எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, June 07, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஹேமலேகா அவனை அழைக்கவுமே குலசேகரன் அவளிடம் அவளைப் பார்க்கவே அவள் அழைத்ததின் பேரில் வந்ததாய்க் கூறினான். ஹேமலேகாவுக்கு ஆச்சரியம். தான் அழைக்கவில்லை எனத் தெரிவித்தவள் தான் ராணி வாசத்தில் இருக்கையில் தன்னை யாரும் பார்க்க வர முடியாது என்பதையும் கூறிவிட்டு அருகே இருந்த சேடியைப் பார்த்தாள். அவள் பார்வையில் இருந்தும், சேடியின் முகபாவத்திலிருந்தும் தன்னை அழைத்தது ராணி கிருஷ்ணாயியே, ஹேமலேகா பெயரைப் பயன்படுத்தி அழைத்திருக்கிறாள் என்பதைக் குலசேகரன் புரிந்து கொண்டான். அவள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்! இதில் ஏதோ சூது உள்ளது. அவள் மனதில் ஏதோ இருக்கிறது என்று நினைத்துப் பெருமூச்சு விட்டான் குலசேகரன்.  யார் அவனை அழைத்தது என்ற உண்மையான விஷயம் தெரிந்ததும் தான் மேலும் அரண்மனையில் தாமதிக்கக் கூடாது என அவன் ஹேமலேகாவிடம் அரச சபைக்கு வந்த தான் அப்படியே அவளைக் கண்டு தன் தாயாரின் திதி எப்போது என அறிந்து செல்ல வந்ததாய்ச் சொன்னான். அவளும் திதியைக் கூறவும் அவளிடம் விடைபெற்றுத் திரும்பியவனை ஹேமலேகா மீண்டும் அழைத்தாள்.

சற்று நேரம் அமைதியாக இருந்த ஹேமலேகா அவனிடம் எச்சரிக்கைக் குரலில் கீழ்க்கண்டவற்றைக் கூறினாள். "ஸ்வாமி, மிருகங்களைப் பொறி வைத்துப் பிடிப்பது போல் சில மனிதர்கள் தங்கள் சௌகரியத்துக்கும் வசதிக்கும் மனிதர்களையும் பொறி வைத்துப் பிடிக்கின்றனர். லட்சியங்கள், கொள்கைகள் முக்கியமாய்க் கருதுபவர்கள் இத்தகையோரிடமிருந்து விலகியே நிற்க வேண்டும். இது நம்மைப் பிடிப்பதற்கான பொறி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அரங்கனைக் காக்கும் தலையாய கடமையில் உள்ள  நீங்கள் இதை எப்போதும் நினைவில் இருத்த வேண்டும். இடையூறுகள் வரும், வரலாம். ஆனால் நம் சொந்த ஆசாபாசங்களை ஒதுக்கிவிட்டு லட்சியத்திலேயே நாட்டம் கொள்ளுங்கள். வேறே எதையும் குறித்துக் கவலைப்படாதீர்கள்!" என்று கூறியவள் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

குலசேகரன் மனம் கொந்தளிப்பில் ஆழ்ந்தது. ஆனால் அவனால் வாய் திறந்து பேச முடியவில்லை. அவளையே பார்த்த வண்ணம் நின்றிருந்தான். அவள் கண்களில் வேதனை தெரிந்தது. முகபாவமும் வேதனைப்படுவதைக் காட்டியது.  உள்ளூர அவள் மனம் பரிதவிப்பதையும் வேதனையில் ஆழ்ந்திருப்பதையும் புரிந்து கொண்டான் குலசேகரன். இந்த நிலையிலும் நம்மைச் சமாதானம் செய்ய எண்ணுகிறாளே என எண்ணிய குலசேகரன் அவள் கொடுத்த அறிவுரையை நினைவில் கொள்வதாக வாக்களித்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.  ஹேமலேகாவிடம் இன்னும் சிறிது நேரம் பேசாமல் அவசரமாகத் திரும்பி விட்டோமோ என நினைத்து வேதனைப் பட்டான். அவளுக்குத் தன் மீது மிகுந்த பற்று இருப்பதாலேயே தன்னைக் குறித்துக் கவலைப்படுகிறாள். எல்லோரையும் போல் தன்னை நினைக்கவில்லை என்று அவன் உள்மனம் சொன்னாலும் அதை உண்மையா எனப் புரிந்து கொள்ள விடாமல் அவன் வெளிமனம் அவனைத் தடுத்தது. குழப்பத்தில் ஆழ்ந்தான். பின்னர் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு குறளனை அழைத்தான். அரண்மனையில் நடந்ததைக் கூறவும் குறளன் சற்றும் சிந்திக்காமல் அவனிடம்,"சுவாமி, அந்த ராணியைப் பார்த்தால் நல்லவளாகத் தெரியவில்லை. உங்களைச் சிக்கல் எதிலோ மாட்டி விடப் போகிறாள். கவனமாக இருங்கள்!" என எச்சரித்தான். குலசேகரன் திகைத்தான்.

