எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, November 30, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வாசந்திகாவின் முயற்சி!

குலசேகரனும் அவன் சகாக்களும் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து குலசேகரன் ஹேமலேகாவை நினைத்துப் போட்ட சப்தம் அந்தத் தங்குமிடத்தின் விசாலமான முன்னறையில் தங்கி இருந்த சுல்தானிய ராணிக்கும் அவளுடன் வந்த தோழியருக்கும் நன்கு கேட்டது. அவர்களில் ஒருத்தி சுல்தானிய ராணிக்கு மயில்தோகையால் விசிறி வீசிக் கொண்டிருந்தாள். நல்ல அழகான பெண்ணாக இருந்த அவள் கண்கள் எப்போதும் சோகக் கடலில் மூழ்கி இருந்தன. அவள் காதுகளில் குலசேகரன் குரல் விழுந்ததும் திடுக்கிட்டாள் அவள்.  உற்றுக் கவனித்தவளுக்கு அந்தக் குரல் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவள் நன்கு பழகிக் கேட்டவரின் குரல். அவள் உயிராக நினைத்தவரின் குரல்! இங்கே எப்படி? அந்தப் பெண் உடனே அருகில் இருந்த மற்றொரு சேடியிடம் விசிறியைக் கொடுத்துவிட்டுத் தான்கொல்லைப்புறம் ஒதுங்குவது போல் பின்னால் சென்றாள். மெல்ல மெல்லப்பின்கட்டையும் தாண்டி அந்த வீரர்கள் அடைபட்டிருந்த அறைக்கு அருகே வந்தவளுக்கு அந்தக் குரல் நன்கு கேட்டது.

ஆஹா! இது அவர் குரலே தான்! எந்த மனிதனைப் பார்த்தும் அவன் குரலைக் கேட்டும் பரவசம் அடைந்து வந்தாளோ அந்த மனிதனின் குரல் தான்! ஆனால் இங்கே எப்படி? மேலும் இந்தக் குரல் உருத்தெரியாத புலம்பலாக அன்றோ இருக்கிறது. மெல்ல அறைக்கு அருகே வந்தவள் அங்கே சுவரில் மாட்டி இருந்த தீவர்த்தி ஒன்றை எடுத்துக் கொண்டு அறைக்குள்ளாக அந்தத் தீவர்த்தி வெளிச்சத்தில் நன்கு உற்றுக் கவனித்தாள். அரங்கா! அரங்கா! இது என்ன?என் உள்ளக் கோயிலில் குடி இருக்கும் தெய்வம் அன்றோ இங்கு குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக் கொண்டு கிடக்கிறது! இது எப்படி சாத்தியம்? இதன் பின்னணி என்ன? சில கணங்கள் குலசேகரனையே உற்றுக் கவனித்த வண்ணம் நின்றவள் பின்னர் தீவர்த்தியைச் சுவரில் மறுபடி சொருகி விட்டுத் தன் இருப்பிடம் சென்றாள். அவள் மனதில் கலக்கம். வேறு வேலை ஏதும் ஓடவில்லை அவளுக்கு. சிந்தனையே செய்ய முடியாதது போன்ற குழப்பம் வேறு அவளை ஆட்கொண்டிருந்தது.

அன்றிரவு சுல்தானிய ராணி  இரவு உணவை முடித்துக் கொண்டு தூங்கச் செல்வதற்காகக் காத்திருந்தாள் அந்தப் பெண். அவள் வேறு யாருமல்ல. இந்த வரலாற்றின் ஆரம்பத்தில் நாம் பார்த்த வாசந்திகாவே தான். துருக்கப்படை வீரர்களால் மதுரைக்குச் சிறை எடுக்கப் பட்டுச் சென்றவளே தான். அங்கே தன்னைக்காப்பாற்றிக் கொள்ள இயலாமல் வேறு வழியின்றி நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருப்பவளே தான். இப்போது இங்கே குலசேகரனைக் கண்ட அவள் மனம் துடித்தது. அவனை எப்படியேனும் காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எப்படிக் காப்பாற்றுவது? ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. எல்லோரும் உறங்கக் காத்திருந்தாள். பின்னர் மெல்ல வெளியே வந்தாள். சுற்றும் முற்றும் கவனித்த வண்ணம் மெல்ல மெல்லக்காலடி எடுத்து வைத்துக் குலசேகரன் இருக்கும் அறைக்கு அருகே வந்து அவன் அருகே போய் அமர்ந்தாள். அவனை எழுப்பி நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தாள்.

