எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, November 09, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 13


கோயிலில் இருந்தவர்களை வெளியேற்ற நினைத்தால் எவரும் வெளியேற மறுத்தனர்.  கோயிலிலேயே தங்குவதாய்க் கூறினார்கள்.  அரங்கன் முன்னிலையில் அவனுக்காக நாட்டியம் ஆடும் பெண்மணிகளும் கோயிலுக்குள்ளேயே தங்கினார்கள்.   சற்றும் பயமே இல்லாமல் அனைத்தையும் அரங்கனிடம் ஒப்படைத்துவிட்ட அந்தப் பெண்கள் போரிடச் செல்லும் ஆண்களுக்காக உணவு தயாரிப்பதில் முனைந்தனர்.  கோயிலின் அந்தணர்கள் அனைவரும் வாளும், கத்தியும், கதையும் ஏந்தி யுத்தத்துக்குத் தயாரானார்கள்.  உல்லுகான் அனுப்பிய செய்தியில் அனைத்துச் சொத்துக்களையும் சுல்தானிடம் ஒப்படைக்கச் சொல்லி இருந்ததை மறுத்த அவர்கள், தாங்கள் அனைவரும், இந்த ஸ்ரீரங்கமும், கோயிலும் அதன் சொத்துக்களும் ரங்கநாதனுக்கே அடிமை எனவும், அவர்களுக்கு ராஜா ரங்கராஜாதான் எனவும் கூறி அடிபணிய மறுத்தனர்.  இன்னொரு பக்கம் ஒரு அரசனுக்கு ஐந்து அரசனாகப் பாண்டியர்கள் பிரிந்து நிற்பதையும் அவர்கள் ஒற்றுமையின்மையால் நேரிட்ட இந்தத் துன்பத்தை எண்ணியும் மனம் கலங்கினார்.   தாங்கள் அனுப்பி வைத்த அழகிய மணவாளர் எங்கே இருக்கிறாரோ என நினைத்து வருந்தினார்கள்.

  கோயிலின் தலைமை அதிகாரியான  ஸ்ரீரங்கராஜநாத வாதூல தேசிகர் தலைமையில் 12,000 வைணவர்கள்  அந்நியப் படையெடுப்பை எதிர்க்கத் திரண்டனர்.  ஒரு பக்கம் போர்த் தந்திரங்களும், பயங்கர ஆயுதங்களையும் ஏந்திய வலுவான படை. இங்கேயோ எந்தவிதமான உதவிகளும் இல்லாமல் தங்கள் மனோபலத்தையும் அரங்கனையுமே நம்பிய மக்கள்.  எனினும் மிகவும் உத்வேகமாக எதிர்த்து நின்றனர்.  எதிரிகள் வடக்கு வாசலில் காவல் நின்ற பஞ்சு கொண்டான் என்பவரை எதிர்த்து உள்ளே புகுந்தனர்.  இந்த வடக்கு வாசல் ஆர்ய படாள் வாசல் எனப் படுகிறது.  வட மாநிலங்களிலிருந்து வந்த “கெளட” தேசத்து அரசர் கொடுத்த பொருளைக் கோயில் நிர்வாகம் வாங்க மறுக்கவே தம் தேசத்து ஆர்ய அந்தணர்களை நியமித்து அந்தப்பொருட்களை அங்கே பாதுகாத்து வைத்திருந்த காரணத்தால் இந்தப்பெயர் என்கிறார்கள். 

வடக்கு வாசலில் காவல் இருந்த வில்லிதாசரின் மகன் குலசேகரனையும், பஞ்சு கொண்டானையும் எதிர்த்து உள்ளே புகுந்த வீரர்கள் 12,000 அந்தணர்களையும் கொன்று குவித்தனர்.   பஞ்சு கொண்டானும் உயிர் நீத்தார்.  குலசேகரன் எவ்வாறோ தப்பி விட்டான்.  அரங்கனைத் தேடி அவனும் அவனுடன் இன்னும் சிலரும் சென்றனர். உயிர் நீத்த அந்தணர்களில்  சுதர்சன பட்டர் என்னும் பெரியாரும் ஒருவர்.   இவர் நடாதூர் அம்மாள் அவர்களின் சீடர் ஆவார். அவரிடம் அமர்ந்து பாடம் கேட்டு “சுதபிரகாசிகை” என்னும் பிரம்மசூத்திர வியாக்யானம் ஆன ஸ்ரீ பாஷ்யத்துக்கு விளக்கவுரை எழுதியவர். அந்த சுதபிரகாசிகையையும், தம்மிரு மகன்களையும் அங்கே பிணங்களுக்கு நடுவே மறைந்திருந்த வேதாந்த தேசிகரிடம் பராசர பட்டர் என அழைக்கப்பட்ட சுதர்சன பட்டர் ஒப்படைத்தார். 

