எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, February 20, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம், திருவாரூரின் அவலம்!

முதலில் இந்தக் கோயிலின் தலவரலாற்றைப் பார்ப்போமா?? பலருக்கும் தெரிந்த கதையாகவே இருந்தாலும் நினைவு படுத்துக்கொள்ளலாமே?? திருமால் எந்நேரமும் தன் மனமாகிய தாமரையில் ஈசனை இருத்திப் பூஜித்து வந்தார். ஈசனைத் தனியாகப் பூஜிக்கவில்லை. கூடவே அன்னையையும், அவர்கள் அம்சமான சிவகுமாரனையும் சேர்த்தே வழிபட்டு வந்தார். பூசலார் நாயனால் தன் நெஞ்சிலே ஈசனுக்குக் கோயில் கட்டியதற்கு இப்போ திருமாலே முன்னோடி எனலாம். தன் மனதுக்குள்ளாகவே நெஞ்சே கோயிலாக சோமாஸ்கந்தரை அங்கே பிரதிஷ்டை செய்து வழிபடலானார் காக்கும் கடவுளான விஷ்ணு. தேவேந்திரனுக்கு வழக்கம்போல் துன்பம் வந்திட சிவ வழிபாடு சிறந்தது என நினைத்து அவன் திருமாலிடம் வழிபடும் விதம் கேட்டான். தன் நெஞ்சிலே வைத்துப் பூஜித்து வந்த சோமாஸ்கந்தரை அவனிடம் கொடுத்து அந்தத் தியாகேசரை வழிபடச் சொன்னார் திருமால். தேவேந்திரனும் முறைப்படி வழிபட்டு வந்தான். அசுரர்கள் தொல்லை தாங்கவில்லை. இந்திரலோகத்தை வலன் என்னும் அசுரன் தாக்கிக் கடும்போர் புரிந்தான். பூவுலகில் அப்போது முசுகுந்தன் என்னும் சக்கரவர்த்தியின் ஆட்சி நடந்து வந்தது. முன் பிறவியில் ஒரு குரங்காய்ப் பிறந்திருந்த அவன், சிவ பூஜை செய்து வந்ததன் பலனாக இப்பிறவியில் மன்னனாய்ப் பிறந்து ஆண்டு வந்தான். ஆயினும் முன்பிறவியில் கேட்டிருந்த வரத்தின்பலனாகத் தன் முன்பிறவியை மறவா வண்ணம் அதே குரங்கு முகத்தோடேயே பிறந்திருந்தான். இந்திரனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தான். இப்போது நண்பனுக்கு ஒரு பிரச்னை என்றதும், வலனைத் தோற்கடிக்க உதவி செய்தான். தேவேந்திரனும் அவன் உதவியை வேண்டிப் பெற்றுக்கொண்டான். வலன் தோற்கடிக்கப் பட்டான்.

தேவேந்திரன் வெற்றி கிட்டியதைக் கொண்டாடும் வண்ணம் தியாகேசப் பெருமானின் எதிரே நின்று, தன் நண்பனாகிய முசுகுந்தனை மார்போடணைத்து நன்றி கூறி, “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருவேன்.” என்று சொல்ல, முசுகுந்தன் அந்தத் தியாகேசரே வேண்டுமென்றான். தியாகேசரும் ஜீவசக்தியோடு இருந்தமையால் முசுகுந்தனைப் பார்த்துத் தன் கண்ணசைவால் பூவுலகம் கொண்டு செல்லுமாறு ஜாடை காட்ட, முசுகுந்தனும் மகிழ்ந்தான். தியாகேசரே வருகிறேன் என்றுவிட்டாரே?? முசுகுந்தன் கேட்ட பரிசை தேவேந்திரனுக்குக் கொடுக்க மனமில்லை. அவன் திகைத்துத் திடுக்கிட்டு, “இந்த விக்கிரஹம் திருமாலே வழிபட்டது. அவர் அனுமதி வேண்டும்” என்று சமாளிக்கப் பார்த்தான். ஆனால் திருமாலோ முழுமனதோடு அநுமதி கொடுத்துவிட்டார். ஆனால் இந்திரனுக்கோ தான் ஆத்மார்த்தமாக வழிபட்டு வந்த மூர்த்தியைக் கொடுக்க மனமே வரவில்லை. என்ன செய்யலாம் என யோசித்தான். பின்னர் இந்தத் தியாகேசரைப் போலவே இன்னும் ஆறு மூர்த்தங்களைச் செய்வித்தான். எல்லாம் ஒன்று போலவே இருந்தது. அவற்றோடு மஹாவிஷ்ணு கொடுத்த தியாகேசரையும் வைத்தான். இவற்றில் எது உனக்குப் பிடிக்கிறதோ எடுத்துக்கொள் என்று சொல்ல, முசுகுந்தனோ இறை அருளால், மஹாவிஷ்ணு பூஜித்த தியாகேசர் தான் வேண்டும் என அடையாளம் காட்டினான்.

