எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

28. எங்களை வாழ வைக்கும் மாரி

ரொம்ப நாளாக மனதில் தோன்றிக் கொண்டிருந்த எண்ணம் ஆன்மீகம் எழுத தனிப் பதிவு போடணும்னு. திரு கார்த்திக் வெளிப்படையாகக் கேட்கவே எண்ணம் உறுதிப்பட்டது. உடனேயே சிவா நான் செய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு நேற்று அவருடைய விடுமுறையாக இருந்தும் கூட இந்த உதவியைச் செய்திருக்கிறார். சோதனை பார்த்ததும் அவர் தான். நான் இல்லை. நான் இப்போ இந்த நிமிஷம் தான் இந்தப் பக்கத்துக்கே வந்திருக்கேன். இந்தப் பக்கத்தில் நான் எழுதுவது எல்லாம் அந்தச் சிவனுக்கே எங்கள் குல தெய்வமான மாரி அம்மனுக்கும் அர்ப்பணம். நான் இன்று எங்கள் குலதெய்வமான மாரி அம்மனைப் பற்றி எழுத நினைத்ததும் இந்தப் பக்கம் தனியாக வந்ததும் பொருத்தமாக அமைந்து விட்டது.
நாகை சிவாவிற்கு நன்றி. சும்மாச் சொல்லிட்டு அப்புறம் மறந்து போற மாதிரி நன்றி எல்லாம் இல்லை இது.

எங்கள் ஊர்ப் பெருமாள் கோவிலில் இருந்து ஆரம்பிக்கும் அக்ரஹாரம் முடிவில் கிழக்கே சில பர்லாங் போய்ப் பின் வடக்கே திரும்பினால் சற்றுத் தூரத்தில் வருகிறது எங்கள் குலதெய்வமான மாரி அம்மன் கோவில். எங்கள் மாமனாரின் கொள்ளுத் தாத்தா காலத்தில் ஏற்பட்டது என்று சொல்வார்கள். தற்சமயம் அறங்காவலராக வேறு ஒருவர் நியமிக்கப் பட்டு முழுக்க முழுக்கத் தனியார்களால் நிர்வாகம் செய்யப் படுகிறது. கோவிலின் சூழ்நிலையே மிகவும் ரம்மியமாக இருக்கும். சுற்றிலும் வயல்கள் சூழ்ந்த இடத்தில் அம்மன் கிழக்கே பார்த்துக் கொண்டு ஒரு காலை மடித்து ஒரு காலைத் தொங்க விட்டு உட்கார்ந்திருக்கிறாள். மிகவும் சாந்தமான சொரூபம். சன்னதிக்குச் சற்றுத் தள்ளி முன் மண்டபம். மண்டபத்தில் அம்மனின் வாகனங்கள் இருக்கின்றன. வெளிப் பிரகாரத்தில் அம்மனின் எதிரே பலிபீடத்திற்குச் சற்றுத் தள்ளி ஒரு பெரிய குளம். சில வருடங்களுக்கு முன்னால் சுத்தமாக இருந்த குளம் தற்சமயம் சுத்தப்படுத்துதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. வடக்கு வாசல் வழி நுழைந்தால் உள்ளே நுழையும்போதே பேச்சி அம்மன் சன்னதி. பரம்பரைப் பூசாரிகளால் பூஜை செய்யப்படுகிறது. தற்சமயம் கோவில் கட்டுமானப் பணி விரிவுபடுத்தப் படுகிறது. இதற்கு முன்னால் ராஜகோபுரம் கிடையாது. தற்சமயம் ராஜகோபுரம் நிர்மாணிக்கும் பணி, வரும் பக்தர்கள் அங்கேயே குளித்துப் பூஜை செய்யும்படியான தங்குமிடம் வசதி முதலியன செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கும்பாபிஷேஹத்திற்குத் தயார் ஆகி வருகிறது.

சுற்று வட்டாரம் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற்றிச் செல்வதைக் காண முடியும். மிகவும் சக்தி வாய்ந்த அம்மன். இவள் அருளால் தான் பெருமாளும் தன் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என நம்புகிறேன். படங்கள் இருக்கின்றன. ஆனால் எனக்கு Tata Indicom-ல் 3 மாதத்துக்குக் கிடைக்கும் 1 1/2 GBயும் தீர்ந்துவிடும் என்று எல்லாரும் சொல்வதால் படங்கள் போடவில்லை. இருந்தாலும் கண்கண்ட தெய்வமான மாரி அம்மன் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டாம். எங்கள் வீட்டில் அவள் அருளால் தான் நாங்கள் இன்று இந்த நிலையில் இருக்கிறோம் என்று சொன்னால் மிகை இல்லை. உலகத்து நாயகியான அவள் தாள் பணிந்தால் நம்முடைய மனம் அமைதி பெறும். அவளே நமக்கு அடைக்கலம் தருவாள்.

"உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன் பாதம் சரண் புகுந்தோம்-எங்கள் முத்து மாரியம்மா எங்கள் முத்து மாரி!"

6 comments:

Geetha Sambasivam said...

this test is also not given be me. Thanks for Siva.

ALIF AHAMED said...

தொடரட்டும் ஆன்மிக பணி

வாழ்த்துக்களுடன்

மின்னல்

Geetha Sambasivam said...

ரொம்ப நன்றி மின்னல், முதல் வாழ்த்துக்கு.

Geetha Sambasivam said...

திரு தி.ரா.ச. அவர்கள் வாழ்த்துப் பின்னால் போய்விட்டது. மன்னியுங்கள் சார். வாழ்த்துக்கு நன்றி. எல்லாப் புகழும் "நாகை சிவாவிற்கு".

Geetha Sambasivam said...

ரொம்ப நன்றி வேதா.

Geetha Sambasivam said...

ஈஸ்வர்,
தம்பி, என் அருமை மருமகனே, அண்ணன் பையனே! என்னோட இன்னொரு பதிவைப் பார்த்தியா? அதனாலே கொஞ்சம் அடக்கியே வாசிடாப்பா தம்பி, என்னோட மானத்தை வாங்கிடாதேடா கண்ணா! :D