எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, February 05, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம் 6 எட்டுக்குடி!


மறுநாள் காலையில் சீக்கிரமே கிளம்பிவிட்டோம். ஆறேகால் மணிக்கெல்லாம் வண்டி ஓட்டுநர் வந்துவிட்டார். எட்டுக்குடி, சிக்கல் ஆகிய இடங்கள் கொஞ்சம் தொலைவில் இருப்பதால் காரே வசதி என ஒருநாள் வாடகைக்குப் பேசிக்கொண்டிருந்தோம். வண்டி திருவாரூர் நோக்கிச் சென்றது. குடவாசல் வரைக்கும் சாலை மோசம். குடவாசல் தாண்டியதும் கண்ணாடிப் பளபளப்பில் சாலை. அருமையாக இருந்தது. வளைந்து வளைந்து செல்லும் தஞ்சை மாவட்டச் சாலைகளில் பிரயாணம் செய்வதே தனி அநுபவம் என்றால் சாலையும் அற்புதமாக அமைந்துவிட்டால் கேட்கவா வேண்டும்?? பயணத்தின் அலுப்பே தெரியவில்லை. இந்தச் சாலையை தேசீய நெடுஞ்சாலையில் சேர்த்திருப்பாங்க என என் கணவர் சொல்ல, வண்டியின் சாளரம் வழியே வெளியே உள்ள அறிவிப்புப் பலகைகளைப் பார்த்துக்கொண்டே செல்லும் வழக்கமுள்ள நான் ஒரு இடத்தில் இது மாநில அரசின் சாலைதான் என்பதைச் சுட்டிக் காட்டினேன். அப்புறம் ஓட்டுநர் சொன்னார். திருக்குவளை வரையிலும் சாலை நன்றாக இருக்குமென்று. ஒரு மணிநேரம் ஆகுமெனச் சொன்ன திருவாரூருக்கு நாற்பத்தைந்து நிமிடத்தில் நெருங்கிவிட்டோம். போகும் வழியிலேயே எண்கண். சாலை பிரிந்து சென்றது. நாங்கள் அங்கே முதலில் செல்ல ஆசைப்பட, ஓட்டுநரோ அங்கே கோயில் திறந்திருக்குமா சந்தேகம் என்று சொன்னார். சில சமயங்களில் இம்மாதிரியான இடங்களில் ஓட்டுநர்கள் சொல்வதே சரியாகவும் இருக்கும்.

ஆகவே திருவாரூர் சென்று பசியாறிவிட்டு மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். திருக்குவளையும் தாண்டிச் செல்லவேண்டும் எட்டுக்குடிக்கு. இந்த எட்டுக்குடி முருகன், எண்கண் முருகன், சிக்கல் சிங்காரவேலன் ஆகியோரை ஒரே சிற்பி செதுக்கிய கதையை நான் எழுதி உள்ளேன். நீங்களும் படித்திருப்பீர்கள். படிக்காதவங்களுக்குச் சுட்டி இதோ இங்கே!

முதலாவது


இரண்டாவது


மூன்றாவது


நான்காவது


ஆகவே இந்தச் சிற்பங்களைப் பார்க்கவேண்டும் என இயல்பாகவே ஆசை மிகுந்திருந்தது. எட்டுக்குடியும் வந்தது. உள்ளே சென்றோம். கோயில் சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகிறது. காலை வேளையாகையால் அதிகமாய்க் கூட்டம் இல்லை. சொல்லப் போனால் சந்நிதியில் நாங்கள் மட்டுமே. சந்நிதிக்கு எதிரே மக்கள் தரிசனம் செய்யக் கம்பிக்கிராதியால் தடுப்புப் போட்டிருந்தது. தடுப்பு ஒரு மேடையில் இருக்க, அந்த மேடை நாலாபக்கமும் சறுக்கினாற்போல் கீழே இறங்கி இருந்தது. புதிதாக வருபவர்கள் அத்தனை உயர மேடையில் ஏறும்போது கொஞ்சம் தடுமாறித்தான் போகணும்.

வழவழவென்ற கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நான் தடுமாறுவேன் என நினைத்த அவர் கொஞ்சம் தடுமாறிவிட்டார். ஏறும்போது சறுக்கிவிடுகிறது. எனக்கும் கொஞ்சம் சறுக்கத் தான் செய்தது. அத்தனை உயர மேடையில் ஏறும் இடம் சறுக்கலாய்ப் போட்டிருக்கவேண்டாமோ?? அங்கேயே விழுந்திருக்கவேண்டியது. தூண் எதிலாவது மோதி இருக்கணும். எதிரே கம்பிக்கிராதியைப் பிடித்துக்கொண்டு சமாளித்துக்கொண்டுவிட்டார். முருகனுக்கு அலங்காரம் நடந்துகொண்டிருந்தது. எப்படி நினைத்துக்கொண்டு பார்க்கிறோமோ அப்படிக் காட்சி அளிப்பானாம் எட்டுக்குடி முருகன். அன்றைக்கு எங்களுக்கு ஆசிகள் தரும் முதியவராகவே எனக்குத் தோன்றினார். கந்த சஷ்டி கவசம் சொல்லணும்னு கூடத் தோணலை. முருகனைப் பார்த்த கண் எடுக்கமுடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம். தீப ஆராதனை காட்டி விபூதிப் பிரசாதம் பெற்றுக்கொண்டும், முருகனைப் பார்த்துக்கொண்டே இருக்கணும்போல் இருந்தது. ஒருவழியாய் தரிசனம் முடித்துக்கொண்டு பிரஹாரம் சுற்றிக்கொண்டே வந்தோம்.