தேவேந்திரனுக்கு இப்போது மீண்டும் திகைப்பு. எனினும் முசுகுந்தனும் பக்தன். தன் நெருங்கிய நண்பன். அவனுக்கோ நாம் வாக்களித்துவிட்டோம். ஆகவே மறுக்கக் கூடாது என எண்ணி, மனம் நிறைய சந்தோஷத்தோடு ஏழு மூர்த்தங்களையுமே அவனுக்குக் கொடுத்துவிட்டான். பூலோகத்தில் வைத்து பூஜித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அந்த ஏழு மூர்த்தங்களே சப்த விடங்கர்கள் எனப்படுவார்கள். திருவாரூரில் தியாகேசர் மாசி மாசம் ரிஷபக் கொடியோட எழுந்தருளியதாக ஐதீகம்.

மற்றத் தலங்கள்: சப்த விடங்கர்கள் என்பது உளி கொண்டு செதுக்கப் படாத மூர்த்தங்களையே விடங்கம் அல்லது விடங்கர் என்று சொல்வார்கள். டங்கர் என்றால் உளியால் செதுக்கியது. இந்த ஏழு மூர்த்தங்களும் உளியால் செதுக்கப்படாத மூர்த்தங்கள்.

“சீரார் திருவாரூர் சென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு காராயில் பேரான
ஒத்த திருவாய்மூர் உகந்த திருக்கோளிலி
சத்த விடங்கத் தலம் “

திருவாரூரில் வீதி விடங்கர்= ஆடியது அஜபா நடனம். மனதுக்குள்ளேயே ஜபித்துக்கொண்டு ஆடுவது. இது நம் சுழுமுனை சுவாசம் போல என்ற தத்துவமும் குறிப்பிடப் படுகிறது.

திருக்குவளை = அவனி விடங்கர். பிருங்க நடனம். மலருக்குள்ளே வண்டு சென்று ரீங்காரமிட்டுக் குடைவதைக் குறிக்கும் நடனம்.

திருநள்ளாறு= நக விடங்கர்- உன்மத்த நடனம். பித்தன், பிறைசூடியவன் அருளாளன் ஆடிய உன்மத்த நடனம், பித்துப் பிடித்தவன் போல் ஆடியதாம்.

திருநாகை = சுந்தரவிடங்கர்= தரங்க நடனம். கடல் அலைகள் எப்படி ஆடுகின்றன?? மேலேயும், கீழேயும், சுற்றிச் சுழன்றும், கரைக்கு வந்து மோதியும், திரும்பக் கடலுக்குள் சென்றும் ஆடிய ஆட்டமென்ன?? கடல் அலைகளைப் போன்ற நடனம்.

திருக்காராயில்= ஆதி விடங்கர்= குக்குட நடனம். கோழியின் நடை எப்படி இருக்கும்?? அதைப் போல். அனைத்தையும் படைத்தவன் ஆடும் ஆட்டமென்ன???

திருவாய் மூர்= நீல விடங்கர். கமல நடனம். பொய்கையில் பூத்திருக்கும் தாமரை மலர்போன்ற நடனம். தண்டு மட்டும் இருக்கும், மேலே பூ சுற்றுவது ஒற்றைக்காலில் நின்றாடுவது போல் இருக்குமல்லாவா??? அந்த நடனம்.

திருமறைக்காடு= புவனி விடங்கர் . ஹம்ச பாத நடனம். சொல்லவே வேண்டாம், அன்னப் பறவையின் நடனம் போல.

