எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, April 04, 2009

துவாரகையில் கிருஷ்ணரைக் காணோம்! 1

துவாரகையில் இப்போ இருக்கும் கிருஷ்ணனின் திருமேனி புராதனமான ஒன்றல்ல. துவாரகையில் இருந்த பழைய மூர்த்தம் பரோடாவுக்கு அருகே உள்ள டாகோர் என்னும் ஊருக்குக் கடத்தப் பட்டது. என்ன ஆச்சரியமா இருக்கா? ஆனால் அது தான் உண்மை என்று குஜராத்தியர்கள் சொல்லுகின்றனர். இந்த டாகோர் என்னும் ஊரில் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த வஜேசிங் என்னும் பெயர் கொண்ட ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரை பொடானோ என்னும் பெயரிலும் அழைக்கின்றனர். இந்த வஜேசிங் கிருஷ்ணனிடம் மிகவும் பக்தி கொண்டவர். துளசிச் செடியைத் தன் உள்ளங்கைகளில் வைத்து வளர்த்து, அந்தச் செடியை ஒவ்வொரு வருஷமும் இரு முறைகள் டாகோரில் இருந்து துவாரகைக்கு நடைப் பயணமாய்ச் சென்று அங்கே கோயில் கொண்டிருக்கும் ரண்சோட்ராய் ஆன ஸ்ரீகிருஷ்ணனுக்குச் சேர்ப்பித்து வருவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். கிருஷ்ணனை குஜராத்தியர் ரண்சோட்ராய் என்றே அன்புடன் அழைக்கின்றார்கள்.

இப்படிச் சென்று வந்த வஜேசிங்கிற்கு நாளாவட்டத்தில் மூப்பு எய்தவே, அவரால் நடந்து துவாரகை செல்ல முடியவில்லை. ஒரு முறை மிகவும் கஷ்டத்துடன் சென்று வந்த அவர் மறுமுறை செல்லத் தயார் ஆகிக் கொண்டிருந்தபோது கிளம்பும் முன்னர் முதல்நாள் இரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் ரண்சோட்ராய் அவர் கனவில் தோன்றி, “வஜேசிங், நீ இனி துயரப் படவேண்டாம். உன் பக்தியில் நான் மனம் மகிழ்ந்தேன். ஆகவே இம்முறை நீ துவாரகை வரும்போது உன்னுடன் நானும் வந்துவிடுகின்றேன். இனி ஒவ்வொரு முறையும் துவாரகை வந்து என்னைத் தரிசனம் செய்ய நீ கஷ்டப் படவேண்டாம்.” என்று சொல்கின்றார். விழித்து எழுந்த வஜேசிங் ஒரு கணம் என்ன நடந்தது என்பதை நம்பவே இல்லை. அவ்வளவில் துவாரகைப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் இம்முறை ஒரு வண்டியையும் கூடவே எடுத்துச் சென்றார்.

அந்த வண்டியிலேயே சென்ற அவர் துவாரகையில் கிருஷ்ணர் சந்நிதியை அடைந்து தரிசனம் செய்து கொண்டார். கிருஷ்ணர் எவ்விதம் தன்னுடன் வரப் போகின்றாரோ என்ற கவலையிலும் ஆழ்ந்தார். பின்னர் அவருக்குத் தோன்றியது, நாம் தான் கிருஷ்ணரைத் தூக்கி வரவேண்டும் என. ஆகவே நடு இரவு வரை காத்திருந்து கோயில் பணியாளர்கள் அனைவரும் சென்றதும், மெதுவாய்க் கோயிலுனுள் நுழைந்து, மூலவரைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து தன் வண்டியில் வைத்துத் தானே அதைத் தள்ளவும் ஆரம்பித்தார்.

4 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

இது எனக்குப் புதுதகவல்...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்க்... :)

Geetha Sambasivam said...

வரவுக்கு நன்றி, மெளலி, அப்பாடானு இருக்கு, புது தகவல்னு சொன்னது! :)))))))))

திவாண்ணா said...

ஹிஹி தெஇஞ்ச தகவல்தான்!

ஆமா, எப்படி இந்த மாதிரி போர்களத்திலேந்து ஓடிப்போனவன் ன்னு பேர் வெச்சாங்க? அதை கொண்டாடவும் செய்யறாங்க?

Geetha Sambasivam said...

திவா, இது தெரிஞ்சிருக்கு, அது மட்டும் தெரியாதா என்ன? சொல்லப் போறதில்லை, போங்க! :P:P:P