே! எனக்கு மட்டும் அந்த லக்ஷியம் இல்லையா என்ன? எனக்கும் அரங்கனைத் திரும்பக் கொண்டு வருவதே லக்ஷியம்! இது என் முதல் கனவு! அதன் பின்னர் மதுரையைக் காப்பாற்றி சுல்தானியரிடமிருந்து மீட்க வேண்டும். இது என் இரண்டாவது கனவு.  அதன் பின்னர் தென்னாடுகள் அனைத்தையும் ஒரே குடைக்குக் கீழ் கொண்டு வர நினைக்கிறேன். இது என் மூன்றாம் கனவு.  இவை எல்லாமும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளவையே குலசேகரா! ஆகவே நீ உன் லக்ஷியத்தை நிறைவேற்றத் தடை ஏதும் இருக்காது. மாறாக உனக்கு வேண்டிய உதவிகளையே நான் செய்து தருவேன்!" என்றார்.

Thursday, March 14, 2019

வேலை!

இன்றும், நாளையும் சொந்த வேலைகள் இருப்பதாலும் உறவினர் வருகையாலும் பதிவுகள் தாமதமாக வெளி வரும்.

கிருஷ்ணாயி காப்பாற்றப் பட்டாள்!

மறுநாள் இரவில் மூன்று பெரிய கூடையுடன் குலசேகரன் தன் ஆட்களுடன் அங்கே வந்து சேர்ந்தான். கோட்டை வாசலில் கீழே இருந்து குலசேகரன் ஆட்களுக்கும், மேலே இருந்த கோட்டைக்காவலர்களுக்கும் இடையே பேரம் நடைபெற்றது. பின்னர் கோட்டைக்காவலர்கள் மேலே இருந்து கூடைகளைக் கீழே இறக்கினார்கள். அதிலே நிறையப் பொற்கட்டிகள், காசுகள், ஆபரணங்கள் இருக்கவே அந்தக்கூடையைத் தன் சகாக்களிடம் கொடுத்து நங்கூரானிடம் கொண்டு சேர்ப்பிக்கச் சொல்லிக் குலசேகரன் அவர்களை முதலில் அங்கிருந்து அப்புறப்படுத்தினான்.  அவர்கள் சென்றதும் குலசேகரன் மெதுவாகத்தன்னிடம் இருந்த கூடைக்குள்ளிருந்த கிருஷ்ணாயியைக் கோட்டையிலிருந்து இறங்கிய கூடைக்குள் அமர வைத்து மேலே உள்ளவர்களை இழுக்கும்படி சைகை காட்டினான். அவர்களும் மேலே இழுத்தார்கள். பின்னால் இளவரசனையும் உட்கார்த்தி வைத்து மேலே இழுக்க வைத்த குலசேகரன் கடைசியில் தானே அமர்ந்து கொண்டு தன்னையும் மேலே இழுக்கச் சொல்ல அவனும் மெல்ல மெல்ல கோட்டைக்குள் சென்றுவிட்டான்.

நகரம் முழுவதும் ராணியும் இளவரசனும் காப்பாற்றப் பட்ட செய்தியும் இருவரும் பத்திரமாகக் கோட்டைக்குள் வந்து சேர்ந்த செய்தியும் பரவி எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது. ஆனால் முற்றுகை அதனால் முற்றுப் பெறவில்லை. மேலும் ஒரு வாரம் நீடித்தது. இப்போது கையிருப்புப் பொருட்களும் குறைய ஆரம்பிக்க மக்கள் உணவுக்காகப் பரிதவித்தார்கள். எல்லோருடைய பொறுமையும் பறி போயிற்று. எங்கும் பதட்டமும் குழப்பமும் நீடிக்க, ஹொய்சள மன்னர் இனிப் பொறுக்க முடியாது என்னும் நிலைமை வந்ததும் கோட்டையைத் திறந்து கொண்டு எதிரிகளைத் தாக்குமாறு படைவீரர்களுக்கு உத்தரவிட்டார். ஹொய்சளர்கள் "ஓ" என இரைந்து கொண்டு கோட்டை வாசலைத் திறந்து கொண்டு வெளியே வந்து சுல்தானியப் படை வீரர்களை மிக உக்கிரமாகத் தாக்கத் தொடங்கினார்கள். ஓர் மாபெரும் யுத்தம் தொடங்கியது.

முதல் இரண்டு நாட்கள் சுல்தானிய வீரர்களுக்கும், ஹொய்சளர்களுக்கும் சமமான சேதங்கள் விளைந்தன.மூன்றாம் நாள் தாக்குப் பிடிக்க முடியாத ஹொய்சளர்கள் சேதங்களை அதிகம் அனுபவித்தனர். ஆகவே தங்கள் முழு பலத்தோடும் மறுநாள் போரிட ஆரம்பித்தார்கள். போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. இரு தரப்பும்  பகல் முழுவதும் சமபலத்துடன் காணப்பட்டார்கள். ஆனால் நேரம் ஆக, ஆக ஹொய்சளர்களின் பலம் குறைய ஆரம்பித்தது. அவர்கள் தரப்பில் சேதம் அதிகம் ஆயிற்று. வீரர்கள் சிதறி ஓடத் துவங்கினார்கள். ஆனால் சுல்தானியர்கள் பக்கமோ சுல்தான் உத்தௌஜியே நேரில் வந்து விட்டான். யானை மீது ஏறிக் கொண்டு வந்து உற்சாகத்துடன் சண்டையை நடத்திக் கொண்டிருந்தான். தங்கள் சுல்தானை நேரில் கண்ட சுல்தானிய வீரர்கள் மகிழ்வுடனும் ஊக்கத்துடனும் போராட ஆரம்பித்தனர். சுல்தானியர்கள் பக்கம் வெற்றி குவிய ஆரம்பித்தது.  ஹொய்சளர்கள் பின் வாங்க ஆரம்பித்தனர். இந்தச் செய்தி நகர் முழுவதும் பரவ ஆரம்பிக்கவே உயர்குடிப் பெண்கள் யாவரும் தீக்குளித்து உயிர் விடச் சித்தமானார்கள். மக்கள் அங்கும் இங்குமாக ஓடி அலை பாய்ந்தார்கள்.

நிலைமை மோசமாவது குலசேகரனுக்குப் புரிந்தது. மனம் துடித்துப் பரிதவித்துக் கொண்டு இருந்தான். இந்தப் போர் ஓர் முக்கியமான போர் என்பதோடு திருவரங்கன் நிலையையும் திருவரங்கத்தின் நிலையையும் இந்தப் போர் மூலம் தான் சரி செய்ய முடியும் என்பதையும் குலசேகரன் அறிந்திருந்தான். ஹொய்சளர்கள் மட்டும் தோற்று விட்டால் தமிழ் நாட்டுக்கு இப்போது விமோசனம் இல்லை. அரங்கன் கதியும் அதோ கதி தான்! மக்கள் நிலையைச் சொல்லவே வேண்டாம். ஆகையால் ஏதேனும் செய்து சுல்தானிய வீரர்களை முறியடிக்க வேண்டும்.  ஆனால் என்ன செய்வது?யோசனையில் மூழ்கினான் அவன். சட்டெனஓர் தீர்மானத்திற்கு வந்தான். போரின் வெற்றியையோ, தோல்வியையோ நிர்ணயிப்பது அந்தப் போர் நடக்கும் நாட்டின் மன்னனின் உயிரை வைத்துத் தான். போர் நடக்கையில் மன்னர்கள் யானை அல்லது குதிரை மீது அமர்ந்து போர்க்களம் வந்தாலும் அவர்களுக்குத் தக்க பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருக்கும். அதையும் மீறித்தான் அவர்களைத் தக்கவேண்டும். போர் எப்படி நடந்தாலும் ஒரு தரப்பின் மன்னன் கொல்லப்பட்டால் உடனே வீரர்கள் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டுத் தாங்கள் தப்ப வழி பார்ப்பார்கள். ஆகவே குலசேகரன் எதிரி சுல்தானைக் கொல்வதே போரில் ஜெயிக்க ஒரே வழி எனத் தீர்மானித்தான்.

தனக்கு உதவியாகப் பத்து வீரர்களை அழைத்துக் கொண்டான்.  சுல்தானைக் குறி வைத்து அவர் போகும் இடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தான். ஒரு நேரம் சுல்தான் போர் வெறியுடன் வெற்றிக் களிப்புடன் முன்னேறி வருவது தெரிந்தது. புயலைப் போல் வேகமாக ஓடோடி வந்த குலசேகரன் கண் இமைப்பதற்குள்ளாக சுல்தானைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருந்த எதிரி வீரர்களிடையே மின்னலைப் போல் புகுந்தான். இரு சாரிகளிலும் சரமாரியாக வீரர்களை வெட்டி வீழ்த்திக் கொண்டே சுல்தான் உத்தௌஜியை நெருங்கி விட்டான்.  சுல்தானை நெருங்கியவன் தன்னுடைய கோபத்தை எல்லாம் திரட்டித் தன் ஈட்டி மேல் பாய்ச்சி மிகுந்த உத்வேகத்துடன் அந்த ஈட்டியை சுல்தான் மேல் வீசி எறிந்தான். சுல்தான் உடலில் ஆழமாகப் புகுந்தது அந்த ஈட்டி! சுல்தான் உயிரற்றுக் கீழே விழுந்தார்.  வெறி பிடித்தவன் போல் கூவிக்கொண்டு குலசேகரன் தன் வாளைச் சக்கரவாளமாகச் சுழற்றிக் கொண்டு போர்க்களத்தில் இங்கும் அங்குமாக அலைந்தான். 