மீண்டும் மதுரை நகர்!

அழகிய நம்பி மதுரை நகர் முழுவதும் சுற்றிப்பார்த்ததோடு அல்லாமல் அருகிலிருந்த ஊர்களையும் ஓர் சுற்றுச் சுற்றினான். பின்னர் அழகர் மலைக்கே திரும்பினான். அவன் அறிந்தவரையில் தில்லிப்படை வீரர்கள் தென்னாட்டுக்குச் செல்லும் வழியை எல்லாம் அடைத்து விட்டார்கள். கடுமையான காவலும் போட்டு இருந்தார்கள். இங்குள்ள சொத்துக்களைத் தாங்களே அடைய வேண்டும் எனவும் அவை நாஞ்சில் நாடு வழியாகக் கேரளத்துள் சென்று விடக் கூடாது என்பதிலும் அவர்கள் கவனமாய் இருந்தார்கள். குறிப்பாய் திருவரங்கத்து அரங்கனும் அவன் பரிவாரங்களும் அரங்கனின் சொத்துக்களுமே அவர்கள் குறியாக இருந்தது. தான் கண்ட, கேட்ட விஷயங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டான் அழகிய நம்பி. எல்லோரும் கலந்து ஆலோசித்ததில் தற்சமயம் அழகர் மலையிலேயே அரங்கன் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். பின்னால் எப்போதேனும் முடியுமா என ஒருவர் கேட்க. அழகிய நம்பி அதற்குப் பதில் சொன்னான்.


" அது தான் தெரியவில்லை. அந்த அரங்கன் தான் கண் திறந்து தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டும். மதுரைக்கு அருகிலுள்ள ஊர்களை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டேன். எல்லாம் சூன்யங்கள். எங்கும் கோயில்கள் திறக்கவில்லை. மக்கள் ஊர்களை விட்டு வேறிடம் நோக்கி ஓடிவிட்டார்கள். ஓட முடியாதவர்கள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர். மதுரை நகரில் பெண்கள் பலர் அப்படி மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர். நிலவறைகளில் சூரிய ஒளியே படாமல் வாழ்ந்து வருகின்றனர்.பெண்களோடு சேர்த்துப் பொன்னையும் பொருளையும் அத்தகைய நிலவறைகளில் ஒளித்து வைத்திருக்கின்றனர். இவர்களில் யாரேனும் தில்லி வீரர்களிடம் மாட்டிக் கொண்டால் மற்றவர் கதி அதோகதி தான். பின்னர் தில்லிக்காரர்கள் நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவார்கள்." என்றான்.

அப்போது ஒருவர் மதுரையிலிருந்து தில்லி ஆறு மாதப் பயணத்தில் இருக்கையிலே அங்கிருந்து இவர்கள் இங்கே வந்து ஏன் தங்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு அழகிய நம்பி, "நாடாளும் ஆசை தான். பரதக் கண்டம் முழுவதும் அவர்கள் ஆட்சியே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் அப்படித் தானே நினைத்தார். அவர் காலத்தில் ஈடேறவில்லை. ஆனால் இப்போதைய சுல்தான் கியாசுதீன் நாடு முழுவதையும் தன்னுடைய பிடிக்குள் கொண்டு வர முயல்கிறான். அதனால் தான் மதுரையை வென்றதோடு நிற்காமல் அங்கேயே தங்கி ஆட்சியும் செய்கின்றனர். இதைத் தவிர்த்துத் திருவரங்கத்தில் இதன் துணைப்படையும் ஒன்று உள்ளது.. இரண்டையும் வெற்றி காணாமல் நமக்கு ஒரு வழியும் பிறக்கப் போவதில்லை."

No comments: