எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, June 15, 2018

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியும் என யோசித்தான். அரசரிடம் தானே கேட்க முடியும் என்ற குலசேகரனிடம் இந்த ஹொய்சள ராஜ்ஜியத்தில் அரசருக்கு இணையாக அவளுக்கும் அதிகாரம் உண்டு என்றும் தன்னிடமும் கேட்கலாம் என்றும் கிருஷ்ணாயி கூறவே குலசேகரன் உடனே ராணியிடம் இருநூறு வீரர்களைக் கொடுத்து உதவும்படி கேட்டான். செய்வதாக உறுதி கூறிய ராணியிடம் அப்போதும் குலசேகரனுக்கு நம்பிக்கை வரவில்லை. அப்போது அவனிடம் தான் செய்யும் உதவிக்கு ஒரு நிபந்தனை உண்டென ராணி கிருஷ்ணாயி தெரிவித்தாள். என்ன நிபந்தனை எனக் கேட்டவனிடம் சாதாரணமானது தான் என்றாள் கிருஷ்ணாயி.

குலசேகரன் அவளையே பார்த்த வண்ணம் நின்றிருந்தான். அவனிடம் கிருஷ்ணாயி, "அரங்கனைத் தெற்கே கொண்டு போய்விட்ட பின்னர் குலசேகரன் மட்டும் திருவண்ணாமலைக்குத் திரும்ப வர வேண்டும்! அது மட்டும் போதாது. குலசேகரன் ஒரு மாதம் அங்கே தங்கி இருக்கவும் வேண்டும்." என்றாள் ராணி கிருஷ்ணாயி. குலசேகரனுக்கோ அரங்கனை விட்டும் அவன் ஊர்வலத்தை விட்டும் எப்படிப் பிரிவது என்னும் கவலை மேலிட்டது. அதற்குக் கிருஷ்ணாயி இப்போதே அவன் அரங்கனை விட்டுப் பிரிந்து தானே இருக்கிறான். அதுவும் பல மாதங்கள் ஆகி விட்டனவே என்று கேட்டாள். அவள் இப்படிக் கேட்டதால் பதில் சொல்ல முடியாத குலசேகரன்  ஆனால் இங்கே வந்து ஏன் இருக்க வேண்டும் என வினவத் தான் அதை விரும்புவதாகக் கிருஷ்ணாயி அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்துக் கூறினாள்.குலசேகரனுக்கு பதில் சொல்ல வாய் எழவில்லை.

ராணி கிருஷ்ணாயி குலசேகரனைப் பார்த்து அவனுக்கு விருப்பம் இல்லை எனில் விட்டு விடுமாறு கூறினாள். அவன் ஒத்துக்கொண்டால் மட்டுமே தன்னால் உதவ முடியும் எனச் சொன்ன அவள் அவனுக்கு விருப்பமில்லை எனில் அதற்கு மேலும் தன்னால் உதவி செய்ய முடியாது எனவும் கூறினாள்.  அவள் அதோடு நிறுத்தாமல் அப்படி ஒரு வேளை அரசருக்கு மனம் மாறி உதவி செய்யப் போவதாய்த் தெரிவித்தால் தான் அதைத் தடுத்து விடுவேன் எனவும் ஆத்திரத்துடன் கூறினாள். அப்போது அவள் கண்கள் நெருப்பிலிட்ட ஜ்வாலையைப் போல் ஒளி வீசித் திகழ்ந்தன. குலசேகரன் யோசனையில் ஆழ்ந்தான். ராணி கோபத்துடன் திரும்பிப் போக ஆரம்பித்தாள். குலசேகரன் இவ்வளவு நேரம் யோசனையில் ஆழ்ந்தவன் அவளை அழைத்தான். திரும்பிப் பார்த்த ராணியிடம் தனக்குச் சம்மதம் எனத் தெரிவித்தான். இப்போது ராணி ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.

மிகவும் தீவிரமான முகபாவத்துடன் அவன் பக்கம் திரும்பியவள் அவனைப் பார்த்துத் திருவண்ணாமலையில் தங்கினால் மட்டும் போதாது என்றும் அவள் அழைக்கும்போதெல்லாம் அரண்மனை அந்தப்புரத்துக்கு வர வேண்டும் என்றும் சொன்னாள். குலசேகரனுக்கு இப்போது உண்மையாகவே தூக்கி வாரிப் போட்டது. "மகாராணி, மகாராணி, நான் ஏன் இங்கே வர வேண்டும்! அது அவசியமும் இல்லை, நல்லதும் இல்லையே!" என்று பணிவுடன் சொன்னான். ஆனால் ராணி மிகக் கடுமையாக அவனைப் பார்த்தாள். "வீரரே! இது என் விருப்பம். அதை நீர் மீற முடியாது! இதற்கு நீர் இசைந்தால் நான் இதோ இப்போதே ஆணை இடுகிறேன். இருநூறு  வீரர்கள் உம்முடன் வருவார்கள். இல்லை எனில் நீங்கள் இங்கிருந்து செல்லலாம்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல ஆரம்பித்தாள்.

குலசேகரன் திடுக்கிட்டுப் போனான். அவளை அழைத்தான்! அவள் நின்றாள். ஆனால் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. குலசேகரன் தான் சம்மதிப்பதாகக் கூறவும் திரும்பினாள் ராணி. அவனை நெருங்கி வந்து, " அந்த அரங்கன் சாட்சியாகச் சம்மதத்தைத் தெரிவியுங்கள் வீரரே! "என்றாள். குலசேகரனும் அவ்வாறே அரங்கன் சாட்சியாகச் சம்மதம் கூறினான். அரங்கன் மேல் சத்தியமும் செய்து கொடுத்தான். உடனே முகம் மலர்ந்த அரசி அவனுக்குப் பரிசில்களாக விலை உயர்ந்த ஆபரணங்களையும் பொன் நாணயங்களையும் கொடுத்தாள். அவற்றைப் பெற்றுக் கொண்டு திரும்பினான் குலசேகரன். யோசனையுடன் நடந்தவனை அபிலாஷினி "வீரரே!" என அழைக்கத் தடுமாறிய குலசேகரன் திரும்பிப் பார்க்கத் தூண் ஓரத்தில் ஹேமலேகா நின்று கொண்டு அவனையே பார்த்த வண்ணம் இருப்பதைக் கண்டு கலங்கிப் போனான். ஆனால் உள்ளிருந்து அரசி அவனைக் கவனித்துக் கொண்டிருப்பதால் ஹேமலேகாவிடம் பேச வேண்டும் என்னும் ஆவலை அடக்கிக் கொண்டு அவளைப் பார்த்து சோகமாகப் புன்னகைத்து விட்டு வெளியேறினான்.