தெற்கே பயணப்பட்ட குலசேகரன் தான் முதலில் செய்ய வேண்டியது செய்திப்பரிமாற்றங்கள் செய்ய வசதியாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும் வீரர்களை அழிப்பது தான் என்பதை உணர்ந்திருந்தான். இவர்கள் இருபக்கங்களிலும் சில காத தூரங்களுக்கு இருவர் என்னும் வரிசையில் நியமிக்கப்பட்டிருந்தனர். கண்ணனூர் அரண்மனைச் செய்தி எனில் அரண்மனைத் தூதுவர்கள் அவர்களுக்கு அருகாமையில் இருக்கும் செய்திப் பரிமாற்றச் சேவகர்களிடம் அரண்மனைச் செய்தியைச் சமர்ப்பிப்பார்கள். அவர்கள் செய்தியை எங்கே கொண்டு செல்லவேண்டும் எனக் கண்டு கொண்டு அந்த ஊருக்கு அருகே இருக்கும் வீரர்களிடம் அந்தச் செய்தியைச் சமர்ப்பிப்பார்கள். இப்படியே செய்திப் பரிமாற்றம் நடந்து கடைசியில் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரும். இதை எப்படியேனும் தடுத்து கண்ணனூரில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து கண்ணனூர், மற்ற இடங்களுக்கும் செய்திகள் போய்ச் சேராவண்ணம் பார்த்துக் கொள்வதே தன் முக்கிய வேலை என்பதை உணர்ந்து குலசேகரன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
இந்தச் செய்தி சுமப்போர் வசதியாகத் தங்குவதற்காக ஆங்காங்கே மண்டபங்கள் கட்டி விடப்பட்டு குடிநீருக்காகக் கிணறுகளும் வெட்டப்பட்டிருந்தன. இதை எல்லாம் யோசித்தவண்ணம் சில காத தூரம் பயணித்து வந்த குலசேகரன் தான் கிளம்பிய பின்னர் வந்த முதல் செய்தி சுமப்போர் தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்தான். அங்குள்ள இரு வீரர்கள் அவர்களை எதிர்பார்க்கவில்லை என்பதால் அவர்களை அழிப்பது இவர்களுக்கு எளிதாக இருந்தது. இதன் பின்னர் அடுத்த தங்குமிடம், மூன்றாம் தங்குமிடம் எனத் தொடர்ந்து சென்று அழித்தனர். யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமையால் அழிப்பது எளிதாகவே இருந்தது. ஆனாலும் குலசேகரனுக்குள்ளே இந்தத் தாக்குதல் மூலம் தான் வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது என ஒரு குரல் கூறிக்கொண்டே இருந்தது. இருந்தாலும் இது அவசியமான ஒன்றே என்பதால் வேறு வழியின்றித் தொடர்ந்தான். அன்று இரவுக்குள் இம்மாதிரித் தங்குமிடங்களில் எட்டு தங்குமிடங்களையும் அவற்றில் தங்கி இருந்த செய்தி சுமப்போரையும் கொன்று தீர்த்தார்கள் குலசேகரனும் அவனுடன் வந்தவர்களும்.
ஒவ்வொரு வீரர்களும் வைத்திருந்த குதிரைகளும் அவர்களோடு சேர்க்கப்பட்டுக் குதிரைகள் நிறைய ஆகி விட்டன. இருட்டும் முன்னர் கடைசியாக வந்த இடத்தில் இருந்த இருவரைக் கொன்று அங்கிருந்த கிணற்றில் இருந்து நீர் இறைத்து தாகசாந்தி செய்து கொண்டனர் அனைவரும். சற்று நேரம் உட்கார்ந்து இளைப்பாறலாம் என நினைக்கையில் திடீரென தடதடவெனப் பலர் வரும் சப்தம். இருக்க இருக்கப் பெரிதாகக் கேட்டது. உற்றுக் கேட்டவர்களுக்குக் குதிரை வீரர்கள் வரும் சப்தம், கால்நடையாகவே மனிதர்கள் வரும் சப்தம் எனக் கலந்து கேட்டது. அப்போது உடன் வந்த வீரர்களில் சிலர் வருவது யாராக இருக்கும் எனக் கவனித்துவிட்டு, குலசேகரனிடம் ஓடி வந்து, "ஐயா, எதிரிகள் போல் தெரிகிறது!" என்றனர். உடனே அனைவரும் எச்சரிக்கையோடு தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு குதிரைகள் மீதும் ஏறிக் கொண்டனர்.
வருபவர்கள் எத்தனை பேர் எனத் தெரியாததால் எதிர்ப்பதா வேண்டாமா எனக் குழப்பத்தில் ஆழ்ந்தவர்களுக்கு இங்கிருந்து இப்போதைக்குத் தப்புவதே சரி எனத் தோன்றியது. அப்போது ஒருவன் குதிரைகள் மீது தப்பி ஓடினால் சப்தம் மூலம் தங்களைக் கண்டு பிடித்துப் பின் தொடர்ந்து தாக்குவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் குதிரைகளை அப்படியே விட்டு விட்டுப் போகலாம் என்று சொன்னான். குலசேகரன் எதற்கும் இணங்காமல் எதிரிகள் வரும் திசையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.சற்று நேரத்தில் அவர்கள் குழு கண்களுக்குப் புலன் ஆனது.
1 comment:
சீரான நகர்வாக, ரசிக்கும்படியாக உள்ளது. தொடர்ந்து வாசிக்கிறேன்.
Post a Comment