எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, June 08, 2018

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

இந்தப் படைகளை எதிர்த்து வெற்றி கொள்ளும் அளவுக்கு நம்மிடம் ஆட்கள் இல்லையே என வருந்தினார்கள் அனைவரும். வேறு யார் உதவியும் கொண்டு வெல்ல முடியுமா எனவும் ஆலோசித்தார்கள். அழகிய நம்பி அது மிகக் கடினம். இவர்கள் படைகள் மேலும் மேலும் வந்து கொண்டே இருக்கின்றன. தென் பாண்டி நாடு, நாஞ்சில் நாட்டு மன்னர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. ஹொய்சள மன்னர் வீர வல்லாளர் மட்டும் கப்பம் கட்ட ஒப்புக் கொண்டதால் தன்னையும் தன் நாட்டையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இவரிடம் ஏதேனும் உதவி கிட்டினால் முயன்று பார்க்கலாம் என்றான் யோசனையுடன். பாண்டிய மன்னர்கள் எங்கே எனக் கேட்ட ஒரு கொடவரிடம் அவர்களில் ஒருவர் சிறைப்பட்டு தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மற்ற நால்வர் இன்னும் தெற்கே ஓடி ஒளிந்திருப்பதாகவும் கூறிய அழகிய நம்பி "தமிழர்களான நமக்கும் இன்னும் தமிழ் பேசும் நாட்டில் இருப்போருக்கும் இங்கே வாழும் ஒரே அரசர் வீர வல்லாளர் மட்டுமே கதி!" என்றும் கூறினான்.

சற்று நேரம் மௌனமாக இருந்தவர்கள் பின்னர் நமக்கு வேறு யார் தான் துணையாக வருவார்கள் என மனம் நொந்து கேட்டார். அழகிய நம்பி அதற்குத் தனக்கும் ஏதும் புரியவில்லை என்றும் ஆனால் அரங்கனை மட்டும் இப்போதைக்கு இங்கிருந்து கொண்டு போகக் கூடாது என்றே தான் நினைப்பதாகவும் உறுதியாகக் கூறினான். அவருக்கான வசதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து தருவோம் என்றும் கூறினான். பின்னர் வல்லாளரைப் பார்க்கப் போனக் குலசேகரன் இன்னும் திரும்பவில்லை என்பதைக் குறித்தும் பேசிக் கொண்டு இன்னும் ஒரு மாதத்தில் குலசேகரன் திரும்பவில்லை எனில் அழகிய நம்பி திருவண்ணாமலை போய்ப் பார்க்க வேண்டியது தான் என்றும் முடிவெடுத்தனர்.


இங்கே ஹொய்சள மன்னரின் அரண்மனைக்குப் போய் அவரைப் பல முறை சந்தித்தும் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாமல் குலசேகரனும் குறளனும் தவித்தார்கள். மன்னர் பிடி கொடுத்தே பேசவில்லை. இருவரும் மனம் வருந்தினார்கள். விரக்தியின் எல்லைக்கே போனவர்கள் கடைசி முயற்சியாக ஒரு தரம் போய்ப் பார்த்துவிடலாம் என்று கிளம்பினார்கள். ஒரு புதன்கிழமையைத் தேர்வு செய்து அவர்கள் இருவரும் கிளம்பத் தயாராகிச் சத்திர வாயிலுக்கு வந்தால் அங்கே அழகிய நம்பி நின்று கொண்டிருந்தான். இருவரும் ஆச்சரியத்துடன் அவனை உள்ளே அழைத்துச் சென்று எல்லாவற்றையும் குறித்துப் பேசினார்கள். பின்னர் நம்பியிடம் குலசேகரன் தான் மன்னரிடம் கடைசி முறையாகப் பேசச் செல்வதாகவும் இந்நேரம் நம்பி வந்ததும் நன்மைக்கே என்றும் கூறினான். மூவரும் கிளம்ப நினைத்துப் பின்னர் அரங்கன் விஷயமாகப் போவதால் மூன்று பேராக வேண்டாம் என முடிவெடுத்துக் குறளனைச் சத்திரத்தில் தங்கச் சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் சென்றனர்.

வெகு நேரம் காத்திருப்புக்குப் பின்னர் மதிய நேரத்தில் தான் மன்னரின் தரிசனம் கிடைத்தது. அழகிய நம்பி மன்னரைக் கண்டதுமே அவரின் வீரக்களை பொருந்திய முகத்துக்கும் அறிவொளி வீசும் கண்களுக்கும் அடிமையானான். மன்னரும் அவர்களைப் பார்த்தார். "உங்களை நான் இத்தனை நாட்கள் கவனிக்காமல் இருந்தது என் அலட்சியத்தால் அல்ல. எனக்கும் பல தர்மசங்கடங்கள்! அவை தீரக் காத்திருந்தேன். அரங்கமா நகர் வாசிகளே! நானும் வைணவனே! பெருமாளின் பக்தன் தான். எங்கள் முன்னோர் ஆன விஷ்ணு வர்த்தா மகாராஜா மகான்ஶ்ரீராமானுஜரின் அருளால் பரம வைஷ்ணவர் ஆக மாறினார். நானும் அந்தப் பரம்பரையில் தான் வந்திருக்கிறேன். உண்மையில் திருவரங்கத்துக்கும், அரங்கனுக்கும் நேர்ந்திருக்கும் கொடுமைகளைக் கண்டு நான் கலங்கிப் போய் இருக்கிறேன். மனம் வருத்தம் அடைந்திருக்கிறேன். நீங்கள் என்னிடம் உதவி கேட்டு வந்திருக்கிறீர்கள். எவ்வகையில் நான் உதவ முடியும் என ஆலோசிக்கிறேன். பார்ப்போம்." என்றார் மன்னர்.