எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

2.மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 1

ஏப்ரல் 30 2006

கடந்த 20-ம் தேதி ஆரம்பித்த எங்கள் பயணம் இன்று காலை வெற்றிகரமாக முடிந்தது.மீண்டும் ஒரு மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணம். எனக்குத் தெரிந்த வரை கடவுள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உலகத்து அழகை எல்லாம் அடக்கப் பார்த்து இருக்கிறான் என நினைக்கிறேன். எத்தனை முறை போனாலும் அலுக்காத பயணம். இந்த முறை கர்நாடகாவில் மங்களூரில் தொடங்கினோம். மங்களூர் வரை ரயில் பயணம். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கிக்கொண்டு அங்கிருந்து ஒரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு சுற்று வட்டாரக் கோவில்களுக்குப் போய் வருவது திட்டம். திட்டப்படி போய் அறை எடுத்து அங்கிருந்து ஒரு வண்டியில் வெள்ளி காலை கிளம்பினோம். எங்களுக்கு வண்டி ஓட்டி வந்த டிரைவர் நசீர் அந்தப் பகுதியைப் பூகோள முறையில் நன்கு தெரிந்து வைத்திருந்தார். அதே போல் மங்களூரில் நல்ல சாப்பாடு கிடைக்கும் இடமும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதுவும் சைவ உணவு கிடைக்கும் இடம். அதே போல முதலில் அவர் அழைத்துச் சென்ற "Janatha Deluxe" என்ற ஹோட்டலில் காலை உணவு முடித்துக் கொண்டோம். அது மங்களூரின் முக்கியப் பகுதியான ஹாப்பன்காட்{ என்று நினைக்கிறேன்.} டில் இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நடக்கும் தூரம்தான்.நாங்கள் இருந்த "Shamoons Palace" ஹோட்டல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பின்னால்.அங்கிருந்தும் நடந்து போகலாம். ஜனதா டீலக்ஸ் ஹோட்டலில் காபி மிகவும் அருமை.ரொம்ப சாப்பாடு பற்றி எழுதினால் சாப்பாடு பற்றிய பதிவாக மாறிவிடும்.

மங்களூரில் இருந்து முதலில் தர்மஸ்தலா போனோம். அதுவும் கொஞ்சம் மலைவழிப் பயணம் தான். காடுகள் செழிப்பாக இருக்கின்றன. நல்லவேளை முக்கால் பாகம் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் கேரளாவிலும், கர்நாடகாவிலும் போய் விட்டன. நாம் இத்தனை நாட்கள் பொட்டலாக்கி இருப்போம். பின் மழை இல்லை, தண்ணீர் இல்லை என்று சொல்லிக் கொண்டுப் பக்கத்து மாநிலங்களிடம் கை ஏந்துவோம். அல்லது அரசு கொடுக்கும் இலவசங்களுக்கு எதிர்பார்ப்போம். இரண்டு பக்கமும் அடர்த்த்த்த்த்த்தியான காடுகள். பார்க்கவே மனதுக்கு மிக ரம்மியமாக சந்தோஷமாக இருக்கிறது. தர்மஸ்தலா நாங்கள் போய்ச் சேர்ந்த போது 10-45(காலை) மணி இருக்கும். கர்நாடகாவில் உள்ள எல்லாக் கோவில்களும் கழிப்ப றை வசதியோடு இருப்பது மிகச்சிறப்பு. எல்லா இடத்திலும் இலவசக்கழிப்பறை தான். மிகச்சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. மக்களும் கண்ட இடத்தில் அசுத்தம் செய்யப் பழகவில்லை. ஸ்ரீமஞ்சுநாத ஸ்வாமியைத் தரிசனம் செய்ய நாங்கள் வரிசையில் போய் நின்றபோது மணி 11 ஆகி இருந்தது.ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும் என்று நினைத்தோம். ஆனால் தரிசனம் கிடைக்கும் போது 2-15 ஆகி விட்டது. திருப்பதி மாதிரி கூண்டுகள் கடந்து கோவில் கிட்ட வரும்போது 1 மணி ஆகிவிட்டது. அப்போது பூஜைக்காகக் கோவில் நடை 1/2 மணி நேரம் மூடிவிட்டு 1-45 போலத்திறந்து மறுபடி உள்ளே விடுகிறார்கள். இந்த மாதிரி கோவில் நடைமுறையில் உள்ள பூஜை செய்யும் நேரங்களில் மூடிவிட்டுப் பின் 1/2 மணிக்கெல்லாம் திறக்கிறார்கள். தீபாராதனை சமயம் 3 யானைகள் வந்து மஞ்சுநாத ஸ்வாமிக்கு மிக அழகாக நமஸ்காரம் செய்கின்றன. கோவில் பிராகாரம் என்பதால் படம் எடுக்க முடியவில்லை. யானைப் பிரியையான எனக்கு அதுவே கடவுள் தரிசனம் போல இருந்தது.{ உண்மையில் நான் மிகவும் யானை நேசிப்பாளி. வலைப்பதிய வந்த கொஞ்சநாளிலேயே திருமதி துளசி அதற்கு PATENT வாங்கிவிட்டது தெரிந்ததாலும் தன் வாரிசாக பொன்ஸை நியமித்து விட்டதாலும் அடக்கி வாசிக்கிறேன்.}

