கோயிலொழுகு புத்தகத்தின் பிரதிகளை ஒரு மாதிரி கண்டெடுத்துவிட்டேன். டிஜிடலைஸ் செய்தவை. ஆனால் சம்பவங்கள், நிகழ்வுகள், வருடங்கள் முன்பின்னாக மாறி வருகின்றன. ஒரு மாதிரியாக நடந்தவற்றின் வரிசைக்கிரமம் புரிந்தபடியால் மேற்கொண்டு அரங்கன் துணையுடன் தொடங்கலாம் என எண்ணம். எனக்கு வேறே மேற்கோள்களை எடுத்துக் கொள்ள யோசனை. இனிக் கவலை இல்லை. எப்போப் போனாலும் புத்தகங்கள் கிடைக்கும். வேண்டுமெனில் தரவிறக்கிக் கொள்ளலாம். இறைவனுக்கு நன்றி. சுமார் ஆறுமாதங்களாகப் பட்ட பாடு வீண் போகவில்லை. இனி!
***********************************************************************************கங்காதேவியை நாம் கடைசியாகப் பார்த்தோம். அவளைத் தேடிக்கொண்டு சேடிப் பெண் வந்ததாகவும் பார்த்தோம், அவளுடன் பேசிக்கொண்டிருந்த இன்னொரு மங்கையும் ஓர் அரசகுலப் பெண்மணியே! குந்தளா என்னும் பெயர் கொண்ட அவள் கங்காதேவியுடன் பேசிக்கொண்டிருக்கையில் தான் சேடிப் பெண் வந்து அவர்களைப் பார்க்கக் க்ரியா சக்திப் பண்டிதர் வந்திருப்பதாகச் சொல்லவும் இருவரும் எழுந்து செல்கின்றனர். அப்போது விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்த புக்கராயர் தெற்கே உள்ள முள்வாய்ப் பட்டணத்தின் ராஜப் ப்ரதானியாகக் கம்பண்ண உடையாரை நியமித்திருந்தார். மேலே சொன்னவர்கள் அவரின் மனைவியர் தாம். கம்பண்ண உடையார் அப்போது பக்கத்தில் உள்ள திருநாராயணபுரத்திற்குச் சென்றிருந்தார். தற்போது மேல்கோட்டை என அழைக்கப்படுவது இந்த ஊரே ஆகும்.
கொஞ்சம் சரித்திர காலத்தை நினைவூட்டிக் கொள்வோம். தென்னாடு பெரும்பாலும் அதிகம் வெளியார் தொந்திரவுகளை அனுபவிக்காமலேயே இருந்து வந்தாலும் பதினான்காம் நூற்றாண்டில் அது நடைபெறவில்லை. ஆரம்பகாலத்திலேயே முதல் முதல் தில்லி சுல்தான்கள் வந்து தாக்கினார்கள். அவர்களுடைய படை எடுப்பு முறைகள் தென்னக அரசர்களுக்கும் மக்களுக்கும் ஓர் அதிர்ச்சியாக அமைந்தன. ஏனெனில் சாதாரணமாகப் போர் புரிந்து இருபக்கங்களிலும் மரணங்கள் விளைந்தாலும் மக்களின் வாழ்க்கை முறையோ பழக்க வழக்கங்களோ, வழிபாடுகளோ மாறியதே இல்லை. இப்போது முதல் முறையாக அதில் மாற்றம் வந்தது. அவர்களுடைய சமய நெறிகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றில் பெருமளவு மாற்றங்கள் வந்ததோடு அல்லாமல் சில இடங்களில் முற்றிலும் நிறுத்தப்படும் அளவுக்கும் போய்விட்டன. மக்கள் மனம் பீதியில் உறைந்து அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து தங்களையும் தங்கள் உறவுகளையும் அதன் மூலம் தங்கள் கலாசாரங்களையும் காப்பாற்றிப் பாதுகாத்துக்கொள்ள விழைந்தனர்.