இந்தக் கோயில் ஆயிரம் வருடங்கள் பழமையானது என்று சொல்கின்றனர். வான்மீகர் என்னும் சித்தர் இங்கே சமாதியானதாகவும், கோயிலின் தல விருக்ஷமான வன்னிமரத்தடியில் இவர் சமாதி இருக்கிறது என்றும் காட்டினார்கள். முருகனின் ஆறுமுகங்களுக்கும் அபிஷேஹம், அலங்காரம், நைவேத்தியம் செய்யப் படுகிறது. சத்ரு சம்ஹார திரிசதை என்னும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. எதிரிகளால் துன்பம் நீங்க இந்த வழிபாடுகள் பிரார்த்தித்துக்கொண்டு பிரார்த்தனை செய்பவர்களால் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கிக் கோயிலில் நடத்துகின்றனர். எதிரிகளால் ஏற்படும் நியாயமான துன்பங்களுக்கு மட்டுமே பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும் என்றும் எதிரி அழியப் பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தால் பலன்கள் எதிர் விளைவை உண்டாக்குகிறது என்றும் சொன்னார்கள். தேய்பிறை சஷ்டி விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது.

ஒவ்வொரு வருஷமும் சித்திரா பெளர்ணமியில் முதல்நாள் திறக்கும் நடை மறுநாள் முடியும் வரை அடைக்கப் படாமல் இடைவிடாமல் பாலபிஷேஹம் நடக்கும் எனச் சொல்லுகின்றனர். பெளர்ணமிக்கு முதல்நாள் தேரோட்டம் நடக்கும். சித்திரா பெளர்ணமிக்கு முதல் நாளில் ஆரம்பிக்கும் பாலபிஷேஹத்திற்கும், மறுநாள் பாலபிஷேஹத்திற்கும் குறைந்தது முப்பதாயிரம் பால்காவடிகளாவது வருமென்று சொன்னார்கள். கந்த சஷ்டி விழாவும், வைகாசி விசாகமும் நடக்கும். மகனுக்கு இவ்வளவு திருவிழா நடக்கும்போது தந்தையைச் சும்மா விட முடியுமா? மார்கழி திருவாதிரையில் ஈசனுக்கு விழா எடுக்கப் படும்.

