விறல்மிண்ட நாயனார் திருச்செங்குன்றூரைச் சேர்ந்தவர். இவர் சிவபெருமானிடத்தில் பூண்டிருந்த பக்தி அடியார்களிடமும் பக்தியும் , மதிப்புமாக மாறி இருந்தது. சிவனடியாரை எவரானும் நிந்தித்தாலே அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார். அவருடைய பக்தி அப்போது வீரமாக மாறிவிடும். இவருடைய இந்த வீரத்தின் காரணமாகவே விறல்மிண்டர் என்ற பெயரும் ஏற்பட்டதாய்ச் சொல்லுவார்கள். விறல் என்றால் வீரம் என அர்த்தம். அஞ்சாநெஞ்சம் கொண்ட இவர் ஆலயங்கள் தோறும் சென்று இறைவனைப் பாடித் தொழுது வழிபாடுகள் செய்துவருவார். ஆனால் ஆலயங்களின் மூல மூர்த்தத்தைத் தரிசிக்கும் முன்பு, முதலில் ஆலயத்திற்கு வருகை புரிந்திருக்கும் சிவனடியார்களைத் தொழுது வழிபட்டுவிட்டுப் பின்னரே ஆலயங்களின் மூல மூர்த்தத்தைத் தரிசிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்.
அப்போது ஒருநாள் திருவாரூருக்கு வந்திருந்த இவர், அங்கே இருந்த சிவனடியார்களைக்கண்டு மகிழ்ந்து வணங்கி அவர்களைப் போற்றி நின்றார். அவர் வந்த சமயமே சுந்தரமூர்த்தி நாயனாரும், வன்மீக நாதர் என்னும் புற்றிடங்கொண்ட நாதனைத் தரிசிக்க வந்தார். அடியார்களை மனதால் வணங்கும் பேறு படைத்த சுந்தரர், பக்குவம் மிகுந்திருந்த காரணத்தால் தேவாசிரிய மண்டபத்தில் அடியார்களைக் கண்டும், அவர் வன்மீகநாதரைத் தரிசிக்கவெனச் சென்றார். அடியார்கள் எவரையும் (விறல்மிண்ட நாயனார் உட்பட) வணங்கவில்லை. ஆனால் விறல்மிண்டருக்கு இது மாபெரும் குற்றமாய்ப் பட்டது. சுந்தரருக்கு அகம்பாவம் மிகுந்துவிட்டது எனவும், அதனால் தான் அடியார்களை மதிக்கவில்லை என்றும் நினைத்துக்கொண்டுவிட்டார். ஏற்கெனவே கோபக்காரர் ஆன விறல்மிண்டருக்குக் கோபம் அதிகமாகிவிட்டது. “முதலில் வணங்கத் தக்க அடியார்கள் தேவாதிதேவர்களுக்கும் மேலானவர்கள். இவர்களை வணங்காமல் இவன் நேரே உள்ளே செல்கின்றானே? இவன் ஒரு வன் தொண்டனோ? அடியார்களுக்குப் புறம்பானவனோ? ஆம், ஆம் இவன் வன் தொண்டனே, அடியார்களுக்குப் புறம்பானவனே. இவன் மட்டுமில்லை, இவனை வலிய வந்து ஆட்கொண்ட அந்த வீதிவிடங்கனுமே அடியார்களுக்குப் புறம்பானவனாகிவிட்டான்.” என்று கோபத்துடனும், கடுமை தொனிக்கவும் சொன்னார்.
ஆனால் மனப்பக்குவம் பெற்றிருந்த சுந்தரருக்கோ விறல்மிண்டரின் இந்தச் செய்கையினால் கோபம் வரவில்லை. மாறாக அடியார்களிடம் பக்தி பூண்டிருக்கும் விறல்மிண்டரின் பக்தியை உயர்வாகவும், உன்னதமாகவும் எண்ணி மனம் மகிழ்ந்து பெருமையுற்றார். எம்பெருமானின் சரணங்களில் விழுந்து வணங்கினார். “இந்த அடியார்களுக்கு எல்லாம் நான் அடியானாக ஆகும் பேற்றை எனக்குத் தந்தருளவேண்டும்.” என்று ஈசனிடம் வேண்டினார். ஈசனும் மகிழ்ந்து, “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்ற அடியை எடுத்துக் கொடுத்துப்ப் பாடுமாறு சொல்ல அனைவர் மனமும் மகிழுமாறு எழுந்தது திருத்தொண்டத்தொகை. திருத்தொண்டர்களின் பெருமையைப் பாடிப் புகழும் அந்தப் பதிகங்களைக் கேட்டு விறல்மிண்டரின் மனமும் மகிழ்ந்தது. சுந்தரரின் பக்தி பக்குவமடைந்த பக்தி என்பதையும் புரிந்துகொண்டார்.
