எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, February 02, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம் 3 மயூரநாதர் கோயில்!


ஒப்பிலியப்பன் கோயிலில் இருந்து மறுபடி சத்திரம்போய்க் கல்யாணம் முடிந்து சாப்பிட்டுவிட்டு, மாயவரம் போனோம். ஏற்கெனவே அபி அப்பாவுக்குத் தகவல் தெரிவித்திருந்தோம். அவங்க வீட்டுக்குப் போயிட்டு, பின்னர் அங்கிருந்து மயூரநாதர் கோயிலுக்குப் போனோம். கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் வருகிறது என்ற செய்தியே அங்கே போய்த் தான் தெரியும். மூலவர் மயூரநாதரை வள்ளலார் என்றும் அழைக்கின்றனர். அபயாம்பிகையை அம் சொல் நாயகி என அழைக்கின்றனர். காலப்போக்கில் அது அஞ்சலாள், அஞ்சலை என்றெல்லாம் மாறி இருக்கிறது.

நாவுக்கரசர் பதிகம் ஒன்று பாடி இருக்கிறார். ஞானசம்பந்தரும் பாடியுள்ளார். ஆனாலும் கோயில் அவர்கள் இருவருக்கும் முற்பட்ட காலத்தது எனச் சொல்கின்றனர். அருணகிரியாரும் மயிலாடுதுறை பற்றிப் பாடி உள்ளார். காவிரியின் தென்கரையில் உள்ள சிவாலயங்களில் இது 39-வது தலமாக வருகிறது எனக் குறிப்புகள் சொல்கின்றன. லிங்கம் சுயம்புமூர்த்தி. மாயவரத்திற்கு ரயில் நிலையம் இருந்தாலும் சென்னையிலிருந்து செல்பவர்கள் பேருந்தைத் தான் நம்பவேண்டி இருக்கிறது. ரயில் பாதை கிட்டத்தட்ட ஏழு, எட்டு வருடங்களாகச் சீரமைக்க ஆரம்பித்தது இன்னும் முடியவில்லை. ஆகையால் பேருந்திலே செல்லவேண்டுமானால் சென்னையிலிருந்து நேரடியாகப் பேருந்து உள்ளது.

மூலவருக்கு மேலே உள்ள விமானத்தைத் திரிதள விமானம் என்று சொல்கின்றார்கள். ராஜகோபுரத்திற்கு ஒன்பது நிலைகள் இருக்கின்றன. மாயவரம் காவிரியாற்றில் துலா ஸ்நாந கட்டத்தில் ஐப்பசி மாதம் ஸ்நாநம் செய்வது மிகச் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா என இந்தத் தலத்தைச் சிறப்பித்துச் சொல்லப் படுவது உண்டு.

தக்ஷ யாகத்தில் சிவனுக்குரிய அவிர்பாகத்தைக் கொடுக்காததோடு அல்லாமல், சிவனை யாகத்துக்கு அழைக்கவும் இல்லை தக்ஷன். அம்பாள் தன் தகப்பன் ஆன தக்ஷனிடம் சென்று நியாயம் கேட்க, அவளையும் தன் மகள் என்று கூடப் பார்க்காமல் நிந்தித்து அனுப்புகிறான் தக்ஷன். ஈசனிடம் சென்று முறையிட்ட அம்பாள், தனக்கு தக்ஷனின் மகள் என்ற இந்த உடல் தேவையில்லை என்று எண்ணி அக்னியில் விழுந்து விட, கோபம் கொண்ட ஈசன், தக்ஷனைச் சம்ஹரிக்க, வீரபத்திரரை அனுப்ப, அவர் யாகத்தையும், யாகத்துக்கு வந்தவர்களையும் அழித்து, தக்ஷனின் தலையை வெட்டி ஆட்டுத் தலையைப் பொருத்துகிறார். தக்ஷன் ஆணவம் ஒழிந்தாலும் அன்னை இல்லாமல் ஈசன் கோபம் அடங்கவில்லை.

