எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, April 16, 2009

ஜெய் சோம்நாத்!

லகுளீசர்கள்/லகுலீசர்கள்?? பற்றிய திரு வெங்கட்ராம் திவாகரின் குறிப்புகளில் இருந்து:

//கீதாம்மா!

காபாலிகர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு. பாசுபத விரதிகளான லகுளீசர்கள் வேதம் கற்றவர்கள். ஆகமம் பயின்றவர்கள். மகுடாகம நிபுணர்கள். இப்போதும் காசியில் இவர்கள் பண்டிதர்களாகப் போற்றப்படுகின்றனர். பல புத்தகங்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.

சோழர்கள் காலத்தில் சமாதிக் கோயில் நிர்வாகங்களை இந்த குஜராத்திய லகுளீசர்கள் கவனித்துக் கொண்டார்கள். குறிப்பாக மாமன்னன் ராஜராஜன் மற்றும் ராஜேந்திர காலத்தில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் உடையாளூர் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளன.//
***********************************************************************************

லகுலிசர்களைப் பற்றி திரு திவாகர் கூறியதைப் பார்த்தோம். மஹாபாரதத்திலும் வனபர்வத்தில் பீமனுக்கு புலஸ்தியர் இந்த க்ஷேத்திரத்தின் பெருமையை எடுத்துரைக்கிறார். அப்போது இங்கே ஈசன் அக்னி உருவில் நிரந்தரமாய் உறைந்திருப்பதாயும் பீமனுக்குச் சொல்லப் படுகின்றது. ஸ்காந்தத்தில் பிரபாஸ க்ஷேத்திரம் காலாக்னி ருத்ரனுடைய இடமாய் வர்ணிக்கப் படுவது தான் பின்னால் சோம்நாத் என்ற பெயரில் மாறி இருப்பதாகவும் ஐதீகம். சோமா என்றால் அம்பிகையுடன் சேர்ந்த ஈசனைக் குறிக்கின்றது. மேலும் ஸ்காந்த புராணத்தின் பிரபாஸ காண்டம் சொல்லுவதாவது: சோம்நாத் என்பதை ஹம்ஸ என்று சொல்லுகின்றது. சிவன் சக்தியான உமையுடன் ஐக்கியமாகி இருப்பதையே அது குறிப்பதாயும் சொல்லுகின்றது. “ஹம்ஸ” என்ற சொல்லிலேயே பரமபுருஷன் ஆன ஈசனும், ஈசனோடு ஐக்கியமான அம்பிகையான ப்ரக்ருதியும், அவர்களில் இருந்து பிறந்த பிரணவத்தையும் குறிக்கிறது. ஆகவே அம்பிகையும், ஈசனும் ஐக்கியமாகி உள்ள இந்த சோம்நாத் க்ஷேத்திரத்தின் மகிமை சொல்ல முடியாததாகும்.

இப்போது சோம்நாத்தின் சரித்திர முக்கியத்துவங்களைக் காண்போம். உலகிலேயே வேறெந்தக் கோயிலையும் விட மிக மிக அதிக அளவில் தாக்கப் பட்டு மூலஸ்தான மூர்த்தியே உடைத்தெறியப் பட்டது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. எனினும் சாம்பலில் இருந்து உயிர்த்து எழும் பீனிக்ஸ் பறவையைப் போலவே இந்தக் கோயிலும் ஒவ்வொரு முறையும் எழும்பி நின்றிருக்கின்றது. இனியும் நிற்கும். உலகப் புகழ் பெற்ற தாவர இயல் விஞ்ஞானியான ஜகதீஷ் சந்திரபோஸ், இந்தியாவின் கலாசாரத்தைப் பற்றிக்கூறுகையில், “ இந்த நாட்டின், இந்த இந்து மதம் என அழைக்கப் படும் நாகரீகத்தில் ஒரு அற்புத சக்தி இருக்கின்றது. அப்படிப்பட்ட அற்புத சக்தி இருப்பதாலேயே காலத்தினால் ஏற்படும் அனைத்து அழிவுகளையும், உலகத்திலே உள்ள பொருட்களைச் சிதைக்கும் மாறுதல்களையும் இது எதிர்த்தது, எதிர்க்க வல்லது.” என்று சொன்னார். எத்தகையதொரு தீர்க்க தரிசனம்? இன்றும் அப்படியே நடந்து வருவது இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. பல்வேறுவிதமான கலாசாரத் தாக்குதல்களிலேயும் நம் கலாசாரமானது இன்னும் உயிர்ப்புடனேயே இருந்து வருகின்றது என்று பெருமையுடனேயே சொல்லலாம். மஹாகவி பாரதியார் சொன்னது போல் நம் நாகரீகம் “மரணமில்லாத கற்பக விருக்ஷம்” அதற்கு எடுத்துக்காட்டுகளே, நம் கோயில்கள் ஆகும்.

