எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, June 23, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஜேஷ்டாபிஷேஹம்!

அடுத்த வாரம் ஶ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேஹம் நடைபெறும்.
சுதையினால் ஆன எம்பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்விக்க இயலாது என்பதால் வருடம் ஒரு முறை ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் காவிரியில் இருந்து யானை மீது தங்கக் குடங்களில் நீர் எடுத்து வந்து உற்சவருக்கு அபிஷேஹம் செய்யப்படும். அந்தச் சமயம் மூலவருக்கு எண்ணெய்க் காப்புச் சார்த்தித் திருவடி வரை ஒரு மெல்லிய வேஷ்டியால் மூடி விடுவார்கள். இது நாற்பத்தைந்து நாட்கள் அல்லது நாற்பத்தெட்டு நாட்கள் வரை இருக்கும். அடுத்த நாள் பெரிய திருப்பாவாடைத் தளிகை என்னும் நிவேதனம் பெரிய பெருமாள் சந்நிதி முன் சேர்ப்பிக்கப் படும். அந்தப் பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், நெய், தேன், வாழைப்பழம் போன்றவை சேர்த்து உப்பும் சேர்த்திருப்பார்கள். பெருமாளுக்கு அமுது செய்த பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்த ஜேஷ்டாபிஷேஹம் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலைத் தவிரவும் அதைச் சுற்றி உள்ள மற்ற திவ்ய தேசங்களிலும் ஸ்ரீரங்கத்தில் நடந்த பின்னர் நடைபெறும். அவை குறித்துத் தனியாகப் பார்ப்போம். ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் ஆரம்பிக்கும் இது ஆடிப் பதினெட்டு அன்று நாற்பத்தெட்டு நாட்கள் பூர்த்தி ஆனால் அல்லது ஆடி மாதம் இருபத்தெட்டு வரையில் என்ற கணக்கில் இருந்து வரும். பின்னர் ஆடிப் பதினெட்டு விழாவில் காவிரி அம்மனுக்குச் சீர் கொடுப்பார் பெருமாள். ஒரு பட்டுப்புடவையில் மாலை, தாலிப்பொட்டு போன்ற மங்கலப் பொருட்களைப் போட்டுக் கட்டி யானையின் மேல் ஏற்றிக் காவிரியில் விடுவார்கள்.

இந்த ஜேஷ்டாபிஷேஹம் ரங்கநாயகித் தாயாருக்கும் தனியாக ஒரு நாள் நடைபெறும். அதோடு ஶ்ரீரங்கத்தின் சுற்று வட்டாரப் பெருமாள் கோயில்களிலும் நடைபெறும். அநேகமாகப்பள்ளி கொண்ட பெருமாள் இருக்கும் கோயில்களில் எல்லாம் நடைபெறும் என எண்ணுகிறேன். இந்த வருஷம் இங்கே ஶ்ரீரங்கத்தில் அடுத்த வாரம் ஜூன் 27 ஆம் தேதி ஜேஷ்டாபிஷேஹம் எனப் பஞ்சாங்கத்தில் போட்டிருந்தது. ஆனால் கோயிலில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வரவில்லை. பெரிய ரங்குவின் திருவடியை மூடுவதற்கு முன்னர் போய்ப் பார்க்கணும்னு விருப்பம். ஆனால் அந்தப் படிகளில் ஏறித் தான் திரும்பி வரணும்னு நினைக்கும்போது கவலையாயும், பயமாயும் இருக்கு! பார்ப்போம். இது குறித்த தகவல்கள் போயிட்டு வந்தால் பகிர்கிறேன்.

நிறையப் பேர் படிச்சாலும் யாரும் கருத்துச் சொல்லுவது இல்லை. சொல்லும் ஒரு சிலரும் வந்ததுக்கான அடையாளம் வைத்துவிட்டு (பால் கணக்குக்கு வைக்கும் பொட்டுப் போல க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) போகின்றனர். போகட்டும், அடுத்து நம்ம குலசேகரனைப் பார்க்கப் போறோமா அல்லது அழகிய மணவாளர் என்னும் பெயரில் இருக்கும் அரங்கன் ஒளிந்து வாழும் அழகர்மலைக்குப் போகப் போறோமா! பார்க்கலாம்.
*********************************************************************************

இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தின் தென்னாடு முழுவதும் ஒரே களேபரமாக இருந்தது. ஆங்காங்கே தில்லித் துருக்கர்கள் படையெடுப்புக்களால் திராவிடத்தின் ராஜ்ஜியங்கள் வாரிசு இல்லாமலும், துருக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டும் அடிமை வாழ்வு வாழ வேண்டி இருந்தது. எங்கெங்கும் கோயில்கள் உடைப்பும், கோயிலின் செல்வங்களைத் துருக்கர்கள் எடுத்துச் செல்லுவதுமாக இருந்தமையால் எங்கும் ஒரு வகை பீதி நிலவி வந்தது. அவரவர் தங்கள் உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ளுவதையே பெரிதாக நினைக்கும்படி இருந்தது. ஆகவே எந்த நாடும் அரசருக்குக் கீழ் இல்லை. படைகளும் இல்லை. இருந்த சொற்ப வீரர்களும் ஆங்காங்கே சிதறிப் போய்விட்டார்கள். இந்நிலையில் தான் குலசேகரன் ஹொய்சள நாட்டு வீர வல்லாளரிடம் வீரர்களைக் கொடுத்து உதவும்படி கேட்டிருந்தான். வீர வல்லாளரிடம் படை இருந்தாலும் அவருக்குத் தெற்கே இருந்த பெரும் பகைவரான தில்லி வீரர்களிடம் கப்பம் கட்டுவதாகச் சமரசம் செய்து கொண்டிருந்தார். ஆனால் வடக்கே உள்ள தெலுங்கு நாடு, கம்பிலி நாடு ஆகியவற்றில் இருந்து அவருக்குக் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன. அவ்வப்போது அவர்களை அடக்கி வைக்க அவருடைய வீரர்கள் போராடி வந்தனர். ஹொய்சள நாட்டு மன்னரின் கவனம் முழுவதுமே வடக்கே இருந்தது. இந்நிலையில் அவரால் எவ்வாறு குலசேகரனுக்கு வீரர்களைக் கொடுத்து உதவ முடியும்? குலசேகரனுக்கு மறுப்புச் சொன்ன அன்று, குலசேகரன் ராணியைக் கண்டு பேசிய அன்று, ராணி கிருஷ்ணாயிக்குக் குலசேகரன் சத்தியம் செய்து கொடுத்த அன்று இரவு மன்னர் அந்தப்புரம் வந்து சேர்ந்தார். 

5 comments:

துரை செல்வராஜூ said...

ஜேஷ்டாபிஷேகம் குறித்த தகவல்கள் அருமை...

இந்த மாதிரியான பதிவ்களுக்கு வருவதே பாக்கியம்!...

இருந்தாலும்
யார் யாருக்கு எவ்வளவு ஆகுமோ -
அவ்வளவு தான் ஆகும் - அழுத்தி அளந்தாலும்!...

ஹரி ஓம் நமோ நாராயணாய!..

நெல்லைத் தமிழன் said...

கீசா மேடம்.... ஜேஷ்டாபிஷேகம் பற்றிய தகவல்கள் அருமை. சுதைச் சிற்பத்தைப் பற்றி சரியான விளக்கம் சொல்லுங்க. சுண்ணாம்புக் காரையா அல்லது மரம் சேர்ந்ததா? மூலவரை (முகம்) தைலக்காப்பில் தரிசித்தபோது கற்சிற்பம்போல் தெரிந்தது. கூட்டம் என்ற காரணத்தாலும் முழுதரிசனம் கிட்டாதோ என்ற சந்தேகத்தாலும் இந்தமாதம் நான் வரலை.

வரலாறு, முடித்தபின்பு முழுவதும் படிக்கணும். அப்பப்போ படித்தாலும் நினைவு வைத்துக்கொள்ள முடிவதில்லை. இதுக்கு என்ன பின்னூட்டம் எழுதறது, உங்க முயற்சியைச் சிலாகிப்பது தவிர?

நெல்லைத் தமிழன் said...

கீசா மேடம்.... ஜேஷ்டாபிஷேகம் பற்றிய தகவல்கள் அருமை. சுதைச் சிற்பத்தைப் பற்றி சரியான விளக்கம் சொல்லுங்க. சுண்ணாம்புக் காரையா அல்லது மரம் சேர்ந்ததா? மூலவரை (முகம்) தைலக்காப்பில் தரிசித்தபோது கற்சிற்பம்போல் தெரிந்தது. கூட்டம் என்ற காரணத்தாலும் முழுதரிசனம் கிட்டாதோ என்ற சந்தேகத்தாலும் இந்தமாதம் நான் வரலை.

வரலாறு, முடித்தபின்பு முழுவதும் படிக்கணும். அப்பப்போ படித்தாலும் நினைவு வைத்துக்கொள்ள முடிவதில்லை. இதுக்கு என்ன பின்னூட்டம் எழுதறது, உங்க முயற்சியைச் சிலாகிப்பது தவிர?

Geetha Sambasivam said...

நெ.த. உங்கள் கேள்விகளுக்கான பதிலைப் பதிவா எழுதி 2 நாளாகிறது. நீங்க தான் பார்க்கவே இல்லை! :))))

நெல்லைத் தமிழன் said...

கீசா மேடம் - நீங்கள் கூறியுள்ளது சரிதான். பிரச்சனை என்னன்னா, இடுகையின் தலைப்பு ஒரே தலைப்பு (பாதம் பணிந்தோம்). அப்போ ஒரு நாள் விட்டுட்டாலும், திரும்ப அது புது இடுகையா இல்லை ஏற்கனவே பார்த்ததா என்பது தெரியமாட்டேன் என்கிறது (இடுகைக்குப் போனாலொழிய).

புதிய இடுகையையும் படித்துவிட்டேன். நல்லா எழுதியிருக்கீங்க. எப்போதான் நேரம் கிடைக்குதோ.