எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, November 21, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரனின் கண்ணீர்!

ஹேமலேகா தன் கணவர் என அந்த வயதானவரைப் பார்த்துச் சொன்னதற்கே திடுக்கிட்ட குலசேகரன் அடுத்து அறிந்தது அவருக்கு இரு கண்களும் தெரியாது என்பது தான். எனினும் அவர் அவனை முகமலர்ந்து வரவேற்றதோடு எங்கிருந்து வருகிறீர்கள் எனவும் விசாரித்தார். மேலும் ஹேமலேகாவிடம் அதிதிக்கு உணவு அளிக்கும்படியும் கூறினார். குலசேகரன் மனதில் துக்கம் கனன்று கொண்டிருந்தது. கிருஷ்ணாயி மேல் அவன் கொண்டிருந்த வெறுப்பு அதிகரித்தது. எப்படிப் பட்ட பெண்! இப்படி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் எனில் என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லையே! மனம் உருகினான் குலசேகரன். அதற்குள்ளாக அவர் அவனைக் கை, கால் கழுவிக்கொண்டு சாப்பிட வரும்படி அழைக்கக் குலசேகரனும் தான் ஹொய்சள நாட்டில் இருந்து வருவதாய்க் கூறிவிட்டுத் தெற்கே ஓர் அவசர வேலையாகச் செல்வதாயும் கூறிவிட்டுக் கை, கால் கழுவிக்கொள்ளச் சென்றான்.

திரும்பி வரும்போது ஹேமலேகா ஒரு வாழை இலையில் வெள்ளை வெளேர் என்ற அன்னத்தை இட்டுக் கையில் ஓர் பாத்திரத்தில் தயிரும் வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். குலசேகரன் இலைக்கு முன் அமர்ந்து கொண்டு ஹேமலேகா செய்த உபசாரத்தை ஏற்றுக் கொண்டான். அவனையும் அறியாமல் அவன் கண்கள் நீரைப் பொழிந்தன. அவனின் மௌன சோகத்தைக் கண்ட ஹேமலேகா குறிப்பால் அவனைச் சமாதானம் செய்தாள். குலசேகரன் சமாளித்துக் கொண்டு பெயருக்கு உணவு உண்டு முடித்தான். பின்னர் பெரியவரிடம் விடைபெற்றுக் கொண்டு தன் சினேகிதர்களோடு தெற்கே செல்ல வேண்டும் என்பதாகச் சொல்லிவிட்டு வாசலுக்குப் போனான். அவனை வழி அனுப்பி வைக்க வந்த ஹேமலேகா அங்கேயே நின்ற வண்ணம் அவன் செல்வதையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்ச தூரம் வந்த குலசேகரன் துக்கம் தாங்க முடியாமல் அங்கிருந்த ஓர் மரத்தடியில் அமர்ந்து கொண்டான். வாழ்க்கையில் பற்றே வைக்காமல் வாழ நினைத்தும் முடியாமல் ஹேமலேகா மேல் மட்டும் இத்தனை பற்று வைத்துவிட்டுத் தவிக்கிறானே! தன்னை நினைந்து நினைந்து மனம் நொந்தான் குலசேகரன். ஹேமலேகா மேல் தான் கொண்டிருந்த பற்றுதலைக் குலசேகரன் மேல் அவளும் வைத்திருந்தால்! இப்படி ஓர் திருமணமே செய்து கொள்ளாமல் தனக்காகக் காத்திருக்கலாமே! அவளுக்கு என் மேல் எவ்விதமான ஆசையும் இருந்ததில்லை. நான் தான் அவள் மேல் ஆசைப்பட்டிருக்கிறேன். ஒரு கிழவனைப் போய்த் திருமணம் செய்து கொண்டு விட்டாளே! இது என்ன நியாயம்?