இந்தப் பிரபாஸ பட்டணம் பற்றிய ஒரு குறிப்பு, இப்போதுள்ள சோம்நாத் நகரின் பத்ரகாளி அம்மன் ஆலயத்தின் கல்வெட்டுப் படி இந்தக் கோயில் சந்திரனால் பொன்னாலும், ராவணனால் வெள்ளியாலும், கிருஷ்ணரால் சந்தனத்தாலும், அதன் பின்னர் பீமதேவன் என்னும் மன்னனால் மணிகள் இழைக்கப் பட்ட கல்லாலும், கட்டப்பட்டுக் காலப் போக்கில் சிதிலமடைந்து, குமார பாலன் என்னும் மன்னனால் புதுப்பிக்கப் பட்டு மேரு என அழைக்கப் பட்டது. பீமன் என்னும் மன்னன் காலத்தில் கட்டப் பட்ட கற்கோயிலின் மிச்சம் இது எனச் சொல்லப் படுகின்றது. படங்கள் உதவி: கூகிளார். இப்போப் படம் எல்லாம் எடுக்க முடியலை. ஆனால் இந்த மிச்சம் இவ்வள்வு இல்லை எனினும் சிதைந்த கோயிலின் பகுதிகள் காணப் படுகின்றன.

கி.பி. முதலாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப் பட்ட இந்தக் கோயில் அதன் பின்னர் ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் நாலாம் தாராசேனன் என்பவனால் மீண்டும் கட்டப் பட்டது. அதன் பின்னர் கி.பி. 800-950 ஆண்டுகளுக்குள்ளாக சோமநாதர் ஆலயம் மீண்டும், மீண்டும் புதுப்பிக்கப் பட்டது. பத்தாம், பதினோராம் நூற்றாண்டில் கூர்ஜரம் என அப்போது அழைக்கப் பட்ட குஜராத்தின் பிரதிஹாரர்கள், தங்கள் சிற்றரசர்களிடம் செளராஷ்டிரத்தில் இருந்த இந்தக் கோயிலின் நிர்வாகத்தை ஒப்படைத்துச் சிறப்பாய் நிர்வாகம் செய்யப் பட்டு சோமநாதம் புகழின் உச்சியில் இருந்தது. பிரபாஸ பட்டணம் என்ற இந்த சோமநாதம் கடற்கரையில் இருந்ததால் அயல்நாட்டு வாணிபத்திலும் சிறந்தே விளங்கி வந்திருக்கின்றது, பல நூற்றாண்டுகளுக்கும் மேலே. இஸ்லாமிய சமூகம் தோன்றும் முன்னர் இருந்தே வாணிபத்தில் புகழ் பெற்றிருந்த பிரபாஸ பட்டணத்தின் வாணிபம் பின்னும் சிறந்தே விளங்கியது. அரேபியக் கப்பல் தலைவன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, இங்கே மசூதி கட்டிக் கொள்ள அப்போதைய அரசன் அனுமதி கொடுத்ததோடு, மசூதியின் செலவுகளுக்காகவும், பராமரிப்புக்காகவும் சில கடைகளின் வருமானத்தையும் கொடுத்ததாய்க் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. அப்போது இங்கே வந்த சில வெளிநாட்டு மற்றும் இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி, இந்த ஆலயத்திற்கு வேண்டிய நீர் கங்கையில் இருந்தும், புஷ்பங்கள் காஷ்மீரத்தில் இருந்தும் தினந்தோறும் வந்தவண்ணம் இருந்தன. 10,000 