அம்மையோ, யாகத்தில் இருந்த ஓர் மயிலின் வடிவில் தன் சக்தியைச் செலுத்தித் தானும் மயிலாக மாறி இந்தத் தலத்திற்கு வந்தாள். மாஞ்சோலையாக இருந்த இந்த இடத்தில் மயில் வடிவில் தவமிருந்து ஈசனை வழிபடுகிறாள். மயில் வடிவிலேயே ஆடிப் பாடி ஈசனை வழிபட்டாள் அன்னை. ஈசனும் அவள் மேல் கருணை கொண்டு அருள் பாலிக்கிறார். அவரும் ஓர் ஆண் மயிலாகவே வ்ந்து அன்னையோடு சேர்ந்து ஆடுகிறார். ஈசனின் இந்தத் தாண்டவம் மயூர தாண்டவம் அல்லது கெளரி தாண்டவம் எனப்படும். மயிலாக வந்து அருளியதாலும் அன்னைக்குத் தன்னையே தந்ததாலும் மயூரநாதர் என்றும், வள்ளலார் என்றும் பெயர் பெற்றார்.

இந்தக் கோயிலுக்கு ஐந்து பிராஹாரங்கள் இருப்பதாய்த் தெரிகிறது. நேரப்பற்றாக்குறையால் எல்லாப் பிராஹாரங்களுக்கும் செல்லமுடியவில்லை. எனினும் அபி அப்பா முக்கியமான இடங்களைக் காட்டிச் சொல்லிக் கொண்டு வந்தார். இங்கே உள்ள விநாயகர் முதலில் பார்ப்பவர் அகத்திய விநாயகர் என்று அழைக்கப் படுகிறார். இவர் தவிர வெளிப்பிரஹாரத்தில் சந்தன விநாயகர் என்றொருவர் இருக்கிறார். அந்த இடத்திலே தான் குதம்பைச் சித்தர் ஜீவசமாதி ஆன இடம் என்று அறிவிப்புப் பலகைகள் வைத்திருக்கின்றனர். சந்நிதியில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தாவின் சிலை வைக்கப் பட்டுள்ளது.

மூலஸ்தானத்தில் ஸ்வாமி லிங்கமாக இருக்க அருகில் மயில் வடிவில் அம்பாள் அவரை வழிபட்ட கோலத்தில் காணப்படுகிறாள். ஆதிமாயூர நாதருக்குத் தனியாகவும் சந்நிதி உள்ளது. முருகன் இங்கே ஸ்வாமியிடம் வேல் வாங்குவாராம். அருணகிரியார் திருப்புகழில் இது பற்றிக்குறிப்பு இருப்பதாய்ச் சொல்கின்றனர். ஈசனின் கெளரிதாண்டவம் ஆடும் நடராஜர் தனி சந்நிதியில் இருக்கிறார். தினமும் மாலையில் நடராஜருக்கு முதல் வழிபாடு. நடராஜருக்கு நேரே மயிலம்மனுக்குத் தனி சந்நிதி. கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்துக்கு அருகே ஜுரதேவர் இருப்பதை அபி அப்பா சுட்டிக் காட்டினார். நாங்க பதிலுக்கு துர்கை மஹிஷாசுர மர்த்தினியாக இருப்பதைச் சுட்டிக்காட்டினோம். அபி ஆச்சரியத்தோடு பார்த்தாள். மஹிஷனுக்கு இருபுறமும் அசுரர்களும் காணப்பட்டார்கள். ஜுரதேவருக்கு அருகே ஆலிங்கன மூர்த்தி என்று சொன்னார்கள். இவர்கள் இங்கே காணப்படுவதின் சிறப்பம்சம் என்னவென்று புரியவில்லை.

