
இப்போ துவாரகையில் இருந்து வரவங்க கிட்டே இருந்து இந்தக் கிருஷ்ணனை எவ்வாறு மறைப்பது? பொடானோ கலங்கினார். யோசித்தார். பின்னர் தோன்றியது அவருக்கு. கண்ணனை மறைத்து வைக்கச் சரியான இடம் கோமதி குளமே என.
கிருஷ்ணர் கோமதி குளத்தில் மறைத்து வைக்கப் பட்டார். குகுளி பிராமணர்களும் தக்க ஆட்களோடு வந்துவிட்டனர் கிருஷ்ணனைத் தேடி. சண்டை நடக்கின்றது. சண்டையின் முடிவு இருவிதமான வாதங்களாய்ச் சொல்லப் படுகின்றது. ஒரு வாதம், கோமதி குளத்தில் கிருஷ்ணரை மறைத்ததுமே பொடானோ வஜேசிங் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுவிட்டார் எனச் சொல்கின்றது. அதைத் தெரிந்த கூட்டத்தினர் அவரின் விதவை மனைவியிடம் போய்ச் சண்டை போட்டு விக்ரஹத்தைத் திரும்பக் கேட்டதாயும், பின்னர் வஜேசிங்கின் மனைவி மிகுந்த போராட்டத்திற்குப் பின்னர் விக்ரஹத்திற்குப் பதிலாய்ப் பொன்னைத் தர ஒப்புக் கொண்டதாகவும் சொல்கின்றனர்.
இன்னொரு வாதம் கோமதி குளத்தில் விக்ரஹம் ஒளித்து வைக்கப் பட்டதைக் கண்டறிந்த கூட்டத்தினர் விக்ரஹத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட, அப்போது நடந்த சண்டையில் பொடானோ வஜேசிங் இறந்ததாகவும், விக்ரஹத்தின் ஒரு பக்கத்தில் அம்பு பட்டதாகவும், அந்தத் தழும்பு இன்றளவும் விக்ரஹத்தில் இருப்பதாகவும் சொல்கின்றனர். எது எப்படியோ விக்ரஹம் கண்டு பிடிக்கப் பட்டது. ஆனால் பொடானோவோ உயிருடன் இல்லை. அவர் மனைவியோ பிடிவாதமாய் மறுக்கின்றாள் கிருஷ்ணரைக் கொடுக்க. பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு இடையே அந்தக் கிருஷ்ணர் விக்ரஹத்தின் எடைக்கு எடை பொன்னைப் பெற்றுக் கொண்டு செல்லுமாறு துவாரகா வாசிகளுக்குக் கட்டளை பிறக்கின்றது. அதுவும் கிருஷ்ணரே துவாரகா பிராமணர்களின் கனவில் வந்து சொல்லுகின்றார். மேலும் துவாரகையில் புனர்நிர்மாணம் செய்யவேண்டிய விக்ரஹம் அங்கே உள்ள சாவித்திரி குண்டத்தில் இருந்து கிடைக்கும் எனவும் சொல்கின்றார்.
அரை மனதாய் ஒப்புக் கொண்ட பிராமணர்கள் எடைக்கு எடை பொன்னைக் கேட்கின்றனர். இவ்வளவு ஏழையான ஒருவனிடம் என்ன பொன் இருக்கப் போகின்றது? கடைசியில் விக்ரஹத்தை எடுத்துச் சென்றுவிடலாம் எனவே எண்ணினார்கள்.

நம்ம கிருஷ்ணரோ சர்வ செளக்கியமாய் டகோரில் கோயில் கொண்டார்.

தற்சமயம் கோயிலை உள்ளூர் மக்களே நிர்வகிக்கின்றனர். எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும் இந்தக் கோயில் பரோடாவில் இருந்து ஒன்றரை மணி நேரப் பிரயாணத்தில் உள்ளது. ஆனந்த் இதற்கு மிக அருகில் இருந்தாலும், பரோடாவில் இருந்து சென்றால் ஆனந்தை அடையாமலே செல்லலாம். ஆனால் உம்ரேத் என்னும் ஊரைத் தாண்டியே செல்லவேண்டும். வழியெங்கும் புகையிலைப் பயிர்கள். செழிப்பாய் வளர்ந்து நிற்கின்றன. அந்தப் பகுதியே செல்வச் செழிப்போடு இருப்பது நன்கு தெரிகின்றது. குஜராத்தியர் வெளிநாட்டில் வசித்தாலும், தங்கள் பணத்தை இந்தியாவிலேயே முதலீடு செய்கின்றனர். ஆகையால் சிறு கிராமமாய் இருந்தாலும், தரமான சாலைகள், நல்ல கட்டிட அமைப்புள்ள பள்ளிகள், குடிநீர் வசதி என அடிப்படை வசதிகளோடு காண முடிகின்றது. இறை பக்தியும், கலாசாரம், மொழி ஆகியவற்றைக் காப்பதிலும் அவர்களுக்கு ஒப்புவமை சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக குஜராத்தி மொழியிலேயே பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. குழந்தைகளுக்கு எண்கள் குஜராத்தி மற்றும் நமக்குப் பழக்கப்பட்டிருக்கும் ரோமன் எண்கள் இரண்டுமே கற்பிக்கப் படுகின்றன. பெண்களுக்கு அவர்கள் என்ன படிப்புப் படித்தாலும் இலவசம் தான். டாக்டரோ, மருத்துவமோ அல்லது துறைகளில் ஆய்வு செய்வதோ எதுவானாலும் இலவசமே.
இத்தனை இருந்தும் பக்தி செலுத்துவதில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது. நாங்கள் டகோர் சென்ற அன்று செல்லும்போதும், திரும்பி வரும்போதும் கூட்டம் கூட்டமாய் மக்கள் அனைவரும் சேர்ந்து ஆடிப் பாடிக் கொண்டு பெரிய பதாகைகள், கொடிகள், மற்றும் கோயில் உற்சவங்களுக்குத் தேவைப் படும் பொருட்கள், வழிபாட்டுப் பொருட்கள் என எடுத்துக் கொண்டு வந்ததைப் பார்த்தோம். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் மிகப் பணம் படைத்தவர்கள் என்பதும், சிலர் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கின்றனர் என்பதும் விசாரித்ததில் தெரிய வந்தது.

பல்வேறு வைணவ சம்பிரதாயங்கள் இருக்கின்றன குஜராத்தில். சிலர் ராமானுஜரையும், சிலர் ராமானந்தரையும், சிலர் கபீரையும், சிலர் ஸ்வாமிநாராயணனையும், சிலர் வல்லபாசாரியாரையும் பின்பற்றுகின்றனர். எனினும் கிருஷ்ணன் அனைவருக்கும் பொது. அவனை நினைப்பதிலேயோ, அவனுக்குச் செய்வதிலேயோ அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. தாங்கள் பெற்ற பிள்ளைகளை விடவும் ஸ்ரீகிருஷ்ணனே அவர்களுக்கு அன்றும், இன்றும், என்றும் முதல் பிள்ளை, மூத்த பிள்ளை. டாகோர் கோயில் எந்தவிதமான வைணவ சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் கிருஷ்ணன் ஒருவனை மட்டுமே பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றது.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!
2 comments:
எங்காவது தீர்த்த யாத்திரை செல்வதானால் உங்களுடன் போகணும் அப்படின்னு நினைக்கிறேன்..அருமையா எழுதிவருகிறீர்கள். நன்றி.
ஆமாம் அவர்கள் கொடுக்க அஞ்சாதவர்கள் அதான் கிடைக்கவும் கிடைக்கிறது.
Post a Comment