கிராமங்களுக்கும் மேல் மானியமாய் கோயிலின் பராமரிப்புக்காக அரசனால் வழங்கப் பட்டிருந்தன. தினசரி வழிபாட்டிற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்தணர்கள் நியமனம் செய்யப் பட்டிருந்தனர். இங்கே முண்டனம் செய்து கொள்ளுவது சிறப்பாய்க் கருதப் பட்டதால், முண்டனம் செய்யவென்றே 300க்கும் மேற்பட்ட நாவிதர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். 300 பெண்கள் ஈசனுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இசையும், நடனமும் செய்து இறைத்தொண்டாற்றி வந்தனர். கருவறையில் ரத்தினங்களால் இழைக்கப் பட்ட தீபங்கள் ஒளிர்ந்தன. 250 மாண்டு எடையுள்ள தங்கச் சங்கிலியால் ஆலயமணி கட்டப் பட்டிருந்தது. கோயிலின் பொக்கிஷ அறையில் பொன்னும், மணியும், ஆபரணங்களும், பொன்னாலும், வெள்ளியாலும் ஆன பூஜாப் பாத்திரங்களும் ஏராளமாய்க் குவிந்திருந்தன. கிரஹணம் சம்பவிக்கும் சமயம் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடி கடல் நீராடி சோமநாதருக்கு வழிபாடுகளும், முன்னோருக்கு நீத்தார் கடனும் செய்தனர்.

இந்து ராஜாக்களின் காலத்திலே இந்தக் கோயில் மட்டுமின்றி, கோயிலில் வழிபாடுகள் நடத்தும் அந்தணர்களும் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். போர்முறைகள் கற்பிப்பதில் இருந்து கோயில்கள் கட்டக் கற்பிப்பது வரையிலும் அனைத்திலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். அரசர்கள் இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டே நாட்டை ஆண்டு வந்தனர். பெருமளவு மானியங்களையும் இவர்களுக்கு அளித்தனர். கோயிலை விட்டு அநேகம் அந்தணர்கள் வெளியே வருவதில்லை, எனினும் அரசர்கள் கோயிலுக்கு வந்து இவர்களைக் கண்டு ஆலோசனைகள் பெற்றுச் சென்றனர். இவர்களுக்கு அளிக்கப் பட்ட மானியங்களையும் சேர்த்துக் கோயிலின் வளர்ச்சிக்கும், மேலே கோயில்கள் கட்டவும் செலவு செய்யப் பட்டது. ஆகவே இந்தக் கோயிலுக்குப் பெருமளவு சொத்துக்கள் இருந்து வந்திருக்கின்றது. அந்நியர்கள் முதலில் இந்தக் கோயிலை அழித்தால் தான் இங்கே அவர்கள் ஆட்சியை நிறுவ முடியும் என்பதை உணர்ந்தார்கள். ஆகவே கோயில் முதலில் தாக்கப் பட்டது.

2 comments:

தக்குடு said...

கீதாம்மா, அருமையான கருத்துக்கள். அற்புதமான நடை. வாழ்த்துக்கள்.

தம்பி

Geetha Sambasivam said...

வாங்க தம்பி, என்ன திடீர்னு இந்தப் பக்கம் காத்தடிக்குது??