"ஸ்வாமி! ஸ்வாமி! என்னைப் பாருங்கள்! இதோ நான் வாசந்திகா வந்திருக்கிறேன்!" என்றாள். குலசேகரனிடம் அசைவே இல்லை. பலமுறை அவன் தோளைப் பற்றிக் குலுக்கிக் கொண்டு திரும்பத் திரும்ப இதையே சொன்னாள் அவள். நினைவின்றிக் கிடக்கும் அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் நினைவு திரும்பாது போல் தெரிகிறதே என யோசித்தவளாய் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். இந்தக் குழுவினர் கண்ணனூரை நோக்கிச் செல்கின்றனர். அங்கே இந்த வீரர்களோடு குலசேகரனும் சென்றால் கட்டாயம் அந்த உபதளபதி குலசேகரனைக் கொன்றுவிடுவான். தப்ப முடியாது. ஆனால் என் அரசரை என் தெய்வத்தை நான் காப்பாற்றியே ஆகவேண்டும். அது எப்படி நிறைவேறும்?" யோசித்து யோசித்து வாசந்திகாவின் மனம் குழப்பம் அடைந்தது.


நினைவே இல்லாத ஒருவனைக் காப்பாற்றுவது சிரமம்.நினைவு இருந்தால் அவனைத் தப்பி ஓடும்படி செய்துவிட்டுத் துணையாக இருந்திருக்கலாம். வலுவான கரங்களால் முரட்டுத்தனமாக அடிபட்டுக் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கும் இவனைக் காப்பது எப்படி?  நம்மாலும் அவனைத் தூக்கிச் சென்று காப்பாற்றி அழைத்துச் செல்ல இயலாது. யாரேனும் ஒருவர் துணை வேண்டும். தீவிரமாக யோசித்தவளுக்கு அங்கிருந்த ஓடையின் சலசலப்புக் கேட்டது. உடனே அவள் இந்த ஓடை காவிரியில் கலப்பதால் இந்த ஓடையின் உதவியுடன் குலசேகரனை எப்படியேனும் காப்பாற்றியாக வேண்டும் என முடிவு செய்தாள். உடனே அங்குமிங்கும் சுற்றி அலைந்து மண்டபத்துச் சமையலறையில் இருந்து ஓர் பெரிய தாழியை எடுத்து வந்தாள். பரிசல் போல் வட்டமாகக் காணப்பட்ட அதை உருட்டிக் கொண்டே போய் ஓடைக்கரையில் ஓர் இடத்தில் நிறுத்தினாள்.

பின்னர் அறைக்குள்ளே சென்று குலசேகரனைத் தூக்கி நிறுத்தி அவன் தோள்மேல் கையைப் போட்டு நிற்க வைத்துத் தன்னுடன் அவனை நடக்க வைத்துக் கொண்டு சென்றாள்.  ஓடைக்கரையை அடைந்தவள் அந்தத் தாழிக்குள்ளாக அவனைப் படுக்க வைத்தாள். முதலில் தானும் இறங்க நினைத்தவள் பின்னர் என்ன காரணத்தாலோ மனதை மாற்றிக் கொண்டு குலசேகரனைத் தொட்டு வணங்கி அவன் பாதங்களில் தன் தலையை வைத்து வணங்கித் தாழியை மெல்ல ஓடை நீரில் செல்ல விட்டாள். தாழி முதலில் மெதுவாக நகர்ந்தது. பின்னர் நீரின் வேகம் அதிகரிக்கும் இடம் வந்ததும் நீரோட்டத்துடன் செல்ல ஆரம்பித்தது. சுற்றிச்சுற்றிக் கொண்டு அது வேகமாகச் சென்றது. வாசந்திகா அது காவிரியோடு கலக்கும் இடத்துக்குத் தான் செல்லும் என்பதை யூகித்துக் கொண்டு தன் மனதிற்குள் காவிரித் தாயைப் பிரார்த்தித்தாள். பத்திரமான கரையில் அவனை ஒதுக்கும்படி காவிரித்தாயை வேண்டினாள். நல்லவேளையாகக் காவலுக்கென வெளியே நின்று கொண்டிருந்த வீரர்கள் கண்களுக்கு அந்தத் தாழி படவில்லை. தாழி வேகமாகச் செல்ல ஆரம்பித்தது. 

No comments: