எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, February 17, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம், திருவாரூரின் அவல நிலை!

தேவாரப் பாடல்கள் கிட்டத்தட்ட 350, திருவாசகப் பாடல்கள் 7 ஆகியவற்றைக் கொண்டது திருவாரூர். இது தவிர, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, சேக்கிழாரின் பெரிய புராணப்பாடல்கள், அருணகிரிநாதரின் திருப்புகழில் 11 பாடல்கள், வள்ளலாரின் திருஅருட்பாவில் திருவாரூர்ப் பதிகம் என்ற தலைப்பிலேயும் இடம்பெற்றுள்ளது திருவாரூர். வள்ளலார்,
“எந்தாய் ஒருநாள் அருள் வடிவின்
எளியேன் கண்டு களிப்படைய
வந்தாய் அந்தோ கடைநாயேன்
மறந்து விடுத்தேன் மதிகெட்டேன்
செந்தாமரைத்தாள் இணை அன்றே
சிக்கென்றிறுகப் பிடித்தேனேல்
இந்தார் சடையாய் திரு ஆரூர்
இறைவா துயரற்றிருப்பேனே!” என்று கூறுகிறார். இதைத் தவிர பதினோராம் திருமுறையில் திருவாரூர் மும்மணிக்கோவை என்ற தலைப்பில் சேரமான் பெருமான் நாயனாரும் திருவாரூரைச் சிறப்பித்துப் பாடி இருக்கிறார். திருஆரூர் புராணம், கமலாலயச் சிறப்பு, தியாகராஜலீலை, தேவாசிரிய மஹாத்மியம், திருவாரூர் நான்மணிமாலை, திருவாரூர் குறவஞ்சி, திருவாரூர் உலா, தியாகப் பள்ளு, திருவாரூர்க் கோவை, அஜபா நடேசர் பதிகம், திருவாரூர் வெண்பா அந்தாதி, கமலாம்பிகைத் தமிழ், தியாகராஜர் கழிநெடில், கந்தபுராணம், திருவாரூர் அந்தாதி, பரவைத் திருமணம், கமலாம்பிகை பதிகம் போன்ற பல தமிழ் நூல்களும், வடமொழியில் அஜபா ரகசியம், ஆடகேசுவர மஹாத்மியம், கமலாலய மஹாத்மியம், தியாகராஜலீலை, சமற்காரபுர மான்மியம், ஸ்ரீபுர மான்மியம், ஸ்கந்த புராணம், முகுந்த சஹஸ்ரநாமம், தியாகராஜாஷ்டகம், கமராம்பிகாஷ்டகம் போன்றவைகள் உள்ளன.

தஞ்சையை ஆண்ட ஷஹஜீ என்னும் மன்னன் தியாகேச பதமுலு, பஞ்சரத்ன பிரபந்தம், சங்கரபல்லக்கீ சேவா பிரபந்தம், சங்கர காளி நடன சம்வாதம் போன்ற தெலுங்கு மொழி நூல்களும், மராட்டியில் ராமபண்டிதர் என்பவர் தியாகேச மகாத்மிய, கமலாலய மகாத்மிய, தியாகராஜ விலாச, தியாகராஜ தியான, தியாகேசுவர ஆகமோத்தியான என்ற நூல்களும் திருஆரூரின் பெருமையைச் சிறப்பித்துச் சொல்கின்றது. எல்லாவற்றுக்கும் மேல் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளாகச் சிறப்பித்துச் சொல்லப் படும், சத்குரு தியாகையர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் அவதரித்தது இங்கே தான். சங்கீதம் தன் உச்சிக்குப் போய் இவர்களால் பெருமை பெற்றாற்போல் திருஆரூரும் இவர்களால் பெருமை பெற்றுள்ளது. முத்துசாமி தீக்ஷிதரின் நவாவரணக் கீர்த்தனைகள் இன்றளவும் அனைத்து சங்கீத வித்வான்கள், வித்வாம்சினிகளால் பாடப்படுவது திருவாரூரின் பெருமையைச் சுட்டுகிறது.

தில்லைச் சிற்றம்பலம் பொன்னம்பலம் என்றால் திருஆரூர் பூவம்பலம் என்பார்கள். திருவாரூர் நான்மணிமாலையில் ஒரு பாடல்,
“காவாய் எனச் சிறு தெய்வந்தனைத் தினம் கை தொழுது
நாவாய் தழும்பப் புகழ்ந்து என் பயன் கதிநாடின், மும்மைத்
தேவாயத் தேவுக்கும் கோவாய் மணிப்பொற்சிங்காதனம் சேர்
பூவாய் மதிக்கண்ணி ஆரூர்ப் பிரான் பதம் போற்றுமினே!” என்று சொல்கிறது. திருவாரூர் தியாகராஜருக்குப் பலவகைப் பூக்களினால் அலங்காரம் செய்வார்கள். செங்கழுநீர்ப் பூ மிகவும் விசேஷம். மல்லிகை, முல்லை, இருவாட்சி, செங்குவளை, செவ்வந்தி ஆகிய மலர்களும் மருவு, மருக்கொழுந்து, வெட்டிவேர் போன்றவற்றையும் வைத்துச் சிறப்பான அலங்காரம் செய்யப் படும். இவை யாவும் உதிரிப் பூக்களாலேயே செய்யப் படுவதாய்ச் சொல்கின்றனர். அப்பர் பெருமான் இந்த அலங்காரத்தைப் பார்த்துவிட்டு” ஐயைஞ்சின் அப்புறத்தான்” என்று புகழ்ந்துரைத்திருக்கிறார். திருவாரூர் தியாகேசரைக் குறித்த இன்னொரு பாடலில் நாவுக்கரசர்,

மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
ஒப்பானை யொப்பிலா வொருவன் தன்னை
உத்தமனை நித்திலத்தை யுலக மெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை
வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.
ஆறாம் திருமுறை திருவாரூர்த்தேவாரம் 26 பாடல் எண் 4

என்றும் சொல்லுகிறார். ஈசனின் வடிவங்கள் 25 எனச் சொல்லப் படுகிறது. அந்த 25 வடிவங்களில் இருந்தும் மாறுபட்ட வடிவம் இது. ஆகையால் இவரை “என்ன தன்மையன்றறிவொண்ணா எம்மானை” என்று சுந்தரரும் குறிப்பிடுகிறார். மேலும் திருவாரூர் ஈசனை நினைக்கும்போது,
பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கணென் னத்தகும் அடிகள்ஆ ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே

சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை 37 பாடல் எண் 2

கூடும்அன் னப்பெடை காள்குயில் வண்டுகாள்
ஆடும்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைப்
பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி
ஊடுமா றும்மிவை யுணர்த்தவல் லீர்களே

சுந்தரர் பாடல் எண் 10

திருவாரூர் தியாகேசருக்குச் சுமார் அறுபது பெயர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கமலேசர், கம்பிக்காதழகர், கருணாகரத் தொண்டைமான், கருணாநிதி, சிந்தாமணி, செங்கழுநீர் அழகர், செம்பொன் தியாகர், செல்வத் தியாகர், செவ்வந்தித் தோடழகர், தியாக சிந்தாமணி, தியாகப் பெருமான், தியாக விநோதர், திருந்து இறைக்கோலர், திருவாரூர் உடையார், தேவ சிந்தாமணி, தேவர் கண்ட பெருமான், கனகமணித் தியாகர், தியாகராஜர், ரத்தின சிம்மாசனாதிபதி, செம்பொற் சிம்மாசனாதிபதி, இருந்தாடழகர், வேத சிந்தாமணி, அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், அணி வீதியழகர், ஆடவரக்கிண்கிணிக் கால் அழகர், உன்ன இனியார் என்ற பல பெயர்கள் இருந்தாலும் வீதி விடங்கர் என்ற பெயரே அனைத்திலும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. இந்த வீதி விடங்கன் பற்றிய கதையும் அறிவோமல்லவா???

4 comments:

LK said...

hmm seekiram seekiram

கீதா சாம்பசிவம் said...

அவசரப்பட்டா எப்படி?? வேலை நிறைய இருக்கில்லை??? :P:P:P:P

venkatesa sivam & sivaramamurthy sivam said...

அருமை.இன்னும் எதிர்பார்க்கிறேன்

venkatesa sivam & sivaramamurthy sivam said...

அருமை.இன்னும் எதிர்பார்க்கிறேன்