அம்பாள் பத்து வயதுப் பெண் போல் காணப்பட்டாள். அருமையான வடிவோடு வடிக்கப் பட்ட அற்புதமான விக்கிரஹம். பார்க்கப் பார்க்க அருமை. முதலில் திரை போட்டிருந்தது. அங்கேயே அமர்ந்து காத்திருந்தோம். பார்த்தால் ஒரு சின்னப் பெண் எதிரே வந்து நின்று பேசுவது போல் அம்பாள். வலக்கையில் கிளியோடு காணப்படுகிறாள். அம்பாள் சந்நிதிக்கு வலப்பக்கம் அநவித்யாம்பிகை என ஒரு சந்நிதி காணப்பட்டது. ஆனால் அங்கே ஒரு லிங்கம் தான் இருந்தது. இந்த லிங்கத்திற்குப் புடவைதான் சார்த்துவதாயும், அதுவும் சிவப்பு நிறப் புடவைதான் என்றும் சொன்னார்கள். நாதசர்மா என்ற அந்தணர் தன் மனைவியான அநவித்யாம்பிகையோடு ஐப்பசி மாசக் கடைமுழுக்குக்கு இந்த ஊருக்கு வந்தனர். அவர்கள் வரும்போது கடைமுழுக்கு முடிந்துவிடுகிறது. மன வருத்தத்தோடு இருந்த அவர்களுக்காக ஈசன் நாதசர்மாவின் கனவில் தோன்றி மறுநாள் அதிகாலை உதயத்திற்கு முன் நீராடினால் துலா ஸ்நாநம் செய்த புண்ணியம் கிடைக்கும் எனத் திருவாய் மலர்ந்தருளினார். அவ்வாறே செய்த தம்பதியர் ஈசனின் திருவுருவிலேயே ஐக்கியம் ஆகின்றனர்.

நாதசர்மா ஐக்கியமான லிங்கம் நாதசர்மாவின் பெயரிலேயே காணப்படுகிறது. அநவித்யாம்பிகை ஐக்கியமான லிங்கம் அம்பாள் சந்நிதிக்கு வலப்பக்கம் அநவித்யாம்பிகை பெயரிலே காணப்படுகிறது. இந்த லிங்கத்திற்கே புடைவை சார்த்துகின்றனர். தக்ஷிணாமூர்த்தி இடப்பக்கமாய்ச் சாய்ந்து காணப்படுகிறார். நவகிரஹ சந்நிதியில் இரண்டு சனைசரர்கள். ஒருவர் தலையில் அக்னியோடும், இன்னொருவர் காகத்தின் மீதும் காணப்படுகிறார். காகத்தின் மீது அமர்ந்திருப்பவர் சிவ வழிபாடு செய்வதால் இவரைத் தரிசிப்பது விசேஷம் என்கின்றார்கள். இதே போல் சண்டேஸ்வரரும் இருவர் காணப்படுகின்றார்கள். அஷ்டலக்ஷ்மி சந்நிதிக்கு மேலே ஒரு சந்நிதி தெரிந்தது. அங்கே சட்டைநாதர் இருப்பதாய்ச் சொன்ன அபி அப்பா, அங்கே செல்லும் வழியையும் காட்டினார். திறந்திருக்க மாட்டார்கள் என்றும் சொன்னார். இன்னொருமுறை வந்து சாவகாசமாய்ப் பார்க்கவேண்டிய கோயில் என நினைத்துக்கொண்டேன். மஹாவிஷ்ணுவும் ஈசனை வழிபடும் கோலத்தில் சிற்பமாய்க் காணப்படுகிறார்.

இந்தத் தலத்தில் தான் ஈசன் நந்தி தேவரின் கர்வத்தை அடக்கியதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த நந்தி காவிரியின் நடுவில் காணப்படுகிறது. பிராஹாரத்தில் ஓர் இடத்தில் நல்ல மழைக்காலத்தில் காவிரி நீர் கீழே இருந்து குபுகுபுவென வந்து நிறைத்துவிடும் என்று காட்டினார் அபி அப்பா.திருக்கோயில் குளத்தின் நடுவில் நந்தியையும் காட்டினார். நந்தி முழ்கி முதுகு மட்டும் தெரிந்தது. கங்கையும் இங்கே வந்து துலாமாசம் நீராடித் தன் பாவங்களைப் போக்கிக் கொண்டதாயும் ஐப்பசி மாசம் அமாவாசை அன்று இது நடந்ததாகவும் சொல்கின்றனர். அடுத்து அன்றே கும்பகோணம் வந்துவிட்டோம்.