கடவுள் தரிசனம் செய்ய தினமும் 25,000 பேரிலிருந்து 50,000 பேர் வரை வருவதாகச் சொன்னார்கள். கர்நாடகாவிலேயே " திருப்பதி" மாதிரி அது ஒரு முக்கிய ஸ்தலம் ஆக இருந்து வருகிறது. எல்லாக் கோவில்களிலும் இலவசமாகச் சாப்பாடு போடுகிறார்கள். சாப்பாடு என்றால் சாதம், சாம்பார், ரசம் மற்றும் மோர் மட்டும்தான். கர்நாடக வழக்கப்படி முதலில் ரசம், பின் சாம்பார் அதற்குப்பின் மோர். சாதம் நிறையப் போடுகிறார்கள். ஊறுகாய்ப்பிரியர்கள் ஊறுகாய் என்று எழுதிப்பார்த்துக் கொள்ளலாம். இந்த சாப்பாடு சாப்பிடக் கூட்டம் நிறைய இருந்தாலும் கூடங்கள் 2,000லிருந்து 5,000 பேர் வரை சாப்பிடுகிற மாதிரி மிகப் பெரியனவாய் உள்ளது. அத்தனை பேருக்கும் எவர்சில்வர் தட்டு, தம்ளர் எல்லாம் மிகச்சுத்தம், சுத்தம். சுத்தம். தண்ணீரும் நிறைய இருக்கிறது. அதை உபயோகம் செய்வதும் முறையாக இருக்கிறது. தர்மஸ்தலாவில் நேரம் ஆகிவிட்டபடியால் நாங்கள் கோவிலில் சாப்பிடவில்லை. வெளியில் சிம்பிளாக ஆகாரம் (என் கணவர் மட்டும்) சாப்பிட்டார். நான் ஜூஸ் மட்டும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சுப்ரமண்யா போனோம். அதற்குள் மாலை 4 மணி ஆகிவிட்டது. அப்பா, அம்மாவைப் பார்த்து விட்டுக் களைத்து வந்த எங்களை ஸ்ரீ சுப்ரமண்யர் கூட்டம் அதிகம் இல்லாதபடிக்குப் பார்த்துக் கொண்டார். ஆகவே மிகவும் நல்ல முறையில் தரிசனம் முடிந்தது. அதற்குப்பின் அங்கேயே காபி மட்டும் சாப்பிட்டு விட்டுத் திரும்ப மங்களூர் கிளம்பினோம். எல்லா இடங்களிலும் காபி அநேகமாகத் தரமாக இருக்கிறது. மலைப்பிரதேசங்களில் நிறைய காபி, ஏலம் செடிகள்தான் தென்படுகிறது. எல்லாவீடுகளும் கேரள முறையில் கட்டப்பட்டு தோப்புக்கள் சூழ்ந்து உள்ளன. வீடுகளில் பலா மரங்கள் காய்த்துத் தொங்குகின்றன. ரோடோரங்களில் இருந்தாலும் யாரும் வெட்டி எடுத்துப் போவது இல்லை. அதே போல மாமரங்களும் மற்றப் பயன் தரும் மரங்களும் இருக்கின்றன. யாரும் யாரோடதையும் எடுப்பது கிடையாது. அவரவர்கள் தங்களுக்கு உள்ளதை வைத்துத் திருப்தியாக இருப்பது நன்றாகத் தெரிகிறது. கோவில் கள் போடும் இலவசச் சாப்பாடு தவிர அரசாங்கம் எதுவும் இலவசமாகத் தருவதாகத் தெரியவில்லை.கோவில்களும் கேரளப்பாணி தான். பூஜை முறைகளும் அப்படித்தான். எல்லாக் கோவில்களிலும் தரிசனம் முடிந்து வந்ததும் கொஞ்சதூரத்திலேயே ஒரு அர்ச்சகர் உட்கார்ந்து கொண்டு தீர்த்தம், சந்தனம் மற்றும் அர்ச்சனை செய்த உதிரிப்பூ முதலியன தருகிறார்கள். எல்லாருமே வரிசையில் வருவதால் எந்த சிரமமும் இல்லாமல் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கிறது. கடவுள் சன்னதியில் நாம் நிறைய நேரம் தரிசனம் செய்து கொண்டு நின்றால் கோபிப்பதும் இல்லை. முடிந்த வரை 5 நிமிஷமாவது நேரம் தருகிறார்கள். அதற்குப்பின்னாலும் போக சொல்லி வேண்டுகோள் தான் விடுக்கிறார்களே தவிர விரட்டுவது கிடையாது.

சுப்ரமண்யவிலிருந்து மங்களூர் போய் அங்கே அரபிக்கடலைப் பார்த்து விட்டுப் பின் மங்களாதேவி கோவில் போனோம். கூட்டம் நிறைய இருந்தாலும் கட்டுப்படுத்துவதால் சீக்கரம் தரிசன்ம் கிடைத்தி விடுகிறது. விதிவிலக்கு தர்மஸ்தலா மட்டும்தான். வரிசையிலேயே ஆயிரக்கணக்காக காத்து இருக்கின்றனர். மங்களாதேவி கோவிலில் இருந்துப் பக்கத்தில் உள்ள கத்ரி (நம்ம கோபால்நாத் ஊரு தாங்க)போனோம். அங்கே பல படிகள் மேலே ஏறிப்போனால் பாண்டவர் குகை, சீதாதேவியின் கிணறு முதலியனவும் மற்றும் சிலப்புராணகாலச்சின்னங்களும் இருக்கிறாதாகச் சொன்னார்கள். அதற்குள் மணி 8 ஆகி இருந்தது. நாங்கள் ஒரு 30 படி ஏறினோம். ஒவ்வொரு படியும் 2 அடிக்கு மேல் உயரம். அதற்கு மேல் என்னால் முடியவில்லை. ஆகவே என்னைத் தனியாக விடமுடியாமல் (எல்லாம் ஒரு சமாளிப்புத்தான். ஊன்மையில் அவருக்கும் முடியவில்லை) திரும்பிவிட்டோம்.மற்றவை நாளை.

2 comments:

priya.r said...

நல்ல பதிவுங்க கீதாம்மா ;

இன்னும் கோவை பற்றியும் atha வது உட் பிரகாரம் ,வெளி பிரகாரம்,உற்சவர் ,மூலவர் பற்றியும் கூட எழுதி இருந்துருக்கலாம் :))

//நல்லவேளை முக்கால் பாகம் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் கேரளாவிலும், கர்நாடகாவிலும் போய் விட்டன. நாம் இத்தனை நாட்கள் பொட்டலாக்கி இருப்போம்//
நகைச்சுவை கலந்த ஆதங்க வரிகள் ..
இப்போ எல்லாம் பொட்டலாக்கி விடுவதை விட பிளாட் போட்டு விற்பது தான் அதிகமாகி இருக்கு :(

//யானைப் பிரியையான எனக்கு அதுவே கடவுள் தரிசனம் போல இருந்தது//
நாங்களும் தான்! யானை மேல் ஒரு பிரமிப்பு ஓரளவு எல்லோருக்கும் உண்டு எனலாம் :)

priya.r said...

//எல்லாக் கோவில்களிலும் தரிசனம் முடிந்து வந்ததும் கொஞ்சதூரத்திலேயே ஒரு அர்ச்சகர் உட்கார்ந்து கொண்டு தீர்த்தம், சந்தனம் மற்றும் அர்ச்சனை செய்த உதிரிப்பூ முதலியன தருகிறார்கள். எல்லாருமே வரிசையில் வருவதால் எந்த சிரமமும் இல்லாமல் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கிறது. கடவுள் சன்னதியில் நாம் நிறைய நேரம் தரிசனம் செய்து கொண்டு நின்றால் கோபிப்பதும் இல்லை. முடிந்த வரை 5 நிமிஷமாவது நேரம் தருகிறார்கள். அதற்குப்பின்னாலும் போக சொல்லி வேண்டுகோள் தான் விடுக்கிறார்களே தவிர விரட்டுவது கிடையாது.//

இது மாதிரி எல்லா கோவில்களிலும் பின் பற்றினால் நன்றாக தான் இருக்கும் .,

மற்ற படி பயண கட்டுரை கொடுத்த கீதாம்மா வுக்கு பாராட்டுகள் ;தங்கள் இறை வழிபாட்டு பயணத்திற்கு வாழ்த்துக்கள் .