குறிப்பாய்த் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த நாடு. அவர்கள் இதுவரை கண்டதெல்லாம் சேர, சோழ, பல்லவ, பாண்டிய நாடுகளுக்கிடையேயான போர்களை மட்டுமே/ என்னதான் போர் நடந்தாலும் மக்களுக்குப் பெருமளவில் பாதிப்பு இருக்காது. போர் முடிந்ததும் சகஜமான வாழ்க்கை தொடங்கி விடும். இப்போதோ சேரர்கள், பல்லவர்கள், சோழர்கள் எல்லாம் இல்லை. தென் பாண்டி நாட்டில் பாண்டிய அரசு மட்டும் நிலையாக இருந்து கொண்டிருந்தது. அவர்களும் பக்கத்தில் உள்ள முத்துக்குளித்துறைமுகத்தின் மீனவர்களோடு இணக்கமின்மை காரணமாகத் தங்கள் உதவிக்கு உள்ளூர் ஆட்கள் இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருந்தனர். அதோடு இல்லாமல் பாண்டிய அரசு வாரிசுகளுக்குள்ளேயே உரிமைப் போர் வேறே நடைபெற்றது. இதனால் சுல்தானின் உதவியை ஒரு பாண்டிய வாரிசு கேட்க, மற்றவர்களோ தங்களால் எதிர்கொள்ள முடியாது என நினைத்து இன்னும் தெற்கே மதுரையை விட்டும் தெற்கே திருநெல்வேலியையும் தாண்டித் தென்காசியின் மலைப்பகுதிகளுக்குச் சென்று மறைந்து வாழத் தலைப்பட்டனர். ஒரு விதத்தில் தமிழ்நாட்டில் தில்லி சுல்தான்களின் ஆட்சி தோன்றியதற்குப் பாண்டியர்களே முக்கியமான காரணம் ஆவார்கள்.
ஆக மன்னன் இல்லாமல் தலைமை தாங்கப் பெரும்படையோ அதற்கேற்ற தளபதிகளோ இல்லாமல் தவித்த தமிழகம், முக்கியமாய்த் தென் தமிழகம், சுல்தானியர் வசம் வெகு எளிதாகச் சென்றுவிட்டது. மதுரையைத் தலைநகராய்க் கொண்டு கி.பி. 1323 ஆம் ஆண்டில் சுல்தானிய ஆட்சி ஏற்பட்டுப் பெரும்பாலான சிற்றரசர்கள், அரசர்களின் வாரிசுகள் சுல்தானியருக்குப் பணிந்து நடக்க வேண்டியதாயிற்று. மக்கள் மனமோ தங்களுக்கு ஏற்ற தலைமை இல்லாமல் பாண்டிய மன்னனும் ஓடிப் போய் ஒளிந்து கொள்ள தங்களைக் காத்துப் பாதுகாக்கும் தலைவர்கள் இல்லாமல் மனக் கொந்தளிப்பில் ஆழ்ந்தனர். இதைக் கண்டு மனம் புழுங்கிய ஹொய்சளர்கள் பட்ட பாட்டைத்தான் முன்னர் பார்த்தோம். வீர வல்லாளரை வஞ்சகமாகப் பிடித்து உயிரோடு தோலை உரித்து மாட்டினார்கள் சுல்தானியர்.
