//திருமகள் தவஞ்செய் செல்வத் திருவாரூர் பணிவ னென்னா
ஒருவனே ழடிந டந்து மீண்டிடின் ஒப்பில் காசி
விரிபுனற் கங்கை யாடி மீண்டவ னாவனென்றால்
இருடிகாள் ஆரூர் மேன்மை பிரமற்கு மியம்ப வற்றோ.//
திருவாரூர்த் தலபுராணத்தில் மேற்கண்ட பாடல் காணப்படுகிறது. இந்த நகரில் ஏழடி நடந்தாலே காசிக்கு ஒப்பாகும் என்கின்றது. ஏழு கோபுரங்கள், ஐந்து ப்ராஹாரங்கள், பனிரண்டு மண்டபங்கள், தீர்த்தங்கள், நூற்றுக்கணக்கான சந்நிதிகள் என அனைத்தும் உள்ள பெரிய கோயிலாகும் இது. நிதானமாய்ப் பார்த்தால் காலை ஆறு மணிக்குப் போனால் பனிரண்டு மணி வரையிலும் நேரம் சரியாய் இருக்கும். செங்கல் திருப்பணியில் இருந்த கோயிலைக் கற்றளியாக மாற்றிய பெருமை செம்பியன்மாதேவிக்கு உண்டு. இந்தக் கோயில் பிராஹாரத்திலேயே தனிக் கோயிலாக ஆரூர் அறநெறி என்னும் கோயிலும் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடப்பட்ட இந்தக் கோயிலையும் செம்பியன் மாதேவி அவர்களே திருப்பணி செய்திருக்கிறார்கள். இந்தத் தலத்தின் வரலாறு தனியானதொரு கதையாகும். பார்ப்பதற்குத் தஞ்சைக் கோயிலின் சிறிய மாதிரிக் கோயில் மாதிரி இருந்தாலும், இது அதற்கும் முன்னே கட்டப்பட்ட கோயில் என்கின்றனர்.
திருவாரூருக்குத் தெற்கே திருநெய்ப்பேர் என்னும் ஊரில் அவதரித்த நமிநந்தி அடிகள் என்பார் சிவ வழிபாட்டில் மிகச் சிறந்து விளங்கி வந்தா. நாள் தோறும் திருஆரூரில் ஆரூர் அரநெறி அசலேசசுவரருக்கு திருவிளக்கேற்றித் திருப்பணி புரிந்து வந்தார். ஒருநாள் மழைக்காலத்தில் விளக்கேற்ற நெய் தேடி நெடுந்தூரம் செல்லவேண்டி முடியாமல் போகவே பக்கத்து வீடுகளில் கேட்க, சமணர்களான அவர்கள் நமிநந்தி அடிகளையும் ஐயனையும் கேலி செய்ததோடு அல்லாமல், “உம் ஈசன் தான் கையிலேயே நெருப்பை வைத்திருப்பானே? அவனுக்கு எதற்குத் தனியாக விளக்கு?” என்று கேட்டனர். நமிநந்திஅடிகள் நொந்து போன மனதோடு திரும்பக் கோயிலுக்கு வந்து ஈசனை வேண்டி அழுது, அரற்ற, குளத்து நீரை முகந்து வந்து விளக்கிலிட்டு தீபம் ஏற்றுமாறு திருவருள் கூற, அவ்வாறே கமலாலயத்து நீரை எடுத்து வந்து விளக்குகளில் விட்டு ஏற்றினார். என்ன ஆச்சரியம் விட்ட நீரெல்லாம் நெய்யாக மாறி விளக்குகள் ஆயிரம் கோடி சூரியனைப் போல் பிரகாசித்தன.
அவரின் புகழையும், பக்தியையும் கூறும் கோயில் இந்த ஆரூர் அரநெறிக்கோயில். இங்கே குடிகொண்டிருக்கும் ஈசனுக்கு அசலேசுவரர் எனப் பெயர். தனி நந்தி, தனிக்கொடிமரம், தனி பலிபீடம் என அனைத்தும் தனியாக அமைந்த தனிக்கோயில் இது. இங்கே அக்னிஸ்தம்பமும், கையில் அழலேந்தி ஆடும் நடராஜர் சந்நிதியும் சிறப்பு. இங்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்த செருத்துணை நாயனார் என்பவருக்கு சிவனுக்குச் செய்யும் அவமரியாதையைப் பொறுக்கமாட்டாதவராம். இந்தக் கோயிலுக்குப் பல்லவர்கோன் கழற்சிங்கனும், அவர் மனைவியான சங்கவையும் அசலேசுவரரைத் தரிசிக்க வந்தனர். பிராஹாரத்தில் செருத்துணை நாயனால் ஈசனுக்காக “திருப்பள்ளித் தாமம்” என்னும் மாலை கட்டிக் கொண்டிருந்தார். அங்கே வந்த அரசி, கீழே விழுந்திருந்த மலர் ஒன்றை எடுத்துமுகர்ந்து பார்க்க, மனம் பொறுக்காத செருத்துணை நாயனார் அரசியின் மூக்கை அரிந்துவிடுகிறார். அரச கோபத்துக்கு ஆளாகிவிட்டாரே என அனைவரும் கதிகலங்கி நிற்க, கழற்சிங்க அரசனோ, செருத்துணை நாயனார் செய்தது சரியே எனச் சொல்லி, பூவை முகர்ந்த மூக்கை மட்டும் அரிந்தால் போதுமா, எடுத்த கையையும் வெட்டவேண்டும் என்று சொல்லிக் கையையும் வெட்ட, அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். ஆனால் ஈசனோ அவர்கள் பக்தியின் திறத்துக்கு வைத்த சோதனை எனச் சொல்லி, அரசியின் மூக்கையும், கையையும் சரிசெய்து முன்போல் ஊனமற்றவளாக்கி விடுகிறார்.
இந்த லிங்கத்தை இங்கே ஸ்தாபித்தது நானூறு ஆண்டுகள் தவமிருந்து வழிபட்ட சமத்காரன் என்னும் அரசன் என்கின்றனர். சமத்காரன் ஈசனைத் தான் தவமிருந்து ஸ்தாபித்து வழிபடும் இந்தத் தலத்து லிங்கத் திருமேனியில் ஈசனின் ஜீவசக்தியோடு எழுந்தருளவேண்டும் என வேண்ட அவ்வண்ணமே ஈசன் எழுந்தருளியதாக புராணங்கள் கூறுகின்றன. அன்னையின் பெயர் வண்டார்குழலி அம்மை. இந்தக் கோயில் விமானத்தின் நிழல் கிழக்குத் திசையில் மட்டுமே விழும் என்றும் சொல்கின்றனர்.
முசுகுந்தனுக்குத் தியாகேசரைக் கொடுத்த தேவேந்திரன் ஈசனிடமே மீண்டும் தேவருலகு வருமாறு வேண்ட, அவரோ, கிழக்குக் கோபுர வாயிலில் காத்திருக்குமாறு சொல்கின்றார். அவ்வழியே ஈசன் வரும்போது அழைத்துச் செல்லலாம் என்று காத்திருக்கின்றானாம். ஆனால் ஈசனோ, “விட்டவாசல்” என அழைக்கப் படும் வேறொரு வாயில் வழியே வெளியே சென்று, இங்கே காத்திருக்கும் தேவேந்திரனைப்பல யுகங்களாய்க் காத்திருக்க வைத்திருக்கிறார்./
இந்த ராஜ கோபுரத்தின் வழியே உள்ளே நுழைந்தால் முதலில் பிள்ளையார். வீதிவிடங்க விநாயகர் என்ற பெயரில் காட்சி கொடுக்கிறார். பிள்ளையாருக்குப் பின்னே நந்தி! இங்கே பிரம்மநந்தி என்ற பெயரில் அழைக்கப் படுகிறார். மழை வேண்டுமென்றால் சுற்றிலும் சுவர் எழுப்பி நீரை நிரப்பி வேண்டிக்கொண்டால் மழை கொட்டித் தீர்க்கும் என்கின்றார்கள். பசுக்கள் பால் கறப்பதற்கும் இந்த பிரம்ம நந்திக்கு அருகு சார்த்தி அதையே பிரசாதமாக எடுத்துச் சென்று பசுக்களுக்குக் கொடுக்கின்றனர். அடுத்து கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் கடந்து சென்றால் மொட்டைத் தூண்கள் காட்சி அளிக்கும். இருநூறிலிருந்து ஐநூறு இருக்கலாமோ??
இந்தத் தூண்களின் மேல் பெரிய பந்தல்களாகப் போட்டுக் கூரை வேய்ந்து திருவிழாக்காலங்களில் தியாகேசரை எழுந்தருளச் செய்யும் மண்டபமாக மாற்றுவார்களாம். அதனால் மொட்டைத் தூண்களாகவே பல நூற்றாண்டுகளாய் இருக்கின்றன என்று கேள்வி. அடுத்து நாம் காண்பது தேவாஸ்ரய மண்டபம் அல்லது தேவாசிரிய மண்டபம். இந்த மண்டபத்திற்கு ஆயிரக்கால் மண்டபம் என்றும் சொல்லலாம். இந்த மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களுமே சிவனடியார்கள் என்றும், இவர்களை வணங்காமல் போனால் அடியார் கூட்டத்திலிருந்தே விலக்கப் படுவார்கள் என்றும் ஐதீகம். இதைத் தான் விறன் மிண்டர் சுந்தரருக்குச் செய்து காட்டினார். அது நாளை பார்ப்போமா?????
5 comments:
அடியவர்கள் வரலாறான நாயன்மார் கதை பிறந்த காட்சியை அடுத்து காட்டப் போறீங்களா? சூப்பர்! சூப்பர்!
அடியவர்களை வணங்கிச் செல்லாத சுந்தரனும் நம் குழாத்தில்லை!
