
முகமது தன் பெரிய படையோடு கஜினியில் இருந்து கி.பி. 1024-ம் ஆண்டு புறப்பட்டான். முகமதிய ஆண்டு ஷபான் ஏ.எச். 415 என்று சொல்லப் படுகிறது. படையின் வீரர்களுக்குச் சம்பளம் இல்லை. ஆனால் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும் ஆவலிலே வந்தார்கள் எனச் சொல்லப் படுகிறது. எதிர்ப்புகள் அதிகம் இல்லாத பாதையில் எச்சரிக்கையோடு வந்த சுல்தான் சோமநாத்தில் முப்புறமும் கடலால் சூழப்பட்டும், கோட்டை கொத்தளங்களில் ஆயுதங்கள் தாங்கிய வீரர்களையும் கண்டான்.

அந்த அழகிய மண்டபத்தின் நடுவில் சோமநாதரின் சிலா உருவம். இரண்டடி பூமியில் பதிந்திருந்தது. சிலைக்கருகே சுல்தான் வந்து தன் கோடரியால் அதை உடைத்தான். கஜினிக்கு அனுப்பப் பட்டது அந்த உடைந்த சிலைத் துண்டுகள். சோமநாத லிங்கத்தின் துண்டுகளில் ஒன்று கஜினியில் உள்ள மசூதியின் வாயிலிலும், மற்றொரு துண்டு தனது அரண்மனை வாயிலிலும் கிடக்குமாறு ஆணையிட்டான் மன்னன். இன்றும் இவை கஜினியில் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. மற்ற துண்டுகளில் இரண்டு மெக்காவுக்கும், மெதினாவுக்கும் அனுப்பப் பட்டன.
சுல்தானுக்குப் பெருமளவு பொன்னும், பொருளும் கொடுப்பதாயும் சிலையை உடைக்கவேண்டாம் எனவும் கோயிலில் வழிபாடுகள் நடத்தும் அந்தணர்களால் கோரப் பட்டது. ஆனால் கஜினி பொன்னைப் பெற்றுக் கொண்டு போய்விட்டால் தான் விரும்பும் பட்டம் கிடைக்காது, சிலை விற்பவன் என்றே சொல்லுவார்கள் என நினைத்தான். ஆகவே சிலை உடைக்கப் பட்டது . என்று தாரிக்-இ-ஃபிரிஷ்டா என்னும் பாரசீக நூல் கூறும் செய்தி ஆகும். கஜினி எதிர்பாராமல் வந்து மோதியதாலேயே சோமநாதம் தகர்க்கப் பட்டது என்று சொல்லுகின்றனர். ஏனெனில் கஜினி வரப் போவதை அறிந்த இந்து மன்னர்கள் அனைவரும் பரம்தேவ் என்னும் அரசன் தலைமையில் ஒன்று கூடி முகமதின் வழியை மறைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கஜினி முகமதோ அவர்களை நேரில் சந்தித்துச் சண்டையிடாமல் அரபுக்கடற்கரை ஓரமாகவே வந்து, சிந்து வழியாக உள்ளே நுழைந்து முல்தான் வழியாகப் படை வீரர்களை வழி நடத்தினான். இதில் அவனுக்கும் பெருமளவில் உயிர்ச்சேதம் படைகளின் குதிரைகள், ஒட்டகங்கள் ஆகியவை இறந்தன.
ஆனாலும் அப்போது மாலவத்தையும், குஜராத்தையும் ஆண்டு வந்த அரசர்கள் ஆன பீமனும் , போஜனும் சேர்ந்து இந்தக் கோயிலை உடனே கட்டினார்கள். அப்போது சக்கரவர்த்தியாக இருந்த சித்தராஜ ஜெயசிம்மன் என்பவன் இந்தக் கோயிலுக்கும்,கோயிலைத் தரிசிக்கச் செல்லும் யாத்ரீகர்களுக்கும் வரிவிலக்கு அளித்தான். அடுத்து வந்த குமாரபாலன் என்னும் அரசனும் கோயிலை விரிவு செய்து கொடுத்தான். மேலும் கோயிலுக்கு நடந்தே வந்து காணிக்கைகள் கொடுத்தான்.

டிஸ்கி: சரித்திரக் குறிப்புகள் உதவி: IMMORTAL INDIA, VOLUME 2, BY J.H.DAVE, K.M. MUNSHI,
BHAVAN'S BOOK UNIVERSITY, PUBLISHED BY BHARATIYA VIDYA BHAVAN, BOMBAY. YEAR 1959, REPUBLISHED 1970
3 comments:
ம்ம்ம்ம் கடுமையான ஆராய்ச்சி பதிவு! நல்லா இருக்கு.
@திவா, நன்றி.
சௌராஷ்ட்ரர்கள் தென்னாட்டிற்கு வந்ததற்கு முதன்மைக் காரணமாக சோமநாதத்தின் மீது கஜினி எடுத்த படையெடுப்புகளைத் தான் சொல்கிறார்கள். கேள்விபட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
Post a Comment