Tuesday, March 12, 2019

குலசேகரன் முடிவு!

வியாபாரிகளைப் பற்றியும் அவர்கள் வியாபார முறைகளையும் சிந்தித்துப் பார்த்த குலசேகரனுக்கு ஒன்று நிச்சயமாய்த் தெரிந்தது. இந்த வியாபாரிகள் இங்கே கோட்டைக்கு வெளியே முற்றுகை இட்டிருக்கும் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் கோட்டைக்கு உள்ளே முற்றுகைக்கு ஆட்பட்டவர்களுக்கும் வெளியே உள்ளவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகப் பண்டங்களை விற்று வந்தார்கள். பலரும் இப்படிச் செய்வது சகஜம் தான் என்றாலும் வெளியே இருப்பவர்களுக்குத் தெரிந்தால் வியாபாரிகள் கதி அதோகதி தான்! அதையும்  மீறி அதிகப் பணத்துக்கு ஆசைப்பட்டு வியாபாரிகளில் பலரும் உள்ளே உள்ளவர்களுக்கும் வேண்டியதைச் செய்தார்கள். அதில் தான் அதிகமான பணமும் கிடைத்தது அவர்களுக்கு. இந்த விஷயத்தைக் குறித்துக் குலசேகரன் நன்கு யோசித்துப் பார்த்தான். கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். அதற்கு முன்னால் அவர்கள் உள்ளே இருப்பவர்களிடம் எவ்விதம் தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும் குலசேகரன் கவனித்தான்.

இந்த வியாபாரிகள் தங்கள் பக்கம் இருக்கும் படைவீரர்களில் சிலரையோ அல்லது அவர்கள் உப தலைவரையோ எப்படியோ கைக்குள் போட்டுக் கொள்வார்கள்.கூடியவரை அவர்களுக்குப் பணம் வாங்காமல் பண்டங்களைக் கொடுப்பார்கள்.பின்னர் அவர்கள் தயவின் முலம் கோட்டைச்சுவரை மெல்ல மெல்ல அணுகுவார்கள். கோட்டை மீதுள்ள கொத்தளங்களில் காவல் காக்கும் வீரர்களிடம் பண்டத்தைக் காட்டியும் தானியங்களைக் காட்டியும் ஆசை காட்டுவார்கள். கோட்டைக்குள் முற்றுகையில் இருக்கும் அந்த வீரர்களோ நல்ல உணவு உண்டோ அல்லது உடை உடுத்தியோ பல நாட்கள் ஆகி இருக்கும். இதனால் அவர்கள் கொடுக்கும் தானியங்களையோ அல்லது மற்றப் பண்டங்களையோ வாங்க ஆவலுடன் வருவார்கள்.  ஆனால் இந்த வியாபாரிகள் உடனே அவர்களுடன் வியாபாரத்துக்குப் படிந்து விட மாட்டார்கள். எதிரிகளின் நிலைமையையும் அவசரத்தையும் நன்கு கணித்துக் கொள்வார்கள். கூடியவரை தாமதம் செய்வார்கள். மெல்ல மெல்ல விலையைக் கூட்டிக் கொண்டே போவார்கள். ஒரு கட்டத்தில் எதிரிக்கு அது அவசியத் தேவையாக இருக்கும் பட்சத்தில் வியாபாரிகள் கேட்ட விலையைக் கொடுத்துப் பண்டத்தை வாங்கிச் சென்று விடுவார்கள்.

அதிலும் முற்றுகை தீவிரம் அடைந்து உள்ளே இருப்பவர்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்துவிட்டால் தானியங்களுக்குப் பற்றாக்குறையே ஏற்பட்டு விடும். தங்களிடம் இருக்கும் தங்க நாணயங்கள், விலை மதிப்பற்ற ஆபரணங்கள் ஆகியவற்றைக் கொடுத்துப் பதிலாக தானியங்களைப் பெற்றுச் செல்ல ஆரம்பிப்பார்கள்.  மேலும் இந்த வியாபாரம் நடக்கும் முறை எப்படி எனில் கோட்டைக்கு மேல் நிற்பவர்கள் மேலிருந்து ஒரு கூடையைக் கட்டிக்கீழே இறக்குவார்கள்.அதில் தேவையான பணமோ நகையோ இருக்கும். கீழே இருக்கும் வியாபாரிகள் அதை எடுத்துக் கொண்டு தானியங்களை அந்தக் கூடையில் போட்டு மேலே அனுப்பி வைப்பார்கள்.  இந்த லாபத்தைத் தாங்கள் மட்டும் அனுபவிக்காமல் தங்களுக்காக உதவி செய்யும் ஊழியர்கள், படை வீரர்கள், உப தலைவர்கள் ஆகியோருக்குப் பகிர்ந்து அளிப்பார்கள் வியாபாரிகள். இம்முறையில் வீரர்களும் நல்ல லாபம் பார்ப்பார்கள் என்பதால் இம்மாதிரி வியாபாரங்களை அவர்கள் கண்டும் காணாதது போல் இருந்து விடுவார்கள்.

இந்தப் பழக்கதை எப்படியேனும் தனக்கு ஆதாயமாக மாற்றக் குலசேகரன் நினைத்தான்.  என்ன செய்வது என யோசித்துத் தீர்மானித்துக் கொண்டவன் மறு நாள் கிருஷ்ணாயியிடம் இருந்து அவளுடைய விலை உயர்ந்த நகைகள் பலவற்றையும் வாங்கிக் கொண்டான். அவற்றில் சிலவற்றை மட்டும் நங்கூரானுக்குக் கொடுத்தான். அவனிடம் மெதுவாக ஹொய்சள வீரர்கள் என்ன பணம் கொடுத்தாவது அரிசி, தானியங்கள் வாங்கச் சித்தமாக இருப்பதாய்த் தெரிவித்தான்.  அந்த நகைகளைக் கண்ட நங்கூரான் விலை மதிப்பற்றவை என்பதைப் புரிந்து கொண்டு குலசேகரன் இழுத்த இழுப்புக்கு வளைய ஆரம்பித்தான். அதன் பின்னர் குலசேகரன் மெதுவாகக் கோட்டைக்கு வெளியே ரோந்து போய்க் கொண்டிருந்த படைவீரர்கள், உப தலைவர்கள் எனச் சந்தித்துப் பொன் ஆபரணங்களைக் கொடுத்து அவர்களை மகிழ்வித்தான்.  இதன் பின்னர் தன் எண்ணத்தைத் தெரிவிக்கவே அவர்களும் குலசேகரன் மேலே கோட்டை வீரர்களுடன் வியாபாரம் செய்யச் சம்மதம் தெரிவித்தனர்.

குலசேகரன் ஒரு நாள் இரவில் மெல்ல மெல்லக் கோட்டை வாசலை அடைந்தான்.  மேலே இருக்கும் காவலனை அழைத்தான். உங்களுக்கு உணவு சமைக்க தானியங்களும், அரிசியும் அனுப்புகிறேன் எனச் சொல்லி விட்டு ஒரு கூடையில் அரிசியையும், தானியங்களையும் நிரப்பி அதனுள் ஓர் ஓலையை மறைவாகச் செருகி வைத்தான். கூடையை மேலே அனுப்பினான். ஓலைச் சுருளில் கிருஷ்ணாயி இப்போது இருக்கும் இடத்தையும் அவள் நிலைமையையும் சொல்லி இருந்ததோடு அல்லாமல் இளவரசன் மிகவும் மோசமாகப் பலஹீனம் அடைந்திருப்பதையும் தெரிவித்திருந்தான். அதோடு அடுத்த நாள் இரவில் கிருஷ்ணாயியையும், அவள் குமாரனையும் கோட்டைக்குள் அனுப்பப் போவதாகவும் அதற்குச் சித்தமாக இருக்கும்படியும் தெரிவித்திருந்தான்.

மறு நாளும் வந்தது. இரவும் வந்தது!

Sunday, March 10, 2019

கிருஷ்ணாயியின் கதை!

அந்தச் சிறுவனைத் தூக்கி மடியில் போட்டுக் கொள்ளும் வரையில் குலசேகரனுக்கு அவன் தன் மகன் எனச்சொல்லுவதில் மனதில் விருப்பம் இல்லாமலே இருந்தது. ஆனால் அவனை மடியில் போட்டுக் கொண்டு பசியாலும், தாகத்தாலும் அரை மயக்கத்தில் கிடந்தவனைப் பார்த்ததுமே அவன் அடி வயிறு கலங்கியது. அவன் உள்ளுணர்வு இது உன் மகன் எனக் கூற அவன் அறிவோ அதை பலமாக மறுத்தது. போராட்டத்தில் அவனை ஆழ்த்தியது.  தவித்த குலசேகரனை அப்போது அந்தச் சிறுவனிடமிருந்து வந்த மெல்லிய முனகல் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தீர்மானித்தது. அந்தச் சிறுவன் மீண்டும் முனக ஆரம்பித்திருந்தான். அவன் வாயிலிருந்து துணியைக் குலசேகரன் எடுத்து விட்டான். மயக்கத்தில் கண்களைத் திறந்து பார்த்த அந்தச் சிறுவன் கண்களில் குலசேகரன் பட்டதும், அந்தச் சிறுவனுக்குள் ஏதோ ஓர் மாற்றம், ஏதோ ஓர் கலக்கம்! அவன் குலசேகரனைப் பார்த்து மெல்லிய குரலில் "அப்பா! அப்பா!" எனப் புலம்பினான்.

அவன் குலசேகரனை அப்பா வென அழைத்தானோ அல்லது கோட்டைக்குள் இருந்த அரசரான வீர வல்லாளரைத் தான் தன் அப்பா என நினைத்துக் கொண்டிருக்கும் சிறுவன் குலசேகரனைப் பார்த்ததும் அவர் நினைவில் புலம்பினானோ தெரியவில்லை. ஆனால்"அப்பா" என்னும் ஒற்றைச்சொல் குலசேகரனுக்குள் ஏதேஹோ மாற்றங்களைச் செய்து அவன் இதயம் அவனையும் அறியாமல் பொங்கியது. பாசம் முழுவேகத்துடன் உத்வேகத்துடன் வெளிவர அவனுக்கு வெறி வந்தது போல் அந்தச் சிறுவனை இறுக்கிக் கட்டிக் கொண்டு முத்தமிட்டு, "மகனே! என் மகனே!" எனக்கத்தினான். அதைப் பார்த்த கிருஷ்ணாயியும் கண்ணீர் பெருக்கினாள். குலசேகரன் கண்களில் இருந்தும் கண்ணீர் மாலையாக வழிந்தோடியது. குலசேகரன் அவனை மீண்டும் மீண்டும் கட்டி அணைத்து அரற்றினான்.

அப்போது கிருஷ்ணாயி தாங்கள் இங்கே வந்து மாட்டிக் கொண்ட கதையைச் சொல்லலானாள். திருக்கோயிலூரில் இருந்து திரும்பும்போது கூட கிருஷ்ணாயிக்குத் திருவண்ணாமலைக் கோட்டை முற்றுகைக்கு ஆளாகி இருப்பது தெரியாது. ஆகவே அவள் வழக்கம் போல் கோட்டை வாசலுக்கு மிக அருகே வந்துவிட்டாள். அவளையும் அவள் பரிவாரங்களையும் கண்ட சுல்தானிய வீரர்கள் உடனே பாய்ந்தோடி வந்தார்கள். வீரர்கள் அவர்களை எதிர்த்து நிற்க ராணியின் பரிவாரங்களும் பல்லக்குத் தூக்கிகளும் ராணியையும் இளவரசனையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடினார்கள். சுல்தானிய வீரர்கள் அதற்குள்ளாகத் தன்னையும் தன் மகனையும் பிடித்து விடுவார்களோ எனப் பயந்த அரசி பல்லக்குத் தூக்கிகளிடம் சொல்லி விட்டுப் பல்லக்கிலிருந்து கீழே இறங்கி அருகே இருந்த ஓர் அடர்ந்த சோலைக்குள் புகுந்து மறைந்து கொண்டாள். அங்கேயே ஒரு நாள் முழுவதும் ஒடுங்கி ஒளிந்திருந்த ராணியை மன்னர் அனுப்பிய மெய்காப்புப் படை வீரர்களில் மூவர் கண்டு கொண்டார்கள்.

அவர்கள் ராணியையும், இளவரசனையும் அழைத்துக் கொண்டு இரவு நேரத்தில் கோட்டைக்குள் எப்படியேனும் நுழைந்து விடலாம் என எண்ணிக் கொண்டு இந்தத் தாழைப்புதருக்குக் கீழ் அவர்களைத் தங்க வைத்தனர். பின்னர் கோட்டைக்குள் எப்படிச் செல்வது என்பதைக் கண்டறிந்து வந்து அழைத்துச் செல்கிறோம் எனக் கிளம்பிச் சென்றார்கள். மூன்று நாட்கள் கழித்தும் வரவில்லை. காத்திருந்து காத்திருந்து ஒரு வாரம் போல் ஆகிவிட்டது. பின்னரும் அவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை.  ராணியும் இளவரசனும் ஒரு வாரமாகப் பட்டினி கிடக்கிறார்கள். ராணி எப்படியோ அதைத் தாங்கிக் கொண்டாள். இளவரசன் பழக்கம் இல்லாததாலும் சிறிய வயது என்பதாலும் விரைவில் சுருண்டு விட்டான்.இதைக் கேட்ட குலசேகரன் முதலில் அவர்களுக்குத் தேவையானது உயிர் வாழ ஓர் வாய் உணவு என்பதைப் புரிந்து கொண்டான்.

ஆகவே கிருஷ்ணாயியிடம் "இதோ வருகிறேன்!" என்று சொல்லிவிட்டுக் கிளம்பி ஓட்டமும் நடையுமாக வியாபாரிகள் போட்டிருந்த கூடாரங்களுக்குவந்து சேர்ந்தான். அங்கே அவன் வேலை செய்த நங்கூரான் கூடாரத்துக்குப் போய் அங்கே சமைத்திருந்த கூழையும், மோரையும் ஒரு மண் பாண்டத்தில் எடுத்துக் கொண்டான். நங்கூரானுக்காகக் கொண்டு வந்திருந்த பழங்கள் சிலவற்றையும் எடுத்துக் கொண்டான். கிருஷ்ணாயி ஒளிந்திருந்த தாழைப்புதருக்குத் திரும்பி வந்தான். பையன் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் கூழில் மோரை விட்டுக் கரைத்து அவனுக்குச் சிறிது சிறிதாகப் புகட்டினான். கிருஷ்ணாயியைப் பழங்களை எடுத்துக்கொள்ளச் சொன்னான். பையன் கண்களில் சற்றே உயிர் வந்தது. அவன் பார்வை முன்னை விடத் தெளிவு பெற்றது.கிருஷ்ணாயிக்கு அதைக் கண்டதும் கண்ணீர் பெருகிற்று! எப்படி இருந்த பிள்ளை! அதற்குள்ளாகக் குலசேகரன் அவளிடம்,"இங்கேயே ஒளிந்திருங்கள் மஹாராணி! நான் சென்று நல்ல யோசனை செய்து உள்ளே நுழைய ஒரு வழி கண்டு பிடித்துக் கொண்டு வருகிறேன்.ஒருவேளை நான் வர நாளை இரவு ஆனாலும் ஆகலாம். ஆனாலும் நீங்கள் கவலைப்படாமல் வேறு எங்கும் செல்லாமல் இங்கேயே ஒளிந்திருங்கள்!" என்று கூறிவிட்டு அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அவன் மனதில் இங்கிருந்து அவர்களைக் கோட்டைக்குள் கொண்டு செல்வது எப்படி என்னும் எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. இந்த வியாபாரிகள் இன்னும் சிறிது காலம் இங்கே தான் இருப்பார்கள். ஏனெனில் சுல்தானிய வீரர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுக்க வேண்டும். இந்த வீரர்கள் எங்கெல்லாம் செல்கின்றனரோ அங்கெல்லாம் இந்த வியாபாரிகளும் சென்று பொருட்களை வாங்கி விற்க வேண்டும். சுல்தானிய வீரர்கள் தங்கள் உணவைத் தாங்களே தான் சமைத்துக் கொள்ள வேண்டும்  என்பது அவர்களுடைய விதி! ஆகவே இந்த வியாபாரிகள் இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

Saturday, March 09, 2019

ஆபத்தான நிலைமையில் கிருஷ்ணாயியும், இளவரசனும்!

மெல்ல மெல்ல வெளிச்சத்தில் இருந்து மறைந்து கொண்டும், இருட்டில் வேகமாக நடந்தும் குலசேகரன் கோட்டை அரணுக்குக் கொஞ்சம் சமீபமாக வந்து விட்டான். ஆனால் எதிரே வீரர்கள் கண்காணிப்புப் பணிகளில் குதிரை மீது அமர்ந்த வண்ணம் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அதோடு இல்லாமல் தூரத்தில் தெரிந்த கோட்டை வாசலுக்கு நேர் எதிரே ஓர் சுல்தானியப் படையும் அணி வகுத்து எந்நேரமும் தாக்கத் தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இவ்வளவையும் தாண்டிக் கொண்டு தான் அங்கே செல்வது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பதைக் குலசேகரன் நன்கு தெரிந்து கொண்டான். என்ன செய்வது என யோசித்த வண்ணம் அங்கேயே தயங்கிச் சுற்றிச் சுற்றி வந்தான். அப்போது கொஞ்ச தூரத்தில் தெரிந்த தாழைப்புதரில் ஏதோ சலசலப்பு! நடமாட்டம் போல் தெரிந்தது.