இங்கே பிராஹாரம் சுற்றிக்கொண்டு வரும்போது ஆங்காங்கே பரிவார தேவதைகளைப் பார்த்துக்கொண்டே வந்தோம். கோபுர வாயில், கொடிமரத்துக்குக் கிட்டே வரும்போது சுற்றிலும் இடப்பக்கம் உள்ள பெரிய திண்ணையில் பரிவார தேவதைகளின் சந்நிதிகள் இருந்தன. கோபுர வாயிலுக்கருகே நவகிரஹ சந்நிதியும், அதை ஒட்டியே சனைசரர் சந்நிதி தனியாகவும் இருந்தது. மேடை நல்ல உயரமாக இருந்தது. கீழே இருந்து இரண்டு படிகள் ஏறவேண்டும். படிகள் என்னமோ இரண்டு தான் என்றாலும் நல்ல உயரம். ஒவ்வொரு படியும் இரண்டடி உயரத்திற்குக் குறையாது. மேடையில் சுற்றிலும் இரும்புக்கிராதி போட்டுத் தடுத்திருந்தது. சனைசரருக்கு நேரே கம்பிக்கதவு. அப்போது தான் திறந்து அபிஷேஹங்கள் முடிந்து அலங்காரங்கள் செய்திருக்கின்றனர். கீழே விளக்குகள் விற்கும் கோயில் ஊழியர் பெண்மணி தைரியமாய் மேலே ஏறுங்க, சாக்குப் போட்டிருக்கிறேன் என என்னை வற்புறுத்த நான் என்னமோ மூளையில் பளிச்சென்று எச்சரிக்கை கொடுக்கத் தயங்கி நின்றேன். என் கணவரும் முதலில் பார்த்துவிட்டு இத்தனை உயரமா வேண்டாம் இங்கே இருந்தே பார்க்கலாம், வா என்று தான் சொன்னார். அந்தப் பெண்மணியோ விடாமல் விளக்குப் போடுங்க ஐயா எனத் திரும்பத் திரும்பச் சொல்ல என்னதோன்றியதோ ஒரு விளக்கை வாங்கிக்கொண்டு, வழுக்கும் படியில் கம்பிக்கதவைப் பிடித்துக்கொண்டு மிக மிகக் கவனமாக ஏறிச் சென்று சனைசரருக்கு விளக்கை ஏற்றி வைத்தார். நவகிரஹங்களைச் சுற்றி வந்தார். அங்கேயே வழுக்கி இருக்கிறது. சமாளித்துக்கொண்டிருக்கிறார். சுற்றி முடித்துக் கீழே இறங்குகையில் நல்லவேளை நீ வரலை, ரொம்பவே வழுக்கல் என்று சொல்லிக்கொண்டே முதல்படியில் இரு கால்களையும் வைத்துக்கொண்டு ஒரு விநாடி நின்றார். கை என்னமோ கம்பிக்கதவைப் பிடித்துக்கொண்டு தானிருந்தது. அடுத்த நிமிடம் என்ன ஆச்சென்று எவராலும் சொல்லமுடியவில்லை, சறுக்கியவண்ணம் கீழே விழுந்தார். நல்லவேளையாகப் படியில் மண்டை அடிபடவில்லை. சாய்ந்தாற்போல் விழுந்தார். நான் கத்தின கத்தலில் அனைவரும் கூடி அவரை மெல்ல எழுப்பினார்கள். முதுகில் கம்பிக்கதவு பட்டுத் தோல் வழன்று போயிருந்தது. தோள்பட்டையில் கதவு மோதியதில் நல்ல வலி. ஏற்கெனவே கழுத்து பிரச்னை. இப்போ இதுவும் சேர்ந்துகொள்ள கழுத்தை அசைக்கவே முடியவில்லை. அங்கே வந்த அறநிலையத் துறை ஊழியரிடம் படிகளின் கல்தளங்களை மாற்றிவிட்டு இப்படி வழுக்கும் கிரானைட் கற்களைப் போட்டிருக்கிறீர்களே, இதுவே ஒரு கர்ப்பிணிப் பெண் என்றாலோ அல்லது சிறு குழந்தை என்றாலோ பிழைத்திருப்பதே பெரிய விஷயம் என்று புகார் கொடுத்தேன். அவரால் என்ன பதில் சொல்லமுடியும்??? உண்மையில் குப்புற விழுந்திருந்தால் எதிரே உள்ள பீடத்தில் அடிபட்டிருக்கும். மல்லாந்து விழுந்திருந்தால் படியில் தலை மோதி இருக்கும். அங்கே அக்கம்பக்கம் மருத்துவமனைகளும் இல்லை. ரொம்பவே அத்துவானமான ஒரு இடம். இம்மாதிரியான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் அளவுக்கு வசதிகள் எதுவுமே இல்லை. மனம் வேதனைப்பட்டாலும் இந்த அளவுக்கு எழுந்து நடந்து வண்டிக்கு வரும் அளவு உடல்நிலை இருக்கிறதே என நினைத்துக்கொண்டு கடவுளுக்கு நன்றி சொன்னோம். வண்டி கிளம்பியது.

2 comments:

Jayashree said...

அளப்பரிய கருணை உடையவன் குமரன்.அவனை சரணடைந்தவர்களை தந்தை ஆசுதோஷி, நவக்ரஹ நாயகரும், தாய் அகிலாண்டேஸ்வரியும் சந்தேகமில்லாம காப்பாத்துவா.இந்த முறை உடுப்பி லேந்து ஸ்ருங்கேரி போற வழில மயிரிழையில் தப்பித்தோம். எங்க கார் ஹேர்பின் பெண்ட் ல ரோடை விட்டு ஸ்லிட் ஆகி அதள பாதாளத்தை நோக்கி டைவ் பண்ண , ஒரு சின்ன கல்லில் மோதி நின்னுடுத்து. சந்த்யா. நடமாட்டம் இல்லை.எங்கேந்தோ வந்தது ஒரு வண்டி. ஐந்து ஐயப்ப சாமிகள் இறங்கி சாமி சரணம்னு கோஷ்த்தோட எங்க வண்டிய தூக்கி ரோட்ல ஏத்தி விட்டுவிட்டு போயே போயிட்டாங்க.அன்னிக்கு போயிருந்தா போன இடம் புல்லு முளைச்சு போயிருக்கும்! அய்யப்பன் வந்து காப்பாத்தினார்.எப்படி நன்றி சொல்லுவோம்? உயிர் இருக்கறவரை நன்றியோட இருக்க அவன் அருள் பண்ணனும்.

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, கைலைப் பயணத்தின்போது இதை விட மோசமான விபத்து எங்களுக்கும் நேர்ந்தது. ஒரு முறை அல்ல, மூன்று முறைகள். ஒவ்வொரு முறையும் அந்தக் கைலைவாசனே காப்பாத்தினான் என்றே சொல்லணும்.