எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, June 06, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

மீண்டும் குலசேகரனைப் பார்ப்போம். ஹேமலேகாவின் ராணி வாசம் குறித்து அறிந்ததில் இருந்தே அவன் நிலை குலைந்து போயிருந்தான். மிகுந்த மனக் கஷ்டத்தில் இருந்த அவனைக் குறளனோ அரண்மனைக்குப் போய் அரசரைச் சந்திப்போம் என அழைத்துக் கொண்டிருந்தான். குலசேகரனோ எதிலும் நாட்டமில்லாமல் இருந்ததைக் கண்ட குறளனுக்கு இரண்டு நாட்கள் வரையே பொறுமையாக இருக்க முடிந்தது. பின்னர் அவன் குலசேகரனிடம் தன் கடமையில் இருந்து அவன் பிறழ்வதாகக் குற்றம் சாட்டி ஆத்திரப் பட்டான். அதைக் கேட்டக் குலசேகரன் அவனைப் பக்கத்தில் அமரச் சொல்லித் தான் சில விஷயங்களைப் பேச விரும்புவதாய்க் கூறினான். குறளனும் கேட்கத் தயாராக இருக்க அவனிடம் குலசேகரன் ஹேமலேகா மேல் தான் கொண்டிருந்த அபிமானத்தையும் அதைப் புரிந்து கொண்டே ராணி அவளை ராணி வாசத்துக்கு அழைத்திருக்க வேண்டும் எனத் தான் நம்புவதாயும் அதனால் தன் மனம் படும் பாட்டையும் விவரித்தான். குறளன் அதிர்ச்சி அடைந்தான்.

ஆனாலும் அவனால் குலசேகரன் இத்தகைய ஆசாபாசங்களில் ஈடுபட்டதை ஏற்க முடியவில்லை. அவனிடம் நேரிடையாகவே, "சுவாமி, தங்களைப் போன்ற லட்சியவாதி ஒருத்தர் இத்தகைய ஆசாபாசங்களில் ஈடுபடலாமா? அரங்கனை விட நம்முடைய சுக துக்கங்களா முக்கியம்? ஆனானப் பட்ட அந்த அரங்கனே தன் நாச்சியார்களைப் பிரிந்திருக்கிறார். உறையூர்ச் சோழகுலவல்லியையும் சூடிக் கொடுத்து அவரை ஆட்கொண்ட ஆண்டாளையும் பிரிந்திருக்கிறாரே! அரங்கன் இத்தகைய கஷ்டத்தில் இருக்கையில் நாமெல்லாம் இத்தகைய உலக சுகங்களில் பற்று வைக்கலாமா? அரங்கன் இப்போது வனவாசத்தில் இருக்கிறான் என்பதை நினைவு வையுங்கள்." என்றான்.

"ஆம், குறளா, நீ சொல்வது எல்லாம் சரியே! ஆனாலும் என் மனம் படும் பாடு. நானும் அதை எப்படி எல்லாமோ அடக்கிப் பார்க்கிறேன். அது அடங்குவதாக இல்லையே! என் செய்வேன்!" என்று கண்ணீர் விட்டுக் கலங்கினான் குலசேகரன். குறளன் அவனைச் சமாதானம் செய்து அரண்மனைக்கு அரசரைப் பார்க்க அழைத்துச் சென்றான்.  அஙே அரச சபை கூடி இருந்தது. அவர்களைக் கண்டதுமே இரு ராஜ பிரதானிகள் வந்து அவர்களை அழைத்துச் சென்று உரிய ஆசனங்களில் அமர்த்தினார்கள். சபையில் நாட்டியம் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு சேடி அவனிடம் தாம்பூலம் வழங்க வந்தாள். அவள் தாம்பூலம் மட்டும் கொடுக்கவில்லை. கூடவே ஒரு ஓலைச் சுருளையும் கொடுத்தாள். தயக்கமாக வாங்கிக் கொண்ட குலசேகரனுக்கு அதில் ஹேமலேகா, "என்னைப் பார்க்க வருவீர்களா?" என்று எழுதிக் கையொப்பம் இட்டிருந்ததைப் பார்த்தான்.


விரைவில் நிருத்தியம் முடிந்து. எங்கும் தூபம் போட ஆரம்பித்தனர். குலசேகரன் இறங்கி நேரே வெளி முற்றம் நோக்கி நடந்தான். அப்போது ஒரு சேடி அவனருகே வந்து ஹேமலேகா இருக்குமிடம் அழைத்துச் செல்வதாய்க் கூறி, அவனை அழைத்துக் கொண்டு பல தாழ்வாரங்கள், அறைகளைக் கடந்து ஒரு பெரிய கூடத்துக்கு அழைத்துச் சென்றாள். அவனை அங்கே ஓர் ஆசனத்தில் அமர வைத்து விட்டு ஹேமலேகாவை அழைத்து வருவதாய்ச் சென்றாள். சிறிது நேரத்தில் அங்கே ஓர் பெண் வர நிமிர்ந்து பார்த்த குலசேகரன் அங்கே ராணி கிருஷ்ணாயியைக் கண்டு திடுக்கிட்டான். உடனே ஆசனத்திலிருந்து எழுந்து, "எங்கே ஹேமலேகா?" என்று கடுமையாய்க் கேட்டான்.

ராணி கிருஷ்ணாயி உல்லாசமாய்ச் சிரித்துக் கொண்டே, "ஓகோ, அப்போ ஹேமலேகா என்றால் தான் வருவீர்களாக்கும்? என்னைப் பார்க்க வர மாட்டீர்களாக்கும்?" என வினவ, குலசேகரன், "எனக்கு விரும்பியவர்களை நான் பார்ப்பேன். ஹேமலேகா பெயரைச் சொல்லி என்னை இங்கே அழைத்து வந்து ஏமாற்றப் பார்க்கிறீர்களோ?" எனக் கோபமாய்க் கேட்டான். உடனே கிருஷ்ணாயியும் கோபம் கொண்டவளாய் அவனைப் பார்த்து நாக்கை அடக்கிப் பேசுமாறு எச்சரித்தாள். அவன் நுழைந்திருப்பது ராணி கிருஷ்ணாயியின் அந்தப்புரம் என்பதைத் தெரிவித்தவள் யாரைக் கேட்டுக் கொண்டு அவன் அங்கே நுழைந்தான் என்றும் கேட்டாள். இப்படி ராணியின் அந்தப்புரத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தால் சிரச்சேதம் தான் என்பதையும் தெரிவித்தாள். குலசேகரனுக்கு மறுமொழி சொல்லத் தெரியவில்லை. ஆகவே அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடை பெற்று வெளியே செல்ல ஆரம்பித்தான். அப்போது ராணி ஒரு சேடியை அழைத்து அவனை ஹேமலேகா இருக்குமிடம் சென்று அவளைக் காட்டுமாறு உத்தரவு கொடுத்தாள். இனி ராணி வாசத்தில் இருக்கும் பெண்ணைப் பார்க்க யாரும் வரக் கூடாது எனவும் யாருக்கும் இனி அனுமதியும் கிட்டாது என்றும் தெரிவித்தாள்.

அந்தச் சேடிப் பெண் அவனை அழைத்துக் கொண்டு அந்தக் கூடத்தின் அருகே காணப்பட்ட அடுத்த மாளிகைக்குள் நுழைந்தாள். உள்ளே மற்றொரு கூடத்துக்குச் சென்று கதவைத் திறக்கவும் அங்கிருந்த பல பெண்களும் அவர்கள் இருவரையும் பார்த்தனர். அந்தக் கூட்டத்தில் இருந்த ஹேமலேகா குலசேகரனை அடையாளம் கண்டு கொண்டு முன்னால் ஓடோடி வந்தாள். சிவந்த அவள் முகம் இப்போது கருத்துக் கிடப்பதையும் விழிகளின் ஓரத்தில் தன்னைக் கண்டதும் துளிர்த்த கண்ணீரையும் கண்டான் குலசேகரன். மெல்லிய குரலில் அவனைப் பார்த்து அவள், "ஸ்வாமி!" என அழைத்தது யாழின் இசை போல் குலசேகரன் செவிகளில் ஒலித்தது.