ஆகஸ்ட் 10, 2006
"உலகத்து நாயகியே-எங்கள் முத்து மாரியம்மா,
எங்கள் முத்து மாரி
உன் பாதம் சரண் புகுந்தோம்-எங்கள் முத்து மாரியம்மா,
எங்கள் முத்து மாரி"
**********************
நாங்கள் திருச்சி போனதும் சமயபுரம் போய் மாரியம்மனைப் பார்க்க முடிவு செய்தோம். பலமுறை போனதுதான். என்றாலும் பார்க்காமல் முடியாது. இதற்கு முன்னர் எங்களுக்கு நேர்ந்த ஒரு அனுபவம் அம்மனின் அருளையும், கருணையையும், நாங்கள் தவறாமல் வந்து பார்க்க வேண்டும் என்று சொல்லாமல் சொன்னதையும் நினைவு கூர்ந்தோம்.
**********************
2005 மார்ச் மாதம் எங்கள் பையன் 3 வருடங்களுக்குப் பிறகு தாய்நாடு வந்ததால் குலதெய்வம் கோவிலுக்குப் போக முடிவு செய்து கிளம்பிப் போய்விட்டுப் பின் திருச்சியில் சொந்தக்காரரைப் பார்த்து விட்டுச் சென்னை திரும்பினோம். வழியிலேயே சமயபுரம் மாரியம்மன் கோவில் வருவதால் அங்கே போகலாம் என நானும், என் கணவரும் நினைக்க எங்கள் பையனும், டிரைவரும் அங்கே போனால் நேரம் ஆகிவிடும், பின் சென்னை போகும் போது நடுராத்திரி ஆகும் என்று சொன்னார்கள். நான் கோவில் மெயின் ரோட்டில் வழியிலேயே இருப்பதால் நேரம் ஆகாது என்று சமாதானம் செய்தேன். திருச்சி தாண்டியதும் கோவில் அடையாளத்தைக் காட்டும் வளைவு வருவதை நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்டே வந்தோம். சாதாரணமாகச் சமயபுரம் போகும் பேருந்துகள் நிறையக் கண்ணில் படும். அன்று ஒரு பேருந்து கூடக் கண்ணில் படவில்லை. அதனால் என்ன நமக்கு இடம் தெரியுமே என்று பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் அரை மணி நேரத்தில் வரவேண்டியது ஒரு மணி நேரம் ஆகியும் கண்ணிலேயே படவில்லை. நான் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன். அதற்குள் என் கணவர், எனக்குச் சரியாகப் புரியவில்லை, என்றும் இனிமேல்தான் சமயபுரம் வரும் என்றும் கூறவே வண்டி மேலே போனது. சற்று நேரத்தில் பெரம்பலூரும் வந்து அங்கே பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் வளைவும் வரவே நான் நிச்சயமாகச் சமயபுரம் தாண்டி விட்டோம் எனக்கூறவே உடனே அந்த ஊர்க்காரர்களிடம் கேட்டோம். அங்கெ இருந்த ஒருத்தர், "அது என்ன ஒரு பத்து கிலோ மீட்டர் தான் இருக்கும். திரும்பிப் போய்ப் பார்த்துவிட்டே போங்க," என்று கூறினார். சரி பத்து கிலோமீட்டர் தானே என்று திரும்பினோம். போனால் போய்க் கொண்டே இருக்கிறது. சமயபுரம் கோவில் வளைவு கண்ணில் படவே இல்லை. மறுபடி சந்தேகம், மறுபடி கேட்டு, மறுபடி இன்னும் ஒரு பத்து கிலோமீட்டர் என்று இப்படியே கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் வந்ததும் அன்னை தன் கோவிலைக் காட்டினாள். இத்தனை பெரிய வளைவு எப்படி ஒருத்தர் கண்ணிலும் படாமல் 50 கிலோமீட்டர் போனோம்? இன்று வரை புரியாத புதிர். அப்புறம் உள்ளே போய் அம்மனைத் தரிசனம் செய்து விட்டுத் திரும்பினோம். மாரியம்மன் எல்லாரும் ஒன்றுதானே, ஊரில் நம் குலதெய்வக்கோவிலில் பார்த்ததும் அவளைத் தானே என்ற எங்கள் பையன் வாயே திறக்கவில்லை.
இம்முறையும் அவளைப் பார்த்துவிட்டுப் பின் அவள் பிறந்த இடமான ஆதி சமயபுரம், மாகாளிக்குடி போன்றவையும் பார்க்க நினைத்துப் போனோம். சமயபுரம் கோவிலில் கூட்டம் இருந்தாலும் சிறப்புத் தரிசனம் இல்லாமலேயே அன்னை தரிசனம் நன்கு கிடைத்தது. பிரசாதமும் கிடைத்தது. வளையல், குங்குமம், மஞ்சள் போன்றவை தருகிறார்கள்.இந்த அன்னை வருடத்தில் பத்து நாள் வைகாசி மாதத்தில் நாச்சியார் கோவிலில் ஆகாய மார்க்கமாக வந்து தங்குவதாக ஐதீகம். பத்து நாளும் நாச்சியார் கோவிலில் உற்சவம் நடக்கும். அன்னைக்கு அங்கே ஆகாச மாரியம்மன் என்றே பெயர். நாச்சியார் கோவிலில் இருந்து எங்கள் கிராமத்திற்குப் போகும் வழிதான். . மற்ற நாட்களில் ஒரு முக்கோணவடிவிலான கல்லில் இருக்கும் அன்னை, பத்து நாளும் அலங்கார ஸ்வரூபிணியாகக் காட்சி தருவாள். நாங்கள் நாச்சியார் கோவில் வழி போனாலோ அல்லது திரும்பி வந்தாலோ போகாமல் வருவது இல்லை.பிறகு அங்கிருந்து அன்னை பிறந்த இடமான ஆதி சமயபுரம் அல்லது இனாம் சமயபுரம் போனோம். வழி இந்தத் தற்போதைய சமயபுரத்திலிருந்து ஒரு கிலோமீட்டரில் இருக்கிறது. நுழைவு வாயிலில் ஆதி சமயபுரம் போகும் வழி என்று வளைவு இருக்கிறது. அங்கே போய் அம்மன் தரிசனம் செய்து விட்டுச் சன்னதிக்கு அருகேயே இடது பக்கம் சிறு ஓட்டு வீடு போன்ற ஒரு கட்டிடம் இருக்கிறது. அதற்குள் அம்மன் பிரதிஷ்டை செய்திருக்கும். அதுதான் அம்மனின் உண்மையான பிறந்த இடம் என்கிறார்கள். அங்கிருந்து தற்சமயம் இருக்கும் இடம் வந்ததாகச் சொல்கிறார்கள். யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. கோவிலில் புத்தகமும் வாங்க முடியவில்லை. அன்னை அருளால் அடுத்த முறை போகும்போதாவது வாங்கிப் போடலாம் என்று நம்புகிறேன்.
இதற்குப் பிறகு நாங்கள் பக்கத்தில் இருக்கும் "மாகாளிக்குடி" என்ற ஊருக்குப் போனோம். இதுவும் சமயபுரத்திலிருந்து 2 கிலோமீட்டருக்குள் தான் இருக்கிறது. நான் ஒரு சில வருடங்களுக்கு முன் என் தம்பியுடன் போனேன். அப்போதில் இருந்து என் கணவருக்கு இந்தக் கோவிலைக் காட்ட எண்ணி இப்போதுதான் முடிந்தது. கோவிலின் விசேஷம்: இது விக்கிரமாதித்தன் வழிபட்ட கோவில். அதைத் தவிர உஜ்ஜையினியில் இருந்து அவன் கொண்டு வந்த முழுத் தங்கத்தால் ஆன காளி சிலை இங்கே இருக்கிறது. விக்கிரமாதித்தன் காடாறு மாசம், நாடாறு மாசம் போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒருமுறை காடாறு மாசத்தில் இங்கு வந்து தங்கி இருந்ததாகவும், அப்போது இந்தக் கோவிலைக் கண்டுத் தான் வழிபடும் காளியே இவள் என்று அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார்கள். ஆகவே தான் கையோடு கொண்டு வந்த காளி சிலையையும் அங்கேயே வைத்துப் பூஜித்ததாகவும் சொல்கிறார்கள்.விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் மாட்டிக் கொண்டு விழித்ததும் இங்கே தான். அன்னையின் அருளால் வேதாளத்தின் கேள்விகளுக்குப்பதில் கிடைத்ததும் இங்கேதான் என்கிறார்கள். முன்னே போயிருந்தபோது வேதாளம் இருந்த மரம் என்று ஒரு பழைய மரத்தைப் பார்த்த ஞாபகம். இப்போது வேதாளத்திற்குத் தனி சன்னதி இருக்கிறது. அம்மனின் சன்னதிக்கு இடப்பக்கம் பிரகாரம் சுற்ற ஆரம்பிக்கும் இடத்தில் இருக்கிறது.
அன்னை இங்கே "ஆனந்த செளபாக்கிய சுந்தரி"யாகத் தாண்டவ ஸ்வரூபத்தில், வாசி யோகத்தில் அருள் பாலிப்பதாக அங்கே இருந்த காளி உபாசகர் கூறினார். கோவிலில் கூட்டம் இல்லாத காரணத்தால் எல்லாம் கேட்டு அறிய நேரமும் இருந்தது. சொன்னவரும் ஸ்ரீவித்யா உபாசகர் என்று அவர் பேச்சிலேயே தெரிந்து கொண்டோம். விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜயினி மஹாகாளி இந்த அன்னையின் உற்சவ விக்ரஹத்திற்கு வலப்பக்கம் இருக்கிறது. அந்த அன்னைக்கும் தனியாகக் கற்பூர ஆரத்தி காட்டிச் சொல்கிறார்கள். சுமார் ஒரு அடி உயரம் இருக்கும் அந்த சொர்ணத்தினால் ஆன விக்ரஹம் அந்தக் கோவிலுக்கு வந்துப் பல ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டதாகக் கூறினார்கள். இதே மாதிரிதான் உஜ்ஜைனியில் காளி அம்மன் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
**********************
"பூதமைந்தும் ஆனாய்-காளி!
பொறிகளைந்தும் ஆனாய்!
போதமாகி நின்றாய்-காளி!
பொறியை விஞ்சி நின்றாய்!
இன்பமாகி விட்டாய்-காளி!
என்னுளே புகுந்தாய்!
பின்பு நின்னை யல்லால்-
பிறிது நானுமுண்டோ?
அன்பு தந்து விட்டாய்- காளி, காளி!
ஆண்மை தந்து விட்டாய்!
துன்பம் நீக்கி விட்டாய்-காளி!
துயரழித்து விட்டாய்!"
**********************
No comments:
Post a Comment