எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 24, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருவண்ணாமலையில் தாக்குதல்!

அழகிய மணவாளம் ஒரு பக்கம் எரிந்து கொண்டிருக்க அங்கே மதுரையில் ஹொய்சளத்தின் நிலையை மாற்றி அமைக்கும் ஓர் சம்பவம் நடந்தது. சுல்தானாக இருந்த ஜலாலுதீனுக்கும் தளபதியாக இருந்த அலாவுதீனுக்கும் கருத்து வேறுபாடு பெருமளவில் இருந்தது. திருவண்ணாமலை மீது தாக்குதல் நடத்தி ஹொய்சளரை அழித்தால் தான் தமிழகத்தில் நிலைபெற்று ஆட்சி புரிய முடியும் என அலாவுதீன் வற்புறுத்த சுல்தான் ஜலாலுதீன் அதை ஏற்க மறுத்தான். இது சில நாட்கள் இப்படியே இருக்க திடீரென ஓர் நாள் ஜலாலுதீனைத் தளபதி அலாவுதீன் கொன்று விட்டான். ஆட்சியை அவன் கைப்பற்றினான். அவன் கொடூரத்தை அறிந்திருந்த ஏனையோர் அவன் ஆட்சிக்கும் அவன் கட்டளைக்கும் உடனே அடி பணிந்தார்கள்.  ஆட்சிக்கு வந்த இரண்டாம் நாளே அலாவுதீன் திருவண்ணாமலை மீது போர் தொடுக்கும் அறிவிப்பைச் செய்தான். தாமதிக்காமல் உடனடியாக ஓர் பெரும்படையை ஏற்பாடு செய்து அழைத்துக் கொண்டு முதலில் கண்ணனூர் நோக்கிப் பிரயாணத்தைத் தொடர்ந்தான்.

மூன்று இரவுகளும், பகல்களும் போனபின்னர் நான்காம் நாளில் கண்ணனூரை அடைந்தனர். கண்ணனூர்க் கோட்டை ஹொய்சளர்களுக்குச் சொந்தமானது. அவர்களால் கட்டப்பட்டது. அங்கே ஓர் கோயிலும் இருந்தது. ஹொய்சளேஸ்வரர் என்னும் பெயரில் விளங்கி வந்தார் அவர். இப்போதும் பொய்ச்சலேஸ்வரர் என்னும் பெயரில் ஓர் கோயில் கண்ணனூரில் (இப்போதைய சமயபுரம்) இருந்து வருவதாய்ச் சொல்கின்றனர்.  ஆரம்பத்தில் திருவரங்கத்தைத் தாக்கிய சுல்தானியப் படைகள் அங்கேயே சில காலம் இருந்து வந்தன. பின்னர் சிங்கப்பிரானின் ஆலோசனையின் பேரில் கண்ணனூருக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்தப் படை தான் இப்போது மதுரை சுல்தானிய ராஜாவின் வட எல்லைப்படையாக விளங்கி வந்தது.  இப்போது அங்கே ஏற்கெனவே ஓர் பெரும்படை திரட்டப்பட்டு சுல்தானின் வருகைக்குக் காத்திருந்தது. அலாவுதீன் வந்து சேரவும் அனைத்துப்படைகளும் ஒன்று சேர்ந்து ஓர் பெரும்படையாகத் திருவண்ணாமலை நோக்கி நகர்ந்தது. இது மிக ரகசியமாக வைக்கப்பட்டது.

ஆகவே தூதுவர்கள் மூலம் கூட ஹொய்சள அரசருக்குத் திருவண்ணாமலையை நோக்கிப் படைகள் திரண்டு வரும் விஷயம் தெரியவில்லை. திருவண்ணாமலைக்கு 2,3 காத தூரம் இருக்கையிலே தான் வழிப்போக்கர்களும், ஆங்காங்கே கிராமங்களில் குடி இருந்த மக்களும் படை திரண்டு வரும் செய்தியைத் தெரிவித்தனர். மன்னருக்கும் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. மன்னர் திகைத்துத் தான் போனார். எனினும் உடனடியாகக் கோட்டைக் கதவுகளை மூட உத்தரவிட்டார்.  இருக்கும் அனைத்துப் படைகளையும் ஒரே இடத்தில் திரட்டிக் கோட்டைக்கும் நகருக்கும் காவலாக இருக்கும்படி செய்தார். ஆனால் ஓர்  விபரீதமான செய்தி மன்னருக்கு அப்போது கிடைத்தது. அதுதான் ராணி கிருஷ்ணாயி திருக்கோயிலூர் நகரின் கோயிலுக்குச் சென்றிருக்கிறாள் என்பதே! அவள் வந்தால் கோட்டை வாயில் வழியாகத் தான் உள்ளே வந்தாக வேண்டும்! என்ன செய்வது? மன்னர் அதிர்ந்து தான் போனார்.  யாருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை.

இது இப்படி இருக்கத் திருவண்ணாமலைக்குச் செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டிய குலசேகரன் சம்புவராயரின் ராஜ்யத்துக்குள் ஹேமலேகா இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு திரிந்தான். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இவற்றில் மிகவும் மோசமான பெண்ணாசையினால் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த குலசேகரன் ஒருவழியாக ஹேமலேகா இருக்கும் ஊருக்கு வந்து சேர்ந்தான். அந்தக் கிராமத்தின் பெயர் கிளியார் சோலை. அங்குள்ள ஓர் சத்திரத்தில் தான் கணவனாக வரித்துக் கொண்ட கண் தெரியாத முதியவரோடு ஹேமலேகா தங்கி இருக்கும் செய்தியும் குலசேகரனுக்குக் கிட்டியது. இரவு நேரங்களில் ஹேமலேகா சத்திரத்தின் கதவுகளைச் சார்த்தி விட்டு உள்ளே இருந்த சிறு கூட்டத்திற்கு வடமொழிக் காவியங்களையும் தத்துவங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் அங்கே இருப்பது தெரிந்து அங்கே வந்து சேர்ந்த குலசேகரன் எடுத்த எடுப்பில் அவள் முன் போய் நிற்க விரும்பவில்லை. ஆகவே சத்திரத்தில் இருந்த தொழுவத்துக்குப் போனான். உள்ளிருந்து வரும் ஹேமலேகாவின் குரலை அங்கேயே அமர்ந்த வண்ணம் கேட்டு ஆனந்தம் அடைந்தான்.