அந்தத் தாழைப்புதர் மேலே பெரிதாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்திருந்தபடியால் அதன் அருகே சென்றதும் எதுவும் முதலில் தெரியவே இல்லை. எச்சரிக்கையாக வாளை உருவிக்கொண்டு மெல்ல மெல்லச் சென்ற குலசேகரனுக்கு அந்தத் தாழைப்புதர் மேலே கூடிக் கொண்டு பந்தல் போல் காட்சி அளிக்க நடுவே ஓர் வாயில் போன்ற துவாரம் காணப்பட்டதைக் கண்டான். அவசர காலத்துக்கு ஒளிந்து கொள்ள உதவும் என மனதுக்குள் நினைத்தவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஏதோ மனிதக் குரல் அங்கே இருந்து கேட்டது. அதுவும் விசித்து விசித்து அழும் சப்தம். உற்றுக் கவனித்த குலசேகரன் காதுகளில் இப்போது எதுவும் விழவில்லை. என்றாலும் உடனே
"யார் அங்கே!" என்று சன்னமான குரலில் அந்தப் புதரின் நுழைவாயில் அருகே தலையை நுழைத்துக் கொண்டே கேட்டான் குலசேகரன். அமைதி! எந்தவிதமான பதிலும் இல்லை. சற்று யோசித்த குலசேகரன் அங்கிருந்து தான் செல்வது போல் போக்குக் காட்டி சப்தங்கள் செய்து கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று சற்றுத் தூரத்தில் சென்று நின்றவண்ணம் மறைவாக இருந்து கொண்டு எட்டிப் பார்த்தான்.

உடனடியாக எதுவும் நிகழவில்லை. கிட்டத்தட்டக் குலசேகரனின் பொறுமை முழுவதும் போய் அவன் அங்கிருந்து செல்லலாம், எல்லாம் தன்னுடைய பிரமை என நினைத்த சமயம் அந்தப் புதருக்குள் இருந்து ஓர் உருவம் மெல்ல மெல்ல வெளி வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தது.  உடனே குலசேகரன் அதன் மீது பாய்ந்தான். "யாரது!" என்று கேட்ட வண்ணம் ஓடோடி வந்தான். ஆனால் அந்த உருவம் உடனே மிரண்டு பயந்து கொண்டு அந்தப் புதரின் நுழைவாயில் வழியாக உள்ளே சென்று விட்டது! அதன் நடை, உடை, பாவனைகள் மூலம் அது ஓர் பெண் என்பதைக் குலசேகரன் அதற்குள்ளாகப் புரிந்து கொண்டிருந்தான். யாரோ ஓர் பெண் கோட்டைக்கு உள்ளே சென்றிருக்க வேண்டியவள், எதிரிகளின் அணி வகுப்பைப் பார்த்து மிரண்டு போய் உள்ளேயும் போகத் தெரியாமல் தப்பியும் செல்ல முடியாமல் அங்கே ஒளிந்திருக்கிறாள் என்பதைக் குலசேகரன் கண்டு கொண்டான். பாவம்! எத்தனை நாட்களாகக் காத்திருக்கிறாளோ!

ஆகவே உடனே அந்தத் தாழைப்பந்தல் அருகே சென்று தணிந்த குரலில் குலசேகரன், "தாயே, நீங்கள் யார்? உண்மையைச் சொல்லுங்கள்! என்னால் இயன்ற உதவியைச்செய்கிறேன். நான் உங்கள் நண்பன் தான்!" என்றான். ஆனால் பதிலே வராமல் அந்தப்பெண்ணின் விசும்பல் மட்டுமே கேட்டது. பதில் ஏதும் வரவில்லை. குலசேகரன் மீண்டும், "அம்மணி, நானும் ஹொய்சளன் தான். அந்த வீரர்களில் ஒருவன் தான்! என்னை நம்புங்கள்! நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்கள்! உங்களுக்கு நான் எந்த வகையில் உதவ வேண்டும் என்பதையும் சொல்லுங்கள்." என்றெல்லாம் குலசேகரன் பலவிதமாகப் பேசவும் அந்தப் பெண் கொஞ்சம் மனம் மாறி வெளியே வந்தவள் குலசேகரனிடம், "நீர் யார்? உம் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறீர்?" என்றெல்லாம் விசாரித்தாள். அதற்குக் குலசேகரன் மறுமொழியாக, "அம்மணி! என் பெயர் குலசேகரன்! நான் அரங்கனைக் காப்பாற்றுவதற்காக......." என்று சொல்ல ஆரம்பிக்கையிலேயே, "சுவாமி! சுவாமி! தாங்களா!" என்று புலம்பிக்கொண்டு அந்தப் புதரில் இருந்து ஓடி வந்த ராணி கிருஷ்ணாயி குலசேகரனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

உள்ளிருந்து வந்தது கிருஷ்ணாயி தான் என்பதை நன்கு புரிந்து கொண்ட குலசேகரன்,"இதென்ன ராணி! தாங்கள் இங்கே எப்படி? என்ன ஆயிற்று? ஏன் தன்னந்தனியாக மாட்டிக் கொண்டீர்கள்?" என்று கேட்டவண்ணமே அவள் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றான். ஆனால் அவளோ பிடியை விடாததோடு இன்னமும் இறுக்கிக் கொண்டு, "சுவாமி! சுவாமி! ஒரு வாரமாக இங்கே இருக்கிறேன். அதுவும் உணவும் நீரும் இல்லாமல்! நான் மட்டும் இல்லை சுவாமி! உங்கள் மகன், உங்கள் அருமை மகன்! அவனும் என்னோடு பட்டினி இருக்கிறான்! புலம்புகிறான்! எந்நேரமும் அவனுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்னும் கலக்கத்தில் நான் இருக்கிறேன்!" என்று சொல்லிப் புலம்பினாள். வாய் விட்டு அழுதாள்.  குலசேகரனுக்கு உள்ளுக்குள் அவள் கூறிய உறவு முறையைப் பாராட்டுவதில் சம்மதம் இல்லை. ஆனால் இது ஆபத்துக்காலம். அகப்பட்டுக் கொண்டிருப்பது ஒரு பெண்! அதுவும் ஒரு சிறுவனோடு! அந்தச் சிறுவனோ ஓர் ராஜ்யத்துக்கு வாரிசாக ஆகப் போகிறான்.இப்போது நாம் இதை எல்லாம் நினைக்கக் கூடாது.

இப்படி எல்லாம் சிந்தித்த குலசேகரன் அவள் மேலும் அந்தச்சிறுவன் மேலும் இரக்கம் கொண்டவனாய் கிருஷ்ணாயி வழிகாட்ட அந்தத் தாழைப்புதர்ப் பந்தலுக்குள் நுழைந்தான்.  உள்ளே வெறும் தரையில் அந்தச் சிறுவன் கிடந்ததையும் அவன் குற்றுயிராக இருந்ததையும் கண்டான். அதோடு இல்லாமல் அவன் புலம்பினாலோ, கத்தினாலோ வெளியே குரல் கேட்காமல் இருப்பதற்காகத் தன் மேல் துணியால் கிருஷ்ணாயி அந்தச் சிறுவனின், ஹொய்சள இளவரசனின் வாயை நன்கு அடைத்திருந்தாள். சிறுவன் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தான்.மிக ஆபத்தான நிலையில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட குலசேகரன் மேலே என்ன செய்யலாம் என யோசித்த வண்ணம் கண்களில் தானாகப் பெருகிய கண்ணீருடன் அந்தச் சிறுவனை எடுத்துத் தன் மடியில் சார்த்திக் கொண்டான்.

Friday, March 08, 2019

குலசேகரன் செய்த முயற்சிகள்!

தான் செய்த மாபெரும் தவறால் அவதிப்படும் திருவண்ணாமலை மக்களுக்கும் ஹொய்சளமன்னர் வல்லாள தேவருக்கும் தான் ஏதாவது செய்து பரிகாரம் தேட வேண்டும் எனக் குலசேகரன் நினைத்தான். யோசித்து அவனால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. எதற்கும் முதலில் கோட்டைக்குள் போக வேண்டும். அதற்கு ஓர் வழி கண்டு பிடித்தாகவேண்டும். குலசேகரன் இருட்டாக இருந்தபோதிலும் மரம், செடி, கொடிகளுக்கிடையே மறைந்தே மெல்ல மெல்லநடந்து சென்றான். சுல்தானியர்கள் தண்டு இறங்கி இருந்த பாசறைக்கு அருகே கிட்டத்தட்ட அவன் வந்து விட்டான். அவன் நடந்து சென்று கொண்டிருந்த பாதையிலிருந்து சிறிது தூரத்தில் அவர்கள் கூடாரங்கள் தென்பட்டன.ஆங்காங்கே சிறு அடுப்புகள், பெரிய அடுப்புகள் என மூட்டப்பட்டு உணவு தயாராகிக் கொண்டிருந்தது. வீரர்கள் தங்களை இங்கே வந்து எதிர்ப்போர் யாரும் இல்லை என்பதால் சற்று விச்ராந்தியாகவே பேசிக் கொண்டும், ஒருவருக்கொருவர் கேலி செய்து கொண்டும் இருந்தார்கள்.

கூடாரங்களுக்கு வெளியே ஆங்காங்கே சிறு சிறு கடைகள் முளைத்திருந்தன. அவற்றில் உள்ளூர் வியாபாரிகள் சிப்பாய்களுக்கு வேண்டிய தானியங்கள், காய்கள், பழங்கள், பூக்கள் எனக்கொண்டு வந்து விற்றுக் கொண்டிருந்தார்கள். இந்தச் சமயம் தான் தாங்கள் சம்பாதிக்க முடியும் என்பதால் வியாபாரிகள் அங்கே கூடி இருந்தனர். ஊழியர்களை வைத்து பேரம்பேசி வியாபாரங்கள் நடந்து கொண்டிருந்தன. இவை எல்லாம்போதாது என்னுமளவுக்கு இன்னொரு பக்கம் ஆயுதங்களும் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன.  இதை எல்லாம் பார்த்த குலசேகரனுக்கு உள்ளூர மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைத் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நினைத்தான். சற்று யோசித்தவன் அங்கிருந்த வியாபாரிகளின் ஊழியர்கள் அணிந்திருந்த உடைமுறைகளைக் கவனித்துக் கொண்டான்.சற்று மறைவாகப் போய்த் தன் உடையையும் அவ்வாறே மாற்றிக் கொண்டு ஓர் ஊழியனைப் போல் தலையில் பாகையும் கட்டிக் கொண்டான்.

அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் நடுவில் அவனும் கலந்து கொண்டு, அங்கே நடப்பனவற்றைக் கவனித்துக் கொண்டு அதே போல் அவனும் செய்ய ஆரம்பித்தான். ஓர் ஊழியன் போலவே நடந்து கொண்டு அங்கே இருந்த வியாபாரிகளில் ஒருவருக்காக அவன் சின்னச் சின்ன மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு சுல்தானிய வீரர்கள் பக்கம் சென்று அவர்கள் பக்கமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு மறுபடி வியாபாரியிடம் வந்து அதைக் கொடுத்து எனச் செய்து கொண்டிருந்தான். அங்கிருந்த ஒரு வியாபாரியின் நன்மதிப்பையும் குலசேகரன் சிறிது நேரத்தில் பெற்றுவிட்டான். மேலும் இருட்டத் தொடங்கவே வியாபாரம் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது.  வியாபாரிகள் அன்றைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு மிச்சம் இருக்கும் பொதிகளைக் கழுதைகள், மாடுகளின் மேல் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டிருந்த தங்கள் கூடாரங்களுக்குள் சென்று இளைப்பாற ஆரம்பித்தனர்.

அவர்களில் நங்கூரான் என்பவனிடம் தான் குலசேகரன் ஊழியம் செய்தான். சிறிது நேரத்திலேயே அவரிடம் நன்மதிப்பையும் பெற்று விட்டான்.  நங்கூரானுக்கு வயது நிறைய ஆகி இருந்ததோடு காலில் ஏதோ ஆறாத காயத்தினால் ரணமாகவும் இருந்தது. ஆகவே நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தார்.  மற்றவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். அவருடன் இருந்த மற்ற நான்கு ஊழியர்களும் அவ்வளவு திறமையாக வியாபாரம் செய்யவில்லை. அவருடன் ஒத்துழைக்கவில்லை. ஆனால் குலசேகரன் அவரது குழுவுடன் அங்கே சென்று கலந்து கொண்டு தன் திறமையால் அவருக்கேற்றபடி நடந்து கொண்டு அவருக்கு லாபம் வரும்படியாக வியாபாரங்களைச் செய்து கொடுத்தான். ஆகவே அவர் குலசேகரனைத் தன்னுடன் நிரந்தரமாகத் தங்கும்படி கேட்டுக் கொண்டார். தன்னுடைய கூடாரத்துக்கும் அழைத்துச் சென்றார். அங்கே சென்றதுமே அலைச்சல் மிகுதியால் நங்கூரான் படுத்துத் தூங்கி விட்டார்.  அவர் தூங்கும் வரை காத்திருந்த குலசேகரன் மெதுவாக எழுந்து கொண்டு அங்கிருந்து நழுவி மேற்குத் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

மேலே செல்லச் செல்ல மக்கள் நடமாட்டம், சப்தங்கள் எல்லாம் குறைந்து விட்டன.  கனத்த இருட்டு எங்கும் போர்த்தி இருந்தது. அங்கிருந்து சற்று தூரத்தில் அந்த இருட்டில் கோட்டையின் அரண் ஓர் மலையைப் போல் உயர்ந்து காணப்பட்டது.  நீள நெடுகப் படர்ந்திருந்த ஓர் கரும் பூதத்தைப் போல் அது காட்சி அளித்தது. அரணுக்குக் கீழே அகழி! அகழி நிறைய நீர் ஓடிக் கொண்டிருந்தது. அகழி ஆழமாக இருக்கும் என்பதைக் குலசேகரன் உணர்ந்திருந்தான். அதோடு இல்லாமல் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த முதலைகளை இப்போது அகழியில் விட்டிருப்பார்கள். எனவே நீந்திக் கடக்க முடியாது. அதோடு தண்ணீரில் நீந்துகையில் சப்தம் கேட்கும். அகழிக்கு அடுத்து வேறு ஏதும் மறைப்புக்களே இல்லாமல் வெகு தூரத்துக்கு வெகு தூரம் வெட்டவெளியாகவே காட்சி தந்தது. பிறர் கண்களில் படாமல் மறைந்து செல்வது கடினம்.  ஒரு சின்னச் செடி கூட இல்லை.எவ்விதமான நகர்வும் கோட்டையில் இருப்பவர்களுக்கு அங்கிருந்து இந்த வெட்டவெளியைக் கண்காணிக்க முடியும். ஆகவே சுல்தானியப் படைகள் அங்கே வந்தால் முதல் தாக்குதல் கோட்டையிலிருந்து தான் வரும். அதனாலும் சுல்தானியப் படைகள் சற்றுத் தள்ளியே தண்டு இறங்கி இருந்தார்கள்.

Thursday, March 07, 2019

மன்னரின் கலக்கம்! குலசேகரன் வருகை!

திருவண்ணாமலைக்கோட்டையும் இப்படித் தான் பற்பல முன்னேற்பாடுகளுடன் பாதுகாப்புச் செய்யப் பட்டிருந்தது. எனினும் மன்னர் கொஞ்சம் ஏமாந்து தான் விட்டார். தான் படை எடுத்துச் செல்ல வேண்டும் என ஏற்பாடுகள் செய்து வருகையில் இப்படித் திடீரென சுல்தானியர்கள் வந்து முற்றுகை இட்டது குறித்து மன்னருக்குத் தாங்கொணா வருத்தம். எப்படி இந்த முற்றுகையை முறியடிப்பது என்பதை யோசித்ததோடு மட்டுமில்லாமல் ஒற்றர் படை எங்கே ஏமாந்தது என அறியவும் துடித்தார். இவ்வளவு விரைவில் வந்து முற்றுகை இட்டுவிட்டார்களே என மனம் குமுறினார்.அதோடு இல்லாமல் அப்போது தான் அறுவடை நடந்து கொண்டிருந்தபடியால் கோட்டையின் தானியக் களஞ்சியங்களுக்கு வர வேண்டிய தானியங்கள் இன்னமும் முழுமையாக வந்து சேரவில்லை. கோட்டையில் போதிய தானியங்கள் கையிருப்பு இல்லை.  அக்கம்பக்கம் கிராமங்களில் இருந்து தானியங்களை வாங்கிச் சேமிக்கக் கூட அவகாசம் தராமல் எதிரி வந்து விட்டான். இது ஒரு மாபெரும் தவறு! குறை! ஆனால் எப்படியேனும் சமாளிக்க வேண்டும். மன்னர் தவித்துக் கொண்டிருந்தார்.

இங்கே கோட்டைக்கு வெளியே கோட்டையைச் சூழ்ந்து கொண்ட சுல்தானியப் படை வீரர்களால் அதன் மொத்த நீளத்துக்கும் சுற்றி வளைக்க முடியவில்லை. கோட்டைச் சுற்றுச் சுவரின்  நீளம் அபரிமிதமாக இருந்தது. ஆகவே அவர்களால் நான்கு வாயில்களை மட்டுமே சுற்றி வளைக்க முடிந்தது. பிரதான வாயில்களின் முன்புறமும் அதைத் தாண்டி நகரைச் சுற்றி வளைக்கும் முக்கிய இடங்களில் காவல் போட்டார்கள். கோட்டைச் சுவருக்குள் கோட்டையிலிருந்து வெளியேயோ அல்லது வெளியே இருந்து உள்ளே செல்லவோ வழியோ, சுரங்கப்பாதையோ இருக்கிறதா என ஆராய்ந்தார்கள். ஐந்தைந்து வீரர்களாகப் பிரித்து ஆங்காங்கே ரோந்து சுற்ற வைத்தார்கள். இதன் மூலம் மக்கள் கூடுவதையும் கலந்து ஆலோசிப்பதையும் அவர்களால் தடுக்க முடிந்தது.  மேலும் வீரர்கள் கோட்டையைச் சுற்றிச் சுற்றி வந்ததில் கோட்டைக்கு உள்ளே இருந்தோ, வெளியே இருந்தோ ஆட்கள் வர முடியாமலும் தடுத்து விட்டார்கள்.

முற்றுகை ஆரம்பித்து மூன்றாம் நாள் தான்  குலசேகரன் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தான்.  நகரத்தை நெருங்க நெருங்க ஏதோ மாறுதல்களைக்  கண்ட குலசேகரன் அக்கம்பக்கம் கிராமங்கள், சுற்று வட்டார ஊர்களில் எல்லாம் இருந்த மக்கள் காலி செய்து கொண்டு போய்விட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். கிராமங்களின் வெறுமை தான் தன்னைத் தாக்கி இருக்கிறது என்பதையும் கண்டான்.  மனதில் கலக்கத்துடன் சூனியமாக இருக்கும் கிராமங்களைத் தாண்டிக் கொண்டு திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தான் குலசேகரன். மக்கள் தாங்கள் செல்கையில் தாங்கள் வளர்த்த கால்நடைச் செல்வங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. அவற்றையும் கூடவே அழைத்துச் சென்று விட்டார்கள். மிகுந்த எச்சரிக்கையுடன் வந்த குலசேகரன் அங்கே காணப்பட்ட ஒரு பாறைக்குன்றின் மேல் ஏறிப் பார்த்தான். தூரத்தில் கோட்டை வாசலில் காணப்பட்ட வீரர்கள் நடமாட்டத்தைக் கண்டு அவர்கள் சுல்தானியப் படை வீரர்கள் தான் என்றும் முற்றுகை ஆரம்பித்து விட்டது என்றும் புரிந்து கொண்டான்.  குலசேகரன் மனதை வெட்கமும் வருத்தமும் ஆக்கிரமித்தது. இது தன்னால் நேர்ந்தது என்பதை அவன் உடனடியாகப் புரிந்து கொண்டான். எப்பேர்ப்பட்ட மாபெரும் தவறைத் தான் செய்து விட்டோம் என உணர்ந்து அவன் உடலும் உள்ளமும் துடித்தது.

படைகள் வரும் செய்தியைத் தான் மட்டும் ஒழுங்காக வந்து இருந்தால் ஒரு வாரம் முன்னரே மன்னரிடம் தெரிவித்திருக்கலாம். மன்னரும் முற்றுகையை எதிர்கொள்ளவோ அல்லது எதிரியை எதிர்கொள்ளவோ ஆயத்தமாக இருந்திருப்பார். அப்படிச் செய்யாமல் தன்னுடைய அல்ப ஆசைக்காக ஹேமலேகாவைத் தேடிக் கொண்டு சென்றதில் ஒரு வாரம் மட்டும் போகவில்லை. மகத்தான தாமதமும் ஏற்பட்டு இப்போது சுல்தானியர்களின் வெற்றிக்கு அது அடிகோலிட்டிருக்கிறது. அநியாயம் நிகழ்ந்து விட்டது! அதுவும் தன்னால்! சிங்கப்பிரானுக்கு மட்டுமல்ல, ஹொய்சள மன்னனுக்கு மட்டுமல்ல, அரங்க நகருக்கு மட்டுமல்ல, அரங்கனுமே நான் துரோகம் செய்து விட்டேனே! மனம் குமைந்து வாய் விட்டு அலறக் கூட முடியாமல் குலசேகரன் தவித்தான். செய்வதறியாமல் சிலை போல் அந்தப் பாறைக் குன்றிலேயே அமர்ந்தான்.  பகல் முழுவதும் ஆட்கள் நடமாட்டம் அங்கும் இங்குமாகத் தெரிந்ததால் அவனால் அங்கிருந்து உடனே வெளியேற முடியவில்லை. ஆகையால் அந்தக் குன்றிலேயே மறைந்து கொண்டான்.

இரவு வந்ததும் கீழே இறங்கி இனி என்ன செய்வது என யோசித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான். ஆராய்ந்தான். அங்கே இரவு போஜனத்திற்காக சுல்தானிய வீரர்கள் அடுப்புக்களை மூட்டிச் சமைக்கத் தொடங்கி இருந்தார்கள். சிறு சிறு அடுப்புக்களை மூட்டி இருந்ததால் அவற்றின் வெளிச்சம் பரவலாகத் தெரியாமல் கார்த்திகைக்கு ஏற்றும் தீப ஒளி போல் தெரிந்தது. குலசேகரன் எப்படி கோட்டைக்கு உள்ளே செல்வது என்னும் யோசனையில் ஆழ்ந்தான். கோட்டையின் பிரதான வாயிலில் எதிரிகள் காவல், அதை விட்டால் அகழி, அங்கிருந்து உயரமான அரண். அதன் மேல் ஏறினால் எதிரிகளுக்கும் தெரியும். உள்ளே கோட்டை வீரர்களுக்கும் தெரியும். அவசரத்தில் கோட்டை வீரர்கள் தன் மேல் அம்பு எய்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. பேசாமல் திரும்புவது தான் நல்லதோ? ஆனால் குலசேகரனின் உள் மனம் அதற்கு ஒப்பவில்லை.  தன்னால் விளைந்த இந்தத் தவறை எப்படியேனும் தானே முயன்று சரி செய்ய வேண்டும் என்னும் உறுதி அவனுள் எழுந்தது.

Wednesday, March 06, 2019

கிருஷ்ணாயியைக் காப்பாற்றும் முயற்சியில் வல்லாளர்!

அரசர் மனம் குழம்பி உட்கார்ந்து யோசித்தவர் திடீரென நினைவு வந்தவராகத் தம் மெய்க்காப்பாளர்களை அழைத்து வரச் சொன்னார். அரசர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரும் என்பதால் அரசர்களைச் சுற்றி எதற்கும் அஞ்சாத மனோதைரியம், உடல் வலுக் கொண்ட வீரர்கள் காவல் இருப்பார்கள். இவர்கள் அரசருக்கு எவ்விதமான ஆபத்தும் நேராமல் சுற்றி நின்று பாதுகாப்பார்கள். இம்முயற்சியில் தங்கள் உயிரைக் கூட விட்டு விடுவார்கள். எதற்கும் துணிந்தே காரியத்தில் இறங்குவார்கள். அவர்கள் பெரும்பாலும் மலை ஜாதியினராகவும் பார்க்கப் பயங்கரத் தோற்றம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.  இவர்கள் அந்த அந்த அரசரின் தகுதிக்கும் வசதிக்கும் ஏற்ப ஐம்பது பேரில் இருந்து ஐந்நூறு பேர் வரை இருப்பார்கள். இவர்கள் அரசரைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல. அரசரே நேரிடையாக இவர்களுக்கு ஆணை இடுவார். அத்தகைய வீரர்களைத் தான் இப்போது வல்லாளர் அழைத்துவரச் சொன்னார்.

சிறிது நேரத்தில் சுமார் நூறு வீரர்கள் கைகளில் வாள், வேல், வில்லுடன் அங்கே வந்து மந்திராலோசனை மண்டபத்தில் வந்து நின்றார்கள்.  அரசர் அவர்களில் முதல் இருபது பேர்களை உள்ளே அழைத்தார். அவர்களும் உள்ளே வந்து வரிசையாக நின்றனர். அரசர் ஒரு பெரிய தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்குக் கொண்டு வரச் சொல்லி ஆணை இட அதுவும் வந்து சேர்ந்தது. வீரன் ஒருவன் தட்டை ஏந்தி வர அரசர் அதிலிருந்து தாமே வெற்றிலை, பாக்குகளை எடுத்து ஒவ்வொரு வீரன் கையிலும் கொடுத்தார். இது மிகப் பெரிய விஷயம் என்பதோடு மகத்தான கௌரவமாகவும் கருதப்பட்டது. ஆனால் இப்படி அரசர் கைகளால் வெற்றிலை, பாக்கு வாங்குபவர்கள் ஆபத்தான காரியங்களை வெற்றிகரமாக முடித்து வைக்கவே அனுப்பி வைக்கப்படுவார்கள். அந்தக் காரியத்தை அவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் அல்லது அந்த முயற்சியில் தங்கள் உயிரே போனாலும் அதற்கும் சித்தமாக இருக்க வேண்டும். இது தான் அரசர் கையால் வெற்றிலை, பாக்கு வாங்குவதின் உட்பொருள். இப்போது அரசர் கைகளால் வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொண்ட வீரர்களுக்குத் தாங்கள் ஏதோ முக்கியமான காரியத்துக்கு அனுப்பி வைக்கப்படப் போகிறோம் என்பது புரிந்தது.