செங்கழுநீர்ப் பூவை வைத்துச் சரியாகக் கணித்தானாம் முசுகுந்தன் வீதி விடங்கரை. ஆகையால் அவருக்குச் செங்கழுநீர்ப் பூ சாற்றுவது விசேஷமாகச் சொல்லப் படுகிறது. மேலும் தேவேந்திரன் தியாகராஜ மூர்த்தங்களை அளிக்கும்போது, கூடவே திமிரி நாகஸ்வரம், பாரி நாகஸ்வரம், முகவீணை, யாழ், தவில், மத்தளம், ஆகியவற்றையும் சேர்த்துக் கொடுத்தானாம். பாரி நாயனம் திருவாரூரில் மட்டுமே வாசிக்கப் பட்டு வந்தது. தற்போதும் இந்த வாத்தியங்கள் எல்லாம் தேவலோக கந்தருது என்னும் குறிப்பிட்ட மரபினரால் வாசிக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். இதைத் தவிர பஞ்சமுக வாத்தியம் என்னும் ஐந்து முகங்களைக் கொண்டதொரு அபூர்வமான வாத்தியமும் இங்கே உண்டு. ஐமுக முழவம் எனப்படும் இதை சங்கரமூர்த்தி என்னும் கலைஞர் வாசித்து வந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இந்த வாத்தியம் சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களில் இருந்து வந்ததாகச் சொல்லப் படுகிறது. சுமார் நான்கடி க்கு மேல் சுற்றளவு கொண்ட இதன் ஒரு முகம் பாம்பு சுற்றியது போலவும், மற்றொரு முகம் ஸ்வஸ்திக் சின்னத்தோடும், மூன்றாம் முகம் தாமரைப் பூ போலும், நான்காம் முகம் அடையாளமில்லாமலும் இருக்கும். ஐந்தாம் முகம் நடுவில் உள்ளது, பெரியதாக இருக்கும் என்றார்கள். மான் தோலால் கட்டப் பட்டிருக்கும் இந்த வாத்தியத்தை நந்தி தேவர் ஈசனின் நடனத்தின்போது வாசித்து வந்ததாகவும், இப்போது வாசிக்கும் பரம்பரையினரை “பாரசைவர்கள்” என்று அழைக்கப் படுவதாகவும் தெரிய வருகிறது. இந்த வாத்தியத்தின் ஒவ்வொரு முகத்தையும் தனியாகவும், அனைத்தையும் சேர்த்தும் வாசிக்கலாம் என்கின்றார்கள். தனியாக வாசிக்கும்போது ஏழு முறையும், சேர்த்து வாசிக்கும்போது ஐந்து முறையும் வாசிக்கப் படுமாம். இந்த வாத்தியம் வாசிக்கவென்றே விதிமுறைகள் இருப்பதாகவும், அதைக்குறிப்பிடும் நூல் இருப்பதாகவும் சொல்கின்றனர். இது தவிரப் பாரி நாயனத்தைத் திருவிழாக் காலங்களில் வீதிகளில் வாசிப்பதாகவும், அதற்கும் எந்த எந்த இடங்களில் எந்தப் பண் வாசிக்கவேண்டும் என்ற விதிமுறை இருப்பதாகவும் சொல்கின்றனர். இங்கே உள்ள விளக்கை விருடி விளக்கு என்கின்றனர். தேர் போன்ற அமைப்பில் மர வடிவ அமைப்பில் உள்ளது இது.

திருவாரூர்ப் பயணம் தொடரும்.

12 comments:

Jayashree said...

எவ்வளவு அழகான விஷயங்கள். போன வாரம் தான் அஜபா மந்த்ரம், நடனம் பற்றி யோசித்தேன்! திருவாரூர் நான் இதுவரை போனதில்லை:(( பொகணும்.

sury siva said...

அஜபா முதலிய நடனங்களுக்குத் தெளிவான விளக்கங்கள்
தந்திருக்கிறீர்கள்.
தங்கள் இறைப் பணி தொடர தியாகேசன் அருள் புரியட்டும்.

சுப்பு ரத்தினம்.

எல் கே said...