அவனுக்கு அருள் செய்தால் அந்த தியாகேசனும் நம் குழாத்தில் இல்லை! - என்ற அதிரடிக்கு வெயிட்டிங்! :)
திருவாரூர் பிறந்தவர் தம் அடியார்க்கும் அடியேன்!
கீதாம்மா
பெருமாள் தன் மனத்துள் வைத்துப் போற்றியது லிங்கத் திருவுருவா இல்லை தியாகேசரா?
ஏன் கேட்கிறேன்-ன்னா...
அஜபா நடனத்தில் ஈசன், பெருமாளின் மூச்சுக் காற்றில் மேலும் கீழும் எழுந்தாடினார் என்று சொல்லும் போது,
அந்த மூர்த்தம் சோமாஸ்கந்தராக இருப்பின், ஈசனோடு கூடே, அன்னையும், குமரனும் கூட பெருமாளின் மனத்தரங்கில் அஜபா நடனம் ஆடியதாக அல்லவா வரும்?
ஈசன் மட்டுமே ஆடியது அல்லவா அஜபா நடனம்?
கொஞ்சம் விளக்கம் தாருங்களேன்!
அருமை Mrs Shivam!! எவ்வளவு history ? இப்ப 63 வர் படித்துக் கொண்டிருக்கிறேன் Giri traders உபயம்!!:))
Mr KRS கேக்கற மாதிரி 10 நாளைக்கு முன்னால நானும் அஜபா நடனம் பத்தி யோசிச்சேன்.Ofcourse ! நம்ப என்ன நினைக்கிறோம் நே தெரியாம போற எனக்கு பரந்தாமன் எப்படி மனசுல உருவகப்படுத்திருப்பார்னு தெரிய chance ஏ இல்லை :))) என் மனசுல இப்படி ஒருthought வந்தது. ஸோமஸ்கந்தர் = சிவன்+சக்தி+முருகன்: அஜபா= அ ஜபம் மந்த்ரம் ஜபிக்காம உள்முகமா?
Soaham principle னு மனசுல தோனினது.உள்ள போற மூச்சு சக்தியா இருந்து, வெளில வற மூச்சு சிவமா இருந்தா , உள்ள அதோட union ல வர energy = அமிர்தானந்தம் , ecstacy, that is Murugan (அழகன், ஆனந்தன்)அப்போ சோமஸ்கந்தன் என்பது வாசி யின் சிவசக்தி union with a by product = spiritual ecstasy (Skanthan) ஜபம் இல்லாத மந்திரம் = மூச்சுக்காத்தின் Rhythm ஓம்? தியானிக்கப்படும் பரம்பொருளும் உருவமில்லாத energy வடிவமா தான் இருக்கணும் இல்லையா? அதன் பூர்ண அனுபவமும் subjective, energy ரூபமானதா இருக்கும், அனுபவித்தால் அன்றி discussion la தெரியாதுனு ஒரு insight!! தெரியல்ல!!
//ஸோமஸ்கந்தர் = சிவன்+சக்தி+முருகன்: அஜபா= அ ஜபம் மந்த்ரம் ஜபிக்காம உள்முகமா?
Soaham principle னு மனசுல தோனினது//
உண்மை ஜெயஸ்ரீ, ஆனாலும் இதை வெளிப்படையாகச் சொல்லுவதை விட குரு மூலமே பெறுவது நல்லது. கேஆரெஸுக்கு என்ன பதில் சொல்லுவதுனு கொஞ்சம் குழப்பமாவே இருந்தது. யோகக்கலையின் மிக முக்கியமான ஒன்று இது. சிவசக்தி ஐக்கியத்தில் உண்டாகும் சச்சிதாநந்தம், அதை மனசுக்குள்ளேயே அநுபவித்தவர் மஹாவிஷ்ணு. அதனால் சோமாஸ்கந்த உருவம். நம்முடைய மூச்சின் ஒவ்வொரு இயக்கத்திலும் இது நிறைந்திருக்கிறது என்றாலும் நாம் உணர்வதில்லை. ஹம்ஸ: ஸோஹம்; ஸோஹம்: ஹம்ஸ: இதை விளக்கினாலே புரியும். என்றாலும் இதோடு நிறுத்திப்போம். ஹம்ஸ” என்ற சொல்லிலேயே பரமபுருஷன் ஆன ஈசனும், ஈசனோடு ஐக்கியமான அம்பிகையான ப்ரக்ருதியும், அவர்களில் இருந்து பிறந்த பிரணவத்தையும் குறிக்கிறது.
//அனுபவித்தால் அன்றி discussion la தெரியாதுனு ஒரு insight!!//
அநுபவிச்சிருக்கிறதும் புரியறது. :))))))
//இந்தத் தலத்தின் வரலாறு தனியானதொரு கதையாகும். பார்ப்பதற்குத் தஞ்சைக் கோயிலின் சிறிய மாதிரிக் கோயில் மாதிரி இருந்தாலும், இது அதற்கும் முன்னே கட்டப்பட்ட கோயில் என்கின்றனர்.//
உண்மையே.
Post a Comment