சில சமயங்களில் தெளிவாகவும் பல சமயங்களில் தெளிவில்லாமலும் இருந்தது ஹேமலேகாவின் குரல். ஆனாலும் குலசேகரனுக்கு அதுவே இன்பத்தைக் கொடுத்தது. இரு நாட்கள் இப்படிப் போனபின்னர் மூன்றாம் நாள் ஹேமலேகா நம்மாழ்வாரின் பாசுரமான, "புவியும் இரு விசும்பும்" என்னும் பாசுரத்திற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கையில் தன்னை மறந்து குலசேகரன், "ஆஹா! ஆஹா!" எனக் கூவி விட்டான்.  ஹேமலேகாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.  அவசரமாகத் தன் சொற்பொழிவை நிறுத்திவிட்டுக் கையில் ஓர் விளக்குடன் தொழுவத்துக்கு வந்தாள். அங்கே குலசேகரன் ஓர் கழுநீர்த் தவலையின் மேல் அமர்ந்த வண்ணம் அவள் பேச்சை ரசித்துக் கொண்டிருந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள். "ஸ்வாமி!" என அவனை அழைத்தாள்.  அவள் தன்னை அழைப்பதைக் கண்ட குலசேகரன் கள்ளச் சிரிப்புடன், "ஹேமூ!" என்ற வண்ணம் எழுந்தான். "இங்கே எப்படி நீங்கள்" என்று கேட்டாள் ஹேமலேகா!

6 comments:

நெல்லைத்தமிழன் said...

//ம்மாழ்வாரின் பாசுரமான, "புவியும் இரு விசும்பும்" என்னும் பாசுரத்திற்கு //

இதெல்லாம் எதுலேர்ந்து எடுக்கறீங்க (இந்த நிகழ்ச்சியை). ஏதேனும் மிஸ்டேக் இருக்கான்னு நான் பார்க்கிறேன்.

நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதியில் உள்ள இந்தப் பாடலின் சுருக்கமான கருத்து,
இறைவா, நீ எல்லாவற்றிலும் பெரியவன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் என்னுள்ளே நீதான் நீக்கமற நிறைந்திருக்கிறார். உன்னை என்னுள் வைத்திருக்கும் நான் பெரியவனா அல்லது நீ பெரியவனா என்ற கேள்வி இந்தப் பாசுரத்தில் எழுப்பப்படுகிறது. 'சர்வேசுவரனான உன்னையே நான் எப்போதும் தியானித்திருக்கிறேன்' என்பது உள்ளூடிய கருத்து.

Geetha Sambasivam said...

இது குறித்துப் பலரும் எழுதி இருக்கிறார்கள். கோயில் ஒழுகை அடிப்படையாகக் கொண்டு. எனக்குத் தெரிந்ததைத் தான் நான் பகிர்கிறேன். கோயில் ஒழுகில் இன்னமும் பல குறிப்புகள் உள்ளன. பெரும்பாலும் திருவரங்கன் உலாவைப் பின்பற்றியே அதில் வரும் நிகழ்வுகள் எல்லாம் கோயில் ஒழுகையும், மதுரா விஜயத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அவற்றை வைத்தே சொல்கிறேன்.

நெல்லைத்தமிழன் said...

You are doing a big service. Hats off to you.

நானாக இருந்திருந்தால், இடுகைக்குப் பொருத்தமான படங்களையும் தெரிவு செய்துகொடுத்திருப்பேன். அது இடுகைக்கு இன்னும் வலு சேர்க்கும்.

எல்லாரும் எல்லாத் தளத்தையும் படிக்கமாட்டாங்க. அது அதுக்குன்னு ஒரு லெவல் இருக்கு. இந்தத் தளத்தில் முக்கியமானவற்றைக் கொடுக்கறீங்க. பாராட்டுகள்.

Thenammai Lakshmanan said...

கேட்டிராத தகவல்கள் அருமை கீதா மேம்

Geetha Sambasivam said...

நெல்லைத்தமிழரே, பொருத்தமான படங்களைத் தேர்வு செய்வது கடினம். ஶ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா புத்தகத்தில் கோபுலுவால் வரையப்பட்ட சித்திரங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை இங்கே கொண்டு வர இயலாது. இந்தத் தளம் என்னோட பக்திச் சுற்றுலா பற்றி எழுதவே ஆரம்பித்தேன். பின்னர் சிதம்பர ரகசியம் என்னும் பெயரில் சிதம்பரம் பற்றிய வரலாற்றை ஆரம்பித்து 2 வருஷங்கள் எழுதி முடித்தேன். இப்போது இங்கே ஶ்ரீரங்கம் குறித்து எழுதுவதால் தான் என்னோட பயணங்கள் குறித்த பதிவுகள் எண்ணங்கள் பதிவிலேயே வருகின்றன.

Geetha Sambasivam said...

நன்றி தேனம்மை! உங்களை இந்தப் பதிவில் எதிர்பார்க்கவில்லை.