அரசர் அந்த வீரர்களிடம் ராணி கிருஷ்ணாயி கோட்டைக்கு வெளியே இளவரசனுடன் திருக்கோயிலூருக்குச் சென்றிருப்பதையும் அங்கிருந்து திரும்புகையில் வெளியே காத்திருக்கும் எதிரிகளிடம் அகப்பட்டுக் கொண்டு விடுவாளோ எனத் தான் அஞ்சுவதையும் தெரிவித்தார். மேலும் அவர் எதிரிகள் திருவண்ணாமலைக் கோட்டையைச் சூழ்ந்து கொண்டிருப்பதைக் கிருஷ்ணாயி அறியவில்லை எனவும் அவள் எதிரிகளிடம் அகப்படாமல் அவளைப் பாதுகாக்கவேண்டும் என்றும் எப்படியேனும் அவளையும், இளவரசனையும் கோட்டைக்கு உள்ளே அனுப்பி விட வேண்டும் என்றும் கூறினார். அதற்கு கோட்டையைச் சூழ்ந்து இருக்கும் எதிரி அணியை உடைத்துத் தான் தீரவேண்டும் என்பதால் எவ்வகையிலாவது அதை உடைத்துக் கொண்டு வெளியேறிச் சென்று ராணியைக் காப்பாற்றும்படியும் கேட்டுக் கொண்டார்.  உடனே அந்த வீரர்கள், "ஜய ஹனுமான்!" என்று கோஷம் செய்து கொண்டே அரசரை மும்முறை வணங்கினார்கள். உடனே அனைவரும் அங்கிருந்து வெளியேறி ராணியைத் தேடிக் கொண்டு சென்றார்கள்.

அந்தக் காலங்களில் கோட்டைகள் அநேகமாக வலுவாகவே கட்டப்பட்டன. ஏனெனில் அது தான் அரசர்கள், அவர்கள் குடும்பங்கள் மற்றும் பெரும்பாலான தலைநகரில் குடியிருக்கும் மக்களுக்குப் பெரிய பாதுகாப்பைக் கொடுத்தது.  இன்னமும் பீரங்கிகளும், துப்பாக்கிகளும் பயன்பாட்டுக்கு வர ஆரம்பிக்கவில்லை. வில், வாள், அம்புகள் முதலிய ஆயுதங்களைத் தவிர்த்துக் கற்களைத் தூக்கி எறியும் இயந்திரம், தீப்பந்தங்களைத் தூக்கி எறியும் இயந்திரம் ஆகியவையே பிரபலமாக இருந்து வந்தன. ஆகவே நேருக்கு நேர் எதிரியோடு சண்டை போடுவதை விடக் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருக்கவே பெரும்பாலான அரசர்கள் விரும்பினார்கள்.  கோட்டை என்றால் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்குமே. ஒரு நகரைச் சுற்றிக் கற்களால் சுற்றுச்சுவர் மிக உயரமாக எழுப்பி அந்தச் சுற்றுச் சுவருக்கு வெளியே நகரின் வெளியே பெரியதொரு அகழியைத் தோண்டி அதில் நீர்வரும்படி செய்து இருப்பார்கள். பெரும்பாலும் அகழி நீர் நிரம்பி இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். அதில் முதலைகளை விட்டு இருப்பார்கள். அகழிகளில் இறங்கிப் படகு மூலமோ அல்லது நீந்தியோ கோட்டைக்கு உள்ளேயோ, வெளியேயோ யாரும் போக முடியாமல் இந்த அகழி உதவி செய்யும்.

அதைத்தவிர்த்தும் கோட்டையின் வெளிப்புறச் சுற்றுச்சுவரைத் தாண்டிப் பத்தடிக்கு அப்பால் இன்னொரு பெரிய சுற்றுச் சுவர் காணப்படும். அதையும் தாண்டி ஒரு சுவர் இருக்கும். அதன் பின்னேயே முக்கியத் தலை நகரம் இயங்கும். இப்படிப்பட்ட அரண்கள் இருப்பதால் கோட்டைகளை வெகு விரைவில் தகர்த்துக்கொண்டு எதிரிகளால் உள்ளே நுழைய முடியாது.  கோட்டையை முறியடிக்க வேண்டுமெனில் அதை முற்றுகை இடுவதே எதிரிகளுக்கு ஒரே வழி. கோட்டைக்குள் இருப்பவர்கள் உணவைச் சேமிக்கக் கூட அவகாசம் கொடுக்காமல் கோட்டை முற்றுகை இடப்படும். அதே போல் குடிநீரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இரண்டும் கோட்டைக்கு உள்ளே இருப்பவர்களுக்குப் போய்ச் சேராமல் வெளியே முற்றுகை இட்டிருக்கும் எதிரிகள் பார்த்துக்கொள்வார்கள். நீண்ட நாட்கள் முற்றுகையை நீடிப்பார்கள். இதன் மூலம் கோட்டைக்கு உள்ளே இருப்பவர்களின் தானிய இருப்பு, குடி நீர் இருப்புக் குறைந்து வரும். பற்றாக்குறை ஏற்படும்.  பட்டினி கிடக்க வேண்டிய நிலை வந்ததும் மனம் தளர்ந்து உடல் தளர்ந்து அனைவரும் சரண் அடைவது உண்டு. இது இல்லாமல் கோட்டையின் சுற்றுச் சுவர் மேல் ஏறி அதைத் தகர்த்துக்கொண்டு உள்ளே நுழைந்து சண்டை போடுபவர்களும் உண்டு.

இப்போது திருவண்ணாமலையை முற்றுகை இட்டிருக்கும் எதிரிகள் என்ன செய்யப் போகின்றனர் என்பதே அனைவர் மனதிலும் பெரிய கேள்வியாக இருந்தது.

Friday, March 01, 2019

திருவண்ணாமலையில் நடந்தது!

குலசேகரன் பயணப்பட்டுத் திருவண்ணாமலை சென்றடைவதற்குள்ளாக நாம் வாயுவேகம் மனோவேகமாகத் திருவண்ணாமலை சென்று விடுவோம். அந்தக் காலகட்டங்களில் திருவண்ணாமலை நம் தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கிய இடம் பெற்றிருந்தது. திருவண்ணாமலையில் கோட்டையும், மாளிகையும், அரசனும் இருந்தார்கள். வீர வல்லாளனே அங்கே இருந்துஆண்டு கொண்டிருந்தான். இப்போது அந்தக் கோட்டையைச் சுற்றிலும் அதன் முன்னரும் கடல் போல சுல்தானியப் படை வீரர்கள்.  "தீன்,தீன்" என முழக்கிக் கொண்டு எந்நேரம் திருவண்ணாமலைக் கோட்டை மேல் பாய்ந்து அடிக்கலாம் எனக் கொஞ்சமும் பொறுமையின்றிக் காத்திருந்தார்கள். ஆவேசத்துடன் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.  கோட்டை மீது யாரும் காணப்படவில்லை எனினும் அவ்வப்போது ஏதோ ஒரு வீரனின் தலை மட்டும் தெரியும். உடனே இங்கே இருந்து எல்லா வீரர்களும் அவன் மேல் அம்புகளை எய்து அவனைக் கொல்ல முனைந்தார்கள். எங்கும் ஒரே கூச்சல், குழப்பம்.

கோட்டைக்கு வெளியே உள்ள நகரத்தில் மக்கள் அவரவர் வீடுகளிலே கதவைப் பூட்டிக் கொண்டு அடைந்து கிடந்தார்கள். யாரும் வெளியே வரவில்லை. அந்த இடமே சுல்தானியர்கள் வசப்பட்டுவிட்டதோ என்னும்படிக்கு எங்கும் சுல்தானிய வீரர்கள் நிறைந்து காணப்பட்டார்கள். ஆனால் கோட்டைக்கு உள்ளேயோ நேர்மாறாகக் காட்சி அளித்தது. வீதிகளில் வீரர்களின் நடமாட்டம். மக்கள் கூட்டம்! ஒரே இரைச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். குதிரைகளிலும், ரதங்களிலும் வீரர்கள் ஆங்காங்கே விரைந்து கொண்டிருந்தனர். வண்டிகள் ஆயுதங்களைச் சுமந்து கொண்டு விரைவாகச் சென்று கொண்டிருந்தன. பல்லக்குகளில் முக்கியஸ்தர்கள் அமர்ந்து கொண்டு அரசரோடு கலந்து ஆலோசிக்க அரண்மனையை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.  ஆங்காங்கே படைத்தலைவர்கள் தங்களுக்குக் கட்டுப்பட்ட படை வீரர்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்த வண்ணம் இருக்க மக்கள் கூட்டம் கூடி அவர்களை வேடிக்கை பார்க்கத் துவங்க வீரர்கள் அவர்களை வீட்டினுள் போய் இருக்குமாறு சொல்லிக் கொண்டே இருந்தனர்.

ஓலைக்கூரை போட்ட வீடுகளின் மேல் கூரைகள் உடனடியாக அகற்றப்பட்டன. எதிரிகள் தீப்பந்தங்கள் வீசலாம் என்பதால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வீரர்களும் அகற்றிக் கொண்டிருந்ததோடு மக்களிடமும் அவரவர் வீட்டைப் பாதுகாத்துக்கொள்ளும்படி சொல்லிக் கொண்டிருந்தனர்.  அரசாங்கக் கருவூலத்தில் வேண்டிய பொற்காசுகள், பண்டமாற்றத்துக்கு உதவும் பொருட்கள் ஆகியவை வேண்டியவை இருக்கின்றனவா எனச் சோதிக்கப்பட்டன. அத்தோடு இல்லாமல் தானியக் களஞ்சியமும் சோதிக்கப்பட்டு வேண்டிய அளவு தானியங்கள் இருக்கின்றனவா எனச் சரிபார்க்கப்பட்டு தானியங்களை வீணாக்காமல் அளவாகப் பயன்படுத்தும்படி மக்கள் எச்சரிக்கப்பட்டனர். அதே எச்சரிக்கை தண்ணீரின் பயன்பாட்டுக்கும் சொல்லப்பட்டது.

அங்கே அரண்மனையில் சபாமண்டபத்தில் ஹொய்சள மன்னர் வீர வல்லாளர் முகம் கறுத்துக் கடுத்துக் கோபத்துடன் காணப்பட்டார். அவர் முன்னால் அனைத்துத் தளபதிகள், அரசவைப் பிரதானிகள், தண்டநாயகர்கள் என எல்லோரும் நின்ற வண்ணம் அரசரின் பேச்சுத் துவங்குவதற்குக் காத்திருந்தனர். அனைவர் மனதிலும் மெல்லிய நடுக்கம் ஒன்று இருந்தது. உள்ளுக்குள் ஏதோ நடக்கப் போகிறது; அது நமக்கும் நம் ஹொய்சள சாம்ராஜ்ஜியத்துக்கும் உகந்ததாக இருக்கப் போவதில்லை என்பதை அனைவரும் உணர்ந்தாற்போல் காணப்பட்டார்கள். அனைவர் முகத்திலும் கவலை ரேகைகள் விரிந்து கிடந்தன. வீர வல்லாளருக்கு அப்போது எண்பது வயது நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் பார்க்க அறுபது வயது போலவே காட்சி அளித்தார். அவருடைய வீரமும் உடல் பலமும், மனோபலமும் வயதுக்கும் இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்பதைக் காட்டிக் கொண்டிருந்தது.

வல்லாளர் கோபாவேசமாகப் பேச ஆரம்பித்தார்.
"என்ன செய்தது நம் ஒற்றர் படை? சுல்தானியப் படைகள் மூன்று காத தூரத் தொலைவில் வந்த பின்னரே நமக்குச் செய்தி கிடைத்துள்ளது! ஏன்? என்ன செய்து கொண்டிருந்தனர் நம் ஒற்றர்கள்? ஆங்காங்கே நிறுத்தி வைத்திருந்த அறிவிப்பாளர்கள் என்ன ஆனார்கள்? சிங்கப்பிரானுக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்க முடியாது! அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? ஏன் நமக்குச் செய்தியை முன்னரே அனுப்பவில்லை? அநியாயம்! அநியாயம்! இப்போது எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறோமே! இதற்குக் காரணம் என்ன?" என்று கோபாவேசமாகக் கத்தினார்.

வீர வல்லாளரின் கோபத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. கண் இமைக்கும் நேரத்துக்குள் சுல்தானியப் படைகள் கோட்டையைச் சுற்றி வளைத்து விட்டன. ஆகவே வடக்கே இருந்த ஹொய்சளப் படைகளை நகருக்கு உள்ளே கொண்டு வரமுடியாத சூழ்நிலை. அது மட்டுமா? கோட்டைக்குள் இருக்கும் உணவு எவ்வளவு நாட்கள் வரும் என்பது பற்றி ஒன்றும் சொல்ல முடியவில்லை. உணவு வர வேண்டும் எனில் வெளியே சுற்றுவட்டாரக் கிராமங்கள், நகரங்களிலிருந்து தான் வர வேண்டும். ஆனால் அவற்றைக் கோட்டைக்கு உள்ளே கொண்டு வருவது என்பதோ இப்போது இயலாத காரியம்.  கோட்டைக்குள் போதிய உணவுப் பொருட்கள் இல்லை.

எல்லாவற்றிற்கும் மேல் ராணி கிருஷ்ணாயி திருக்கோயிலூருக்குச் சென்று பெருமாளைச் சேவித்து வரப் போயிருக்கிறாள். ராணி கிருஷ்ணாயி வீர வல்லாளரின் கண்களைப் போன்றவள். அவளுக்கு இந்த முற்றுகைச் செய்தி தெரியாது என்பதோடு வீர வல்லாளரின் ஒரே வாரிசான அவர் மகன் குலசேகரனையும் அழைத்துச் சென்றிருந்தாள் ராணி கிருஷ்ணாயி. இப்போது சுல்தானியப் படைகள் வந்து சூழ்ந்து கொள்ளவே கோட்டை வாசல்களை மூடும்படி ஆகி விட்டது. அப்படியும் மேற்குப் பக்கத்து வாசல் ராணி வந்து சேரட்டும் எனத் திறந்தே இருந்தது. ஆனால் ராணி வரவில்லை. இனி காத்திருக்க முடியாது என்பதால் அந்த வாசலையும் மூடி ஆகி விட்டது. கோட்டைக்கதவுகள் மூடிக் கொண்டு விட்டன. ராணியும் அரசகுமாரனும் கோட்டைக்கு வெளியே! துணைக்குச் சென்ற சில வீரர்கள் மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு! அவர்களுக்கு என்ன நேருமோ என்னும் கவலையே மன்னர் மனதை மிகவும் வாட்டியது.

அரங்கன் அருளை வேண்டி!

ஜனவரி மாதம் கடைசியா இந்த வலைப்பக்கம்  எழுதினது. அதன் பின்னர் பொங்கல், தை மாத விசேஷங்கள் என ஒரே ஓட்டமும், நடையுமாக நாட்கள் செல்ல இடையிடையில் உடல்நலக் கோளாறும் வந்து வந்து போகிறது.  தை மாதத் தேர்த்திருவிழா பற்றிக் குறிப்புகள் இடவேண்டும் என நினைத்துக் கொண்டு கூட்டம் காரணமாகப் போக முடியவில்லை. அதன் பின்னர் மாசித் தெப்பமும் வந்து போய் விட்டது. அதற்கும் போக முடியவில்லை. வெளி ஊரில் இருப்பவர்கள் நாங்க என்னமோ தினம் தினம் ரங்குவைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக நினைப்பார்கள்/நினைக்கிறார்கள். ஆனாலும் இந்தப் பதிவைத் தொடர முடியவில்லை. ஏனெனில் எழுதி வைச்சதைச் சரி பார்க்கணும். இன்னும் சில பதிவுகளில் அரங்கன் திருமலைக்கு வந்து விடுவான். அதன் பின்னர் நடப்பது குறித்துப் படித்துக் குறிப்புகள் எடுக்கணும். எதைச் செய்வது, எதை விடுவது என்று குழப்பமான சூழ்நிலை/மனோநிலை.

எனினும் இதை எழுதவில்லை என்னும் எண்ணம் உள்ளூர இருந்து கொண்டு தான் இருக்கிறது.  அதன் பின்னர் வந்த ஃபெப்ரவரியில் குடும்பத்தில் சில/பல பிரச்னைகள், உடல்நலக்குறைவுகள். சில நாட்கள் கணினியில் உட்கார்ந்துவிட்டு அரைமணி நேரமே ஆகி இருக்கும். மூடும்படி நேர்ந்துவிடும். இதோடு என் தம்பி பிள்ளைக்குக் கல்யாணத்துக்குப் பார்ப்பதால் அது குறித்த விசாரங்கள், கவலைகள், தேடல்கள்! ஏற்கெனவே ஒரு முறைக்கு இரு முறை நெல்லைத் தமிழர் இங்கே பதிவு போடவில்லை என்பதைச் சொல்லி விட்டார். அதோடு இல்லாமல் எல்லோரும் என்னமோ நான் சுறுசுறுப்பாகச் செய்வதாக வேறு எண்ணிக் கொண்டிருக்கின்றனர். சுறுசுறுப்பெல்லாம் போய் விட்டது. முடிந்தால் போடுகிறேன். இல்லை என்றால் இல்லை!  காலை  அதிகம் உட்கார முடியாது என்பதால் மத்தியான நேரத்தை எனக்கான நேரமாக்கிக் கொண்டு இருந்தாலும் இப்போதெல்லாம் சிறிது நேரமாவது படுத்து விடுகிறேன். அந்த அரைமணி, ஒரு மணி தாமதத்தின் பின் விளைவுகள் தான் பதிவுகள் சரிவரப் போடமுடியாமல் போகின்றன.  இடைவிடாமல் போட முடியாவிட்டாலும் வாரம் மூன்று பதிவுகளாவது போட நினைத்தாலும் முடியாமல் போய் விடுகிறது.  இனியாவது தொடர்ந்து அரங்கன் கதையை எழுத அவன் அருளை வேண்டி நிற்கிறேன்.