அறிந்த கதை அறியாத தகவல்கள்

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, கோயில் நிலைமை கண்ணில் நீர் வர வைக்கிறது.

Geetha Sambasivam said...

வாங்க சூரி சார், ரொம்ப நன்றி, வரவுக்கும், கருத்துக்கும்.

Geetha Sambasivam said...

நன்றி எல்கே.

Jayashree said...

நெட் ல தேடினப்போ கோவில் நன்னா தானே இருக்கு. நிறைய பூஜை, உற்சவம் பத்தி போட்டுருக்கே!. நீங்க வருத்தப்படறதை பாத்தா, நெட் படம் விமரிசனம் எல்லாம் த்ரேதாயுகத்துது போல இருக்கு!. இந்த கோவில் தரும புர ஆதீனம் கீழா? இல்லை அரசாங்கமா?

எல் கே said...

// இந்த கோவில் தரும புர ஆதீனம் கீழா? இல்லை அரசாங்கமா?//

@ஜெயஸ்ரீ
எனக்கு தெரிந்த வரை , கோவிலில் உண்டியல் வைத்தால் அந்த கோவிலை அரசாங்கம் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் எடுத்து கொள்ளும். மேலும் எந்த ஒரு சிறப்பு பெற்ற கோவிலாக இருந்தாலும் அதை ஒழுங்காக செயல்பட விடாமல் தடுக்க பலர் உள்ளனர் .(எ.கா சிதம்பரம் )

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, படங்கள் எடுத்திருந்தால் எங்களுக்கும் நல்லாத் தான் வந்திருக்கும். எட்டுக்குடியிலே விழுந்ததுக்கப்புறம் படம் எடுக்கும் ஆர்வமே போயிடுத்து. அதோட நாங்க போனப்போ உச்சிக்காலம் ஆரம்பிச்சிருந்தது. அதனால் கோயிலில் நடை சாத்தும் அவசரம். கொஞ்சம் விட்டால் எங்களை உள்ளே வச்சே கோயில் நடையைச் சாத்தியிருப்பாங்க. அவ்வளவு அவசரமா அபிஷேஹம், வழிபாடுகள், நிவேதனம் எல்லாம் நடந்தது. சிதம்பரத்தில் அநேகமாய் எல்லாக் காலங்களிலும் பார்த்திருக்கேன். அங்கே பார்த்துட்டு இங்கே பார்த்தப்போ நிஜமாவே மனம் விட்டு அழுதுட்டேன். வீதி விடங்கருக்கு இப்படியானு!:(((((((((

Geetha Sambasivam said...

அப்புறம் எந்த ஆதீனம்னு கேட்கமுடியலை. அரசாங்கத்தின் கையில் தான் இருக்குனு நினைக்கிறேன். கொஞ்சம் விசாரிச்சுட்டுச் சொல்றேனே. எல்கே சொல்றாப்போல் கோயிலில் உண்டியலை வைத்துட்டு வசூல் கணக்குக் காட்டிட்டு அந்தப் பணத்தை அறநிலையத்துறையில் சேர்க்கவேண்டியது ஒன்றே அறநிலையத் துறை செய்துவரும் மிகப் பெரிய பணி. இல்லைனா முன்னேற்றம், பராமரிப்பு என்ற பெயரில் கல் தளங்கள் பாவிய கோயில்களில் கிரானைட் கற்களைப் போட்டு, அந்தப் பராமரிப்புச் செய்ததுனு அவங்க பேரைப் போட்டுப்பாங்க. சரித்திரம்! :((((((((((

Chandrasekaran Vembu said...

எனக்கு தெரிந்து திருவாரூர் கோயில் இந்து சமய அறநிலையத் துறை சார்ந்த கோயில் . 1977 முதல் 1983 வரை நான் கூத்தாநல்லூர் மற்றும் திருவாரூர் இந்தியன் வங்கி கிளையில் பணிபுரிந்த போது பலமுறை சென்று இருக்கிறேன் .
அப்போதே அரசாங்க கட்டுப்பாட்டு கோயில் தான்

Geetha Sambasivam said...

நன்றி. அறநிலையத் துறை என்பதால் தான் மோசமான நிலையில் இருக்கு போல! அதுக்கப்புறம் போக வாய்க்கலை! :(