அன்று மாலை சுவாமிமலைக்கு அருகே இருக்கும் இன்னாம்பூர் என்னும் ஊர் சென்றிருந்தோம். அது திருப்புறம்பயம் செல்லும் வழியில் உள்ளது. அதுபற்றிய விபரங்கள் நாளை. மறுநாள் காலை எங்கள் ஊரான பரவாக்கரை சென்றோம். அங்கே காலையில் குலதெய்வம் கோயிலில் அபிஷேஹம், மாவிளக்கு முடித்துவிட்டுப் பெருமாள் கோயிலில் பாலாலயம் எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். மதியம் இரண்டு மணிக்கு மேல் கும்பகோணம் போய்ச் சேர்ந்தோம். போகும்போதே சனிக்கிழமை இரவு ரதிமீனாவில் முன்பதிவு செய்துகொண்டோம். சனிக்கிழமை காலை சீக்கிரமே கிளம்பி எண்கண், திருவாரூர், எட்டுக்குடி, சிக்கல், திருக்கண்ணமங்கை, திருச்சேறை போன்ற தலங்களைப் பார்த்துக்கொண்டு வருவதாய்த் திட்டம்.

9 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்லாயிருக்க உங்க பயணக்கட்டுரை...

எல் கே said...

திரிதள விமானம் என்று சொல்கின்றார்கள்//
இதற்கு விளக்கம் கிடைக்குமா??

சரி இதெல்லாம் விடுங்க மாயவரம் காளியாகுடி ஹோட்டல் போனீங்களா?
மேலும் மாயவரத்தில் சட்டநாதர் கோவில் இருக்குனு நினைவு(?) சரியாக நினைவு இல்லை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்.. பதிவை படித்ததும் ஊருக்குச் சென்று வந்த உணர்வு.. நன்றி..

Geetha Sambasivam said...

வாங்க சங்கவி, கருத்துக்கு நன்றிப்பா.

Geetha Sambasivam said...

எல்கே, மூன்றடுக்கு விமானத்தைத் திரிதள விமானம் என்பார்கள்.

காளியாகுடி இப்போ மாயவரத்தில் இருப்பது முன்னாலே நடத்தினவங்க இல்லை. அவங்க வாரிசு கூட இல்லை. பெயரை மாத்தாமல் வேறே யாரோ இப்போ நடத்தறாங்க. மேலும் நாங்க அபி அப்பா வீட்டிலேயே எதுவும் சாப்பிட முடியலை, கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டிருந்தோமே, ஆகவே ஹோட்டலுக்கு எல்லாம் போகலை. அப்புறம் சட்டைநாதர் மஹாலக்ஷ்மி சந்நிதிக்கு மேலே இருக்குனு என்னோட பதிவிலே குறிப்பிட்டிருக்கேன், பாருங்க! :D

Geetha Sambasivam said...

வாங்க முத்துலக்ஷ்மி, சொந்த ஊருனா எவ்வளவு பாசம் பாருங்க! :))))))))))) வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

iTTiAM said...

This is Sri here : You are right that Kaaliyagudi hotel in Mayuram is now owned/run by different persons. I know there are 2 of their hotels - run by the same family - in Chennai - One I know for sure near at Puzhithivakkam MTC depot (Right side)- Puzhitivakkam is on the road from Medavakkam to Nanganallur. Other one I heard is in Maiylapore (Similar to Mayuram!!!).

Sri

எல் கே said...

thanks sri

Geetha Sambasivam said...

ஒரிஜினல் காளியாகுடி ஓட்டல் வாரிசுகள் மடிப்பாக்கத்தில் வச்சிருக்காங்க. அவங்க தான் மாயவரம் ஒரிஜினல். அது குறிப்பிட மறந்துட்டேன். ஆனால் சாப்பிட்டதில்லை! மடிப்பாக்கம் பூரா உறவினர்கள்!