விறல்மிண்டரைப் பற்றிய வேறு மாதிரிக் கதையில் சுந்தரரின் மீது கோபம் அடங்காநிலையிலேயே விறல்மிண்டர் திருவாரூரை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால் அதன் பின்னர் திருவாரூரை மிதிக்கவே மாட்டேன். அந்த எல்லைக்கு அருகிலே கூட வரமாட்டேன் என்று திட சங்கல்பம் செய்து கொண்டு இருந்தார். அவர் அடியார்களுக்கு நாள் தோறும் அன்னம் அளித்து வந்தார். தம் இல்லத்திற்கு வரும் அடியார்கள் திருவாரூரைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தால் அவர்கள் காலைத் துண்டித்துவிடுவாராம். இப்படி ஒரு கொடூரமான காரியத்தைச் சுந்தரர் மேல் கொண்ட கோபத்தினால் செய்து வந்ததாகச் சொல்கின்றனர்.
இவரைத் தடுத்தாட்கொள்ள விரும்பிய ஈசன் சிவனடியாராக வந்து உணவுண்ண அமர்ந்தார். முன்னரே அவரின் ஊரைக் கேட்டு அறிந்த விறல்மிண்டரின் மனைவியார் சிவனடியாரான ஈசனிடம் திருவாரூர் என்ற பெயரைச் சொல்லவேண்டாம் எனக் கூறி இருந்தார். ஆனால் ஈசன் தாம் பார்த்துக்கொள்வதாகவும் விறல்மிண்டரின் கொடுவாளை வலப்பக்கமே அது வரை வைத்திருந்ததை அன்று மட்டும் இடப்பக்கம் வைக்குமாறும் மற்றதைத் தாம் பார்த்துக்கொள்வதாயும் சொல்லிவிடுகிறார். உணவுண்ண அமரும்போது தாம் திருவாரூரைச் சேர்ந்தவன் என சிவனடியாரான ஈசன் கூற, கோபம் கொண்ட விறல்மிண்டர் வலப்பக்கம் கை வாளை எடுக்கச் சென்றது. அங்கே வாள் இல்லாமல் தேட மனைவி இடப்பக்கம் வைத்திருப்பதைக் காட்ட அதை எடுப்பதற்குள் சிவனடியாரான ஈசன் எழுந்து ஓட்டம் பிடித்தார்.
விடாமல் அவரைத் துரத்தின விறல்மிண்டரைத் திருவாரூர்க்குள்ளேயே இழுத்துவிட்டார் ஈசன். பின்னர் சிரித்துக் கொண்டே ,”இது திருவாரூர், நீர் உள்ளே வந்துவிட்டீரே?” என்று வினவ, அதிர்ச்சி அடைந்து சுற்றும் முற்றும் பார்த்த விறல்மிண்டர் தம் காலைத் தாமே துண்டித்துக்கொள்கிறார். அவரைத் தேற்றிய ஈசன் தம் சுய உருவைக் காட்டுகிறார். சுந்தரரின் பக்தியைப் பற்றியும் அவரை உணரச் செய்த ஈசன் அவருக்கு முக்தி கொடுத்து அருளிச் செய்கிறார். கைலையிலே சிவகணங்களுக்குத் தலைவனாகும் பேறும் பெறுகின்றார்.
4 comments:
2 வருஷம் முன்ன போனப்போ திருவாரூரும், வன துர்கையும் தான் பாக்க முடியல. திருசேரை பக்கம் சில பழைய கோவில்கள் எதிர்பாக்காம சைட் ட்ராக்ட் ஆயிடுத்து.அடுத்தமுறை கட்டாயம் போக முடியணும்.
சுந்தர மூர்த்தி நாயனாரை நேரே பார்க்கும் சந்தர்ப்பமும் தெய்வம் எங்களுக்கு கொடுத்திருக்கு மிஸஸ்.சிவம் !எப்பவும் அடியார்க்கு அடியான் நம்பி தான் போல இருக்கு :)) அதுக்கு எங்களால எந்த ப்ரதி உபகாரமும் தெய்வத்துக்கு செய்யமுடியுமோ!! என்ன!!? OFF நு நினக்கிறேளா? ஹா ஹா :))))
கோவில்களையும் ஸ்தல புரானங்களையும் இன்றைய தலைமுறைக்கு விளக்கும் நீங்கள் 100 ஆண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
உங்கள் பதிவுகளில் ஒரு தெளிவு உள்ளது . நன்றி
----------------------------------------------------
ஈசனும் மகிழ்ந்து, “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்ற அடியை எடுத்துக் கொடுத்துப்ப் பாடுமாறு சொல்ல அனைவர் மனமும் மகிழுமாறு எழுந்தது திருத்தொண்டத்தொகை::)))))
சுந்தரர் அவர் காலத்தில் வாழ்ந்த 60 அடியார்களுக்கும்
அடியேன் என்று பாடினார் . அவர்களே இப்பொழுது சிவ ஆலயங்களில்
நாயன்மார்களாக உள்ளனர். பின்னால் வந்தவர்கள் இப்பாடலை பாடிய சுந்தரர் மற்றும் அவரது தாய் தந்தையையும் நாயன்மார்களாக சேர்த்தனர். ஆக 63 நாயன்மார்கள்
தனி அடியார்கள் - 60
சுந்தரர் + தாய் + தந்தை - 3
– 63
------------------------------------------
+(தொகை அடியார்கள் – 9)
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. தனித்தனியாப் பதில் சொல்ல முடியலை.
Post a Comment