மூலவரான ரங்கநாதரைக் கல்சுவரால் மறைக்க ஏற்பாடு செய்த வேதாந்த தேசிகர், ரங்கநாயகித் தாயாரையும்ம் அங்கிருந்த வில்வ மரத்தடியில் ஒளித்து வைக்க ஏற்பாடு செய்தார்.  அவரை அழகிய மணவாளரின் ஊர்வலத்தோடு சேர்ந்து செல்லும்படிக் ஓயில் அதிகாரிகள் வேண்டியும் அவர் போக மறுத்தார்.  அவர் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு அழகிய மணவாளரைத் தூக்கிச் சென்றவர்கள் தேசிகர் பின் தொடர்வதற்கு ஏதுவாக உலர்ந்த இலைகளையும், துளசிக் கொத்துக்களையும் போட்டுக்கொண்டு சென்றிருந்தார்கள். ஆனால் இங்கே கோயிலில் தங்கிய வேதாந்த தேசிகருக்கு இப்போது ஒரு மாபெரும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.  சுதர்சன பட்டரின் குழந்தைகளையும், சுதபிராகாசிகையையும் மறைத்துக் கொண்டு ஒளிந்திருந்த வேதாந்த தேசிகர் அங்கிருந்து  கிளம்பினார்.  கிரஹண காலத்துச் சூரியன் போல மறைந்திருக்கும் அரங்கனை மீண்டும் எவ்விதமான இடர்ப்பாடுகளும் இல்லாமல் தாம் தரிசிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு கிளம்பினார் தேசிகர்.


அரங்கன் சென்ற வழிதெரியாமல் விழித்துக்கொண்டு இருந்த தேசிகருக்குத் துளசிக் கொத்துகளை வைத்து அடையாளம் கண்டு செல்லும்படி கூறப்பட்டது.  ஆனால் திடீரென அடித்த காற்றில் அவை பறந்து வேறு திசைகளில் வியாபித்து இருக்க தேசிகரோ நிலைமை தெரியாமல் அவற்றைத் தொடர்ந்தே சென்றார்.  ஆனால்  அவருக்குச் சற்றே முன்னால் சென்ற வில்லிதாசரின் மகன் குலசேகரனும் இவ்விதம் தவித்தபோது ஒய்சள ராஜகுமாரியுடன் இருந்த ஒரு பெண் தொண்டைமான் காட்டுக்குள் அரங்கன் ஊர்வலம் புகுந்து செல்வதாகக் கூறி அடையாளமும் காட்ட குலசேகரன் அரங்கனைத் தொடர்ந்து சென்றான்.  ஸ்ரீதேசிகருக்காகக் காத்திருந்த பிள்ளை லோகாச்சாரியார் ஊர்வலத்தைக் கிளப்பிக் கொண்டு மேலும் தெற்கே சென்றார்.  தேசிகரோ வழி தப்பிப் போய் உறையூரை அடைந்தார்.  அரங்கன் ஊர்வலத்தைத் தொடர்ந்து செல்ல எண்ணிய மக்களைத் தடுத்து நிறுத்தினார். பாண்டிய அரசர்கள் போன இடம் தெரியாமல் மறைந்துவிட்டனர்.  ஆகவே இங்கே ஸ்ரீரங்கத்தில் அவர்களை எதிர்ப்பார் இல்லாத டில்லிப் படை கோயிலுக்குள் புகுந்து அனைவரையும் வெட்டி வீழ்த்தித் தோண்டித் துருவிப் பார்த்துவிட்டு எதுவும் கிடைக்காமல் கோபம் கொண்டு மதுரை நோக்கிச்  சென்றனர்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

12,000 பேரா...? என்ன கொடுமை...

வல்லிசிம்ஹன் said...

மனம் பதைக்கிறதே கீதா. இவ்வளவு நடந்திருக்கிறதா. வேளுக்குடி உப்ந்யாசத்தில் பராசர பட்டரை அடிக்கடி குறிப்பிடுவார்.பயம் போக்குவதற்காக அபிதீஸ்தவம் எழுதினார் என்று சொல்வார்கள்.பயமில்லாமல் அரங்கன் காப்பாற்ற வேண்ட்டும். வெகு அழகாகப் பதிவுகளைத் தருகிறீர்கள். மிக நன்றி,.

இராஜராஜேஸ்வரி said...

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! /

சம்பவங்களை கண்முன் நிறுத்திய பகிர்வுகள்..

http://jaghamani.blogspot.com/2012/11/blog-post_9.html#links

திவ்ய தம்பதியரின் தீபாவளி

Ranjani Narayanan said...

அரங்கன் வேறு தாங்கள் வேறு என்று நினைக்காத, தங்களுக்கு ஆபத்து வரும்போது காக்கும் அரங்கனை தங்களின் உயிரை பணயம் வைத்தாவது காப்பாற்ற எண்ணும் அடியவர்களின் தெவிட்டாத கதை.

மிகச் சிறப்பாக சொல்லுகிறீர்கள் கீதா!

பாராட்டுக்கள்!

ஸ்ரீராம். said...

வேகமான வரிகளில் வேதனையான பல விஷயங்கள் இலகுவாகக் கடக்கப் பட்டுள்ளன. படித்து வருகிறேன்.