ஆனால் அவள் எந்தச் சூழ்நிலையில் இந்தத் திருமணத்தைச் செய்து கொண்டாளோ! தவிரத் தான் திருவண்ணாமலையை விட்டுக் கிருஷ்ணாயியின் கொடுமையிலிருந்து விலகிச் சென்று பத்து வருடங்கள் ஆகிவிட்டன. பத்து வருடங்கள் ஒருத்தி தனக்காகக் காத்திருக்க முடியுமா? அதுவும் அழகும், அறிவும் வாய்ந்த பெண். அவளைக் குறை ஏதும் சொல்வதற்கில்லை! அவள் செய்தது சரியே! இவ்விதமெல்லாம் யோசித்துத் தன்னைச் சமாதானப் படுத்க்டிக் கொண்ட குலசேகரன் அப்படியே படுத்த வண்ணம் கண்ணீர் உகுத்தான். அவன் மனம் கட்டுக்கு அடங்காமல் தவித்தது.

காலையில் எழுந்தவனுக்கு எந்த வேலையும் செய்யத் தோன்றவில்லை. ஹேமலேகாவையே நினைத்துக் கொண்டு படுத்திருந்ததால் தூக்கம் இல்லாமல் கண்கள் எரிச்சல் அடைந்திருந்தன. அவன் சிங்கப்பிரானைத் தான் பார்க்க வந்திருந்தான். எதிர்பாராதவிதமாக ஹேமலேகாவைக் கண்டதில் அவன் மனம் எதிலும் பதியவில்லை. சிங்கப்பிரானைப் பார்க்கவும் மனம் இல்லாமல் கொள்ளிடக்கரையை நோக்கி நடந்தான். கீழ்வானம் அப்போது தான் சிவப்பு வண்ணச் சிதறல்களைக் காட்டிக் கொண்டிருக்கக் காவிரியின் நீரிலும் அவை பிரதிபலித்து ஓர் அழகான காலைப் பொழுது உதயம் ஆகிவிட்டதைக் காட்டியது. இது எதிலும் மனம் செல்லாமல் அங்கிருந்த ஓர் பாறை மேல் ஏறி அமர்ந்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்தான் குலசேகரன். அப்போது அவனை ஹேமலேகா அழைப்பது போல் தோன்றத் திடுக்கிட்டுத் திரும்பியவனுக்கு உண்மையகாவே ஹேமலேகா அவனை அழைத்தவண்ணம் குடத்தை ஏந்திக் கொண்டு வருவதைப் பார்த்தான்.

தலையைக் குனிந்து கொண்ட அவள் தலையை உயர்த்தி அவனைப் பார்த்து விட்டு, "ஸ்வாமி, ஏன் சோகம்? என்ன ஆயிற்று?" என்று வினவினாள். முதலில் பதில் ஏதும் சொல்லாத குலசேகரன் பின்னர் அவளிடம், "ஒன்றா, இரண்டா, எதைச் சொல்ல, எதை விட!" என்று பதில் கொடுத்தான். அவள்,"என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்." என்று கேட்க அவளை நிமிர்ந்து பார்த்த குலசேகரனுக்கு அவள் கண்களில் தென்பட்ட ஓர் இருளும் அதன் மூலம் ஏதோ ஓர் மர்மத்தை அவள் ஒளித்து வைத்திருப்பதாகவும் தோன்ற அவளைப் பார்த்து, "ஹேமு!" என அழைக்க அவளும் கம்மிய குரலில், "ஸ்வாமி!" என்று அழைத்தாள்.

3 comments:

நெல்லைத்தமிழன் said...

இருக்கும் அவகாசத்தில் தட்டச்சு செய்து இடுகையை வெளியிட்டிருக்கீங்க. இன்னும் நிறைய எழுதவேண்டி இருக்கிறது. வேகமாக எழுதுங்கள். தொடர்கிறேன்.

Geetha Sambasivam said...

அநேகமா இனிக்கொஞ்ச நாட்களுக்குப் பதிவுகள் தொடர்ந்து வரலாம். இருக்கும் அவகாசத்தில் எழுதி வைச்சதைச் சரி பார்த்துட்டுப் போடுவதே பெரிய விஷயம்!:( இடைவெளி கொடுக்க வேண்டாம்னு நினைச்சாலும் முடியலை! இப்போ இரண்டு நாட்களாக இருமல்வேறே! :)

நெல்லைத்தமிழன் said...

அடடா... இன்னும் இரண்டு மாதங்கள் குளிர்காலமே... உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு வேணுமானால், பூண்டு ரசம் செய்முறை சொல்லித்தரவா?