இந்தச் சமயம் தோன்றியவர்களே விஜயநகரப் பேரரசர்கள். இவர்கள் தோன்றிய வரலாறை ஏற்கெனவே நாம் பார்த்தோம். ஹரிஹரர் இறந்து போக அவர் சகோதரரான புக்கராயர் பேரரசின் மன்னராக இருந்தார். அவர் தங்கள் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வாக வசதிக்காகப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் அரச வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகளால் நிர்வகிக்கும்படி ஏற்பாடுகள் செய்திருந்தார். அதைப் போலவே அவர்களின் பிரதிநிதியாக முள்வாய்ப் பட்டணத்தை ஆண்டு வந்த கம்பண்ண உடையார். புக்கராயரின் ஓர் மகன். வடக்கே துங்கபத்ரையிலிருந்து தெற்கே தமிழ்நாட்டு எல்லை வரை பரவி இருந்த அரசைப் பல ராஜ்யங்களாகப் பிரித்து இந்த முள்வாய் ராஜ்யத்தைக் கம்பண்ணர் பொறுப்பில் விட்டிருந்தார் புக்கராயர். கம்பண்ணர் திருநாராயணபுரம் சென்றிருக்க அவரைத் தேடி வந்த கிரியாசக்தி பண்டிதர் அரசர் இல்லாததால் ராணிகளைப் பார்க்க வேண்டி அழைக்க கங்காதேவியும், குந்தளாவும் பண்டிதரைப் பார்க்கச் சென்றனர். பண்டிதரை வணங்கி அவர் ஆசிகளைப் பெற்று ஆசனங்களில் அமர்ந்தார்கள் இருவரும்,
புக்கராயர் குடும்பத்துக்குல குருவான கிரியாசக்திப் பண்டிதரைத் தன் ஆசானாகக் கொண்டு அவரிடம் வடமொழி பயின்றவள் தான் கங்கா தேவி. வடமொழியில் கவிகள் இயற்றும் ஆற்றல் படைத்தவள். இப்போது தன் குருவை விநயத்தோடு பார்த்து வணங்கிக் கொண்டே முன்னரே வருகை பற்றித் தெரிந்திருந்தால் அரச மரியாதைகளோடு வரவேற்றிருக்கலாம் என்னும் தன் ஆதங்கத்தை வெளிக்காட்டினாள். கிரியாசக்திப் பண்டிதரோ தான் அவசரமாகக் கிளம்பி வந்ததாய்ச் சொல்கிறார். அந்நிலையிலும் கங்காதேவியிடம் அவள் வடமொழிப் படிப்பைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டார் பண்டிதர். அவள் ஏதேனும் கவி எழுதினாளா என்றும் கேட்டு அறிந்து கொள்கிறார். காளிதாசன், பவபூதி, போன்றோரின் எழுத்துக்களைப் படிக்கையில் தனக்குத் தன்னால் அப்படி எல்லாம் எழுத முடியவில்லை என்னும் வருத்தம் தோன்றுவதாகக் கங்கா தேவி சொல்லப் பெருமிதம் கொண்டார் பண்டிதர். பின்னர் மன்னனை எங்கே எனக் கேட்க மன்னன் திருநாராயணபுரம் சென்றிருப்பதைச் சொல்கின்றனர் இருவரும். அப்போது கிரியாசக்திப் பண்டிதர் புக்கராயர் தன் மகனான கம்பணனை உடனே கிளம்பி வரும்படி சொல்லி இருக்கிறார் என்று சொல்ல இரு ராணிகளும் திகைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
4 comments:
விஜயநகரப் பேரரசு வைணவத்திற்கும் தமிழுலகத்திற்கும் செய்த சேவைகள் அளப்பரியது.
பாண்டியப் பேரரசு செய்த தவறு, தமிழகம் மிகவும் கஷ்டப்படும் சூழலை உண்டாக்கிவிட்டது.
நீங்க கம்பணன்னு எழுதியிருக்கீங்க. இவரைப் பற்றி திருமலை ஒழுகு (திருப்பதி கோவிலுடையது) லயும் போட்டிருந்ததைப் படித்தேன்.
ஆம், நெல்லைத்தமிழரே, பாண்டியர்கள் புத்தி கெட்டுப் போய்ப் பேராசைப்பட்டுக் கொண்டு மீனவர்களையும் விரோதித்துக் கொண்டு அவர்களையும் ஒட்டு மொத்தமாக வேறு மதம் மாற வைத்தனர். அதே போல் தமிழகத்தில் அந்நிய ஊடுருவலுக்கும் துணை போனார்கள்.
கம்பண உடையாரும், சந்திரகிரி அரசரும் திருமலையுடனும் சம்பந்தப் பட்டவர்களே!
Post a Comment